> குருத்து: The Next three days (2010)

May 25, 2024

The Next three days (2010)


நாயகன் தன் மனைவி, சிறு வயது மகனுடன் வாழ்ந்துவருகிறார். ஆசிரியராக பணிபுரிகிறார். அவருடைய மனைவி தன் பெண் முதலாளியை கொலை செய்துவிட்டார் என கைது செய்கிறார்கள். அவருக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இருக்கின்றன.

தன் மனைவி கொலை செய்திருக்கமாட்டார் என மனப்பூர்வமாக நம்புகிறார். அவரை வெளியே கொண்டு வருவதற்கான அனைத்து சட்டப்பூர்வ வழிகளிலும் முயல்கிறார். ஆண்டுகள் ஓடுகின்றன. சட்டப்பூர்வ எல்லா வழிகளும் அடைப்பட்டுவிட … வேறு வழியில்லை. சிறையில் இருந்து தப்பிக்க வைத்துவிடலாம் என அதற்கான வழிகளையும் தேட ஆரம்பிக்கிறார்.


தப்பிப்பதற்கான வழிகள், போலி பாஸ்போர்ட், நிறைய பணம் என எல்லாம் பெரிய சவாலாக இருக்கிறது. 2000 துவக்கத்தில் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுவிட்டன.

இந்த நெருக்கடியான நிலையில்… தப்பிக்கலாம் 1%, சுட்டுக் கொல்லப்படலாம் 99% என்ற நிலையில், தன் பிரியத்துக்குரிய மனைவியின் பெயரில் பெரிய ரிஸ்க் எடுக்கிறார்.

அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்பதை பரபர காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

தன் மனைவி மீதான அவருடைய அன்பு அபரிமிதமானது. ஒருநாள் ”ஏன் நானே கொன்றிருக்க கூடாதா?” என மனைவியே கேட்கும் பொழுது, ”உன்னை எனக்கு தெரியும். நீ நிச்சயம் செய்திருக்கமாட்டாய்!” என சொல்வார்.

சட்டப்பூர்வ எல்லா வாய்ப்புகளும் அடைப்பட்ட பிறகு, தன் மனைவியை கண்ணீர் மல்க சந்திக்கும் காட்சி. இவருடைய நிலையைப் பார்த்து, அவர் புரிந்துகொண்டு, அழுது கொண்டே எதுவுமே பேசாமல் செல்லும் காட்சி. அற்புதம். ஆக்சன் திரில்லர் வகை படம் என்றாலும், உணர்வுப்பூர்வமாகவும் இருக்கிறது.

2001 தாக்குதலுக்கு பிறகு, இப்படி ஒரு படம் வந்திருப்பது அங்கு சர்ச்சையை உருவாக்கியிருக்கும். 2008ல் “Anything for her” என்ற பெயரில் பிரெஞ்சில் எடுத்ததை, வாங்கி, இவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

கிளாடியேட்டர் புகழ் Russell Crowe க்கு முக்கியமான படம், அதே போல Elizabeth Banksம் அருமையாக நடித்திருந்தார். ஜெயிலில் இருக்கும் அம்மா என பள்ளியில் கிண்டல் செய்கிறார்கள் என்ற என்ற எண்ணத்திலேயே அந்தப் பையனை அமைதியாகவே இருக்கும்படி சொல்லிவிட்டார்கள் போல! அந்த பையனும் சிறப்பு தான்.

யூடியூப்பில் கிடைப்பதாக இணையம் சொல்கிறது. அருமையான படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: