> குருத்து: September 2021

September 29, 2021

Confidential Assignment (2017) தென்கொரிய சண்டைப்படம்


நடுநிசியில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும் பொழுது, எப்பொழுதாவது படம் பார்ப்பதுண்டு. நேற்று யூடியூப்பில் தேடிய பொழுது இந்தப் படம் கிடைத்தது.  கொஞ்ச நேரம் பார்ப்போம். இல்லையெனில் தூங்கிவிடலாம் என நினைத்தேன். படம் முழுவதும் பார்த்த பிறகு தான் தூங்கினேன்.

***

 

எளிய கதை தான். வடகொரியாவில் ரகசியமாக கள்ள நோட்டு அடிக்கிறார்கள் என செய்தி அறிந்து சிறப்பு புலனாய்வு குழு அவர்களை பிடிக்கப்போகிறார்கள். பார்த்தால், அதன் பின்னணியில் சி.பு.குழு மேலாதிகாரியே இருக்கிறான். குழுவில் உள்ள நாயகன், அவன் துணைவியார் என எல்லோரும் சுடப்படுகிறார்கள். நாயகன் மட்டும் உயிர் பிழைக்கிறான். அந்த கிரிமினல் தென்கொரியாவிற்கு தப்பித்துவிடுகிறான். பொண்டாட்டியை கொன்றுவிட்டதால், கிரிமினலை தன் கையாலேயே கொல்லவேண்டும் என வெறியோடு இருக்கிறான்.

 

வடகொரிய, தென்கொரிய அரசும் அந்த கிரிமினலைப் பிடிக்க ஒரு குழு உருவாக்குகிறது. அதில் நாயகன் இருக்கிறான். ”ஏண்டா போலீசு வேலைக்கு வந்தோம்! கிரிமினலை எல்லாம் பிடிக்க சொல்கிறார்கள். பெரிய தொந்தரவாக இருக்கிறதே!” என அலுத்துக்கொள்ளும் (தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிராமனந்தம் போல) ஒரு தென்கொரிய அதிகாரியை பார்ட்னராக போடுகிறார்கள்.  அவருக்கு வேலை கிரிமினலை பிடிப்பதல்ல!  நாயகன் என்ன செய்கிறான் என கண்காணிப்பதும், இதற்கு பின்னால் வேறு ஏதாவது திட்டம் இருக்கிறதா என கண்டுபிடிப்பதும் தான்!

 

இந்த குழு இணைந்து வில்லனை கண்டுப்பிடித்தார்களா? என்பதை வேகமாகவும், கார் சேசிங், சண்டைக் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

 

ஒரு குழுவில் எப்பொழுதும் சீரியசாகவும், மென்சோகத்துடனும், வேகத்துடன் இருக்கிற நாயகன், அவனுக்கு நேர் எதிரான இன்னொரு ஆளும் இருந்தால் என்ன ஆகும்? கலகலப்பாகவும், வேகமாகவும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

 

தென்கொரியா, வடகொரியா அதிகாரிகள் என்பதால், இரண்டு நாடுகளின் அரசியல், பண்பாடு பற்றி இடையிடையே கிண்டலடித்துக் கொள்கிறார்கள். சீரியசாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

 

பார்த்தே ஆகவேண்டிய படம் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.  கொஞ்சம் மெனக்கெட்டு நல்ல தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்கள்.  யூடியூப்பில் இலவசமாகவே கிடைக்கிறது. வேறு ஓடிடியில் இல்லை என இணையம் சொல்கிறது.  வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

September 26, 2021

கடைகளில் குவிந்து இருக்கும் நாற்காலிகள்! நின்று கொண்டே இருக்கும் தொழிலாளர்கள்!



நேற்று வீட்டுக்கு போகும் வழியில், பாடியில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கண்ணில்பட்டது.  பகுதியில் கொசு தொல்லை அதிகமாகிவிட்டது.  டெங்கு பரவி வரும் வேளையில், பாதுகாப்புக்கு கொசுவலை வாங்கலாம் என உள்ளே நுழைந்தோம்.

 

போன உடனே  ஒரு விசயத்தை ஆவலாய் தேடினேன்.  அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உட்கார்வதற்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் என!  ஆனால் நாற்காலிகளை காணோம்.  எல்லோரும் நின்று கொண்டுதான் இருக்கிறார்கள்.  இருப்பினும் உறுதிப்படுத்துவதற்கு அங்கு வேலை செய்த இரண்டு இளம் பெண்தொழிலாளர்களிடம்  கேட்டேன்.  சமீபத்தில் தமிழக அரசு ஜவுளிக் கடைகளில் உட்கார்வதற்கு நாற்காலி தரவேண்டும் என சட்ட மசோதா நிறைவேற்றியதே!  உங்களுக்கு நாற்காலி தரவில்லையா? என்றேன்.  ”இல்லை” என மவுனமாய் தலையாட்டினார்கள்.

 

ஜவுளி கடைகளில் தொழிலாளர்களுக்கு நாற்காலி தருவதில்லை.  அதனால் அவர்கள் பலவித நோய்களுக்கு உள்ளாகிறார்கள். ஆகையால், அனைத்து தொழிலாளர்களுக்கும் உட்கார்வதற்கு நாற்காலி தரப்படவேண்டும் என  கடந்த செப். 9ந் தேதி சட்ட சபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இருபது நாட்களுக்கு மேலாகியும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் தலைநகர் சென்னையில் இயங்கும் சரவண ஸ்டோர்ஸ் கடைகளில் இன்னும் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.  அந்த கடைக்கு தினசரி பல ஆயிரம் மக்கள், அதிகாரிகள் என எல்லோரும் தான் அந்த கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக போய்வருகிறார்கள்.  இதெல்லாம் அரசுக்கு தெரியாதா?  

 

தொழிலாளிகளுக்கு அடிப்படையான வசதிகள் செய்து தரவேண்டும் என்ற அடிப்படை விதிகளை ஒரு முதலாளி கடைப்பிடிக்க மாட்டார்.  அரசும் கண்டு கொள்ளாது.  ஒன்று மட்டும் புரிகிறது. எத்தனை சட்டங்கள் போட்டாலும், அதை முதலாளிகள் கண்டுகொள்ளமாட்டார்கள். தான் போட்ட சட்டத்தை சின்சியராக நடைமுறைப்படுத்த அரசு அமுல்படுத்தாது. அப்படியானால் இதற்கு தீர்வு.  தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடினால் தான் உட்கார்வதற்கு நாற்காலிகள் போடப்படும் என்பது இதில் கிடைக்கும் அடிப்படை பாடம்.

 

வரலாறு நெடுக போராடியதால் தான் தொழிலாளர்களுக்கு பல உரிமைகள் கிடைத்தன.  போராடாமல் விட்டதால் தான் பெற்ற உரிமைகளையும் பாதுகாக்க முடியாமல், ஒவ்வொன்றாக தொலைத்து வருகிறோம்.  சங்கம் வைக்க கூடாது என பதறும் முதலாளிகள், கலைக்க பாடுபடும் முதலாளிகள் அனைவருமே ஒற்றுமையாய் ஒரு சங்கம் வைத்து தான் இயங்குகிறார்கள். அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். தங்களுக்கான உரிமைகளை பெறுகிறார்கள். முதலாளித்துவ பண்பாடு என்பது ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக ஆக்கி, ஒன்றுசேர விடாமல் செய்வதில் வெற்றி பெற்று வருகிறது.  அதனால் தங்கள் லாபத்தை இன்னும் பெரிதாக பெருக்கி கொள்கிறார்கள். தொழிலாளர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதில் தான் அவர்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது.

 

அதோ அதே சரவண ஸ்டோர்சில் நாற்காலிகள் மொத்தம் மொத்தமாய் நாற்காலிகளை குவிந்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். தூரம் அதிகமில்லை. அதை எடுத்துப் போட்டு உட்கார்வதற்கு ஒன்றிணைந்து போராடுவதை தவிர வேறு குறுக்கு வழிகள் இல்லை.

 

வெளியே வந்து அண்ணாந்து பார்த்தேன். ”The Legend” என பெரிதாய் போட்டிருந்தார்கள். நான் பார்ப்பதை பார்த்துவிட்டு, “The Legend” ன்னா என்னப்பா? என என் பொண்ணு கேட்டார்.  தொழிலாளர்களுக்கு உட்காருவதற்கு சீட் கூட தராத ஆள் தான் “The Legend” என்றேன்.

 

September 25, 2021

Safe House (2012) American Action Thriller film

சத்யராஜ் நடித்த ”ஜீவா” படத்தில் ஒரு டைரியை கைப்பற்ற வெறித்தனமாய் துரத்துவார்கள் வில்லன் கும்பல்.  அது போல ஒரு கதை தான் இந்தப் படமும்.  அமெரிக்க உளவுத்துறையில் உள்ள மோசமான நபர்களைப் பற்றிய ஆதாரங்களை பட்டியலிட்டு இருக்கும் ஒரு டிஜிட்டல் கோப்பை (File) நாயக
ன் வைத்திருக்கிறார். அவரை கொன்றாவது அதை கைப்பற்ற வேண்டும் என துரத்துகிறார்கள். 

