> குருத்து: Devil (2024) தமிழ்

February 8, 2024

Devil (2024) தமிழ்

 


”நரகம் காலியாக உள்ளது, அனைத்து பிசாசுகளும் பூமியில் உள்ளன”

- ஷேக்ஸ்பியர்

****
நாயகிக்கு திருமணம் நடைபெறுகிறது. கணவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் உறவில் இருக்கிறான். நாயகிக்கு ஒரு விபத்தின் மூலம் ஒரு இளைஞனோடு பழக்கம் ஏற்படுகிறது. இதனால் வரும் குழப்பங்கள் தான் படமே!

ஒரு சிறுகதையை முழு நீளப்படமாக்கியிருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிந்தது. அதைத் தான் ஒரு விமர்சகர் இன்னும் சில சுவாரசியமான காட்சிகளை வைத்திருக்கலாம் என வேறு வார்த்தைகளில் சொன்னார்.

தன் கணவன் வேறு ஒரு உறவில் இருக்கிறான். இதற்கிடையில் கொஞ்சம் தடுமாறும் நாயகியின் பாத்திரம் ஓக்கே. அந்த இளைஞனின் பாத்திரம் ஓக்கே. ஆனால், கணவனாக வரும் பாத்திரம் படு செயற்கையாக இருந்தது. படத்தில் வழக்கறிஞராக வேறு வருகிறார். அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் உறவு என்றால், அதை யாருக்கும் தெரியாமல் கவனமாக பார்த்துக்கொள்வார்கள். பார்த்தால், அலுவலகத்திலேயே கசமுசா செய்கிறார்.

இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் வருங்காலத்தில் காலாவதியாகிவிடும். செல்போன் வந்த பிறகு முன்பை போல காட்சிகள் வைக்கவே முடியவில்லை என சில திரைப்பிரபலங்கள் ஆங்காங்கே புலம்புவதை பார்த்திருக்கிறேன். அது போல, சம காலத்தில் கணவன், மனைவிக்குள் ஒத்துப்போகவில்லை என்றால், பிரிந்து போவது சகஜமாகிக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் அப்டேட் செய்து கொண்டு, கதை எழுதுவது நல்லது. இல்லையெனில் இது போல கிரிஞ்ச் ஆகிவிடும்.

கதை விசயத்தில் தன்னை தலையிடவேண்டாம் என தனது தம்பியான இயக்குநர் ஆதித்யா கேட்டுக்கொண்டார் என மிஷ்கின் மேடையில் சொன்னார். என்னைக் கேட்டால், தலையிட்டிருக்கலாம். அதில் என்ன தப்பு இருக்கிறது என தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் தேறியிருக்கும்.

இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். அதன் மூலம் கொஞ்சம் படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.

மூன்றே மூன்று தான் முக்கிய கதாப்பாத்திரங்கள். நாயகியாக பூர்ணா படத்தை தாங்கியிருக்கிறார். இளைஞனாக வரும் அருண் என்ற திரிகன் (இது என்ன பெயர்?) கவர்கிறார். விதார்த் கொடுத்தப் பாத்திரத்தை காப்பாற்றியிருக்கிறார்.

சுமாரான படம்.

0 பின்னூட்டங்கள்: