> குருத்து: Hitch (2005)

August 20, 2019

Hitch (2005)

ஆங்கில (விஜய்) ஷாஜகான் கதை. கல்லூரியில் படிக்கும் பொழுது மிகவும் சின்சியராக ஒரு பெண்ணை காதலிக்கிறான். அதே போல அவளும்! இவனின் அப்பாவித்தனமான அணுகுமுறையால் அவள் விலகிச் செல்கிறாள். அது அவனை மிகவும் பாதிக்கிறது.

திருமணம் செய்யும் நோக்கத்துடன் உண்மையாக பழக நினைக்கும் ஆண் காதலர்களுக்கு உதவுவதையே தன் தொழிலாக மாற்றிக் கொள்கிறான். இதை வெளிப்படையாக செய்தால் பிரச்சனை என ரகசியமாக செய்கிறான்.

ஒரு பெரிய பணக்காரி. அவளை விரும்பும் உதவி வரி கன்சல்டன்டாக (Tax consultant Assistant) வேலை செய்யும் ஒருவனை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறான்.

இதற்கிடையில் பிரபலங்களை பற்றி கிசுகிசு எழுதும் ஒரு பெண் பத்திரிக்கையாளரை நாயகன் காதலிக்கிறான். அவளும் விரும்புகிறாள்.

பெண்களை ஈர்ப்பதற்கு ஆண்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆளை கண்டுபிடித்து செய்தித்தாளில் அம்பலப்படுத்த துப்பறிகிறாள்.

ஒரு கட்டத்தில் தான் காதலிக்கும் நாயகன் தான் அந்த ஆலோசகர் என தெரியவர கோபத்தில் செய்தித்தாளிலும் எழுதிவிடுகிறாள்.

நாயகனின் நிலைமை மிகவும் சிக்கலாகி விடுகிறது. புரோக்கர் அளவிற்கு கிண்டல் கேலி செய்கிறார்கள். இதிலிருந்து மீண்டு வந்தனா என்பது ஒரு முழு நீளக்கதை!

****

இந்த படத்திலிருந்து சுட்டுத்தான், தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

சோர்வாக இருக்கும் பொழுது பார்க்க கூடிய ஜாலியான படங்களில் சந்தோசமாய் இந்த படத்தையும் சேர்த்துவிடலாம்.

ஆண் பெண் நட்பில் மேலை நாடுகளிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்றால்.. நம் போன்ற நாடுகளில் இடியாப்ப சிக்கல் தான்!

இதில் நாயகன் பண்ணும் வேலைகளை நம்மூரில் நண்பர்களே செய்துவிடுகிறார்கள். என்ன பல சமயங்களில் சொதப்பிவிடும்.

என்ன தான் சொல்லிக் கொடுத்தாலும், இயல்பு வெளிப்படும் அல்லவா! அதை டாக்ஸ் கன்சல்டண்ட் பாத்திரம் நன்றாக வெளிப்படுத்தியிருப்பார்.

என் வாழ்க்கையில் அப்படி ஒரு உதவி தேவைப்படவில்லை. பெண்களை இயல்பாக அணுகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த எழுத்து ஒரு நண்பனைப்போல உதவியது!

0 பின்னூட்டங்கள்: