> குருத்து: No tears for the dead (2014) தென்கொரியா

May 2, 2024

No tears for the dead (2014) தென்கொரியா


"பாவம் செய்வதில், ஒவ்வொரு மனிதனும் அனைவருக்கும் எதிராகப் பாவம் செய்கிறான், ஒவ்வொரு மனிதனும் மற்றொருவரின் பாவத்திற்காக குறைந்தபட்சம் ஓரளவு குற்றவாளி. தனித்த பாவம் இல்லை

-          எழுத்தாளர் தஸ்தாவெஸ்கி

 

பணத்துக்காக கொலை செய்கிற ஆள் நாயகன்.  அப்படி ஒரு ”வேலையாக” கொலைகள் செய்யும் பொழுது, தவறுதலாக ஒரு எட்டு வயது சின்னப் பெண்ணையும் தவறுதலாக சுட்டுக்கொன்றுவிடுகிறான்.

அதனால் ஏற்படுகிற குற்ற உணர்வு அவனை வாட்டுகிறது.  அதற்கு பிறகு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறான். அவனின் பாஸ் அவனை விடுவதாயில்லை. 

இவன் மறுத்தாலும், அவனை மிரட்டி இன்னொரு வேலையை கொடுக்கிறான்.   அது அவன் ”கொலை” செய்த  அந்த பெண்ணின் அம்மாவை கொலை செய்வது!

வேண்டா வெறுப்பாக போகிறான். அவளைச் சந்திக்கிறான். அங்கு ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கின்றன.  பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

 


கொரியப் படங்கள் எவ்வளவு பரபர சண்டைப்படமாக இருந்தாலும் சரியான விகிதத்தில் உணர்வுகளையும் கலந்துகொடுத்துவிடுகிறார்கள். அதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்.

 

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) படத்தைப் பார்த்துவிட்டு, தனது பாணியில் படம் எடுத்தது போல இருந்தது இந்தப் படம்.   இரண்டுப் படங்களின் ஒன் லைனும் ஒன்று தான்.  கதையும், காட்சிகளும் தான் வேறுவேறு.

 

தான் கொன்ற அந்த சின்ன பையனின் கண் தெரியாத குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற பரிதவிப்பையும், அந்தப் போராட்டத்தையும், மிஷ்கின் கடத்தியிருப்பார்.

 

அந்த குற்ற உணர்வுக்கு அடிப்படை என்ன என்பதையும், அவனுடைய சிறு பிராயத்து சில காட்சிகளை பொருத்தமாக வைத்திருப்பார்கள்.

 

குற்றவுணர்வில் அலையும் நாயகன், மகளின் நினைவில் வாடும் அம்மா, இரு பாத்திரங்களும் முக்கியப் பாத்திரங்கள். மற்றவை எல்லாம் அதகள காட்சிகளில் வருபவர்கள் தான். எல்லோரும் சரியாக பொருந்திருக்கிறார்கள்.

 

இப்போதைக்கு எந்த ஓடிடியிலும்  இல்லை. நான் முன்பு வைத்திருந்த பட்டியலில் வைத்திருந்த படம். வேறு வகைகளில் முயலுங்கள்.

 

0 பின்னூட்டங்கள்: