> குருத்து: Indiana Jones and Raiders of the lost ark (1981)

August 20, 2019

Indiana Jones and Raiders of the lost ark (1981)

- இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

கதை. 1936ல் பயணிக்கிறது. நாயகன் அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர் மட்டுமில்லை. தேடும் பொருளுக்காக ஆபத்தான பயணங்களையும் மேற்கொள்கிற ஆள்.

துவக்கத்தில் பெருவில் இருக்கும் ஒரு தங்க விக்ரகத்தை (Idol) தேடிப்போகிறார். பல சோதனைகளுக்கு பிறகு அடைந்தாலும், கடைசி நேரத்தில் வேறு ஒருவன் கைப்பற்றி கொள்கிறான்.

இராணுவத்தை சேர்ந்த இரண்டு புலனாய்வுகாரார்கள் இவரை தேடி வருகிறார்கள். எகிப்தில் இருக்கும் ஒரு முக்கியமான தொல்பொருளை எடுத்துவரச்சொல்லி பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். இதே பொருளை ஜெர்மன்காரர்களும் வெறித்தனமாக தேடுகிறார்கள் என்ற தகவலையும் சொல்கிறார்கள்.

நேபாளத்திற்கு போய், நாயகியை அழைத்துக்கொண்டு எகிப்துக்கு செல்கிறார். ஜெர்மன்காரர்களுடன் மல்லுக்கட்டி பல்வேறு சாகசங்களுக்கு பிறகு தொல்பொருளை அடைந்தாரா என்பது முழு நீளக்கதை!

*****
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-க்கு ஜேம்ஸ்பாண்ட் படம் எடுக்கவேண்டும் என ஆசை. பார்ட்னர் ஒத்துக்கொள்ளவில்லை என இந்த வகை கதையை கையில் எடுத்ததாக சொல்வார்கள். பெரு-வில் நடக்கும் சம்பவம் கூட ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வழக்கமாக இருக்கும் சாகசம் போல தான் இருக்கும்.

ஹாரிசன் போர்டு தான் நாயகன். இந்த படம் எடுக்கும் பொழுது நாற்பதை நெருங்கி கொண்டிருந்தாலும், படத்தில் அத்தனை சுறுசுறுப்பு. ஓடி, வண்டியில் தொற்றி, உருண்டு, புரண்டு நடித்திருப்பார். இப்பொழுது மனுசனுக்கு வயசு 75ஐ தாண்டிவிட்டது. 2021ல் வர இருக்கிற ஐந்தாவது பாகத்திலும் நடிப்பதாக தகவல் சொல்கிறார்கள். ஆச்சர்யம்.

முன்பெல்லாம் சில நல்ல படங்களை அவ்வப்பொழுது குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடுவார்கள். அதற்கென்றே சில திரையரங்குகள் ஊரில் இருக்கும். அப்படி இந்த படத்தை 1990களில் மொழி புரியாவிட்டாலும், ஆ-வென ஆச்சர்யத்துடன் பார்த்த படம்.

எட்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, ஐந்து பிரிவுகளில் படம் வென்றிருக்கிறது. வெளியான வருடத்தில் அதிக வசூலை செய்தப்படம் என்றும் சொல்கிறார்கள்.

தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: