நாயகன் நாவல் எழுதவேண்டும் என வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறான் ஆனால் கவிழ்ந்தடித்து தூங்கி வழிந்தபடி நாட்கள் நகர்கிறதே ஒழிய, ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. காதலியும் “ஆளை விடுடா சாமி” என சொல்லிவிட்டு நகர்கிறாள்.
”எதைத் தின்றால் பித்தம் தெளியும்” என நாயகன் இருக்கும் சமயத்தில், பழைய சகா ஒருவனைப் பார்க்கிறான். அவன் “சிறப்பான” மாத்திரைகளை விற்றுக்கொண்டிருக்கிறான். அந்த மருந்து மூளையின் நரம்புகளை விசேசமாக தூண்டுகிறது. இதனால் சிந்திக்கும் திறனும், செயல்படும் திறனும் பல மடங்கு அதிகரிக்கும். இன்னும் சந்தைக்கு வரவில்லை. இன்னும் சோதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதன் விலை அதிகம். ”உனக்காக இந்தா ஒன்று!” என தந்துவிட்டுப் போகிறான்.
பிகு செய்துவிட்டு, பிறகு வாங்கி சாப்பிடுகிறான். “வாடகை கொடுக்க வக்கில்லாதவனே!” என கன்னாபின்னாவென்று திட்டிய வீட்டு பெண் ஓனரை பேசி, மயக்கி படுக்கைக்கு தள்ளிக்கொண்டு போகிறான். மிக மோசமான முறையில் தனது வீட்டுப் பொருட்களை ஒரே நாளில் சரி செய்துவிடுகிறான்.
”தெய்வமே” என சகாவை மீண்டும் தேடிப்போகிறான். ஆனால், அங்கு அவன் கொலை செய்யப்பட்டு கிடக்கிறான். போலீஸ் வருவதற்குள் வீட்டுக்குள் தேடினால், சிறப்பு மாத்திரைகள் நிறைய கிடைக்கிறது. எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறான்
மாத்திரைகள் உள்ளே போகப் போக, நாலே நாளில் ஒரு நாவலை எழுதிவிடுகிறான்.
ஒரு மொழியை எளிதாக கற்றுவிடுகிறான். இதெல்லாம் தேறாது என பங்கு சந்தையில் நுழைகிறான். இரண்டு, மூன்று நாளில் மில்லியன்களில் பணத்தை அள்ளுகிறான்.
இப்படி நிறைய நல்லதுகள் நடந்தாலும், கெட்டவைகளும் விடாமல் துரத்துகின்றன. மாத்திரையின் பக்கவிளைவுகள் சிக்கல் செய்கின்றன. விசாரித்தால், இந்த மாத்திரையை உண்டவர்கள் சிலர் பரலோகம் போயிருக்கிறார்கள். சிலர் ஐசியூவில் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், ” ஆளை விடுங்கடா” என தற்கொலை வரைக்கு போய்விடுகிறான்.
பிறகு என்ன ஆனது என்பதை ட்விஸ்டுடன் முடித்திருக்கிறார்கள்.
*****
மனித மூளையின் திறனை மனிதன் தன் வாழ்நாலில் முழுமையாக பயன்படுத்துவதில்லை. விஞ்ஞானிகள், அறிவாளிகள் கூட அதிகப்பட்சம் பத்து சதவிகிதத்தைத் தான் தொட்டிருக்கிறார்கள் என்கிறார்கள். இந்தப் படம் பார்த்த பொழுது, Lucy படம் நினைவுக்கும் வந்து போனது.
அப்படி மூளையின் நரம்புகளைத் தூண்டினால், என்ன நடக்கும் என்ற சுவாரசியமான கற்பனை தான் இந்தப் படம். படம் ஆஹா ஓஹோ என இல்லாவிட்டாலும், கடைசி வரை பார்க்க வைத்திருக்கிறார்கள். மாத்திரை எடுத்துக்கொள்ளாத பொழுது அவன் நிலையையும், எடுத்த பிறகு இருக்கும் நிலையையும் ஒளிப்பதிவில் நன்றாக வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.
நெய்ல் பர்கர் இயக்கியிருக்கிறார். இவர் இயக்கியதில் 2006ல் வெளிவந்த illusionist ஒரு மேஜிக் மேன் பற்றிய படம். அருமையாக இருக்கும். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.
Bradley Charles Cooper தான் மொத்தப் படத்தையும் தாங்கியிருக்கிறார். இரண்டு நிலைகளுக்கும் நன்றாக வித்தியாசம் காட்டியிருக்கிறார். மற்றவர்களும் சிறப்பு. இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை என இணையம் சொல்கிறது. வேறு வழிகளில் தேடிப்பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment