> குருத்து: ‘அண்ணன்’ அழகிரி அமைச்சர் அழகிரி ஆகிவிட்டார்!

May 30, 2009

‘அண்ணன்’ அழகிரி அமைச்சர் அழகிரி ஆகிவிட்டார்!


முதலில் நமது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். மதுரையில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மதுரை அமர்க்களப்படுகிறதாம்.

மதுரையை ‘கூடல் மாநகரம்’. கோவில் மாநகரம்’ என்றும், அந்த மண்ணை அன்னை மீனாட்சி ஆள்கிறாள் என்பார்கள். அதெல்லாம் பக்தியில் திளைப்பவர்களும், அரசியல் வாடை சிறிதும் இல்லாத பாமர ஜனங்கள் சொல்வது. மதுரையை ‘அண்ணன்’ ஆள ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.


அதனால் தான் தேர்தலில் ஜெயித்து, மந்திரி பதவி கிடைத்ததும், ‘அண்ணனின்’ அன்பு தம்பிகள் மதுரையை ‘அழகிரியார் மாவட்டமாக’ அறிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

பிரதமரும், சோனியாவும் ‘திறமையான’ ஆட்களுக்கு தான் மந்திரி பதவி கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ! ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரிக்கு கச்சிதமாய் பொருந்தும். கேபினட் மந்திரி பதவி இப்பொழுது தந்ததற்காக வாழ்த்துக்களை சொல்வதை விட, தாமதமாய் தந்ததற்காக நாம் கண்டனம் தான் தெரிவிக்க வேண்டும்.

ஓட்டு சீட்டு அரசியலுக்கு எப்பேர்ப்பட்ட திறமையானவர் ‘அண்ணன்’ அழகிரி. காண்டிராக்டா? கட்ட பஞ்சாயத்தா? அடிதடியா? கொலையா? தேர்தலில் ஜெயிக்க வேண்டுமா? – இப்படி வார்த்தைகளில் ‘அண்ணன்’ அழகிரியின் அருமை பெருமைகளை விளக்குவது அவரை சிறுமைப்படுத்துவதாகும். மதுரையில் அவரின்றி ஓர் அணுவும் அசையாது. அவ்வளவு தான். எதிர்கட்சிகள் இன்றைக்கும் அவரை ‘ரவுடி’ என்று தான் அழைக்கின்றனர்.

“அழகிரிக்கு சொத்து பிரச்சனையில்லை. அதிகாரத்தை நிறைய ருசித்தவர் (!). ஆகவே, ஓட்டு சீட்டு அரசியல்வாதிக்கே உரிய முதிர்ச்சி பெற்று, திருந்திவிடுவார்’ – என தினமணி தலையங்கம் எழுதுகிறது.

திருமாவளவன் முன்பு தேர்தல் புறக்கணிப்பில் இருக்கும் பொழுது “வாய் வழியாக அமிர்தமே உள்ளே போனாலும், வெளியே வரும் பொழுது .வி.....யாக வரும்”. அது போல தான், எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இந்த சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பங்கேற்றால் கழிசடையாக தான் உருமாறிப்போவார்” என்றார்.

‘அண்ணன்’ அழகிரியோ உள்ளே போகும் பொழுதே, வி....யாக தான் உள்ளே போகிறார். தினமணி நம்பட்டும்.

அண்ணனுக்கு கேபினட், தம்பிக்கு துணை முதல்வர். மற்றவர்களுக்கும் உரிய, உயரிய பதவிகள். இனி, கருணாநிதி தன் மீளாத் தூக்கத்தை நிம்மதியாக துவங்குவார்.

ஆனால், நிம்மதியை காவு கேட்கும் டிராகுலாக்களை மக்கள் தான் எப்படி சமாளிக்க போகிறார்களோ!

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

Anonymous said...

algiri is correct man to parliament politics as you said.

குருத்து said...

கலைஞர் இவ்வளவு காலமாக அழகிரிக்கு பதவி தராதது ரவுடி என பெயர் எடுத்தவனே! என்று தான் தயங்கி தயங்கி இருந்தார்.

இப்பொழுது உயில் எழுதும் கட்டத்திற்கு வந்தபிறகு, தவிர்க்கவா முடியும். தன் காலத்திற்கு பிறகு, எப்படியோ அடித்துக்கொள்ளட்டும்.

நம்ம நம் தலைமுறைக்கு சரியாக செய்துவிட்டு போவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

Anonymous said...

தினமணியின் தலையங்கம்

முதல்முறையாக மதுரைக்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் செயல்பாடுகளிலும் அவர் கையாளும் அரசியல் வழிமுறைகளிலும் நம்மில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். மத்திய அமைச்சரவையில் அவர் இடம்பெற்ற விதத்தில் கூட நம்மில் பலர் முகம் சுளித்தது உண்மையிலும் உண்மை. ஆனால் அதைவிட நிதர்சனமான உண்மை மு.க.அழகிரி மத்திய அமைச்சர் என்பது!

முதல்வர் கருணாநிதியின் மகன், திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்கிற தகுதிகள் எல்லாம் பின்னால் தள்ளப்பட்டு இப்போது தமிழகத்தின் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக மத்திய அமைச்சரவையில் ஒரு பொறுப்புள்ள பதவி வகிக்கும் மாண்புமிகு அமைச்சராக மு.க.அழகிரி மாறியிருப்பது அவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்ப்பதில் தவறு காணமுடியாது.

அழகிரிக்கு ஆங்கிலம் பேசத் தெரியுமா? கோப்புகளைப் பார்க்கத் தெரியுமா? நாடாளுமன்றத்தில் அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியுமா? பல மேதைகளும் அரசியல் ஜாம்பவான்களும் அமர்ந்த இடத்தில் போய் அமரும் தகுதி இருக்கிறதா? இப்படி எத்தனை எத்தனையோ விமர்சனங்கள் திமுகவின் எதிர் முகாம்களில் இருந்தும் ஊடகங்களிலும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

1952 முதல் இதுவரை அமைந்த 15 மக்களவைகளின் உறுப்பினர்களாக இருந்த பலரைப் பற்றி மேலே எழுப்பப்பட்ட கேள்விகள் இப்போதும் எழுப்பப்படலாம் என்பதுதான் உண்மை. ஆங்கிலம் தெரிந்திருப்பதும் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றும் திறமை உள்ளவர்களும் மட்டுமே மக்களவை உறுப்பினர்களாக ஆகவேண்டும் என்று சட்டமும் இல்லை. அப்படிப்பட்ட தகுதி இல்லாதவர்கள் அனைவருமே செயல்படாத உறுப்பினர்களாக இருந்துவிடவும் இல்லை.

வைகைக் கரையில் தன்னைச் சுற்றி சிறியதொரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அரசியல் நடத்தத்தான் அழகிரிக்குத் தெரியும் என்று விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். யமுனைக் கரையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் சங்கமிக்கும்போது ஆர்ப்பாட்ட, அடாவடி அரசியலால் தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட பலரும் அரசியல் முதிர்ச்சியும் நாகரிகமும் பெற்றவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்கு உணர்த்தியிருக்கும் உண்மை.

Anonymous said...

தினமணி தலையங்கத்தின் தொடர்ச்சி..

ஆலமரத்தின் கீழ் ஸ்டாலின்…

திமுகவின் பொருளாளரும் முதல்வர் கருணாநிதியின் இளைய மகனும் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்குக் கிடைக்காத வாய்ப்பு மத்திய அமைச்சராகி இருக்கும் மு.க.அழகிரிக்கு கிடைத்திருக்கிறது.

முன்பு சென்னை மாநகர மேயராகவும் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்படும் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்துவிட முடியவில்லை. அதற்குக் காரணம் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் கீழே வேறு எதுவும் தழைத்துவிட முடியாது என்பதுதான்.

எடுத்த காரியத்தை முடிப்பவர்…

ஆனால் மத்திய அமைச்சரான மு.க.அழகிரிக்கு அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. மாநில அரசு போலில்லாமல் மத்திய அரசில் அமைச்சர்கள் தங்களது தனித்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் சுதந்திரமும் அவகாசமும் முழுமையாகத் தரப்படுகிறது.

எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை உடையவர் என்று அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் மு.க.அழகிரி, மத்திய அமைச்சராக நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற முற்படுவாரேயானால் அவரை நாடு போற்றும்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் மத்திய உணவுத்துறையின் அப்போதைய அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் தொலைநோக்குப் பார்வையில் உருவானதுதான் ‘பசுமைப்புரட்சி’ திட்டம். அதன் விளைவாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது.

உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் பங்களிப்பு இப்போதும் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது. அதுபோல அமைச்சர் மு.க.அழகிரி இந்திய சரித்திரத்தில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டால் அது ஒன்றும் இயலாத விஷயமல்ல.

தேவிலாலும் லாலுபிரசாத் யாதவும் முலாயம்சிங் யாதவும் அமைச்சர்களாகச் செயல்பட்டு முத்திரை பதிக்க முடிந்ததென்றால், முதல்வர் கருணாநிதியின் மகனால் முடியாத விஷயமாக அது இருக்க முடியாது. அரசியலையும் நிர்வாகத்தையும் சுவாசித்து வளர்ந்த அழகிரி, நேர்மையும் திறமையும் உள்ள நிர்வாகிகளைத் தேடுகிறார் என்கிற செய்தி வியப்பளிக்கவில்லை. தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு வித்தியாசமான அழகிரி, யமுனைக் கரையில் உருவாகக் கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இனிமேல் அழகிரி பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. அதிகாரம் என்பதுகூட அவர் பார்க்காததோ, அனுபவிக்காததோ அல்ல. ஆனால், புகழ் என்பதும் சாதனை என்பதும் தகுதி என்பதும் அவர் தேடிக்கொள்ள வேண்டிய விஷயங்கள். அதற்கான வாய்ப்பை மத்திய அமைச்சர் பதவி அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ‘செயல் வீரர்’ அதை நன்கு பயன்படுத்துவார் என்று நம்புவோமாக!