> குருத்து: அம்மா உணவகமும் மக்களும்!

January 31, 2025

அம்மா உணவகமும் மக்களும்!


எங்களுடைய பகுதி சென்னையில் புறநகர் பகுதி. அங்கு ஒரு அம்மா உணவகம் இருக்கிறது. அங்கு வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

 

காலையில் இட்லி - சாம்பார், மதியம் கலவை சோறு  - தொடர்ந்து சாப்பிடுகிறவர்கள் என்னக்கா! போரடிக்கிறது! சோறு மாத்துக்கா! என கோரிக்கை வைத்தால், ஒரு நாள் சாம்பார் சோறு, ஒருநாள் தக்காளி சோறு, ஒருநாள் கருவேப்பிலை சோறு என மாற்றி சமைப்பதற்கு எங்களுக்கு அனுமதி உண்டு.

 

இரவு சப்பாத்தி, சாம்பார்.  முன்னாடி கொஞ்சம் கசப்பு இருந்ததே! எனக் கேட்டால், ”கோதுமையில் ஈரப்பதம் இருப்பதால் அந்த பிரச்சனை. இப்பொழுது வருகிற கோதுமை நன்றாக இருக்கிறது. ஆகையால் சப்பாத்தியும் நலம்” என்கிறார்.

 

யார் சாப்பிட வருகிறார்கள் என கேட்டால்… “வட மாநில தொழிலாளர்கள், செக்யூரிட்டி வேலை செய்பவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், வயதானவர்கள்” என வருகிறார்கள்.

 

எவ்வளவு வசூல் என பார்த்தால், காலையில் ஒரு ரூபாய் ஒரு இட்லி. ரூ. 1000 வரை விற்போம். (அப்ப 1000 இட்லி. ஒரு ஆளுக்கு ஐந்து இட்லி என சராசரி பார்த்தால் 200 பேர் என கணக்கிடலாம்.) ஒரு கலவை சோறு ரூ. 5.  மதியம் ரூ. 300 வரைக்கும் போகும். அப்ப 60 பேர் என கணக்கிடலாம். இரவும் ரூ. 300 வரைக்கும் விற்கும்.

 

ஒரு நாளைக்கு இரண்டு குழு. ஒரு குழுவில் 3 பெண்கள். மாத்தி மாத்தி சமைப்போம்.  சமைக்கிற ஆளுக்கு தகுந்த மாதிரி அதன் ருசியும் மாறும். ஒரு பெண் கூடுதலாக டோக்கன் கொடுத்து, பணம் வாங்குகிறவர். ஆக மொத்தம் 7 பெண்கள்.

 

எவ்வளவு சம்பளம் என கேட்டால்? முன்பு ஒரு நாளைக்கு ரூ. 300. இப்பொழுது ரூ. 25 அதிகப்படுத்தி, ரூ. 325 தருவதாக சொல்கிறார்.

 

ஆக கணக்குப் போட்டால், ஒரு நபருக்கு ரூ. 10000 என்றால் ஏழு பேருக்கு ரூ. 70000.  வசூலை கணக்கிட்டால் (அவர்கள் சொன்னதையே சரி என எடுத்துக்கொண்டால்… ரூ. 1000+300+300 = 1600 * 30 நாட்கள் )  ரூ. 48000.  மற்றபடி மின்சாரம், அரிசி, பருப்பு, கேஸ் என எல்லா செலவுகள் தனி.  ஆக ஒரு வருடத்திற்கு ஒருமுறை ஒரு கணிசமான தொகை ஒதுக்கி தான் இந்த செலவுகளை அரசு மேற்கொள்கிறது எனலாம்.

 

மற்றபடி நட்டம் என்பதாக நாம் சொல்லமுடியாது. இந்த சமூகம் கடந்த முப்பது ஆண்டுகளில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இந்திய முதலாளிகளும் வரிசையில் நின்றிருக்கிறார்கள்.   இந்த அரசை நடத்துவதே கார்ப்பரேட்டுகளும், இந்திய பெரும் முதலாளிகளும் தான் என்பது நடைமுறையில் பளிச்சென தெரிகிறது.. அதனால் தான் மறைமுகமாக நிறைய சலுகைகளும், மானியங்களும் அவர்களுக்கு அள்ளித் தரப்படுகிறது. 

 

வறிய நிலையில் உள்ள மக்கள் அரசை எதிர்த்து போராட துவங்கிவிடுவார்கள் என்று தான் அம்மா உணவகங்களும், கிராமப்புறங்களில் நூறுநாள் வேலை திட்டங்களும் அமுல்படுத்தப்படுகின்றன.  முதலாளிகளுக்கு அள்ளித்தந்தால், வறியவர்களுக்கு கிள்ளித் தருகிறார்கள் எனலாம்.  ஆனால் இதெல்லாம் நீண்ட நாட்களுக்கு தாங்காது என்பது முக்கியமானது.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

0 பின்னூட்டங்கள்: