> குருத்து: மன(ண)க் கலக்கம்

January 16, 2025

மன(ண)க் கலக்கம்


பாகுபலி நாயகன் பிரபாசுக்கு 45 வயது கடந்தும் இன்னும் மணமாகவில்லை.  அவருடைய நண்பர் ஒருவருடைய மண வாழ்க்கை தோல்வியடைந்ததால், அதன் மன பாதிப்பால் தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என அவருடைய அம்மா மனம் வருந்தி சொல்லியிருக்கிறார்.

 

ஒரு வாரத்திற்கு முன்பு வழக்கமாக செல்லும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் 30 கடந்தும் இன்னும் மணம் செய்துகொள்ளவில்லை.  அந்த நிறுவனத்தின் நிர்வாகி, ”தனக்கு தெரிந்த நல்ல பசங்க இருவர் இருக்கிறார்கள். பேசிப் பார். இருவரில் யாரையாவது மணம் செய்துகொள்” என அக்கறையோடு சொல்ல, மூன்று நாட்கள் வேலைக்கே வராமல் இருந்துவிட்டார்.

 


அன்றைக்கு போன பொழுது, அந்த பெண்ணிடம் பேசினால், திருமணங்கள் குறித்த ஒவ்வாமையை தெரிவித்தார்.   அப்பா குடித்து விட்டு பல வருடங்களாக மனைவியையும், குழந்தைகளையும் டார்ச்சர் செய்திருக்கிறார்.  அப்பாவுக்கு தெரியாமல் வீடு பார்த்து அம்மாவும், பெண்ணும் வாழ்ந்து வருவதாக முன்பு தெரிவித்திருக்கிறார்.

 

தன்னுடன் படித்த நெருங்கிய தோழிகளில்  ஐவருக்கு மூவருக்கு மணமுறிவு ஏற்பட்டிருக்கிறது.  எல்லாமும் சேர்ந்து இப்பொழுது கலக்கத்தில் இருக்கிறார். 

 

இப்பொழுது முன்பு இருந்த நிலைமை இல்லை.  பெண்களின் நிலைமை நன்றாகவே மாறியிருக்கிறது. ஆகையால் மணம் செய்துகொள்ளுங்கள் என நானும் சொல்லிவந்தேன்.

 

குடும்பங்கள் சமூக சூழ்நிலையாலும், அதன் இறுக்கத்தாலும் சிதறுண்டு வருவதை பார்க்கமுடிகிறது. சமீபத்தில் பார்த்த ஒரு மலையாளப்படம் Falimy. Family எல்லாம் கலைத்து போடப்பட்டு, Falimy யாக தான் இருக்கிறது என சொன்ன படம் அது.

 

 

நாயகன் ஜேம்ஸ்பாண்ட் ஊருக்கு ஊர் காதலி வைத்திருக்க கூடியவர்.  அவர் கடைசியாய் இறந்தது தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தான். 

 

சமீபத்தில் Originals என்ற புகழ்பெற்ற வாம்பயர் சீரிஸ் பார்த்தேன்.  என்ன அட்டூழியம், அட்டகாசம் செய்தாலும், குடும்பம் முக்கியம் அது தான் நம்மைக் காப்பாத்தும் என தொடர் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

வருங்கால மனித சமுதாயத்தை உருவாக்குவதற்கு குடும்பம் என்ற அமைப்பு தேவைப்படுகிறது.   குடும்பத்திற்காக தன்னையே உருக்கி கொண்டிருந்தவர்கள் பழைய ஆட்கள் என்றால், குடும்பம் தருகிற அழுத்தத்தில் இருந்து பல இளைஞர்கள்/இளைஞிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். அதனால் தான் புதுப்புது வடிவங்கள் எடுத்துவருகின்றன.

 

குழந்தையை பாதுகாக்க இந்த அரசும், அமைப்பும் என்ன செய்தது? வேலை பார்ப்பதற்கு பக்கத்தில் ஒரு குழந்தைகள் காப்பகம்  வைத்துக்கொடுத்ததா? குழந்தைகளைப் பார்ப்பதற்கு ஒரு சப்போர்ட் சிஸ்டம் இருக்கிறதா? ஒன்றையும் ஒழுங்காக செய்து கொடுக்க வழியில்லை.   நாங்கள் ஏன் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் (DINK – Dual Income No kids) என டிங் குழுக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

”குடும்பத்தை” காப்பாற்றவேண்டுமென்றால் கூட இங்கு நல்ல முறையில் ஒரு சமூகம் மாற வேண்டிய தேவைப்படுகிறது என்பது மட்டும் உறுதி.

0 பின்னூட்டங்கள்: