> குருத்து: தடை செய்யப்பட்ட லாட்டரியும், தடையில்லா அமோக விற்பனையும்!

February 12, 2009

தடை செய்யப்பட்ட லாட்டரியும், தடையில்லா அமோக விற்பனையும்!


ஒருவன் தினமும் கடவுளிடம் தனக்கு லாட்டரியில் பரிசு விழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வான்.

சில ஆண்டுகள் இப்படியே வேண்டிக் கொண்டிருந்த அவன், ஆசை நிறைவேறாததால் ஒரு நாள் கோபமாக கடவுளை திட்டினான்.

அதற்கு கடவுளும் கோபமாக சொ‌ன்னா‌ர்... டேய் முட்டாளே முதல்ல போய் லாட்டரி டிக்கெட் வாங்குடா!

***

இந்த துணுக்கை வாசிக்கும் பொழுது, நமக்கு சிரிப்பு வருகிறது. ஆனால், உண்மையில் லாட்டரி பறித்த உயிர்கள் நிறைய.
***

நேற்று அண்ணனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

“5% வட்டிக்கு வாங்கியிருந்த 1.5 லட்சம் கடனை அடைச்சுட்டேன்” என சந்தோசமாய் சொன்னார்.

“எப்படி?” என்றேன்.

“கடவுள் இருக்கான்டா!” என்றார்.

“கடவுள் ஒன்னும் இல்லை. காரணத்தைச் சொல்லுங்க” என்றேன்.

“2 லட்சம் ரூபாய் லாட்டரியில் விழுந்தது. வரியெல்லாம் போக 1.5 லட்சம் கொடுத்தார்கள்.” என்றார்

“தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டிருக்கிறதே!” என உடனடியாக கேட்டேன்.

***

என்னைப் போல என நீங்களும் கேட்டால், நாம் அப்பாவிகள்.

ஆளுங்கட்சி ஆசியுடன், காவல்துறையின் ஆதரவுடன் தமிழகமெங்கும், தங்கு தடையின்றி வெளி மாநில லாட்டரிகள் தினசரி 75 லட்சம் அளவில் விற்கப்படுகிறது.

லாட்டரிக்கு வாடிக்கையாளர்கள் தொழிலாளர்களும், உதிரி தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் தான்.

தங்களுடைய வருமானத்தில், ஒவ்வொருநாள் வாழ்க்கையையும் பல போராட்டங்களுடன் நகர்த்தி கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராமல் வரும் மருத்துவ, குடும்ப விசேசம் சம்பந்தமாக எழும் செலவுகளுக்கு, தவிர்க்க இயலாமல் கடனில் சிக்கிக்கொள்வார்கள். அதுவும் 100க்கு 2 வட்டியோ 3 வட்டியோ அல்ல! 10 வட்டி! அல்லது அதற்கும் மேல்! ஏன் இவ்வளவு வட்டி என்றால், அவர்களிடம் அடமானம் வைக்க, அல்லது நம்ப எந்த உடைமையோ இல்லாததால் அநியாய வட்டி. (அமெரிக்காவில் சப்-பிரைம் கடனுக்கு அதிக வட்டி வாங்குகிறார்கள். அதற்கும் இதே தான் காரணம். உலகம் முழுவதும் இது தான் நிலை)

இப்படி கடனில், வட்டியில் மாட்டிக்கொள்கிற இவர்கள், இதிலிருந்து விடுபட அவர்களில் வாழ்வில் எந்த வழியும் இல்லாததால், நொந்து நொந்து வட்டி கட்டும் இவர்களுக்கு ஒரே நம்பிக்கை “லாட்டரி”. தொடக்கத்தில் 5ரூ. 10 ரூ.க்கு வாங்கும் இவர்கள் வாழ்க்கை நெருக்கடி நெருக்க நெருக்க், ரூ. 50, ரூ. 100 என வாங்க தொடங்குவார்கள். ஏதோ ஒரு நாளில், அந்த குடும்பம் தற்கொலை செய்து கொள்வார்கள் அல்லது யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் தனது சொந்த மண்ணை விட்டு காலி செய்துவிடுவார்கள். நானே பல குடும்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

இப்படி பல குடும்பங்களை லாட்டரி சிதைத்ததில் தான், எதிர்ப்புகள் கிளம்பி, பல
போராட்டங்களுக்கு பிறகு, ஜனவர் 8, 2003-ல் அன்றைக்கு முதலவராய் இருந்த ஜெயலலிதா தடை செய்தார். அன்றைக்கும் ஆங்காங்கே திருட்டுத்தனமாய் விற்றுக்கொண்டிருந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமோகமாய் விற்க தொடங்கிவிட்டார்கள்.

மே 8, 2007ல் தமிழகம் முழுவதும் சோதனை செய்ததில், 112 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கரூரைச் சுற்றியும், கரூரில் காவல்நிலையம் அருகேயே லாட்டரி விற்று, மக்களிடத்தில் எதிர்ப்பு கிளம்பியதும் கைது செய்தார்கள் (25.03.2008)

கடந்த ஜூலை 2008ல் விருகம்பாக்கம் பகுதியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள லாட்டரிகள் கைப்பற்றப்பட்டன.

கடந்த செப்டம்பரில் சென்னை திருவேற்காடு பகுதியில், கமிஷனர் ஜாங்கிட் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரிகளை கைப்பற்றினார்.

தடையில்லாமல் இருந்த பொழுது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாய் லாட்டரி விற்பனை நடந்ததாம். உண்மையான லாட்டரி மூலமும், சிவகாசியில் அடித்த போலி லாட்டரிகள் மூலம், தமிழ்நாட்டில் பல புள்ளிகள் திடீர் பணக்காரர்களாக மாறினார்கள்.

அடித்த கொள்ளையின் ருசி அவர்களுக்கு விட்டுப்போகுமா! காவல்துறை ஆதரவுடன் கொள்ளையை தொடர்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 1968ல் அன்றைக்கு முதல்வராய் இருந்த அண்ணாதுரை “விழுந்தால்
வீட்டுக்கு! விழாவிட்டால் நாட்டுக்கு! என்ற முழக்கத்துடன் முதன்முதலில் லாட்டரியை துவங்கி வைத்தார்.


அண்ணா தொடங்கி வைத்ததாலும், முதலீடே இல்லாமல் கொட்டும் பணத்தாலும், கருணாநிதிக்கு
லாட்டரி மேல் எப்பொழுதுமே பாசம். விசாரித்ததில், தென்மாவட்டங்களில் ரவுடிகளின் அன்பு அண்ணன் அழகிரி ஆதரவோடு தான் விற்பனை ஜோராக நடக்கிறதாம்.

லாட்டரி முடிவுகள் அறிய அதிர்ஷ்டம் தினசரி இதழாக வந்துகொண்டிருந்தது. தடை செய்யப்பட்டதும் நிறுத்தப்பட்டது. பிறகு, இப்பொழுது ரகசியமாக வந்துகொண்டிருக்கிறதாம். இந்த இதழை அதிமுக கொள்கைகளை பரப்பும் தினபூமி நாளிதழின் சார்பு நிறுவனம் தான் நடத்திவருகிறது.

இந்த அநியாய லாட்டரி திட்டத்தை இந்தியாவில் முதன் முதலில் துவங்கி வைத்து, பல தொழிலாளர்களின் வாழ்வில் கேடுகளை விளைவித்தவர்கள் வேறு யாருமில்லை கேரளா சி.பி.எம் கட்சிகாரர்கள் தான்.


அந்த பாசத்தில் தான், லாட்டரிக்கு ஆதரவாக, மதுரையில் 4.4.2005-ல் “லாட்டரிக்கு தடையை நீக்க கோரி” நடந்த சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மோகன் ஆதரித்து பேசினார்.

இதை அம்பலப்படுத்தி,

“மகா நடிகர் எம்.பி. மோகனே,
கம்யூனிஸ்ட் என்று சொல்லாதே!”


புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது.

யார் தாலி அறுந்தால் என்ன? சிபிஎம் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மக்கள் விரோதப் போக்குடையதாக செயல்படுகின்றன. மக்கள் தான் துன்ப துயரங்களில் மீள மாற்று வழிகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.



தகவல்களுக்கு நன்றி

புதிய ஜனநாயகம் இதழ், வெப்துனியா, விபரம்.காம், திருமலை கொளுந்து, மாலைச்சுடர்

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

எங்கள் பகுதிகளில் முன்பு தரைத்தளத்தில் விற்றுக்கொண்டிருந்தவர்கள்,

இப்பொழுது முதல் மாடியில் கொஞ்சம் உட்புறமாக கடை போட்டு எந்தவித பயமும் இல்லாமல் பரிசுச்சீட்டுகளை விற்கிறார்கள்.

காவல்துறை தினமும் வந்து பணம் வாங்கி செல்கிறார்கள்.

Rathnakumar said...

உண்மையை உடைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.தமிழகத்தின் உழைக்கும் வர்கம் இவர்களிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிரது. ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வரும்போதும் இதுபோன்ற சட்டத்திற்க்கு புறம்பான செயல்கள் ஏதோ சமூகசேவை போல பகிரங்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது...

Anonymous said...

தமிழகத்தை அடுத்துள்ள அனைத்து மாநிலங்களிலும் லாட்டரி விற்பனை அமலில் இருக்கிறது.

லாட்டரி விற்பனை தான் மாநிலங்களின் வருமானத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் சிக்கிம், மிசோராம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் லாட்டரி மட்டும் இல்லை என்றால் அங்கு மாநில அரசாங்கமே ஸ்தம்பித்து விடும் நிலை ஏற்படும்.

Anonymous said...

பத்து ரூபாய்க்கு ஒரு லாட்டரி சீட்டு விற்கப்படும் பொழுது அரசாங்க வரியாக 10 சதவீதமும், பரிசுத் தொகையாக 59 சதவீதமும், பெரிய ஏஜெண்டுகளுக்கு 5 சதவீதமும், ஸ்டாக்கிஸ்டுக்கு 2 சதவீதமும், துணை ஸ்டாக்கிஸ்டுக்கு 3 சதவீதமும், சில்லரை ஏஜெண்டிற்கு 2 சதவீதமும், விற்பனையாளருக்கு 16 சதவீதமும், பிரிண்டிங் செலவுக்கு 3 சதவீதமும் செலவாகும். இவை தான் லாட்டரியின் பார்முலா.

Anonymous said...

அதே போல் பிற மாநில லாட்டரிச் சீட்டுக்களைப் போல் போலியாக சிவகாசியில் அடித்து அதன் மூலம் சம்பாதித்த கூட்டங்கள் அதிகம். ஒரு லாட்டரி மொத்த ஏஜெண்ட் 1 கோடிக்கு லாட்டரி விற்பனை செய்தால் அரசாங்கத்திடம் 1லட்சத்திற்கு விற்றதாக கணக்கு காட்டுவார்கள். அது தான் தமிழகத்தில் நடந்தது.

Anonymous said...

நல்ல கட்டுரை.

லாட்டரியால் குடும்பத்திற்குள் பல சண்டைகள் எங்கள் பகுதியில் அடிக்கடி நடக்கும். பிறகு, பஞ்சாயத்தும் நடக்கும்.

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி.

தங்கள் பதிவை எளிதாக சேர்க்க newspaanai button தங்கள் பதிவில் சேர்க்கவும்.

கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php

Anonymous said...

சென்னை:தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களை விற்றதாக வந்த புகாரின் பேரில், லாட்டரி நிறுவன அதிபர் மார்ட்டினின் வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல பகுதிகளில் வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறி வருகின்றன.

இந்த நிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி டிஎஸ்பி பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த படையினர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களை தமிழகம் முழுவதும் விற்றதாக கோவை மார்ட்டின் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று கோவை, சென்னையில் உள்ள மார்ட்டினின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மார்ட்டினின் வீட்டில் 3 மணி நேரம் சோதனை நடந்தது. திருவல்லிக்கேணியில் உள்ள அலுவலகத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதேபோல கோவை காந்திபுரத்தில் உள்ள மார்ட்டினுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சோதனை நடந்தது. சுமார் 7 மணி நேரம் இங்கு சோதனை நடந்தது. இங்கும் பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.

கோவையை அடுத்த வெள்ளக்கிணறில் உள்ள ஆடம்பர பங்களா, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வீடு, வேணுகோபால் நிறுத்தம் அருகே உள்ளள வீடுகளிலும் சோதனை நடந்தது.

from thatstamil
3/06/2007