கல்லூரி கால நண்பர்கள். எல்லோருக்கும் திருமணமாகி, வெவ்வேறு துறைகளில் ஒரு நல்ல பொசிசனில் இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு வரும் வாரம் திருமணம். மொத்தம் ஐந்து ஜோடி. ஒரு பெண் மட்டும் விவாகரத்தானவர். ஆக மொத்தம் 11 பேர். இடுக்கி பகுதியில் சகல வசதிகளுடன் இருக்கும் இடத்தை (Resort) பிடித்து கொண்டாட வந்து சேர்கிறார்கள்.
அன்று இரவு எல்லோரும் உணவு நேரத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு விளையாட்டை விளையாட்டாக துவங்குகிறார்கள். அதாவது ஒரு மணி நேரம். அவரவர் செல்லை எடுத்து டேபிளில் வைத்துவிடவேண்டும். வரும் அழைப்புகளை, குறுஞ்செய்திகளை, வாட்சப் செய்திகளை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என முடிவாகிறது. சிலர் உடனடியாக ஏற்கிறார்கள். சிலர் தயங்கினாலும், அவரவர் கணவன்/துணைவி ஒத்துக்கொள்ள வைக்கிறார்கள்.
விளையாட்டின் முடிவில் அவர்களுக்குள் இருக்கும் ஒரு ரகசியம் வெளிப்பட்டுவிடுகிறது. அது அவர்களுக்குள் கடுமையான வாக்கு வாதங்களை உருவாக்குகிறது. அன்றிரவு மர்மமான முறையில் ஒருவரின் துணைவியார் இறந்துகிடக்கிறார். தற்கொலையாகவும் இருக்கலாம். கொலையாகவும் இருக்கலாம்.
அடுத்தநாள் உள்ளூரில் இடைத்தேர்தல் என்பதால், அங்கேயே எல்லோரும் தங்கியிருங்கள். விசாரணையை துவங்கலாம் என்கிறார்கள். இவர்கள் அவரவருக்கு சொந்த அலுவல் நெருக்கடி இருப்பதால், விசாரணையை விரைவுப்படுத்த கோருகிறார்கள்.
விசாரணை அதிகாரி எல்லோரையும் மீண்டும் அதே விளையாட்டை விளையாட வைத்து, அவர்களிடம் விசாரணை செய்து, சிசிடிவி உதவியுடன் தற்கொலையா, கொலையா என கண்டுபிடிக்க முயல்கிறார். கண்டுபிடித்தாரா என்பதை சுவார்சியமாக சொல்லியிருக்கிறார்கள்.
****
விளையாட்டு வினையாகும் என்று சொன்னால் ரெம்ப பழசு. கணவன் மனைவிக்குள்ளே எப்பொழுதும் ரகசியங்கள் இருக்கின்றன. இது நம் ஊரில் மட்டுமல்ல! உலகம் முழுவதும் உள்ளவை தான். கணவன் மனைவிக்குள்ளேயே செல்போனை வைத்து விளையாண்டாலே ஏகப்பட்ட ரகளையாகிவிடும். இதே விளையாட்டு, நெருக்கமாக இருக்கும் நண்பர்களின் குடும்பத்தோடு விளையாடினால் என்னவாகும்? ஒரு உயிர் போகும் அளவிற்கு சிக்கலாகிவிடுகிறது. சுவாரசியமான கதைக்களம். விசாரணை அதிகாரியும் அதே விளையாட்டை விளையாட சொல்லி, விசாரணையை முடிப்பது தான் இன்னும் சுவாரசியம்.
திரிஷ்யம் எடுத்த ஜீத்து ஜோசப் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். 12 Angry Men என ஒரு படம். ஒரு கொலை வழக்கு. அந்த கருப்பின சிறுவன் அந்த கொலையை செய்திருப்பானா? என்பதை சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்து விசாரணை நடக்கிறது. சமூகத்தில் பல்வேறு நிலையில் உள்ள அந்த 12 பேர் ஜூரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் விவாதித்து நீதிமன்றத்திற்கு தனித்தனியாக அல்ல! பெரும்பான்மையாக ஒரு முடிவு எடுத்து சொல்லவேண்டும். அதை வைத்து நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும். 12 பேரும் அந்த அறையில் கூடுவார்கள். விவாதிப்பார்கள். மொத்தப் படமும் இது தான். வேறு எங்கும் காட்சிகள் போகாது.
அருமையான
படம். உலகப்புகழ்பெற்ற படம்.அந்த படத்தை இந்த படம் நினைவூட்டியது. படம் பார்த்தவர்கள் இன்னும் சில படங்களை ஒப்பிட்டு சொல்கிறார்கள். எனக்கு படம் பிடித்திருந்தது. ஆங்காங்கே ட்விஸ்ட் இருந்துகொண்டே இருக்கிறது. ஆகையால் நிதானமாக இன்னொருமுறை பார்க்கவேண்டும் என நினைத்திருக்கிறேன். படத்தில் நடித்த அனைவருமே கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மோகன்லால் விசாரணை அதிகாரியாக வருகிறார். நமக்கு தெரிந்த முகங்களாக, அனு சித்தாரா, “உருகுதே மருகுதே” பாடலில் வரும் பிரியங்கா, அதே கண்கள் படத்தில் வந்த ஷிவதா (Shivada) என வருகிறார்கள்.
டிஸ்னி ஹாட் ஸ்டார் படத்தை ஓடிடியில் வெளியிட்டு இருக்கிறது. பார்க்கவேண்டிய திரில்லர். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment