”ஒருவர் உயரத்தில் இருந்து விழும் போது முதலில் பறப்பது போல் தோன்றும்”
- படத்தில் இருந்து....!
தாத்தா அருமையான ஓவியர். நாயகனுக்கு சிறு வயதில் இருந்து கற்பிக்கிறார். அவன் எந்தவொரு ஓவியத்தையும் அச்சு பிசகாமல், வரையக் கூடிய ஆளாக இருக்கிறான். ஓவியம் வரைந்து குறைவான வருமானத்தில் வாழ்க்கையை கடத்துகிறான்.
அவன் தன் தாத்தா போல அவனில்லை. அவனின் ஓவியத் திறன், அச்சுத் தொழிலில் கில்லாடியான நண்பன். தாத்தாவின் அச்சகம். கள்ள நோட்டு அடித்தால் என்ன என யோசிக்க துவங்குகிறான். ஒத்த சிந்தனை உள்ள நண்பனும் ஒத்துக்கொள்கிறான். தாத்தாவிடம் வேலை செய்யும் ஒரு முக்கிய நபரையும் உள்ளிழுத்து, நோட்டை அடிக்க துவங்குகிறார்கள். முதலில் கொஞ்சம் சொதப்பினாலும், தேர்ந்த நோட்டை அடிக்க துவங்கி, உள்ளூரில் கைமாற்றிவிடுகிறார்கள்.
இது புறம் நடக்க, உலக அளவில் இன்னொரு பெரிய கள்ள நோட்டு மாபியா கும்பல் பெரிய வலைப்பின்னலுடன் இயங்கிவருகிறது. இந்திய அதிகாரிகள் அவனைப் பிடிக்க பல வழிகளில் முயன்று வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் நாயகனும், மாபியா கும்பலும் நோட்டு அடிப்பதில் ஒன்றிணைகிறார்கள். அச்சு அசலாக 2000 நோட்டுகளாக 12000 கோடி அடித்து இந்தியாவிற்குள் சாதுரியமாக கொண்டு வருகிறார்கள்.
இந்த பெரும் பணத்தை இந்திய சந்தையில் இறக்குவதற்குள் அதிகாரிகள் அவர்களைப் பிடித்தார்களா என்பதை முழு நீளக் கதையில் விவரித்து இருக்கிறார்கள்.
தாத்தா 70 காலத்தை சேர்ந்த லட்சியவாதி. சமூகத்தை மாற்றவேண்டும் என்ற உறுதியில், அவரும் அவர் வயதில் உள்ள ஊழியர்களும் வறுமையில் கூட உற்சாகமாய் வேலை செய்கிறார்கள். ஆனால் நாயகனான பேரனோ எல்லா விழுமியங்களை தொலைத்து நிற்கிற ஒரு இளைஞன். கிராந்தியின் நிழலில் வளர்ந்தாலும், அதன் சித்தாந்தம் தன் மேல் விழாமல் வளர்கிறான். என்ன செய்தாவது குறுக்கு வழிகளில் முன்னேறவேண்டும் என துடிக்கிறான். படத்தில் இவன் புத்தி தான் வில்லன். ஆனால் கதையின் நாயகனாக வேறு இருப்பதால், கதையை கொண்டு செலுத்துவதில் கொஞ்சம் ஆங்காங்கே திணறித்தான் போயிருக்கிறார்கள்.
அந்த அரசியல்வாதி முக்கியமான ஆள். நிஜ அரசியல்வாதியை போலவே உருவாக்கியிருக்கிறார்கள். தேர்தல் தான் முக்கியம். தன் புகழ், தனக்கான இடம் தான் முக்கியம். நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன என பளிச்சென காட்டுகிறார்.
அந்த அதிகாரியும் சுத்தமான ஆளில்லை. தனக்கான ஒரு குழு. அதிகாரம். அதற்காக அரசியல்வாதியின் பலவீனத்தை சொல்லி சொல்லியே, இதைச் செய்வதால் அரசியல்வாதிக்கு என்ன பலன் என சொல்லி சொல்லியே தனக்கான வேலையை செய்கிறார்.
”ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திருடன் இருக்கிறான், வாய்ப்புக்காக மட்டுமே காத்திருக்கிறான்” என படத்தில் வசனம் வருகிறது. இந்தச் சமூகத்தை எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள். இப்படியும் சொல்லலாம். எல்லா திருடர்களும் இப்படி தங்களை நியாயப்படுத்திக்கொள்கிறார்கள்.
Farzi என்றால் போலி என அர்த்தம். கள்ள நோட்டு மட்டுமா போலி. பிரதமர் போலி. கவர்னர் போலி. இன்னபிற அரசியல்வாதிகள், அதிகாரிகள் என எங்கும் போலி மயமாய் தான் பரந்து விரிந்து இருக்கிறார்கள். இவங்க எங்க கள்ள நோட்டு கும்பலை பிடிச்சு, நாட்டைக் காப்பத்தறது என பார்க்கும் நமக்கு தான் ஆயாசமாக இருக்கிறது. இதையும் மீறி இந்த எலி, பூனை விளையாட்டை சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவில் கள்ள நோட்டு என்பது ஒரு பெரிய பிரச்சனை. இன்றைக்கு கூட ஒரு வழக்கறிஞர் 50 லட்சம் அடித்து, ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என இருவரும் மாட்டியிருக்கிறார்கள்.
இந்தியாவில் கள்ள நோட்டு எவ்வளவு புழங்குகிறது என தகவல்களை தேடிப்பார்த்தால், ஆர்.பி.ஐ. சொல்லும் அதிகாரப்பூர்வ தகவலே மிக அதிகமாக இருக்கிறது. உண்மையில் எவ்வளவு சுற்றும் என யோசித்தாலே தலைச் சுற்றுகிறது. இப்பொழுது உள்ள பலவீனமான சிஸ்டத்தை வைத்துக்கொண்டு எப்படி பிடிக்க போகிறார்கள் என்பது கவலை தரும் விசயம்.
“பேமிலி மேன்” இயக்குநர்களான Raj & DK தான் இந்த சீரிஸையும் இயக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு கிராப்ட் நன்றாக கைகூடி வந்திருக்கிறது. இதிலும் அவர்களின் வளர்ச்சி நன்றாக தெரிகிறது.
கதையின் நாயகர்களின் குடும்பத்தை பொதுவாக நமது படங்களில் குழப்பம் செய்வதில்லை. விதிவிலக்காக சில படங்கள் இருக்கலாம். ஆனால் இவர்களின் நாயகர்கள் வீட்டில் குழப்பம் இருப்பதை இயல்பாக காட்டியிருக்கிறார்கள். பேமிலிமேனில் கொஞ்சம் குழப்பமாய் காண்பித்தவர்கள், இந்த சீரிசில் கொஞ்சம் வளர்ந்து, அதிகாரியும் அவன் மனைவியும் விவாகரத்து செய்கிறார்கள். வளர்ச்சி தான்.
மற்றபடி, ”நாயகனாக” ஷாகித் கபூர், அதிகாரியாக நம்ம விஜய் சேதுபதி, பெரிய வில்லனாக கே.கே. மேனன், ஆர்.பி. ஐ அதிகாரியாக ராசி கண்ணா என எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வெப் சீரிஸ்க்கு இன்னும் சென்சார் வரவில்லை என நன்றாக தெரிகிறது. ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் சரளமாய் புழங்குகிறது.
அமேசான் பிரைமில், ஒரு சீசன். எட்டு அத்தியாயங்கள் என மொத்தம் ஆறு மணி நேரம் என விரிகிறது. தமிழிலும் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். இந்த சீசன் வெற்றியடைந்துவிட்டதால், மீண்டும் இன்னொரு சீசனோடு இவர்கள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment