> குருத்து: Gyeongseong creature (2023) தென்கொரியா

May 1, 2024

Gyeongseong creature (2023) தென்கொரியா


1940களில் நடக்கும் கதை. ஜப்பான் காலனிய ஆட்சி செய்த நாடுகளில் கொரியாவும் ஒன்று. அங்கு ஒரு மருத்துவமனை கட்டி, அந்த மருத்துவமனையின் கீழ் ஜப்பானின் இராணுவம் ஒரு விநோதமான ஆய்வில் ஈடுபடுகிறது. அதற்கு அங்கு வாழும் அப்பாவி மக்களை சட்ட விரோதமாக கைது செய்து, அவர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்கிறது. இதில் பலரும் கொல்லப்படுகிறார்கள்.


மனிதர்களின் உடலில் நாஜின் என்ற கிருமியை செலுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு ஏற்படுகிற வலியில் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதில் ஒரே ஒரு பெண்மணி பிழைத்துக்கொள்கிறார். அவருடைய உடலுக்குள் புகுந்த அந்த உயிரினம், அவருடைய மூளையும் கட்டுப்படுத்துகிறது. மனிதனை விட பலசாலியாய், தனக்கு ஏற்படுகிற காயங்களை தானே குணப்படுத்துகிற, நிலைமைகளை புரிந்துகொண்டு கையாள்கிற ஒரு விநோத ஜந்துவாய் பெரிதாய் வளர்ந்து நிற்கிறது.

அந்த பகுதியில் நாயகன் ஒரு பெரிய அடகுகடை ஒன்றை நடத்துகிறார். பொருளாதாரத்தில் வலுவாக இருப்பதால், அதிகாரத்திலும் சமூகத்திலும் ஒரு அந்தஸ்து இருக்கிறது. அதைப் பயன்படுத்தி மேலும் தன்னை வளர்த்துகொள்கிறார். ஆட்களைப் பற்றிய தகவல்களையும் சேகரித்து தருகிறார். அதற்கான பலனையும் பெற்றுக்கொள்கிறார்.

இப்பொழுது அவருக்கு ஒரு ஆபத்து வருகிறது. தலைமை போலீசு அதிகாரியின் காதலி ஒருத்தி நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தவள் திடீரென காணாமல் போகிறார். நாயகனை அழைத்து ”அவளை கண்டுப்பிடித்து தரவேண்டும். இல்லையெனில் கட்டாய இராணுவ சேவைக்கு அனுப்பிவிடுவேன். போர்க்காலம் என்பதால், சாவு நிச்சயம். மேலும் போராளிகளுடம் கூட்டு வைத்திருந்ததாக சொல்லி, உன் அனைத்து சொத்தையும் பறிமுதல் செய்துவிடுவேன். இந்த வசந்த காலம் முடிவதற்குள் செய்ய வேண்டும்” என மிரட்டுகிறான்.


நாயகியின் அம்மா பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென காணாமல் போகிறார். அதனால், நாயகியும், அவளுடைய அப்பாவும் வெவ்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து தேடுகிறார்கள். இதில் காணாமல் போனவர்கள் பற்றி யாராவது தேடச் சொன்னால், அதையும் செய்கிறார்கள். இவர்கள் அந்த பகுதிக்கு வர, நாயகனை சந்திக்கிறார்கள். அவன் காணாமல் போன பெண்ணைப் பற்றி தேடித்தர சொல்கிறான்

நாயகன் தேடும் பெண், நாயகி தேடும் அம்மா, அந்த பகுதியில் காணாமல் போகும் மக்கள் என எல்லாவற்றிக்கும் காரணமாய் அந்த மருத்துவமனையாய் இருக்கிறது. இவர்கள் உள்ளே போகிறார்கள்.

அதற்கு பிறகு நடக்கும் களேபரங்களும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் தான் முழு நீளக்கதை.

போர்க்கால பின்னணி என்பதால், கதை கொஞ்சம் அழுத்தமாய் வந்திருக்கிறது. 1945 காலத்தில் ஜப்பான் ஏகாதிப்பத்தியம் தோல்வி முகத்தில் இருந்த கால கட்டம். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற மனநிலையில் இருந்த அதன் பின்னணியில் தான் இப்படி பொருத்தமான கதையை தீர்மானித்திருக்கிறார்கள்.

நாயகனின் அம்மா, போலீசின் பிடியில் கொல்லப்படுகிறார். கொல்லப்படுவதற்கு முன்பு, ”எப்படியாவது பிழைத்துக்கொள்” என அந்த பையனிடம் செல்கிறார். அந்த ஒத்தச் சொல்லைப் பிடித்துக்கொண்டு பொருளாதாரத்தில் மேலே மேலே வந்துவிடுகிறார். அந்த அதிகாரி கொடுக்கும் நெருக்கடி, நாயகியைப் பார்த்து, காதல் வந்த பிறகு, அவருடைய எண்ணம், செயல்பாடு எல்லாம் மெல்ல மெல்ல மாறுவதை நன்றாக காட்டியிருக்கிறார்கள்.

அம்மாவை தேடும் நாயகி. எந்த ஆபத்தான இடமென்றாலும், பூனையைப் போல நுழைந்துவிடும் லாவகம், எதிரியை எதிர்கொண்டால், சாவதற்கெல்லாம் துளிகூட பயம் இல்லாது துணிவோடு எதிர்கொள்வது, எங்கேயும் தன்னை விட்டுக்கொடுக்காது நகரும் குணம், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அருமையாய் பொருந்தியிருக்கிறார்.

ஜப்பான் ஏகாதிப்பத்தியம் மற்ற ஏகாதிப்பத்தியங்களை விட மிகவும் கொடூரமானவர்கள் என வரலாறு படிக்கும் பொழுது உணரமுடியும். சீனாவைச் சேர்ந்த மாவோ சீனாவில் அவர்கள் எவ்வளவு கேவலமாகவும், கொடூரமாக ஆட்சி செய்தார்கள் என்பதையும் பதிந்திருக்கிறார். அதை இந்த சீரிசிலும் சரியாக பதிந்திருக்கிறார்கள்.

அந்த கிரியேச்சர் தான் கதையை பேண்டசி ஆக்குகிறதே தவிர, அதைத் தூக்கிவிட்டால், ஒரு அருமையான சுதந்திர போராட்ட கதையாய் மலர்ந்திருக்கும்.

சின்ன சின்ன கதாப்பாத்திரங்களை கூட கவனமாய் எழுதியிருக்கிறார்கள். பலரும் நினைவில் நிற்கிறார்கள். சிஜி தொழில்நுட்பம் உட்பட எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முதல் சீசனில் மொத்தம் பத்து அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மணி நேரம் நீள்கிறது. சில நேரங்களில் மட்டும் கொஞ்சம் தொய்வடைகிறது. ஏழு அத்தியாயங்களை எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இந்த தொடர் வெற்றி பெற்றதால், அடுத்த தொடரை எடுத்துக்கொண்டிருக்கிறாரகள். விரைவில் வெளியாகும்.

2023ல் தொலைக்காட்சிகளில் வெளியாகி, இப்பொழுது நெட்பிளிக்சில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: