> குருத்து: February 2024

February 29, 2024

Manjummel Boys (2024)


2006. கொச்சின் அருகே உள்ள மஞ்சுமேல் என ஒரு பகுதி. வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களான இளைஞர்கள். கயிறு கட்டி இழுக்கும் போட்டியில் குழுவாக ஈடுபடுகிறார்கள். அந்த குழுவிற்கான பெயர் தான் ”மஞ்சுமேல் பாய்ஸ்.”


வேறு ஒரு குழு சுற்றுலா போய்வந்த புகைப்படங்களை எதைச்சையாக பார்க்கிறார்கள். அந்த உற்சாகத்தில் கோவா செல்லலாம் என ஒருவன் சொல்ல, எப்பொழுதும் இப்படித்தான். ஒருவன் சாத்தியமோ இல்லையோ பெரிதாக முன்வைப்பான். பிறகு, பட்ஜெட்டுக்குள்ளேயோ, கொஞ்சம் பட்ஜெட்டைத் தாண்டியோ ஒரு இடம் என முடிவாகும். அப்படித்தான் கொடைக்கானல் என அவர்களும் முடிவு செய்கிறார்கள்..

ஒரு காரைப் பிடித்து ஜாலியாய் ஊர் சுற்றுகிறார்கள். குணா குகையை சுற்றிப் பார்க்கும் பொழுது, இளைஞர்கள் அல்லவா! உற்சாக மிகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி செல்ல, சிலர் தடுத்தாலும், சிலர் செல்ல, எல்லோருமே உள்ளே போகிறார்கள்.

அந்த அபாயகரமான பாதையில் ஒருவன் சறுக்கி விழ, ஒரு ஆழமான குகைக்குள் விழுகிறான். அந்த குகைக்குள் விழுந்தவர்கள் இதுவரை பிழைத்த வரலாறு இல்லை என பல கதைகளை சொல்ல, சொல்ல நண்பர்கள் திகைத்துப் போகிறார்கள்.

பிறகு அந்த இளைஞனை மீட்டார்களா இல்லையா என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****


கேரள திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடி, இப்பொழுது தமிழகத்தில் வெளியிட்டு, வரவேற்பை கண்டு திரையரங்குகளை அதிகரித்து இருக்கிறார்கள்.

உண்மைச் சம்பவம் என்பதால், அதற்குரிய இயல்புகளோடு இருப்பதே படம் அழகாக இருக்கிறது. குகைக்குள் விழுந்த பிறகு, போலீசு, தீயணைப்புத் துறை என அரசு நிர்வாகம் எத்தனை அலட்சியத்தோடும், திமிரோடும் நடந்துகொள்கிறார்கள் என்பதையும் சரியாக பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு பத்திரிக்கை இது வழக்கமான திரைப்பட கிளிசே காட்சிகளாக இருக்கிறது என எழுதுகிறது. நிகழ்வை எப்படி பதிவு செய்தார்களோ, அரசு நிர்வாகமும் எப்படி நடந்துகொண்டது என்பதை பதிவு செய்திருக்கிறார்கள். இதில் கிளிஷேவாக இருக்கிறது என சொன்னால்… அதை உல்டாவாக அவர்களை எல்லாம் வியந்தோத வேண்டுமா என்ன! நான்சென்ஸ்.

இளைஞர்களுக்கே உரிய உற்சாகம், நண்பனை காப்பாற்றுகிற பதட்டம், அழுகை, என எல்லா உணர்ச்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சிதம்பரம் என்பவர் இயக்கியிருக்கிறார். செளபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி என பலரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கதை கொடைக்கானல் என்பதால், தமிழ் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு, கலை என எல்லாமும் பக்கபலமாக நின்றிருக்கிறது. இளையராஜாவும் பொருத்தமாக ஆங்காங்கே வந்து போகிறார்.

திரையரங்குகளில் சப் டைட்டிலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

***

ஒரு கருத்தும், அதற்கான பதிலும்!

நமது தீயணைப்பு வீரர்களை கோழைகளாக காட்டியிருப்பது ஏற்புடையதாக இல்லை. இரண்டாவது கயிறை இழுக்கும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பது போல காட்டியிருப்பதும் தமிழர்கள் மனதாபிமானம் இல்லாமல் நிற்பதாக காட்டி இருப்பதும் அப்படித்தான்.. - Sne han, from facebook அப்படி கருதவேண்டியது இல்லை. விழுந்த இடம் அப்படி. அதுவரைக்கும் விழுந்தவர்கள் அங்கிருந்து காப்பாற்றப்பட்டது இல்லை என்பதையும் தெளிவாக சொல்லியிருப்பார்கள். காப்பாற்ற உள்ளே போய், அவரும் விழுந்துவிட்டால், தன்னுடைய பாடி கூட கிடைக்காது. இறப்புச் சான்றிதழ் கூட தரமாட்டார்கள். என் குடும்பம் தெருவிற்கு வந்துவிடும் என தெளிவாக சொல்வார்கள். இது கோழைத்தனம் அல்ல! அரசின் மீது ஒரு ஊழியருக்குள்ள நம்பிக்கையின்மை. இன்னொரு விசயம். முதலில் தீயணைப்பு வீரர்கள் தான் முதலில் கயிறு விடுவார்கள். அந்த நபரை எவ்வளவு நேரம் அப்படி உள்ளே அனுப்பினார்கள் என்பதை எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கட்டத்தில் தான், அந்த இளைஞர்கள் கைகொடுப்பார்கள். அவர்கள் கயிறு இழுக்கும் போட்டியில் தொடர்ச்சியில் ஈடுபடுபவர்கள். அதற்காக பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். அவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதும் முக்கியமான காரணம்.

February 23, 2024

அது ஒரு மேஜிக்காக இருந்தது.

 


நாயகி மருத்துவர். கணவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறவன்.

அவள் வாழ்வில் எல்லாம் இருக்கிறது. அன்பைத் தவிர!

தான் வாழ்வை மாற்றப்போகிறான் என தெரியாமலே இன்னும் இரண்டொரு மாதத்தில் இறக்கப்போகும் அவனிடம் பழக துவங்குகிறாள்.

படம் துவங்கி 39 நிமிடங்கள் கடந்துவிட்டன. அவனுடன் இரண்டாவது உரையாடலில் முகம் மலர்ந்து சிரிக்கிறாள். அவள் கன்னத்தில் அழகாக குழி விழுகிறது. அது ஒரு மேஜிக்காக இருந்தது.

- Swathi mutthina male haniye (2023) கன்னடம்

துறை சார்ந்தவர்களின் எழுத்து மிக அவசியம்.



தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்கள் செயல்படாமல் இருப்பது அவர்களை முடக்கி வைத்திருக்கிறது. அவர்களின் விரல்களை மருத்துவர் ஹரி சீனிவாசன்தன் தொடர் முயற்சியால் இயங்க வைத்திருக்கிறார். இது ஒரு உலக சாதனை. அவர் பெயரிலேயே Srinivasan effect என உலக சுகாதார மையம் அங்கீகரித்து அறிவித்திருக்கிறது.


அவர் ”சார்வாகன்” என்ற பெயரில் சிறுகதைகள், குறு நாவல் என நிறைய எழுதியிருக்கிறார். அவர் எழுதியதில் ஒன்று கூட மருத்துவம் சார்ந்ததில்லை. இது சம்பந்தமாக அவரிடம் விவாதித்த பொழுது, "நோயாளிகள் மருத்துவர்களை நம்பி சொல்கிறார்கள். அதை வெளியிடக்கூடாது அல்லவா!" என பதிலளித்திருக்கிறார்.

படைப்புகளை பலரும் எழுதுகிறார்கள். துறை சார்ந்தவர்கள் தங்களுடைய துறையில் உள்ள அம்சங்களை, சவால்களை, எதிர்காலம் குறித்து எழுதுவது என்பது மிக முக்கியமான அம்சம் அல்லவா!

நம் நாட்டில் எழுதுபவர்கள் மிக மிக குறைவு. நல்ல திறன் இருந்தாலும், எழுதுவதில் பயிற்சி இல்லை என்பதால், எழுதுவதில்லை. அப்படி இருக்கையில் துறை சார்ந்த விசயங்கள் பொதுமக்களுக்கு எப்படி தெரியவரும். அதுவும் குறிப்பாக மருத்துவர்கள் நோயாளிகளிடம் பேசுவதை குறைத்து சில பத்தாண்டுகளுக்கு மேலே ஆகிவிட்டன.

இப்பொழுது பரவாயில்லை. யூடியூப் எல்லாம் வந்த பிறகு சில மருத்துவர்கள் நிறைய‌ பேச ஆரம்பித்திருக்கிறார்கள். காணொளிகளைப் பார்க்க முடிகிறது.

துறை சார்ந்தவர்கள் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை வெட்டிவிட்டு, பேசவேண்டும். அது சமூகத்திற்கு மிகவும் அவசியம்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

February 22, 2024

சார்வாகனும் தொழு நோயாளிகளுக்கு உதவிய Srinivasan effctயும்!

”இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு” புத்தகத்தில் வரிசையாக செல்லாமல், தேர்தெடுத்து படிக்கலாம் என பார்த்ததில்… சார்வாகன் எழுதிய ”கனவுக் கதை” சிறுகதையைப் படித்தேன்.



சிறுகதைப் பற்றி இறுதியில் பார்க்கலாம். சார்வாகன் – எழுத்தாளரைப் பற்றி தேடியதில்… சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.

சார்வாகன் என்கிற பெயரில் எழுதியவர் ஹரி சீனிவாசன். தமிழ்நாட்டில் ஆரணியில் பிறந்து, சென்னையில் மருத்துவம் படித்து, லண்டனில் இரண்டு மேற்படிப்பு (FRCS) பட்டங்களை பெற்றவர். வெளிநாட்டிலேயே வசதியாக வாழ்ந்திருக்கலாம். நன்றாக சம்பாதித்திருக்கலாம். பிடிவாதமாக தமிழ்நாட்டில் தான் சேவை செய்யவேண்டும் என முடிவெடுத்து இறுதிவரை அதை கடைப்பிடித்திருக்கிறார். நோயாளிகளிடம் பணம் வாங்க கூடாது. அரசு கொடுக்கும் சம்பளமே போதும் என்றும் வாழ்ந்திருக்கிறார். அதற்கு அவர் கொண்ட மார்க்சிய கொள்கைகளும், காந்திய கொள்கைகளும் துணை நின்றிருக்கின்றன.


துவக்கத்தில் முடநீக்கியல் துறையில் சிறப்பு மருத்துவராக இருந்தவர். ஒரு கட்டத்தில் தொழு நோயுண்டவர்கள் மீது கவனம் செலுத்தியிருக்கிறார். தொழு நோயுண்டவர்களுக்கு விரல்கள் மடங்கிப்போகும். அதை இயங்க செய்வதற்கான மருத்துவம் அதுவரை இல்லாமல் இருந்திருக்கிறது. அதில் ஆய்வு செய்து அறுவை சிகிச்சை செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இதனால் உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு அவர்களுடைய விரல்கள் இயங்க தொடங்கியிருக்கிறது. உலக சுகாதார மையம் அவருடைய அந்த சேவையை மதித்து Srinivasan Effect என்ற பெயரும் வைத்திருக்கிறது. 1984ல் பத்மஸ்ரீ விருதும் கிடைத்திருக்கிறது.

“என் வாழ்க்கையின் உன்னதமான தருணம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரமோ, சர்வதேச மகாத்மா காந்தி விருதோ, பத்மஸ்ரீ விருதோ அல்ல. பல வருடங்களாகத் தன்னுடைய குடும்பத்தினராலேயே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தொழுநோயாளிப் பெண்மணி ஒருவர், என்னுடைய அறுவைச் சிகிச்சை மூலம் குணமான பிறகு, தன் கையால் பின்னிய ஒரு பூத்தையல் மேசை விரிப்பைப் பரிசளித்தார். நான் போற்றிப் பாதுகாக்கும் மிகவும் மகத்தான பரிசு அதுதான்!”

இந்திய வரலாற்றில் நாத்திகர்கள் தான் சார்வாகர்கள். பொருள்முதல்வாதிகளாக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் தன் பெயரை சார்வாகன் என புனைப்பெயராக வைத்திருக்கிறார்.

இப்பொழுது அவர் எழுதிய சிறுகதைக்கு வருவோம். அவர் எழுதிய காலம் 60, 70கள் என்கிறார்கள். 2015 வரை உயிர் வாழ்ந்திருந்தாலும், பின்னாட்களில் அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார். ”இப்ப யார் படிக்கிறார்கள்?” என வருத்தத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.


ஒரு சாமியார் நிறைய பெப்பர்மிண்ட் மிட்டாய்களை கடையில் வாங்கிக்கொண்டு, மக்களை ஓரிடத்தில் கூட்டியிருக்கிறான். மக்களும் கணிசமாய் கூடியிருக்கிறார்கள். ”எல்லோரும் மணிக்கூண்டுப் பெருமாளுக்கு ஒரு பெரிய நமஸ்காரம் போடுங்க” என ஆணை பிறப்பித்திருக்கிறான். “ஆண்டவன் பிரசாதம்” என இலவசமாய் மிட்டாய்களை விசிறியடித்திருக்கிறான். “ஹரி ஓம்” என சொல்லிவிட்டு, ஆள் காணாமல் போயிருக்கிறான் - என ஏழுப்பக்கங்களில் இந்த சிறுகதையை எழுதியிருக்கிறார்.

இந்தக் கதை அவருடைய முக்கிய சிறுகதைகளில் ஒன்று என்று வேறு குறிப்பிடுகிறார்கள்.

குரங்கு கையில் பூமாலையாய் இன்று மத்தியில் ஆட்சி செய்கிறவர்களில் ஒரு ஆளைத் தான் அவர் அன்றைக்கே சுட்டிக்காட்டியிருக்கிறாரோ! “ஹரி ஓம்” தான் இப்பொழுது ஜெய் ஸ்ரீராம் என ஒலிக்கிறதோ!

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

February 13, 2024

swathi mutthina male haniye (2023) கன்னடம்


“ஸ்வாதி நட்சத்திரம் ஆகாயத்தில் தெரியும் சமயத்தில் சரியாக சிப்பிக்குள் விழும் மழைத்துளி முத்தாகிறது.”


****

”நந்தியாவட்டை. அது சாதாரண பூ. குப்பை போல என் வீட்டில் தினமும் கொட்டும். அதை ஏன் தேர்வு செய்தாய்?”

"அதுதான் என்னுடைய நோக்கமும் அதை ஒரு குப்பையாக நினைத்துக் கொள்வது. அது ஒரு மிக சாதாரணமான செடி. நாம் அதை கொண்டாடா விட்டாலும் அது மலரும். கடவுளின் பாதங்களுக்கு செல்லாவிட்டாலும் அது மலரும். யாரும் அதை வைத்து கவிதைகள் எழுதாவிட்டாலும் அது மலரும். நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் போனாலும் அது மலரும். அது யாருக்காகவும் மலர்வதில்லை. அது தனக்காகவே மலர்கிறது. அது உயிருடன் இருப்பதே அது மலர்வதற்கு போதுமான காரணம். அது சுதந்திரமாக இருக்கிறது. அதனால் அது மலர்கிறது”
- ராகேஷ் தாரா

****
குணப்படுத்தமுடியாத ஒரு நோய்கள். இன்னும் சில மாதங்களில் நிச்சயம் இறந்து போகும் மனிதர்கள் அந்த மலைப்பிரதேசத்தில் உள்ள தனித்திருக்கும் மருத்துவமனைக்கு வந்து சேர்கிறார்கள். அவர்களை மரணத்தை எதிர்கொள்வதற்கான மனநிலையை சரி செய்யும் மருத்துவராக வேலை செய்கிறார் நாயகி.

அங்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கு பின்னாலும் நிறைய துயரங்கள் இருக்கின்றன. துவக்கத்தில் அவளை உலுக்குகிறது. பிறகு அதிலிருந்து கொஞ்சம் விலகி நிற்க “பழகி” கொள்கிறாள். ஆனால், அவள் சொந்த வாழ்வில் அவள் கணவனின் நடவடிக்கையால் ஏற்படுகிற விரக்தி, அவளை துயரத்துக்குள்ளாக்கிறது.

அந்த சமயத்தில் அந்த மருத்துவமனைக்கு ஒரு மனிதன் வந்து சேர்கிறான். மரணம் என தெரிந்த பின்பும், அதற்காக கலங்கி நிற்காமல், ஒவ்வொரு நொடி வாழ்வையும் உணர்வுப்பூர்வமாய் வாழ்கிறான். அவனை அவளுக்கு மிகவும் பிடித்துப்போய்விடுகிறது.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

மனிதர்களின் வாழ்வு ஒரு பெரிய எந்திரத்தின் ஒரு பல் சக்கரம் போல ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் படம் ஒரு நிமிடம் நிதானித்து வாழ்வை கவனிக்க வைக்கிறது.

காவல் காக்கும் அந்த மனிதன் சொல்வான். என்னவென்று தெரியாத வயதில், என் தாய் நோயினால் இறந்துபோனாள். இங்கு வரும் ஒரு மனிதனையாவது காப்பாற்றினால், என் அம்மாவை காப்பாற்றியது போல உணர்வேன். ஆனால், ஒவ்வொரு மனிதனாக கைநழுவி போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பான்.

“எனக்கு அந்த மனிதனை பிடித்திருக்கிறது” என்பாள் தன் தாயிடம்! “ஒரு அம்மாவா இது தப்பு என்பேன். ஆனால் ஒரு பெண்ணாக இது தப்பில்லை என்பேன். இங்கு கூட்டுவது, பெருக்குவது, துவைப்பது, தோசை வார்ப்பது என எல்லாமும் செய்வோம். எல்லாமும் கிடைக்கும். அன்பைத் தவிர!” என்பார்.

படத்தில் எல்லா உணர்வுகளும் அளவோடு தான் இருக்கிறது. அழுது வடியாமல், நிதானமாக பார்க்க முடிகிறது.

ராஜ் பி ஷெட்டியின் கதையான ”777 சார்லி” பார்த்திருக்கிறேன். நல்ல படம். அதே இயக்குநர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பிரதான பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். நாயகி சிரி ரவிக்குமார் நல்ல தேர்வு. ஒளிப்பதிவு, இசை எல்லாம் பலமாக துணை நின்றிருக்கிறது. படத்தில் சில நல்ல கவிதைகள் வருகின்றன. கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. ”சாண்டல் உட்” நாயகி (பொல்லாதவன்) ரம்யா தயாரித்திருக்கிறார். (அப்படித்தான் விளம்பரத்திலும் போடுகிறார்கள்.)

பார்க்கவேண்டிய படம். அமேசானில் வெளியாகியிருக்கிறது. பாருங்கள்.

February 11, 2024

காதல் என்பது!


காதல் என்பது நம்பிக்கை (trust), புரிதல் (understanding), அரவணைப்பு (comfort), பாதுகாப்பு (safety) என்பதை எல்லாம் தாண்டி முயற்சி (effort) என்று கருதுகிறேன். ஓர் உறவைப் பேணுவதற்கு நாம் எந்தளவுக்கு முயற்சி எடுக்கிறோமோ அதே அளவு சம பங்களிப்பை நமது இணையும் வழங்கவேண்டும். காதலுறவில் ஒருவர் மட்டும் அதிகம் கொடுக்கிறவராகவும் (giver) ஒருவர் பெறுகிறவராகவும் (taker) இருக்க முடியாது. 


இணையர்கள் கச்சிதமானவர்களாகவும் பொருத்தமானவர்களாகவும் அமையப் போவதில்லை. ஆனால், தனது பலவீனங்களையும் போதாமைகளையும் களைந்து, தவறுகளுக்குப் பொறுப்பேற்றுத் திருத்திக்கொண்டு, வளர்ச்சிப் படிநிலையில் (process) தன்னை வைத்திருக்கவேண்டும். உறவைச் செம்மையாக்கத் தொடர்ந்து முயலவேண்டும். கருத்து வேறுபாடுகளையும் ஒவ்வாமைகளையும் ஆராய்ந்து சீர்படுத்தி உறவைக் காப்பாற்ற பெருமுயற்சி எடுத்து மெனக்கெட வேண்டும். இருவரும் சந்திக்கும் புள்ளிகளைக் (meeting point) கண்டடைந்து பக்குவமான உரையாடலைத் தக்க வைத்தல் அவசியம். 


காதலில் இத்தகைய முயற்சி இருந்தாலே மற்றவை தானாக அமைந்துவிடும். இம்முயற்சி இல்லாத இணைவு நச்சு உறவுக்கே இட்டுச்செல்லும். உங்களது ஆளுமையைச் சுக்குநூறாக்கும். அந்த உறவிலிருந்து விலகுவதே ஆரோக்கியமான மனநிலை.


- கோகுல் பிரசாத்

சமையலறை பொதுவுடைமை!


என் அம்மா என்னை அடுப்பைத் தொடவிட்டதில்லை. சுத்து வேலைகள் மொத்தமும் வாங்குவார்.

 

திருமணத்திற்கு பிறகு சுமார் 16 பேர் கொண்ட குடும்பம். சமையல் தெரியாமல் உள் நுழைந்தேன். காப்பி கலக்க கூட கை நடுங்கும்.

 

தினமும் மாலை டிபன் ஏராளமான பண்டிகைகள், அது போக பிறந்தநாள் திருமணநாள் விழாக்கள் என 16 பேருக்கும் மாறி மாறி வரும்.

 

அரிசி பருப்பை மட்டுமே நாங்கள் வெளியில் இருந்து வாங்குவோம். ஊறுகாய், வற்றல், அப்பளம் என அனைத்தும் வீட்டில். பட்சணங்கள் தனியர்களின் ருசிக்குத்தக்க இரண்டு மூன்று கறிகாய்கள் என நான் கண்டவை அனைத்தும் சமையலறையாக மாறிப்போனது.

 

பத்து பேருக்கு அடை தோசை வார்க்க வேண்டும். அழுகை வரும். பண்டிகை வந்தாலே வயிற்றைக்கலக்கும். வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது. எந்நேரமும் குடும்பத்தைப் பற்றி யோசிக்கணும். நாலு பேர் கூடினாலே சாப்பாட்டைப்பற்றி பேசுவார்கள்.

 

எங்கம்மா சமைக்கற மாதிரி வராது என அனைவரும் என் மாமியாரை சுரண்டினோம். அவர்களுக்கு அது பெருமை. பாக்கியம்.சமையலறை ராஜ்ஜியத்தை தரமாட்டார்.

 

எனக்கு இயல்பிலேயே சமைப்பது பிடிக்காது. தீவிர மனநோயாளியாகும் அளவு பாதிக்கப்பட்டேன். அது அவர்கள் குற்றமல்ல.நான் மறுப்பு சொன்னதே இல்லை. ஏனெனில் கலாச்சாரம் அப்படி பழக்கியிருந்தது.

 

என் மகன் பள்ளி சேர்ந்த பிறகு அவனுக்கு என சமைக்க துவங்கியது. பிறகு அவனது ருசிக்காக சமைக்க துவங்கினேன்

 

அதுவரை அவர்களது மெனுதான். அம்மாவாசை விரதநாள் என ஏக கட்டுப்பாடுகள். எல்லாம்  தாண்டி மகனுக்கென உள்நுழைந்த எனக்கு மூச்சு முட்டியது. மகன் தோசைப்பிரியன். ஆறு பேருக்கு சப்பாத்தியும் தோசையும் என நொந்திருக்கிறேன்.

 

பிறகு தான் எனக்கான ஞானோதயம் கிடைத்தது. அது என்னவென்றால் என் அம்மா என் மாமியார் என்னை ஒதுக்கியது போல அல்லாமல் சமையலைறையினை அனைவருக்குமானதாக ஆக்குவது.

 

மகனை மகளை கணவரை சமைத்துக்கொள்ள  அவர்களின் இயல்பான ஆர்வத்துடன் ஊக்குவித்திருக்கிறேன்.

 

அதென்ன ஊக்குவிப்பு?

 

முதலில் அவர்கள் செய்வதில் குறை சொல்ல மாட்டேன். கீழே சிந்திருக்கு மேல கொட்டிருக்கு ரக புகார்கள் இல்லை.

 

அடுத்தது பொருட்களை டப்பா மாற்றி வைத்து சதிவேலைகள் செய்யாமல் இருப்பது.

 

உணவின் ருசி முன்பின் இருப்பின் பரவாயில்லை. சரிபண்ணிக்கலாம் என சொல்வது. அதுக்குத்தான் நானே பண்றேன் என சொல்லாமல் இருப்பது.

 

சமையலறை என் கோட்டை அல்ல என்பதில் இருந்த தெளிவு, விட்டுக்கொடுத்தல்.

 

மோசமாக இருந்தால் நால்வருமே சரி செய்யணும். நால்வருமே ஒரே நேரத்தில் கிச்சனில் இருப்போம் என்ற வழிமுறை.

 

இதற்கு முதலில் பலத்த எதிர்ப்பு மாமியார் தரப்பில் இருந்து கிடைத்தது. குழந்தைகளை சமைக்க விடுகிறேன் என்று,  என் அம்மா வரை புகார் சென்றது.

 

என் அம்மாவுமே என் தம்பியிடம் சமையலறையை கொடுத்திருந்தார்.  பின்னர் எல்லாம் தானாக சரியானது.

 

ஆக இப்போது மாமியாரே எங்களுடன் சமைக்கிறார். அவரும் தன் பிடியினை தளர்த்தி கொடுத்தார்.

 

இதற்கு 15 வருடங்கள் ஆனது. எனது மனநிலை கடுமையான ட்ராமாவிற்கு சென்று மீண்டது.

 

ஆனால் பிள்ளைகளுக்கு அத்தனை தன்னம்பிக்கையும் மகிழ்வும். எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள் என்பது நிச்சயம்.

 

அவ்வளவுதான் இதில்.

 

என் ராஜ்ஜியம் என் மதிப்பு போகும் என் பிள்ளை என் கையை விட்டு போய்விடுவான் நான் சமைப்பது போல வராது. என் மகனுக்கு யாராவது செய்தால் பிடிக்காது எனக்கென ஒரு மரியாதை இல்லாது போய்விடும் என்றெல்லாம் பேசும் பெண்கள் நீங்கள் என்றால் நான் ஒன்று சொல்வேன். ஒன்று நீங்கள் முட்டாள் அல்லது திருட்டுத்தனம் உடையவர். இந்த இரண்டினையும் அம்மா பாசம் என சுகர் கோட் தடவுகிறீர்கள்.

 

எந்த அம்மாவும் தன் பிள்ளைகள் ஊனத்தைப்போல பிறர் கையேந்துவதை விரும்பமாட்டார்கள். அவர்கள் காலில் நிற்கத்தான் சொல்லித்தருவார்கள். அதுவே பாசம். அதுவே அன்பு. அதுவே பிள்ளைகளுக்கு செய்யும் நியாயம்.

 

பேம்பரிங் செய்து பிள்ளையை கைக்குள் வைத்து இன்னொரு பெண்ணை கெடுப்பது என்றோ மகளை கைக்குள் வைத்து அவளது குடும்பத்தில் தலையிட்டு அதையும் கெடுப்பது என்றோ செய்யும் செயல்களுக்கு குடும்ப அரசியல் என்று பெயர். பாசம் என பொய் சொல்லாதீர்கள்.

 

பெண்களே நீங்கள. இறந்து போனால் உங்களது வீடு அடுத்தவாரம் தனது கடமைகளை தானே துவங்கும். நீங்கள். நினைப்பது போல. எதுவும் நிற்காது. ஆண்களுக்கும் இது பொருந்தும். கிடைக்கிற கொஞ்ச காலத்தில் வாழும் வழியை பாருங்கள்.

 

சமையலறை வீட்டின் பிற பகுதிகளைப்போன்றே அனைவருக்கும் பொதுவானது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு ஆண்களைச்சொல்லலாம்.

 

சமையலறையிலும் அவசியம் வேண்டும் பொதுவுடமை.

 

-          ஷோபனா நாராயணன்

February 9, 2024

ஜோ (2023)


கல்லூரியில் நாயகன், கேரளாவிலிருந்து நாயகி வந்து படிக்கிறார். உருகி உருகி காதலிக்கிறார்கள். அடுத்து மேற்படிப்பு. திருமணம் என வரும் பொழுது குடும்பத்துக்குள் சிக்கல் எழுகிறது.


பிறகு வீட்டில் பார்த்து ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு வேரு ஒருவரை பிடித்து இருக்கிறது.
இறுதியில் என்ன ஆனது என்பதை சுமூகமாக முடித்திருக்கிறார்கள்.
***


கல்லூரி காதல், நட்பு அதில் உணர்வுப்பூர்வமான விசயங்கள் என இடைவேளை வரை கொண்டு வந்துவிட்டார்கள். இடைவேளைக்கு பிறகு படம் படுத்தேவிட்டது.

“உருகி உருகி” காதல் என்பதால், 2010க்கு படத்தை கொண்டு போய்விட்டார்கள். சமூக நிலவரப்படி, 2000யில் நடப்பதாக கொண்டு கொண்டு சென்றிருக்கவேண்டும். ஆனால் ரெம்பவும் பின்னால் போகவேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்கள்.
அதற்காக இப்பொழுது காதல் இல்லாமல் இல்லை.

காதல் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிவிட்டது. பெண்கள் வேலைக்கு போய் பொருளாதார உயர்வு பெற்ற பிறகு, மிக நிதானமாக சிந்திக்கிறார்கள். தன் வாழ்வை தெளிவாக திட்டமிடுகிறார்கள். இனி அப்படி படம் எடுத்தால், நன்றாக இருக்கும். எதார்த்தமாகவும் இருக்கும்.

படத்தில் ரியோ, மாளவிகா இருவரும் அருமையாக பொருந்தியிருக்கிறார்கள். பவ்யா திரிகா ஒட்டவேயில்லை. நண்பர்களாக வருபவர்கள் கலகலப்பூட்டுகிறார்கள். ஒளிப்பதிவு, இசை எல்லாம் பக்கபலமாக துணை நின்றிருக்கிறது. ஹரிஹரன் ராம் இயக்கியிருக்கிறார்.

சில படங்கள் ஓடிடிக்கு வந்தப் பிறகு கூட, நேரம் கிடைக்கும் பொழுது தான் பார்க்க முடிகிறது. இந்தப் படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இருக்கிறது.

February 8, 2024

தேசவிரோதி, தேசதுரோகி என்பதெல்லாம் எதிரிகள் நமக்கு தரும் விருதுகள்


தேசவிரோதி, தேசதுரோகி என்பதெல்லாம் எதிரிகள் நமக்கு தரும் விருதுகள் என்கிறார் எழுத்தாளர் அருந்ததிராய்.

அப்படிப் பார்த்தால் பலமுறை அந்த விருதுகளை நாமே வாங்கியிருக்கிறோம். மகிழ்ச்சி.

****
நான் எதுவும் சொல்லாமல் இருந்தால், இதையெல்லாம் நான் ஒப்புக்கொண்டதாக கருதப்படும் என்று எனக்குத் தெரியும். பேசுவது போல அமைதியாக இருப்பதும் ஒருவகை அரசியல் தான் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். பேசுவதால் இலக்கிய உலகில் மாய இளவரசி பட்டம் பறிபோகும் என்பதையும் புரிந்து கொண்டேன். இதற்கு மேலாக, விளைவுகளைப் பொருட்படுத்தாமல் நான் நம்புகின்றவற்றை எழுதவில்லை என்றால் நானே எனக்கு மோசமான எதிரியாகி விடுவேன்.
அதனால் தான் என் எழுத்துக்களுக்கான சுயத்தைக் காப்பாற்ற எழுதினேன். தேசத் துரோகி எனவும் தேச விரோதி எனவும் முத்திரை குத்தப்பட்டேன். அந்த அவமதிப்புகளை புக்கர் பரிசுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத விருதுகளாக ஏற்றுக் கொண்டேன்.

-அருந்ததிராய்.

Charles Veillon Foundation வழங்கிய சிறந்த கட்டுரையாளருக்கான விருது நிகழ்வில் அருந்ததிராய் ஏற்புரை யிலிருந்து..

Orion and the Dark (2024)

 


குழந்தைகளுக்கான பேண்டசி, நகைச்சுவை அனிமேசன் படம்

பள்ளிப் படிக்கிற பத்து வயது பையனுக்கு எதைக் கண்டாலும் ”தெனாலி” நாயகன் போல பயம். சக வகுப்பு மாணவியோடு போய் பேசினால், அவள் முறைப்பாள், அதனால் எல்லோரும் கேலி செய்துவிடுவார்களோ! டாய்லெட் பைப்பைத் திறந்தால், நிற்காமல் நீர் கொட்டி, பள்ளி முழுவதும் பரவிவிடுமோ என எதைக் கண்டாலும் பயம். பயம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இரவானால் பெரிய பயம். இதை எல்லாம் பார்த்து பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத இருட்டு, ஒரு உருவம் கொண்டு அவனிடம் பேசுகிறது. ”நான் என் கடமையைத் தானே செய்கிறேன். இருட்டு எவ்வளவு அழகு தெரியுமா? பகல்ல நட்சத்திரங்களை உன்னால் பார்க்கமுடியுமா?” என அவனிடம் பேசுகிறது. பயத்தைப் போக்க, அவனை தன்னுடன் அழைத்துச் செல்கிறது.

இருட்டில் வேலை செய்கிற ஆட்களான, தூக்கத்தை கொண்டு வருவது (sleep,) தூக்கத்தை கெடுப்பது (insomnia), இரவில் சத்தத்தை எல்லாம் உள்வாங்கிக்கொள்வது, சத்தத்தை உண்டு செய்வது (Unexplained Noises) , நல்ல கனவுகளை உருவாக்குவது (sweet dreams) எனஒவ்வொரு சைசிலும் தனித்தனியான ஆட்கள் இருக்கிறார்கள்.


அவர்கள் தங்கள் வேலையினுடாக ஒரு தேநீர் சந்திப்புக்கு ஒன்று கூடுகிறார்கள். இருட்டோடு பையனைப் பார்த்ததும், ”என்னப்பா இருட்டு? இவன் பெரிய பயந்தாங்கொள்ளியாச்சே! இவன் எல்லாம் தேறாத கேசுப்பா!” என்கிற ரேஞ்சுக்கு பேசுகிறார்கள்.

இருட்டின் மீதான பயத்தை அந்த பையனுக்கு போக்கியதா? இல்லை இன்னும் சிக்கலானதா என்பதை சுவாரசியமாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
****

In and out என ஒரு படம் பார்த்திருப்போம். நமக்குள் இருக்கும் சந்தோசம், துக்கம், கோபம் என எல்லா உணர்வுகளுக்கும் ஒரு உருவம் கொடுத்து கலக்கியிருப்பார்கள். அதே போல இந்தப் படத்திலும் முயன்றிருக்கிறார்கள்.

கதை துவங்கி, அடுத்தடுத்து சுவாரசியமாக போகாமல், இடைவேளைக்கு மேல் கொஞ்சம் சோர்வாகிவிடுகிறது. இன்னும் கொஞ்சம் கதையை சுவாரசியப்படுத்தியிருக்கலாம். தவறிவிட்டார்கள்.

நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கிலேயே கிடைக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் பாருங்கள். இந்த மாதிரி படங்கள் தமிழ் டப்பிங்கில் கிடைத்தால் உடனே பார்த்துவிடுவதுண்டு. குழந்தைகளுக்கான படம். குழந்தை மனம் கொண்டவர்களும் பார்க்கலாம். 🙂