> குருத்து: Vacancy (2007) American slasher movie

May 25, 2024

Vacancy (2007) American slasher movie


ஒரு கணவனும் மனைவியும் தங்கள் குடும்ப நிகழ்வுக்கு போய்விட்டு, அந்த இரவில் ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் தூரம் குறையும் என வழமையான பாதையை விட்டு வேறு ஒரு வழியில் வருகிறார்கள். இருவரும், ஊருக்குப் போய் சேர்ந்தவுடன், பிரிந்துவிடலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.


கார் மக்கர் செய்கிறது. வேறு மனிதர்களற்ற அந்த நெடுஞ்சாலையில் ஒரு மெக்கானிக் செட்டும், ஒரு மோட்டலும் மட்டும் தனித்து இருக்கிறது. அங்கு இருக்கும் ஒரு மெக்கானிக் உதவினாலும், ஒரு கி.மீ தூரம் ஓடி, நின்றுவிடுகிறது.

காலையில் தான் சரி செய்து கிளம்ப முடியும் என முடிவு செய்து, மீண்டும் மோட்டலுக்கு நடந்தே திரும்புகிறார்கள். ஒரு அறை எடுத்து தங்குகிறார்கள். சிறிது நேரத்தில் கதவை டொம் டொம் என யாரோ தட்டி பயமுறுத்துகிறார்கள். போய் பார்த்தால் யாருமில்லை. அறையில் உள்ள தொலைக்காட்சியில், டிவிடி பிளேயரில் ஆட்களை அடித்தே கொலை செய்வது மாதிரியான படங்கள் ஓடுகின்றன.

அந்தப் படத்தை உற்றுப்பார்த்தால், அவர்கள் இருக்கும் அறைக்கு ஒத்துப்போகிறது. ஆக எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டோம் என புரிந்து கலவரமாகிறார்கள்.

அதற்கு பிறகு நடப்பது எல்லாம் களேபரம் தான். அங்கிருந்து உயிரோடு தப்பித்தார்களா என்பது முழு நீளக்கதை.
***


ஒரு சராசரியான ஒன்றை மணி நேரம் தான் படம். சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல், நேரடியாக சொல்லியிருக்கிறார்கள். ஏகமாய் வன்முறை இல்லாமல், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள்.

ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும் என்ன வித்தியாசம்? ஹோட்டல் எனும் தங்கும் விடுதிகள் ஊருக்குள் இருக்கின்றன. மோட்டல் என்னும் தங்கும் விடுதிகள் சாலைகள் ஓரமாய் இருக்கின்றன. அவ்வளவு தான் வித்தியாசம்.

இப்படி எல்லாம் படமெடுத்தால், யாராவது நெடுஞ்சாலைகளில் உள்ள மோட்டலில் தங்குவார்களா? வாய்ப்பே இல்லை. ஊருக்கே போகவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

நாயகனை விட, நாயகியின் உணர்ச்சி ரசிக்கும்படியாக இருந்தது. இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என யோசித்தால், வேன்ஹெல்சிங் என்ற பிரபல ஆக்சன் படத்தில் வரும் நாயகி Kate Beckinsale. நாயகனும் பார்த்த முகமாய் தான் இருக்கிறார். என்ன படம் என யோசித்தால் தெரியவில்லை.

இந்தப் படம் நன்றாக கல்லாக் கட்டியதும், இரண்டாவது பாகமாகவும், ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள். ஓடியதா என தெரியவில்லை.

அமேசானிலும், யூடியூப்பிலும் படம் இருப்பதாக இணையம் சொல்கிறது. இந்த மாதிரி படங்களை விரும்புவர்கள் மட்டும் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: