"கவுன்சிலரின் கணவரே லாட்டரி ஏஜென்சி நடத்தினார் என்றால் போலீசாரின் ஆசியும் தாராளமாக கிடைத்துவிடுகிறது. பிறகென்ன, லாட்டரி ”சட்டபூர்வமாகி”விடுகிறது."
***
ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நூல்வியாபாரி 13/05/22 அன்று தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு காணொளியை பதிவு செய்து அனுப்பிவிட்டு தன் உயிரை மாய்த்துள்ளார்.
”இதுவரை லாட்டரியில் 62 லட்சம் தொலைத்துவிட்டேன், ஆகையால் ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொண்டேன். இனிமேலும் உயிரோடு இருந்தால், மீண்டும் லாட்டரி வாங்குவேன், ஆகையால் தற்கொலை செய்துகொள்கிறேன். தான் வசிக்கும் பகுதியில் திமுக கவுன்சிலரின் கணவர் தான் லாட்டரி ஏஜென்சி நடத்திவருகிறார். அவரிடம் 30 லட்சத்தை வாங்கி என் குடும்பத்திற்கு தாருங்கள். எப்படியாவது லாட்டரியை ஒழித்துக்கட்டுங்கள்” என அழுதுகொண்டே பேசியுள்ளார்.
”விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என பஞ்ச் வசனம் பேசி துவக்கி வைக்கப்பட்ட லாட்டரி பல உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சியது. கடன் வலையில் விழவைத்தது. தற்கொலைகளுக்கு தள்ளியது. 90களில் தற்கொலைகள் உச்சத்துக்கு சென்ற பொழுது, மக்களும் போராடினார்கள். 2003ல் ஆட்சியில் இருந்த ஜெ. தடை செய்தார்.
தடை செய்த பிறகும், தமிழகத்தின் பல பகுதிகளில் லாட்டரி தாராளமாக கிடைக்கின்றன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூன் முதல் இன்றைக்கு வரை 147 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். 215பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடனே அறிக்கை விடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்படி மாவட்ட வாரியாக பெயரளவில் போடப்படும் வழக்குகளும், கைதுகளுமே லாட்டரி தாராளமாய் விற்பதற்கான வாழும் சாட்சிகளாக இருக்கின்றன.
கவுன்சிலரின் கணவரே லாட்டரி ஏஜென்சி நடத்தினார் என்றால் போலீசாரின் ஆசியும் தாராளமாக கிடைத்துவிடுகிறது. பிறகென்ன, லாட்டரி ”சட்டபூர்வமாகி”விடுகிறது.
இதற்காக பொங்கியுள்ள எடப்பாடி தாங்கள் ஆட்சியில் லாட்டரியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதாக புளுகுகிறார். 2011, 2016 இரண்டு தேர்தலிலும் விழுப்புரம் நகர்ப்புற தொகுதியில் அதிமுகவைச் சார்ந்த சி.வி. சண்முகம் தான் எம்.எல்.ஏயாக ஜெயித்தார். அந்த தொகுதியில் 2019ல் லாட்டரியால் கடன்பட்ட நகை தொழிலாளி அருண் என்பவர் தன் துணைவியார், மூன்று பெண் குழந்தைகளோடு சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். சாகும் பொழுது அவரும் காணொளி ஒன்றை பதிவு செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பினார். அப்பொழுதும் போடப்பட்ட வழக்குகள் இத்தனை, கைது செய்யப்பட்டவர்கள் இத்தனை பேர் என வழக்கம் போல ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.
ஏற்கனவே தொழில் நசிவால், வேலை இல்லாமல் வாடி வரும் உழைக்கும் மக்கள் ஏதாவது லாட்டரி அடித்தால் தங்கள் துன்ப, துயரங்களில் இருந்து தங்களை விட்டு மீண்டுவிடமாட்டோமா என்ற நப்பாசையில் தான் லாட்டரிகளை வாங்குகிறார்கள். கடன்படுகிறார்கள். மீண்டும் மீண்டும் விச சுழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.
ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இப்படி அறிக்கைப்போர் நடத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்களை நம்பி பலனில்லை.
டாஸ்மாக் கடைகளை மக்கள் அடித்து நொறுக்கியது போல, புரட்சிகர அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் மக்களை திரட்டி களத்தில் இறங்கி சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் கடைகளை அடித்து நொறுக்கினால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment