நாளைக்கு கல்யாணம். முதல்நாள் மாப்பிள்ளை மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவருடன் இருந்த பிரிட்டிஷ் குடிமகனான நண்பனும் காணாமல் போகிறார்.
செத்துப் போன மாப்பிள்ளை பெரிய இடத்து ஆள். இன்னொருவர் பிரிட்டிஷ் குடிமகன் இரண்டு பேரும் செல்வாக்கு உள்ள ஆள் என்பதால், மேலிடத்தில் இருந்து அழுத்தம் பெரிதாக இருக்கிறது.
இந்த வழக்கை விசாரிக்கிற இரண்டு அதிகாரிகளும் மெல்ல மெல்ல துப்பு துலக்க ஆரம்பிக்கிறார்கள். பங்காளி குடும்பத்தில் சொத்துப் பிரச்சனை, செத்துப் போன, காணாமல் போன இருவருக்கும் போதைப் பழக்கம் இருக்கிறது. கல்யாணம் செய்யப்போகிற பெண்ணை “உயிருக்கு உயிராக” காதலித்த காதலன் என ஒவ்வொன்றாக விசாரிக்க துவங்குகிறார்கள்.
இறுதியில் கொலையாளியைக் கண்டுப்பிடித்தார்களா , கொலை எதற்காக நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***
ஒரு சீரிஸ். 6 அத்தியயாங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் சராசரியாக 45 நிமிடங்கள்.
பெரிய இடம் . உள்ளேயே பஞ்சாயத்து. ஆனால் அவர்களை விசாரிக்க முடியவில்லை. ஆளை தூக்கிக்கொண்டு ஸ்டேசனுக்கு வந்தால், உடனே மேலிடத்தில் இருந்து ”உடனே ஆளை விடுவி!” என அழுத்தம் கொடுக்கிறார்கள். ஒரு வசதியில்லாத பையன் இடையில் சிக்கினால், அவனே கொன்னான்னு வழக்கை முடி! ஏன் இழுக்கிற! என கையை முறுக்கி எழுத வைக்கிறார்கள். இரண்டு மூன்று இடத்தில் அந்த விசாரணை அதிகாரி வாய்விட்டே புலம்புகிறார்.
பஞ்சாபில் மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருவதையும், ஆங்காங்கே தொட்டுச் சென்றிருக்கிறார்கள். போலீஸ் எப்படி வன்முறையை கையாள்கிறது என்பதையும் நன்றாக பதிந்திருக்கிறார்கள். அதிகாரம், செல்வாக்கு எப்படி எல்லா இடத்திலும் வேலை செய்கிறது என்பதையும் நன்றாக பதிந்திருக்கிறார்கள்.
கதையின் பிரதானமான ஒன்றாய் ”காதல்” தான் இருக்கிறது. எல்லா கிளைக்கதையிலும் காதல் இழையோடி இருக்கிறது. காதல், அதில் உள்ள முரண்கள், உறவுச் சிக்கல்கள் என மொத்த தொடரிலும் காதல் தான் பின்னி பிணைந்திருக்கிறது. இதை விவரித்துச் சொன்னால் ஸ்பாயிலராகிவிடும். ஆகையால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
எல்லா பாத்திரங்களும் கொடுத்ததை சரியாக செய்திருக்கிறார்கள். பார்க்கலாம். நெட்பிளிக்சில் நல்ல தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment