> குருத்து: ஏழாம் நாளிலும் மார்ச்சுவரியில் காத்திருந்த ஜிதேந்தர்!

July 21, 2010

ஏழாம் நாளிலும் மார்ச்சுவரியில் காத்திருந்த ஜிதேந்தர்!


அரசு மருத்துவமனை. மனிதர்களின் அழுகுரல்களால் மார்ச்சுவரி சூழப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த பொழுது, உடலில் புதிதான அதிர்வுகள் எழுவதை உணர்ந்தேன். இப்படியே திரும்பி போய்விடலாமா என நினைத்தேன். பார்த்தே ஆக வேண்டும்.

அருகே நெருங்கிய போழுது, அந்த இளம் உடல் குளிரில் நன்றாக விரைத்து கிடந்தது. முதல்நாள் பார்த்ததை விட, இன்று வித்தியாசமானதாக இருந்தது. உறவினர்கள் யாரும் வராததாலும், உரிய ஆவணங்கள் தரப்படாததாலும்.... ஆறாம் நாளிலும் மார்ச்சுவரிலேயே இருந்தது.

****

வழக்கமான வேலைகளில் மூழ்கியிருந்தேன். நுண்பகல் வேளை. என் முதலாளியிடமிருந்து அந்த அவசர அழைப்பு வந்தது. செய்தி சொன்னதும், அதிர்ச்சியாய் இருந்தது. நான் இந்த நிறுவனத்தில் வேலை சேர்ந்ததில் இருந்து, பல தொழிலாளர்களின் கைவிரல்கள், கை துண்டித்திருப்பதை எல்லாம் பார்த்திருக்கிறேன். கண் போனதை பார்த்திருக்கிறேன். முதன்முறையாக உயிர் போயிருக்கிறது. உடனே அந்த நிறுவனத்திற்கு போய் ஆக வேண்டிய வேலைகளை போய் பாருங்கள்! என்றார். உடனடியாக விரைந்தேன்.

****

அந்த தொழிற்சாலையில் இருபது, முப்பது பேர் குழுமியிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் இறுக்கம் பரவிகிடந்தது. கூட்டம் விலக்கி உள்ளே நுழைந்து பார்த்தேன். இருபது வயது இளைஞன் ஒருவனை அவசரம், அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மின்சார ஷாக்கினால், உடல் நிறம் மாறியிருந்தது. உடலில் உயிரே இல்லை. இருப்பினும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். அவர் ஏற்கனவே இறந்து போனதாக மருத்துவர் உறுதிப்படுத்திய தகவல் இருபது நிமிடத்தில் வந்தது.

அந்த தொழிற்சாலை துவங்கி 7 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலை செய்து கொண்டிருந்த மூவர் பல இரும்பு தகடுகள் சரிந்து விழுந்து இறந்து போனார்கள். இப்பொழுது மீண்டும் ஒரு விபத்து. அந்த தொழிற்சாலை எனக்கு இப்பொழுது கொலைக்களம் போல காட்சியளித்தது.

****

இந்த விபத்து குறித்து... நிறுவனங்களுக்காக இருக்ககூடிய அரசு தரப்பு ஆய்வாளர் அறிக்கையை பின்வருமாறு எழுதினார்.

"எந்தவித சுயபாதுகாப்பு சாதனமும் (Hand Gloves, Safety shoes and Googles) அணியாமலும், தகுந்த மேற்பார்வையாளரின் மேற்பார்வை இன்றியும் ஈடுபட்டதால்...இந்த மரண விபத்து ஏற்பட்டது. இந்த தொழிலாளி வட இந்தியாவை சேர்ந்தவர். போதிய தமிழறிவு இல்லாதவர். இது போன்ற தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் பொழுது, அவருக்கு போதிய தமிழறிவு
மற்றும் தொழிற்பயிற்சி இல்லாத காரணத்தினால் இம்மரண விபத்து ஏற்பட்டது. தற்காலிக மின் இணைப்பு பெற்று பணி மேற்கொள்ளும் காலங்களில் மின் இணைப்பைச் சார்ந்த ஸ்விட்ச் போர்டு, பிளக் மற்றும் ஒயர் இவை யாவும் ISO சான்றிதழ் உள்ளனவா, சரியாக பொருத்தப்பட்டுள்ளவையா தகுந்த installation செய்யப்பட்டுள்ளதா என்று அறியாமல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இம்மரண விபத்து ஏற்பட்டுள்ளது. இம்மரண விபத்து மேற்காணும் பிரிவு 41வது விதி 61 & F யின் படி கடும் முரண்பாடாகும்"

*****

இறந்தவரின் பெயர் : ஜிதேந்தர் மோட் வயது : 20

முகவரி : , சுனேலா, இராம்நகர், கட்ராம்பூர் போஸ்ட், தியேரியா ஜில்லா, உத்திரப்பிரதேசம்.

***

ஜிதேந்தரை சேர்த்துவிட்ட ஒப்பந்தக்காரர் மூலமாக ஊருக்கு தகவல் அனுப்பியும், உடனடியாக பதில் ஏதும் இல்லை. இறந்தவருக்கு அப்பா இல்லை. மூன்று அண்ணன்கள். மூவரும் ஹரியானா, குஜராத், டெல்லி என தொலைதூரங்களில் வேலை செய்கின்றனர். தொடர்பு கொள்ளவே இரண்டு நாள்களாகிவிட்டது என பதில் சொன்னார்கள். ஊரில் இருப்பதோ, அம்மாவும், அண்ணனின் குடும்பங்கள் மட்டுமே.

****

தொடர்ச்சியாக முயற்சி செய்து, ஐந்தாம் நாள் உரிய ஆவணங்கள் தபாலில் வந்து சேர்ந்தன. அந்த குடும்ப ரேசன் அட்டையை பார்த்ததும்... மனம் கனத்துப் போனது






கமலா தேவி - தாயார் - வயது 60

சந்தோஷ்குமார் - மகன் - வய்து 30
மீனாகுமாரரி - மருமகள் - வ்யது 24
பிகாஸ் - மகன் - வயது 7
பிஜி - மகன் - வயது 3

ராஜ்குமார் - மகன் - வயது 25
தேவி - மருமகள் - வயது 22
நரேஸ் - மகன் - வயது 3
சமியா - மகள் - வய்து 1

தர்மேந்திரர் குமார் - மகன் - வயது 23
அலோகா - மருமகள் - வயது 21
ஆதித்தா - மகன் - வயது 2
மாதுரி - மகள் - வயது 1

ஜிதேந்தர் மோட் - மகன் வயது - 20

அல்கா - மகள் - வயது 15
கிரண் - மகள் - வயது - 12

மூன்று அண்ணன்கள், அண்ணன்களின் குடும்பங்கள், இரு தங்கைகள் என சொந்தங்கள் சூழ, குடும்ப அட்டையில் மத்தியில் இருந்தார். 15பேர் கொண்ட பெரிய குடும்பம் இருந்தும், ஆறு நாள் ஆகியும் ஒருவர் கூட வந்து சேரவில்லை. அனாதையாக மார்ச்சுவரியில் ஜிதேந்தர் மார்ச்சுவரியில் கிடக்கிறார்.

****

ஏழாம் நாள். மூத்த அண்ணன் மட்டும் டெல்லியிலிருந்து, ரயிலில் வந்து சேர்ந்தார். அப்படியே கையோடு அழைத்துப் போய், உடலைப் பெற்று, மின் தகனத்தில் எரித்தார்கள். இரவு 9 மணி அளவில், அலுவலகம் வந்து சேர்ந்தார்.

கொஞ்ச நேரம் அமைதி. ஏதும் பேச்சில்லை. பிறகு பேச ஆரம்பித்தார். "எவ்வளவு தருகிறீர்கள்?" ஒரு தொகை சொல்லப்பட்டு, அது கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டு உடனடியாக தரப்பட்டது. பணம் தந்ததற்காகவும், இனி வேறும் ஏதும் கேட்கமாட்டோம் என உறுதியளித்து எழுதப்பட்டிந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

ஜிதேந்தர் சம்பந்தமான கோப்பு மூடப்பட்டுவிட்டது.

***

சில நாட்கள் கழித்து... வேறு ஒரு தேவைக்காக அந்த கோப்பை திறந்து பார்த்த பொழுது... சில குறிப்புகள் பென்சிலால் ஒரு தாளில் குறிக்கப்பட்டிருந்தன. அவை :

Police cons. 2500
Police Diesel 1000
Po. writter 1500
Po. photo 500
Po. stationery 200

Po. Inspector 40***
Factory Inspector 50***

என பட்டியல் நீண்டு கொண்டு சென்றது.

****

பின்குறிப்பு : இந்த மரணம் நிகழ்ந்து... சில மாதங்களாகிவிட்டன. ஜிதேந்தர் குறித்த நினைவுகளிலிருந்து. என்னால் இன்றும் மீள முடியவில்லை. படித்த பிறகு, உங்களையும் பல மாதங்கள் நிச்சயம் தொந்தரவு செய்வான்.

5 பின்னூட்டங்கள்:

வினவு said...

கொல்லப்படும் தொழிலாளிக்கு காரணமாக சட்டம், அரசு, முதலாளி எப்போது தண்டிக்கப் போகிறோம்?

நிகழ்காலத்தில்... said...

//Police cons. 2500
Police Diesel 1000
Po. writter 1500
Po. photo 500
Po. stationery 200

Po. Inspector 40***
Factory Inspector 50***//

இது எப்போ மாறும் :((

Unknown said...

மனம் கனத்துப் போனது.

செங்கொடி said...

ஐயோ பாவம் என்று ஒற்றைச் சொல்லை உதிர்ப்பதே அதிகபட்ச மனிதமாக மனிதன் பழக்கப்படுத்தப்பட்டு வருகிறான். லாபவெறியினால் அதிகரிக்கும் இது போன்ற மரணங்களும் அந்தப்பழக்கத்தைக் கற்க விரைவு படுத்துகின்றன. இதற்கு எதிரான அகச் சீற்றத்தை கட்டியமைக்கும் இதுபோன்ற கட்டுரைகள் பரவலாக்கப்படவேண்டும்.

செங்கொடி

குட்டகொழப்பி said...

ஹ்ம்ம்ம்...... எவ்வளவு சாதாரணமாக அந்த உயிருக்கு விலை பேசப்படுவிட்டது பாருங்கள்......அதுவும் இந்த பொலிஸ் நாய்களுக்கு வேறு இவ்வளவு பங்கு பொறுக்கித்திண்ண...பாதி தொகையாவது அந்தக் குடும்பத்திற்கு போய் சேர்ந்திருக்குமா என்பது சந்தேகமே....