 

அமெரிக்க உளவுத்துறை ஒவ்வொரு நாட்டிலும், தான் ரகசியமாய் கைது செய்யும் நபர்களை விசாரிக்க யாருக்கும் தெரியாத ரகசியமாக ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்கள். அதற்கு பெயர் தான் Safe House.  அதில் ஒரு இளைஞன் இளம் அதிகாரியாக வேலை செய்கிறார்.   நாயகனைப் பிடித்து அந்த இடத்திற்கு கொண்டு வருகிறார்கள். வந்த கொஞ்ச நேரத்திலேயே பின்னாலேயே ஒரு குழு வந்து எல்லோரையும் சுட்டுத்தள்ளுகிறது. நாயகனை அங்கிருந்து நகர்த்தி தப்பிக்கிறான் இளைஞன். பின்னால் விடாமல் துரத்துகிறது.  ஒரு கட்டத்தில் நாயகன் அந்த இளைஞனிடமிருந்தும் நாயகன் தப்பிக்கிறார். ஒரு பக்கம் வில்லன் கும்பல் துரத்த, நாயகன் தன் வேலையை தக்க வைத்துக்கொள்ள துரத்துகிறான்.

 

பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

 

*****

 

அமெரிக்க உளவுத்துறை என்பது அமெரிக்கா தன் அரசியல் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் தக்க வைப்பதற்காக உள்ளடி வேலைகளை அயராது செய்வது தான் தன் வேலை.  வரலாறு நெடுகிலும் சி.ஐ.ஏ செய்த கொலைகளும், சித்திரவதைகளும் உலக அளவில் இழிபுகழ் பெற்றவை.  ஒருவேளை அமெரிக்காவின் அரசியல், இராணுவ மேலாண்மை வீழும்பட்சத்தில் (வீழவேண்டும். அப்பொழுது தான் உலக நாடுகளுக்கு விடிவு)  சி.ஐ.ஏவில் வேலை செய்த முன்னாள், இன்னாள் அதிகாரிகள் என அனைவருமே விசாரணை வைத்து கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.  (அமெரிக்க உளவுத்துறையில் கொலைகள், சித்திரவதைகள் பற்றி அறியவேண்டும் என்றால், சொல்லுங்கள் ஆதாரங்களை பின்னூட்டத்தில் பகிர்கிறேன்.)

 

டென்சில் வாசிங்டன் தான் நாயகன். சிறப்பாக செய்திருக்கிறார். Ryan Rodney Reynolds  தன்னை நிரூபிக்க துடிக்கும் இளம் அதிகாரியாக வருகிறார். ஒரு வழியாக டென்சிலின் முக்கிய படங்களையும், கிடைத்த படங்களையும் பார்த்துவிட்டேன் என நினைக்கிறேன். ஒரு சில படங்கள் எங்கும் இணையத்தில் இல்லை.

 

ஆக்சன் படங்களில் விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம். நெட் பிளிக்சிலும், அமேசான் பிரைமிலும் இருப்பதாக இணையம் சொல்கிறது.

 

 

September 22, 2021

Training Day (2001)


நாயகன் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் துறையில் இரண்டு வருடங்கள் வேலைப் பார்த்துவிட்டு, மாற்றலாகி போதை பொருள் தடுப்பு துறைக்கு வருகிறார்.

 

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அவனை அழைத்துக்கொண்டு நகர்வலம் வருகிறார் சீனியர் அதிகாரி. பகுதியில் போதை விற்கும் ஒரு இடத்திற்கு வந்து சேர்கிறார்கள்.  அங்கு வந்து போதை பொருளை வாங்கிச் செல்லும் மூன்று இளைஞர்களை விரட்டிப்போய், அவர்கள் வாங்கி வைத்திருந்ததை பிடுங்கிவிட்டு, மிரட்டி அனுப்புகிறார்.  அந்த போதைப் பொருளை நாயகனை பயன்படுத்த சொல்கிறார்.  அவன் முடியாது என மறுக்கிறான். ”என்னென்ன போதைப் பொருள் எப்படி என தெரிவது இந்த வேலையில் முக்கியம். ஆகையால் நீ பயன்படுத்தியே ஆகவேண்டும்” என துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் பயன்படுத்துகிறான்.

 

சீனியர் தனக்கு தெரிந்த, முன்பு போலீசாய் இருந்து, இப்பொழுது போதை பொருள் கடத்தும் ஒரு ஆளை போய் பார்க்கிறார்கள்.  பிறகு உயரதிகாரிகளை போய் பார்க்கிறார்.  பிறகு, தாங்கள் சந்தித்துவிட்டு வந்த அந்த ஆளை போலி என்கவுன்டரில் போட்டுத்தள்ள இன்னும் சிலரை சேர்த்துக்கொண்டு கிளம்புகிறார்கள். அங்கு அந்த ஆள் மறைத்து வைத்திருந்த 4 மில்லியன் டாலரை ஆளுக்கு 2.50 லட்சம் டாலர் என எடுத்துக்கொண்டு, மீதி 3 லட்சம் டாலரை அரசிடம் ஒப்படைத்துவிடலாம் என பேசிக்கொள்கிறார்கள். இதில் நாயகன் உடன்பட மறுத்து, தனக்கான பணம் வேண்டாம் என்கிறார்.

 

அவனை லஞ்சத்திற்குள் விழ வைக்க சீனியர் அதிகாரி டிசைன் டிசைனாக பேசினாலும் அவன் மறுக்கிறான். அவன் போக்கில் விட்டால், தங்களை மாட்ட வைத்துவிடுவான் என முடிவு செய்து, அவனையே அந்த முன்னாள் போலீசை சுட்டுக்கொல்ல சொல்கிறார்கள். அவன் மறுக்கிறான்.

 

அதன் பிறகு என்ன ஆனது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

 

****

ஒரு துறையில் சீனியர் அதிகாரி, அதற்கு மேல் உள்ள அதிகாரிகளும் லஞ்ச பேர்வழிகள் எனில் அதில் ஒரு நல்லவர் சிக்கிக்கொண்டால், அநேகமாக டார்ச்சர் செய்து, வேலையை விட்டு துரத்திவிடுவார்கள் அல்லது அதிகப்பட்சம் கொன்றுவிடுவார்கள் என்பது நிதர்சனம்.

 

என் நண்பர் ஒருவர் பத்திர பதிவு துறையில் ஊழியராக வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அவருக்கு கொடுத்த பங்கு பணம் ரூ. 300. அவர் வாங்கவில்லை. அவர் அதற்கு பிறகும் 10 ஆண்டுகளுக்கு மேலாக லஞ்சம் வாங்காமல் வேலை செய்தார். சந்திக்கும் பொழுதெல்லாம், லஞ்சம் வாங்காமல் இருப்பதால், எவ்வளவு தொல்லைகளை அனுபவிக்க முடிந்தது என்பதை கதை கதையாக சொல்வார். இப்பொழுது ஒரு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.  நேர்மையாக இருந்ததால், டார்ச்சர் செய்ததால், தற்கொலை  செய்து கொண்ட சம்பவங்களையும் செய்திகள் வழியாக கேள்விப்படுகிறோம். இதெல்லாம் தனிநபர் பிரச்சனை இல்லை. சிஸ்டமே கோளாறாக இருக்கும் பொழுது, சிஸ்டத்தைத் தான் மாற்ற முயலவேண்டும்.

 

ஒரு நாள் கதை தான் படம். அதனால் தான் Training Day என்கிறார்கள். நல்லா கொடுத்தன்யா டிரெனிங்! டென்சில் வாசிங்டன் தான் அந்த சீனியர் அதிகாரியாக வருகிறார். அருமையான நடிப்பு.  அதற்காக சிறந்த நடிகர் என்ற பிரிவில் அகாடமி விருதை பெற்றுள்ளார்.  நாயகனகாக வரும் Ethan Hawke நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

 

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

 

Alonzo: "To Protect The Sheep You Gotta Catch The Wolf, And It Takes A Wolf To Catch A Wolf."

 

Alonzo: "Nothing's Free In This World, Jake. Not Even Arrest Warrants."

 

September 17, 2021

About Time (2013) - British Romantic Comedy Drama

 



நாயகன் ஒரு இளைஞன். சொந்த பந்தங்களுடன், நண்பர்களுடன் அவனுடைய வீடு கொண்டாட்டத்தில் இருக்கிறது.  ஒரு பெண்ணைப் பார்க்கிறான். ஒரு முத்தம் கேட்டால் கொடுத்திருப்பாள். ஆனால், நழுவ விட்டு வருந்துகிறான்.
 
ஒருநாள், அவனுடைய அப்பா தனியாக அழைத்து, ”உனக்கு இப்பொழுது இருபத்து ஒன்று நிறைவடைகிறது. நம் பரம்பரையில் ’ஆண்களுக்கு’ மட்டும் ஒரு அபூர்வ சக்தி இருக்கிறது. ஒரு இருட்டான அறையில் நின்று கொண்டு, கண்களை இறுக்கமாக மூடி, கைகளை அழுத்தமாக மூடி, நம் நினைவில் உள்ள சம்பவத்தை நினைத்தால், அந்த தினத்திற்கு, அந்த நேரத்திற்கு காலப்பயணம் (Time Travel) செய்யலாம் என்கிறார். ”கலாய்க்கிறீங்களா!” என கேட்டு, சோதித்துப் பார்க்கிறான்.  புத்தாண்டு இரவுக்கு போய், நழுவிப்போன வாய்ப்பான அந்த பெண்ணை முத்தமிட்டு திரும்பவும் அப்பாவிடமே வருகிறான்.
 
சில விதிகளை சொல்கிறார். ”எதிர்காலத்திற்கு செல்லமுடியாது. நம் நினைவில் உள்ள நாட்களுக்கு மட்டுமே செல்லமுடியும். நான் இந்த சக்தியை நிறைய படிப்பதற்கு பயன்படுத்தினேன். பணம், புகழ் பண்ணுவதற்கு பயன்படுத்தாதே! நிம்மதியை தராது!” என்கிறார். ”தனக்கு ஒரு காதலி இல்லை. அதற்கு பயன்படுத்திக்கொள்கிறேன்” என்கிறான்.
 
இதெல்லாம் துவக்க 10 நிமிட படம். பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு காதலி கிடைக்கிறாள். அப்பாவின் நண்பருக்கு உதவப்போய், தற்காலிகமாக காதலியை தொலைக்கிறான். பிறகு சுதாரித்து சரி செய்கிறான். இப்படியே அவன் வாழ்வில் என்ன நடந்தது? எப்படி மாற்றியமைத்தான்? எதை மாற்றி அமைக்க முடியவில்லை என்பதை சொல்லி முடிக்கிறார்கள்.
****
 
காலப் பயணத்திற்கு கதையின் ஆசிரியர் பெரிதாக அலட்டிக்கொள்ளவேயில்லை. ஒரு இருட்டறையில் நின்றுகொண்டு யோசித்தால் போய்விடலாம் என்பது எளிய, சுவாரசியமான கற்பனை. உண்மையில் அப்படித்தான் ஒவ்வொருமுறையும் நாம் நினைவில் காலப்பயணம் மேற்கொள்கிறோம் தானே!
 
இந்த சக்தியை வைத்துக்கொண்டு, தான் சொதப்பும் பொழுதெல்லாம். திரும்பவும் அதே சமயம் போய், அதையெல்லாம் சரி செய்வான்.  வாழ்க்கையில் சொதப்பல்களும் ஒரு பகுதி தானே!  நாம் முன்பு சொதப்பியதை எல்லாம் இப்பொழுது நினைத்தாலும் ஒரு புன்னகை பூக்கிறோம். ஒருவேளை சொதப்பியதை சரி செய்யலாம் என போய், இன்னும் கொஞ்சம் சொதப்பலானால் என்ன செய்வது?
 
ஊரிலிருந்து ஒரு சொந்தக்கார பெண் ஒருவள் கோடைக்கால விடுமுறைக்கு வருவாள்.  ஊருக்குப் போவதற்கு முதல்நாள் தன் காதலை சொல்வான்.  ”இப்ப சொன்னா எப்படி? துவக்கத்திலேயே சொல்லியிருந்திருக்கவேண்டும்!” என்பாள். அப்படியா? சொல்லிட்டா போகுது என இவன் அவள் வந்த முதல் நாள் இரவுக்கு போய், காதலை சொல்வான். “இப்பத்தான் வந்திருக்கிறேன். துவக்கத்திலேயே எப்படி? பழகலாம். இறுதி நாளில் முடிவெடுக்கலாம்!” என்பாள்.  காலப்பயணம் செய்தாலும், பிடித்தால் தானே காதல்!  இப்படிப்பட்ட சுவாரசியங்களை படம் முழுக்க தூவியிருக்கலாம்.  இயக்குநர் எதார்த்தவாத படம் போல மெல்ல கொண்டு சென்றுவிட்டார்.
 
நாயகி பொருந்தியிருக்கிறார். ஹாரி பார்ட்டர் படத்தில் கலகலப்பான இரட்டையர்களாக வரும் Bill weasley தான் நாயகன்.  இந்த பாத்திரத்திற்கு இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும் என பட்டது. எந்த ஓடிடி தளத்திலும் இல்லை.  நண்பரிடமிருந்து வாங்கிப்பார்த்தேன். ஓரிரு அடல்ட் காட்சிகள் உண்டு.  

வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

September 10, 2021

John Q (2002) டென்சில் வாசிங்டனின் திரில்லர் படம்



நாயகன் ஒரு கருப்பின தொழிலாளி. அவருடைய துணைவியார் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறார். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன். பொருளாதார நெருக்கடியில் தான் வாழ்கிறார்கள்.  ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்த பையன் சுருண்டுவிழுகிறான்.  என்னவென சோதித்தால், அவனுக்கு இதயம் மிக பலவீனமாக இருக்கிறது. புதிய இதயம் பொருத்தினால் மட்டுமே அவனால் வாழமுடியும் என்கிறார்கள். போட்டிருக்கும் காப்பீடு தாங்காது. இரண்டரை லட்சம் டாலர் வேண்டும் என்கிறார்கள். நம்மூர் பணத்தில் இரண்டு கோடி என சொல்லலாமா?

 

வீட்டில் இருப்பதை விற்கிறார்கள். நண்பர்கள் உதவுகிறார்கள். கடன்  கேட்கிறார்கள். இவர்களுக்கு அடகு வைக்க எந்த சொத்தும் இல்லாததால், கை விரிக்கிறார்கள்.  அந்த பையன் சோர்வடைந்துகொண்டே வருகிறான். அவனின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ”ஏதாவது செய்து பிள்ளையை காப்பாற்றுங்கள்” என அரற்றுகிறார்.

 

பையன் இருக்கிற மருத்துவமனையின் அவசர வார்டில் உள்ளே புகுந்து அங்கிருப்பவர்களை துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கிறார்.  அவரது ஒரே கோரிக்கை. “என் பிள்ளையை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுங்கள்”. மருத்துவமனையை சுற்றி வளைக்கிறது சிக்காக்கோ போலீஸ். ஒரு கட்டத்தில் அவரை சுட்டாவது அங்கு சிக்கியவர்களை காப்பாற்றவேண்டும் என முடிவெடுக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை பரபரப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்கிறார்கள்.

 

****

”உங்க கணவர் எப்படிப்பட்டவர்?” என கேட்கும் பொழுது, ”அவர் மிகவும் அன்பானவர். மென்மையானவர்” என்பார். அப்படிப்பட்டவரையே தன் மகனுக்காக துப்பாக்கியை ஏந்த வைத்துவிடும். இந்தக் கதையை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அமெரிக்காவின் மருத்துவ நிலையை கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும்.

 

அமெரிக்காவில் நம்மூரைப் போல அரசு மருத்துவமனைகள் இல்லை. முழுக்க முழுக்க காப்பீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான். காப்பீட்டுத் தொகையும் மிக அதிகம். வேலை செய்யும் பொழுது, நிறுவனங்கள் தங்கள் பணியாட்களுக்கு காப்பீடு செய்து தருகிறார்கள். ஒரு குடிமகன் வேலை இல்லாமல் போனால், காப்பீடு இல்லாமல் தத்தளிப்பான். அடுத்து வரும் நோய் அவனை அச்சுறுத்தும். பதட்டத்தை ஏற்படுத்தும்.

 

2008ல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, அமெரிக்காவில் 10% பேருக்கு மேலாக வேலை இல்லை.  அமெரிக்காவின் மக்கள் தொகை 30 கோடி என்றால், இதில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 20 கோடி என வைத்துக்கொண்டால், 2 கோடி பேருக்கு மேல் வேலை இல்லை. அதனால், காப்பீடு இல்லை. அப்படியே காப்பீடு இருந்தாலும், இந்த நோய்க்கு காப்பீடு இல்லை என்பார்கள். நீ ரெம்ப குண்டா இருக்கே! ரெம்ப ஒல்லியா இருக்கே! என இல்லை என்பார்கள் அல்லது காப்பீடுப் பணத்தை இன்னும் அதிகம் கேட்பார்கள். உலகம் முழுவதும் ரவுடித்தனத்தில் ஈடுபடும் அமெரிக்காவின் மருத்துவ லட்சணம் இது தான்.

 

அமெரிக்காவில், ஒபாமா பதவியேற்கும் பொழுது, “அமெரிக்காவில் மருத்துவ பிரச்சனை என்பது எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டாக இருக்கிறது” என்றார். அமெரிக்காவில் மருத்துவ பிரச்சனை குறித்து மைக்கேல் மூர் ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார்.  இதெல்லாம் அமெரிக்காவில் தான். கனடாவில், க்யூபாவில், பிரிட்டனில் எல்லாம் மருத்துவம் இலவசம் தான்.  சோவியத்தில் புரட்சி வந்து, அந்த புரட்சி மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கு பரவிய பொழுது, தங்கள் நாடுகளிலும் சோசலிச புரட்சி பரவிவிடும் என்ற பயத்தில், மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசுகள் போல பல நல திட்டங்களை அமுல்படுத்த துவங்கினார்கள். அதன் விளைவு தான் இப்பொழுது அவர்கள் அனுபவித்து வரும் திட்டங்கள்.

 

இந்தியாவிலும் அமெரிக்காவை அப்படியே தரவிறக்கம் செய்கிறார்கள். அதன் விளைவு தான் எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிறார்கள். மோடி தங்களுடைய நெருங்கிய முதலாளி நண்பர்களுக்கு, நாட்டில் உள்ள பொதுச்சொத்துக்களை குறைவான விலைக்கோ, குத்தகை என்ற பெயரிலோ அள்ளித்தந்து கொண்டே இருக்கிறார்.  இந்தப் படத்தில் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் போலவே வருங்காலங்களில் நாமும் நிச்சயம் அல்லல்படுவோம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

 

மற்றபடி, டென்சில் வாசிங்டன் உட்பட அத்தனை நடிகர்களும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார்கள்.  எந்த ஓடிடி தளத்திலும் இல்லை. யூடியூப்பில் சப் டைட்டில் இல்லாமல் இருக்கிறது. பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

September 3, 2021

12பி (2001)



நாயகன் ஒரு எம்பிஏ பட்டதாரி.  ஒரு நேர்முக தேர்வுக்காக கிளம்புகிறார். அவர் சரியான நேரத்தில் 12பி பேருந்தைப் பிடித்திருந்தால், அவனின் வாழ்க்கை எந்த திசையில் போயிருக்கும்?  அவன் அந்த பேருந்தை தவற விட்டிருந்தால், அவனின் வாழ்க்கை எந்த திசையில் போயிருக்கும்? என ஒரே நேரத்தில் இரு கதைகளும் திரையில் விரிகிறது.

 

பேருந்தை பிடித்த நாயகனுக்கு நல்ல வேலை கிடைக்கிறது.  நல்ல நிலைமைக்கு முன்னேறுகிறார்.  அங்கு வேலை செய்யும் நாயகி, நாயகனை விரும்புகிறார். பேருந்தை விட்ட நாயகன் தன் நண்பனின் மெக்கானிக் செட்டில் செட்டிலாகிறார். அவரும் ஒரு பெண்ணை காதலிக்கிறார்.

 

இரு திசையில் சென்ற நாயகன் வாழ்வில் இறுதியில் என்ன ஆனது என்பதை சுவராசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

****

90களில் Sliding Doors என ஒரு பிரிட்டிஷ்-ஆங்கிலப்படம். அந்த படத்தின் உத்தியை எடுத்துக்கொண்டு இந்த கதையை எழுதியிருக்கிறார்கள்.  இந்த கதையும், திரைக்கதையும் தமிழுக்கு புதுசு என்பதால், சிக்காமல் இருக்கவேண்டும் என இயக்குனர் பாக்யராஜிடம் கதையை வாங்கியிருக்கிறார்கள். திரைக்கதையிலும் நிறைய உதவியிருக்க வாய்ப்பிருக்கிறது. வேறு யாராக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் சுத்தவிட்டிருப்பார்கள். பாக்யராஜ் காப்பாற்றிவிட்டார்.

 

மற்றபடி, சாம் பேருந்தைப் பிடித்ததால், அழகான சிம்ரன் கிடைக்கிறார். பேருந்தை விட்டு மெக்கானிக் ஆனாலும், அழகான ஜோ கிடைக்கிறார். வாழ்க்கை ஜோராத்தானே என போகிறது என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது, இயக்குநர் கடைசியில் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடுகிறார்.  ஜோவுக்காவது அன்புக்குரிய மாமா இருக்கிறார். சிம்ரன் ஏற்கனவே தன் அன்பு உறவை இழந்தவர். அவரை கதறவிட்டது தான் மனசை என்னவோ செய்துவிட்டது!  என்னமோ போடா மாதவா!

 

பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜீவா இந்தப் படத்தில் இருந்து தான் இயக்க துவங்கியிருக்கிறார். உன்னாலே உன்னாலே படத்தின் விவாதத்தின் பொழுது, ஜீவா எழுத்தாளர் எஸ். இரா விடம் சொல்லியிருக்கிறார். ”படத்தில் முப்பது வயதுக்கு மேலே யாரும் வரக்கூடாது. அம்மா, அப்பாவை கூட காட்டவேண்டாம்.” திரையரங்கிற்கு இனி இளைஞர்கள் தான் வருவார்கள். அவர்களுக்காக தான் இனி படம் என்பதை ஜீவா தான் ’முதலில்’ கண்டறிந்திருக்கிறார். அவர் பின்னாளில் சொன்னதை இந்தப் படத்திலேயே அமுல்படுத்த முனைந்திருக்கிறார்.

 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அத்தனை பாடல்களும் அருமை. யூடியூப்பில் நல்ல தரமான பிரதியே இலவசமாக கிடைக்கிறது. பாருங்கள்.

 

September 2, 2021

Eternal shunshine of the spotless mind (2004) அழியும் காதல் நினைவுகள்



நாயகன், நாயகியும் இருவரும் எதிர் எதிர் குணாதிசயம் கொண்டவர்கள். இருவரும் காதலிக்கிறார்கள். இணைந்து வாழ்கிறார்கள்.  ஒரு கட்டத்தில் இருவருக்கும் ரெம்ப முட்டிக்கொள்ளும் பொழுது, அவள் பிரிந்து சென்றுவிடுகிறாள்.

 

பிரிந்து சென்றவள், ஒரு நிறுவனத்தை அணுகி நாயகன் குறித்தான அத்தனை நினைவுகளையும் அழித்துவிடுகிறாள். இவன் அவளைத் தேடி போகும் பொழுது, யாரோ என்பது போல் அணுகிறாள். இவனுக்கு பித்து பிடித்தது போல் ஆகிவிடுகிறது. அவள் என்ன செய்தாள் என்பது இவனுக்கு தெரிந்துவிடுகிறது.

 

பிறகு இவனும் அவள் செய்ததையே செய்ய அந்த நிறுவனத்தை அணுகிறான். அவளைப் பற்றிய நினைவுகள் காட்சிகளாக விரிகின்றன. மெல்ல மெல்ல நினைவுகள் அழிக்கப்படுகின்றன. அவளுடனான கசப்பான நினைவுகளோடு, நல்ல நினைவுகளும் அழிக்கப்படுகின்றன. அவளின் மீதான காதலால் எப்படியாவது தன் மனதின் ஓரத்தில் அவளை ஒளித்து வைத்துக்கொள்ள எவ்வளவோ போராடுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

****

யோசித்துப் பார்த்தால், நினைவுகள் தானே வாழ்க்கை. ஒரு மனிதனின் அத்தனை நினைவுகளையும் அழித்துவிட்டால், அவன் தன் வாழ்ந்த வாழ்வை தொலைத்தவனாகிவிடுகிறான்.

 

அவளைப் பற்றிய நினைவுகள் மட்டும் குறிப்பாக அழிக்கப்படுகின்றன. அவனின் ஆழ்ந்த தூக்கத்திலேயே காதலின் கசப்பான நினைவுகளை அழிக்கும் பொழுது அமைதியாக இருப்பவன். நல்ல நினைவுகள் அழியும் பொழுது பதறுகிறான். நமது நினைவுகளும் விசித்திரம் தான். நல்ல நினைவுகளை பாதுகாத்து வைப்பதை விட, மோசமான நினைவுகளேயே திரும்ப திரும்ப தேய்ந்த ரிக்கார்ட் போல நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.

 

அதனாலேயே என் வாழ்வில் நல்ல நினைவுகளை நாட்குறிப்பில் எழுதி பாதுகாக்கிறேன். நல்ல நிகழ்வுகளை புகைப்படங்களாக, கொஞ்சம் செலவானாலும் ஆல்பமாக தயாரித்துக்கொள்கிறேன்.

 

படத்தில் ”மாஸ்க்” பட நாயகன் ஜிம் கேரியும், ’டைட்டானிக்’ பட நாயகி கேட் வின்ஸ்லெட்டும் பாத்திரங்களை அருமையாக செய்திருக்கிறார்கள். படம் நிறைய விருதுகளை பெற்றிருக்கிறது. நெட் பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.