> குருத்து: Brave Citizen (2023) தென்கொரியா

March 8, 2024

Brave Citizen (2023) தென்கொரியா


ஒரு உயர்நிலைப் பள்ளி. எந்தவித ராக்கிங்கும் நடக்கவில்லை என விருது பெற்ற பள்ளி. ஆனால் அது பெரிய பொய். போலீசு உயரதிகாரி அப்பா, அரசு தரப்பு வழக்கறிஞர் அம்மா என செல்வாக்கு உள்ள அவர்களுடைய மகன் தினம் யாரையாவது தன் குழுவோடு டார்ச்சர் செய்துக்கொண்டே இருக்கிறான்.


நாயகி அந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராய் சேர்ந்திருக்கிறார். பாக்சிங்கில் தேசிய அளவில் பங்கேற்கும் நபராய் இருந்தாலும், அப்பா பெற்ற கடனுக்காக அதை எல்லாம் விட்டுவிட்டு, ஒரு ஆசிரியராக வேலை செய்ய வந்திருக்கிறார்.

நடக்கிற அனைத்தும் பார்த்துக்கொண்டு எளிதாய் கடக்கமுடியவில்லை. அந்த பையன் நாயகியையும் விட்டுவைக்கவில்லை. தொந்தரவு செய்கிறான். வேலையை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். அதே சமயத்தில் அவனையும் கட்டுப்படுத்தவேண்டும் என முடிவெடுத்து, ஒரு பூனை மாஸ்க் போட்டுக்கொண்டு தன்னையும் மறைத்துக்கொண்டு அவனை எதிர்கொள்கிறாள்.

பிறகு என்ன ஆனது என்பதை கலகலப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
***


ரெம்ப லைட்டான படம். நாயகியை மையப்படுத்திய படம். பெரும்பாலும் பள்ளி வளாகத்திலேயே முடித்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தெரிந்தே இவ்வளவு அட்டூழியம் செய்யமுடியுமா என யோசித்தால், முடியாது தான். அதுவும் அந்த மாணவன் கல்லூரி முடித்துவிட்டு, வேலைக்கு செல்கிற வயது உள்ள ஆளாய் போட்டிருப்பது நெருடல். பொருத்தமான ஆள் கிடைக்கவில்லை போல!

நேற்று கடுமையான உடற்சோர்வு. எந்த வேலையையும் செய்யமுடியவில்லை. இப்படி ஒருபடம் தேவையாய் இருந்தது.

அமேசான் ஓடிடியில், தமிழ் டப்பிங்கிலேயே கிடைக்கிறது. பாருங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்க மாட்டேன்.

0 பின்னூட்டங்கள்: