நாயகன் கட்டிட பொறியாளர். பள்ளி படிக்கும் பொழுதே அப்பாவோடு முரண்பட்டு மும்பைக்கு வந்துவிடுகிறார். இப்பொழுது பெரிய நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை விரும்புகிறார். அம்மா இறந்த செய்தி கேட்டு ஊருக்கு போகிறார்.
February 19, 2025
Mehta Boys (2025) இந்தி தந்தை மகன் - டிராமா
நாயகன் கட்டிட பொறியாளர். பள்ளி படிக்கும் பொழுதே அப்பாவோடு முரண்பட்டு மும்பைக்கு வந்துவிடுகிறார். இப்பொழுது பெரிய நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை விரும்புகிறார். அம்மா இறந்த செய்தி கேட்டு ஊருக்கு போகிறார்.
February 17, 2025
Smile 2 (2024)
புன்னகையை பார்த்துவிடாதீர்கள்!
February 16, 2025
ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!
சென்னை வந்த புதிதில் தோழர் ஜவஹர் அவர்களின் ”தோழமை” குடும்பத்தில் திருமதி சுதா அவர்களும் ஒருவர். சந்திப்புகளில் மிகவும் அன்பாக பேசக்கூடியவர். மிகவும் அமைதியானவரும் கூட.
பிறகு தோழர்கள்
எங்காவது விசேசங்களில் சந்திக்கும் பொழுது, சுதா அவர்களையும், அவரது குடும்பத்தினரையும்
சந்திப்பதுண்டு. நலம் விசாரித்துக்கொள்வதுண்டு.
ஒரு பள்ளியில்
ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளியில் பி.எப்., இ.எஸ்.ஐ குறித்து ஏதேனும்
சந்தேகம் இருந்தால் அவரோ, அவர் பள்ளியில் இருந்தோ அழைத்து சந்தேகம் கேட்பார்கள். பலமுறை
பதிலளித்திருக்கிறேன்.
கடந்த இரண்டு
ஆண்டுகளாக ஏதும் அழைப்பு இல்லை. கடந்த ஓராண்டில்
புற்று நோய் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருந்திருக்கிறது என பிறகு தான் தெரியவந்தது.
இடையில் மருத்துவமனையில்
இருக்கும் பொழுது தகவல் சொன்னார்கள். மீண்டுவந்துவிடுவார் என நம்பினோம். போய் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்
பொழுது இன்று மதியம் இறந்துவிட்டார் என தகவல் சொன்னதும் அதிர்ந்து போனோம்.
கொரானா காலத்தில்
நிறைய பேரை இறந்தோம். இப்பொழுது புற்று நோய், மாரடைப்பு என அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
53 வயது தான்
என்பது மனம் ஆறமாட்டேன் என்கிறது. அவரை இழந்து
வாடும் அவர் குடும்பத்தினரான திரு. முருகன், மகள் ஜனனிக்கும் எங்களது ஆறுதல்.
வில்லிவாக்கத்தில்
அவருடைய இல்லத்தில், இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. நானும் துணைவியாரும் அஞ்சலி செலுத்திவந்தோம்.
”தோழமை” குடும்ப
தோழர்கள், அப்ரோச் தோழர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். அவர் துவக்க காலத்தில் அப்ரோச்
மையத்தின் நிர்வாக குழுவில் அவரும் சில ஆண்டுகள் பயணித்திருக்கிறார் என இன்று தான்
தெரிந்தது.
சமூகம் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து இருக்கிறது.
ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!
-
சாக்ரடீஸ்
February 15, 2025
Kooman (இரவில் நடமாடுபவன்) 2022 மலையாளம்
நாயகன் உள்ளூரில் சாதாரண போலீசாக இருக்கிறான். உள்ளூர் என்பதால் மக்களால் மதிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில்… நடந்துகொள்கிறான். மேலாதிகாரி சாதகமாக இருக்கும் பொழுது பலன்களை தருகிறது. சாதகமாக இல்லாத பொழுது அவமானத்தைப் பெற்றுத்தருகிறது.
February 14, 2025
Gyraa Gyraa (2024) இந்தி வலைத்தொடர் ஒரு விறுவிறுப்பான திரில்லர்
ஒரு சிறுமி தசரா திருவிழாவின் பொழுது, கடத்தப்படுகிறாள். மர்மமான முறையில் கொலையும் செய்யப்படுகிறாள். அந்த வழக்கில் எந்தவொரு துப்பும் கிடைக்காததால் வழக்கு கிடப்பில் போடப்படுகிறது.
February 9, 2025
அப்பாலே போ சாத்தானே!
தொடர்ந்து கைபேசித் திரையை ஸ்க்ரோல் செய்வது நம் சிந்திக்கும் திறனை எப்படி சிதைக்கிறது என்பதை விளக்கி இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இ.எஸ்.ஐ. பி.எப் குறித்த அறிமுக ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
இன்று (06/02/2025) நடைபெற்ற ஜூம் கூட்டத்தில் இ.எஸ்.ஐ, பி.எப் குறித்து ஒரு அறிமுக வகுப்பாக எடுத்தேன். கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்.
February 4, 2025
கல... பிறந்தவர்கள்!
இந்திய வரலாறை நீங்கள் பறவைப் பார்வையில் பார்த்தாலே, பல சமயங்களில் ரத்த ஆறு ஓடுவதைப் பார்க்கமுடியும்.
1947ல் பிரிட்டிஷார்
கைமாற்றி விட்டு போகும் பொழுதும், இங்கு அப்படி ஆறு ஓடியது. காந்தி எல்லா இடங்களுக்கு ஓடி, ஓடி அமைதிப்படுத்த
முயன்றுகொண்டிருந்தார்.
காரணம் அதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்து சனாதனாவாதிகள்
தான். (கொஞ்சம் கோபமாய், சரியான வார்த்தைகளை பயன்படுத்தினால், பேஸ்புக் யாரும்
பார்க்க முடியாத படி ஆழமான கிணற்றுக்குள் தூக்கி போட்டு அமுக்கி கொன்றுவிடுகிறான்.
ஆனால், காசு கொடுத்தால், எத்தனை மோசமாக எழுதினாலும்
அவனே விளம்பரப்படுத்துகிறான். இது தான் பேஸ்புக் லாஜிக்.) அதனால் தான் இவங்களோட அக்கப்போராக
தான் முடியும் என சின்னா அவர்கள் தனியாக பிரித்துக்கொண்டு
போனார்.
1980ல் பிஜேபியை
துவங்கினார்கள். பிறகு உ.பிரதேசத்தில் பாபர் மஸ்ஜித்தை இடித்தது.
தொடர்ந்து ரத்த ஆறு கூடுதலாக ஓடியதும் வரலாறு. மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தில் மக்களின்
வாழ்வாதாரத்துக்காக எந்த போராட்டமும் இவர்கள் செய்தது கிடையாது. கோயிலை பரமாரிக்கவேண்டும். அர்ச்சர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்தவேண்டும். பூஜைக்கு அடிக்கும் கயிறு பழசாகி விட்டது. ஆகையால் புதுசு வாங்கித்தாருங்கள் என்று தான் கோரிக்கை
வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு தான் சின்ன கும்பலாக போராடியிருக்கிறார்கள்.
ஒரே ஒரு விதிவிலக்கு. ஒரு போராட்டம் கேஸ் விலையை எதிர்த்து அங்கு சுஷ்மா தெருவில் கோஷம்
போட்டார். இங்கு தமிழிசை கோஷம் போட்டார். அதை
வைத்துக்கொண்டு இன்றைக்கும் கேஸ் விலை உயர்வுக்கு ரிவர்சில் பயன்படுத்துவதால் அந்த
போராட்டம் மட்டும் நினைவில் நிற்கிறது.
அவர்களின்
வழக்கத்தின் படி தான் இன்று மதுரை திரு.குன்றத்தில் ஒன்று கூடி கும்மியடித்திருக்கிறார்கள்.
(அப்படித்தான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.)
இவர்களிடம் கவனமாய் இருக்கவேண்டும். விருந்தாளிக்கு பிறந்தவனே! என கேவலமாய் திட்டுவார்கள். இவர்கள் கல..த்திற்கு பிறந்தவர்கள் என தாரளமாய் சொல்லலாம். அதையும் அவர்கள் பெருமையாய் எடுத்துக்கொள்வார்கள்.
பாட்ஷா படத்தில் சொல்வது போல புத்தி, உடல் முழுவதிலும் ரத்த வெறி ஊறியவர்கள் இவர்கள்.
குடும்பஸ்தன் (2024)
நாயகன் தான் காதலித்த பெண்ணை கலாட்டாகளுடன் திருமணம் செய்கிறார். அளவான சம்பளம். அதையும் விட அதிகமான செலவுகளுடன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது, வேலை செய்யும் இடத்தில் ஒரு சிக்கல் எழ, வேலையை இழக்கிறார். துணைவியார் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்துவருகிறார்.
எப்பொழுதும்
மட்டம் தட்டுகிற அக்கா வசதியான வீட்டுக்காரர், வேலை போன விசயத்தை வீட்டில் சொன்னால்
சிக்கலாகும் என கடன் வாங்கி சமாளிக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக ஏகப்பட்ட சிக்கல்களுக்குள்
தள்ள.. சமாளித்தாரா என்பதை மீதி படத்தில் சொல்கிறார்கள்.
வாழ்க்கை
சிக்கல்களை சொல்வதில், பாதி இயல்பாக இருக்கிறது என்பதை திருப்திப்பட்டு கொண்டால், பாதி
செயற்கையாக இருப்பது துருத்தலாக நிற்கிறது.
படம் முடிந்து வீட்டுக்கு வந்ததும், நாயகன் ஏன் தன் வேலை போன விசயத்தைச் சொல்லலாம்
அல்லவா! ஏன் சொல்லவில்லை? என்றாள் என் மகள்.
ஒரு வேலை போவது எல்லாம் இங்கு இயல்பான சமாச்சரமாகி பல வருடங்களாகிவிட்டது.
மச்சான்கள்
குடைச்சல் இயல்பிலேயே நிறைய இருக்கிறது. அதை
சொல்லியிருக்கலாம். அவர் சீனா செல்கிறார். அதற்கான மெனக்கெடல்களை செய்கிறார் என்பது
ஒட்டவில்லை.
ஒரு கட்டத்தில்
நாயகன் மிகவும் காயப்பட்டு, களைப்படைகிறார்.
நம்மைச் சுற்றி உள்ள பெரும்பாலோர் தோற்கடிக்கப்பட்டு (Loosers) தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
என்பதை உணர்கிறார். இந்த கேள்வியில் இருந்து
தான் படம் பார்ப்பவர் யோசிக்கவேண்டியது அவசியமாகிறது. இந்த நாட்டில் உழைத்துக்கொண்டே இருக்கிற பலரும்
ஏன் தோற்றுப்போகிறோம்? சிலர் ஜெயிக்கிறார்கள்
என்றால் எப்படி?
மொத்தப் படத்தையும்
மணிகண்டன், சோமசுந்தரம் தாங்குகிறார்கள். மற்றவர்களும் துணை நின்றிருக்கிறார்கள்.
நாயகன் பட்ட பெரும் சிரமங்களை பழைய படங்களை போல சோகமாக எடுக்க
முடியாது என சாப்ளின் கையாண்ட முறையில் எடுத்ததாக சொல்கிறார்கள். இதுவே ஒரு முரண் தான். மிகைப்படுத்தல் தான் இங்கு பிரச்சனை. இயல்பாக சொல்லலாம்.
நீங்கள் பார்த்தீர்களா?
என்ன உணர்ந்தீர்கள்?
I want to talk (2024) இந்தி
நாயகன் அமெரிக்கவாழ் இந்தியர். பொருட்களை சந்தைப்படுத்தும் தொழிலில் பிசியான ஆளாக இருக்கிறார். துணைவியாருடன் முரண் என்பதால், விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. அவர்களுடைய குட்டிப்பெண் இருவரிடமும் மாறி மாறி இருந்துகொண்டு வளர்ந்து வருகிறாள்.
திடீரென குரல்
வளையில் நாயகனுக்கு புற்று நோய் தாக்குகிறது.
அதைச் சோதித்தால், அது வளர்ந்து உடலின் பல பாகங்களை ஆக்கிரமித்திருக்கிறது. மருத்துவர்கள் இன்னும் 90 நாட்கள் இருந்தால் அதிசயம்
என்கிறார்கள். முதலில் அதிர்ந்தாலும், அதை
எதிர்கொள்ள தயாராகிறான்.
ஒன்றல்ல,
இரண்டல்ல அடுத்தடுத்து 20 அறுவை சிகிச்சைகள்.
குட்டிப்பெண் என்பதால், மகளிடம் மறைக்கிறான். பிழைத்தானா, மாண்டானா என்பதை முழு நீள படமாக சொல்லியிருக்கிறார்கள்.
***
உண்மைக் கதை
என்பதால், ராவாக எடுத்திருக்கிறார்கள். ஆவணப்படம்
போல இருக்கிறது. எடுத்தவர் அமெரிக்க வாழ் இந்தியரோ என நினைத்தால், சுஜித் சர்கார். ஏற்கனவே விக்கி டோனர், பிங் என சில படங்கள் இயக்கியவர்,
தயாரித்தவரும் கூட.
வாழ்வில்
ஒரு அறுவை சிகிச்சை என்றாலே கலகலத்துப் போகிறோம்.
உடலின் சில பாகங்கள் புற்று அரித்து தின்ன பிறகும், ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால்,
அதுவும் நிஜ கதை என்றால், ஆச்சர்யத்துக்கு ஆச்சர்யமாயிருக்கிறது.
எனக்கு அபிஷேக்
பச்சன் நடிப்பு ஏனோ ஒட்டுவதில்லை. இந்தப் படத்தில் ஏனோ கொஞ்சம் ஒட்டினார். அத்தனை அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அதே உடல்,
அதே தெம்புடன் என காட்டுகிற பொழுது கொஞ்சம் பிசிறு அடிக்கிறது. (அதற்காக நிஜமாகவே உடல் இளைக்க முடியுமா என்ன!)
நாயகனைப்
பார்த்துக்கொள்ளும் அந்த பெண் நர்ஸ் அவன் உயிரை மாய்த்துக்கொள்ள போகும் பொழுது, தன்
பேச்சால் காப்பாற்றுகிறாள். பின்னாளில் அவள் தன்னை மாய்த்துக்கொள்ளும் பொழுது, மனிதர்கள்
மிகவும் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருக்கிறார்கள் என தோன்றுகிறது.
நாயகனின்
மகள் நல்ல தேர்வு. சிறு வயது பெண் தனது அப்பாவிற்கு
புரிய வைப்பதற்காக, வட்டம் வட்டமாக வரைந்து, அம்மா முதல் வட்டம், நண்பர்கள், ஆசிரியர்கள்
என சுட்டி, எட்டாவது வட்டத்தில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என சொல்லும் பொழுது… எனது
மகளிடம் நான் எத்தனையாவது வட்டத்தில் என கேட்க
தோன்றுகிறது. பிறகு இன்னும் கொஞ்சம் சரி நெருங்கிக்கொள்ளலாம்.
பிறகு கேட்கலாம் என தோன்றுகிறது.
நாயகனுக்கும், அவனுடைய துணைவியாருக்கும் என்ன பிரச்சனை என்பதை எங்குமே காட்டவில்லை. இவனின் கதை என கறாராக முடிவு செய்துவிட்டார்கள்.
February 2, 2025
ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?
ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?
வணக்கம். விமர்சன உரை அல்ல! உறுப்பினர்கள் சார்பாக என்
உரை.
தேவையில் இருந்து தான் ஒன்று உருவாகிறது. இந்த புத்தகத்தின் தேவை?
நஜ்முதீன் அய்யா – ஜி.எஸ்.டி எளிமைப்படுத்துவதற்காக வந்தது என சொல்லிக்கொண்டாலும்,
இடியாப்பத்தை போல சிக்கலானது. இந்த சூழ்நிலையில்
தான் இந்த புத்தகம் வெளிவந்துள்ளது.
ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?
ஹாரி பார்ட்டர் எட்டு பாகங்கள். அதை படமாகவும் எடுத்தார்கள்.
அதில் வரும் பிரதான பாத்திரம் வோல்ட் மார்ட்.
தன் உயிரை பாதுகாக்கும் விதமாக ஆறு இடங்களில் ஒளித்து வைத்திருப்பார்.
ஒரு புத்தகம் என சாதாரண நிலையில் பார்க்கிறோம். புத்தக உருவாக்கமும் பல படிநிலைகள் கொண்டது. அது
உருவாகும் பாதை கடினமானது.
சட்ட அறிவு அவசியம்.
அதை புரிந்துகொள்வது மிக அவசியம். ஒன்றை காட்டும் பொழுது மூன்று பேர் மூன்று
விதமான கருத்துகளை மெல்லிய மாற்றத்துடன் சொல்வார்கள். அதனால் தான் தனது உரையில் இது என்னுடைய புரிதல்
என்பதை வலியுறுத்துவார்கள்.
ஆங்கில அறிவு அவசியம். அதுவும் சட்ட வார்த்தைகளை புரிந்துகொள்வது இன்னும்
சிக்கலானது. புரிவது போல இருக்கும். குழப்பும்.
தெளிவுபெற கற்றல் அவசியம்.
தமிழ் தெரிந்திருக்கவேண்டும். அதுவும் எழுதுவதற்கென ஒரு தொடர் வாசிப்பு இருக்கவேண்டும். அது போல தமிழ் தெரிந்த எல்லோராலும் எழுதிவிடமுடியாது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கும் பயிற்சி வேண்டும்.
ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதும் எளிதல்ல. அதன் சாரம் குறையாமல், செய்வது அத்தனை எளிதல்ல. பல பிரபலமான புத்தகங்களை தமிழில் மோசமாக மொழிபெயர்த்து
அதன் சாரத்தை இழக்க வைத்திருக்கிறார்கள்.
ஒரு விசயம் நடைமுறையில் தான் உரசிப் பார்க்கப்படும். சாருக்கு பல ஆண்டுகள் ஒரு வரி ஆலோசகராய் வேலை செய்த
அனுபவமும், பல கூட்டங்களில் ஆசிரியராய் வகுப்பு
எடுத்த அனுபவமும், பலர் எழுப்புகிற கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லிய
அனுபவம் உண்டு.
மாதம் மாதம் என்ன வேலை இருந்தாலும், குறிப்பிட்ட தேதிக்கு
கட்டுரை தருவதற்கு தன்னளவில் இராணுவ ஒழுங்கு இருக்கவேண்டும். பத்திரிக்கையாளர் சமஸ்
சொல்லிய அனுபவம்.
ஏன் எழுதவேண்டும்? என்பதற்கு ஒரு உந்துதல் அவசியம். முதல் பட்டதாரியாக எழுந்து நிற்கும், மொத்த குடும்பத்தையும்
தாங்க தன் தொழிலை நம்பும், ஆங்கில பரிச்சயம் நிறைய இல்லாத ஒரு தலைமுறைக்கு தமிழில் தந்து உதவவேண்டும் என்ற
மன உந்துதல் வேண்டும்.
ஒரு புத்தக உருவாக்கத்தில் நம்முடைய பொது புரிதல் என்பது
நாம் எழுதியதை கொடுத்துவிடுவோம். பதிப்பகம் அச்சிடும். விற்கும். எழுதியவருக்கு ராயல்டி தரும்.
இந்தப் புத்தகம் அப்படியில்லை. சார்
தான் பணம் கொடுத்திருக்கிறார். அதை அச்சிட்டு, அதை மக்களிடம் புத்தக சந்தை மூலம் கொண்டு
சேர்க்கும் வேலையை செய்கிறார்கள்.
மாறிவரும் சமூக சூழ்நிலையால், வாசிப்பது குறைந்துவிட்டது.
புத்தகம் விற்பது குறைந்துவிட்டது என்ற சமூக நடைமுறை தெரிந்தாலும், கைக்காசை போட்டு
புத்தகம் அடித்து தருவோம் என்ற பெருந்தன்மை
வேண்டும்.
ஐம்பது பக்கங்கள் கூட புதிதாய் எழுதிவிடலாம். தப்பில்லாமல்
தரவேண்டும் என தப்பும், தவறுமாய் (First Copy) தட்டச்சு செய்து தருவதை… நாட்கள் குறைவாக இருந்ததால், பல நாட்கள்
இரவும், பகலும் சரிப்பார்க்கும் பொறுமையும், அதை பிழையில்லாமல்… நேர்த்தியாய் தரவேண்டும்
என்ற அடம் வேண்டும்.
வெளியிடும் நாள் குறித்த பிறகு , புத்தகத்தை வரிக்கு வரி
பொறுமையாக படித்து சேர்க்க வேண்டியதை சேர்த்து, நீக்க வேண்டியதை நீக்கி தருவதற்கு கோவை
பெருமாள் அவர்களைப் போல ஒருவருடைய அருமையான நட்பு வேண்டும்.
அதே போல தமிழ் சூழலில் எழுதியவருக்கு பணம் எல்லாம் வராது. அந்தப் புத்தகத்தின் அச்சுக் கூலியை தான் பணம் தருகிறோம்
என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆக இப்படி பல அம்சங்களை
கடந்து தான் நம் கைக்கு ஒரு புத்தகம் வருகிறது.
ஆகையால், நமக்காக எழுதியவருக்கு, நமக்கு வழிகாட்டுபவருக்கு;
நாளைய விழாவில் நன்றி தெரிவிப்போம். அவருக்கு நம்முடைய அன்பு வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.
அவர் தொடர்ந்து நமக்காக எழுதவேண்டும். அதையும்
புத்தகங்களாக நமக்கு தரவேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.
புத்தகங்கள்
சென்னையில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு இரண்டு முறை சென்றேன். ஒருமுறை சென்னையில் இயங்கும் GST Professionals societyயின் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ”ஜி.எஸ்.டி குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்” என்ற புத்தகத்தை எளிய கேள்வி பதில் வடிவத்தில் 567 பக்கங்களுக்கு எழுதி தொகுத்திருந்தார். மணிமேகலை பிரசுரம் அச்சிட்டு வெளியீட்டு விழாவும் வைத்திருந்தது. கடந்த 05/01/2025 அன்று நிகழ்வில் கலந்துகொண்டு, சில புத்தகங்களையும் வாங்கி வந்தேன்.
புத்தக திருவிழாவின்
கடைசி நாளன்று இலக்கியாவையும் அழைத்துக்கொண்டு சென்றேன். சில புத்தகங்களை வாங்கினேன். இலக்கியாவும் ஆர்வமாய் இரண்டு நாவல்களை வாங்கினார். எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமென்றாலும் படி! நான்
வாங்கித்தருகிறேன் என எப்பொழுதும் சொல்லிவருகிறேன்.
ஒரு இரும்பு
பீரோ நிறைய புத்தகங்கள் நிறைந்து இருந்தாலும், (புத்தகங்களின் கணம் தாங்காமல் பீரோவின்
கால் ஒருபக்கம் ஒடிந்துவிட்டது) படிக்க வேண்டிய புத்தகங்கள் என ஒரு பெரிய பட்டியலே
வைத்திருந்தாலும், அந்தந்த காலக்கட்டத்தில் என்ன மனநிலையோ அது தான் புத்தகத்தை தேர்வு
செய்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டுள்ளேன்.
இருப்பினும்
இது காணொளிகளின் காலம் என்பதால், படிப்பதும் குறைந்துகொண்டே வருகிறது என்பதை என் வாசிப்பை
வைத்தே உணரமுடிகிறது. இருப்பினும் தொடர்ந்து
வாசிக்க முயன்று வருகிறேன்.
புத்தகங்களினால்
பெற்றதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.
தினம் இரவு கொஞ்சம் படிப்பதோ, இலக்கிய கூட்டங்களின் உரைகளை கேட்டோ தான் உறங்குகிறேன்.
நேற்று ஒருவர்
புத்தக திருவிழாவிற்கு வந்து சென்றவர்களை கூர்ந்து கவனித்தேன். 500 நபர்களில் பத்து
பேர்களிடம் மட்டும் தான் புத்தக பைகளைப் பார்த்தேன் என வருத்தப்பட்டிருந்தார். அதற்காகவே வாங்கிய புத்தகங்களின் புகைப்படத்தை
இங்கு பகிர்ந்துள்ளேன்.
கொஞ்சம் படத்தை
உற்றுப்பார்த்தால், ஒரே புத்தகத்தையே சிலவற்றை வாங்கியிருக்கிறேன். இத்தனை வருடங்களில் திருமணங்களில் மணமக்களுக்கு
பரிசாக புத்தகங்களைத் தான் தருகிறோம். சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு பரிசாக கொடுக்கும்
பொழுது, அந்த மணமகன் என் திருமண பரிசுகளில்
புத்தகங்களாக தருவது நீங்கள் மட்டும் தான்! என்றார்.
படித்தவற்றில் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாசிப்பதற்கு வசதியாக சில புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்து, வாங்கித் தருகிறோம்.
January 31, 2025
அம்மா உணவகமும் மக்களும்!
எங்களுடைய பகுதி சென்னையில் புறநகர் பகுதி. அங்கு ஒரு அம்மா உணவகம் இருக்கிறது. அங்கு வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
காலையில்
இட்லி - சாம்பார், மதியம் கலவை சோறு - தொடர்ந்து
சாப்பிடுகிறவர்கள் என்னக்கா! போரடிக்கிறது! சோறு மாத்துக்கா! என கோரிக்கை வைத்தால்,
ஒரு நாள் சாம்பார் சோறு, ஒருநாள் தக்காளி சோறு, ஒருநாள் கருவேப்பிலை சோறு என மாற்றி
சமைப்பதற்கு எங்களுக்கு அனுமதி உண்டு.
இரவு சப்பாத்தி,
சாம்பார். முன்னாடி கொஞ்சம் கசப்பு இருந்ததே!
எனக் கேட்டால், ”கோதுமையில் ஈரப்பதம் இருப்பதால் அந்த பிரச்சனை. இப்பொழுது வருகிற கோதுமை
நன்றாக இருக்கிறது. ஆகையால் சப்பாத்தியும் நலம்” என்கிறார்.
யார் சாப்பிட
வருகிறார்கள் என கேட்டால்… “வட மாநில தொழிலாளர்கள், செக்யூரிட்டி வேலை செய்பவர்கள்,
கட்டிடத் தொழிலாளர்கள், வயதானவர்கள்” என வருகிறார்கள்.
எவ்வளவு வசூல்
என பார்த்தால், காலையில் ஒரு ரூபாய் ஒரு இட்லி. ரூ. 1000 வரை விற்போம். (அப்ப 1000
இட்லி. ஒரு ஆளுக்கு ஐந்து இட்லி என சராசரி பார்த்தால் 200 பேர் என கணக்கிடலாம்.) ஒரு
கலவை சோறு ரூ. 5. மதியம் ரூ. 300 வரைக்கும்
போகும். அப்ப 60 பேர் என கணக்கிடலாம். இரவும் ரூ. 300 வரைக்கும் விற்கும்.
ஒரு நாளைக்கு
இரண்டு குழு. ஒரு குழுவில் 3 பெண்கள். மாத்தி மாத்தி சமைப்போம். சமைக்கிற ஆளுக்கு தகுந்த மாதிரி அதன் ருசியும் மாறும்.
ஒரு பெண் கூடுதலாக டோக்கன் கொடுத்து, பணம் வாங்குகிறவர். ஆக மொத்தம் 7 பெண்கள்.
எவ்வளவு சம்பளம்
என கேட்டால்? முன்பு ஒரு நாளைக்கு ரூ. 300. இப்பொழுது ரூ. 25 அதிகப்படுத்தி, ரூ.
325 தருவதாக சொல்கிறார்.
ஆக கணக்குப்
போட்டால், ஒரு நபருக்கு ரூ. 10000 என்றால் ஏழு பேருக்கு ரூ. 70000. வசூலை கணக்கிட்டால் (அவர்கள் சொன்னதையே சரி என எடுத்துக்கொண்டால்…
ரூ. 1000+300+300 = 1600 * 30 நாட்கள் ) ரூ.
48000. மற்றபடி மின்சாரம், அரிசி, பருப்பு,
கேஸ் என எல்லா செலவுகள் தனி. ஆக ஒரு வருடத்திற்கு
ஒருமுறை ஒரு கணிசமான தொகை ஒதுக்கி தான் இந்த செலவுகளை அரசு மேற்கொள்கிறது எனலாம்.
மற்றபடி நட்டம்
என்பதாக நாம் சொல்லமுடியாது. இந்த சமூகம் கடந்த முப்பது ஆண்டுகளில் சமூக ஏற்றத்தாழ்வு
அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இந்திய
முதலாளிகளும் வரிசையில் நின்றிருக்கிறார்கள்.
இந்த அரசை நடத்துவதே கார்ப்பரேட்டுகளும், இந்திய பெரும் முதலாளிகளும் தான் என்பது
நடைமுறையில் பளிச்சென தெரிகிறது.. அதனால் தான் மறைமுகமாக நிறைய சலுகைகளும், மானியங்களும்
அவர்களுக்கு அள்ளித் தரப்படுகிறது.
வறிய நிலையில்
உள்ள மக்கள் அரசை எதிர்த்து போராட துவங்கிவிடுவார்கள் என்று தான் அம்மா உணவகங்களும்,
கிராமப்புறங்களில் நூறுநாள் வேலை திட்டங்களும் அமுல்படுத்தப்படுகின்றன. முதலாளிகளுக்கு அள்ளித்தந்தால், வறியவர்களுக்கு
கிள்ளித் தருகிறார்கள் எனலாம். ஆனால் இதெல்லாம்
நீண்ட நாட்களுக்கு தாங்காது என்பது முக்கியமானது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?