> குருத்து: வட மாநில தொழிலாளர்களின் அவல வாழ்வும்! கண்டு கொள்ளாத மாநில, மத்திய அரசுகளும்!

October 27, 2010

வட மாநில தொழிலாளர்களின் அவல வாழ்வும்! கண்டு கொள்ளாத மாநில, மத்திய அரசுகளும்!

பூந்தமல்லி பைபாஸை ஒட்டி நும்பல் என்றொரு ஊர். அங்கு பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மிஷினில் கை மாட்டி, கடுமையான அடிபட்டதாய் தகவல் வந்தது.

ஒரு தொழிலாளிக்கு கொஞ்சம் பெரியதாக அடிபட்டால் இ.எஸ்.ஐ. அலுவலகத்திற்கு இருபத்தி நாலு மணி நேரத்திற்குள் காய விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவருக்கு சேர வேண்டிய சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதற்குரிய விண்ணப்பத்தை எடுத்து கொண்டு தொழிற்சாலைக்கு சென்றேன். அடிபட்ட தொழிலாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர். அடிபட்டவர் ஒரு வட மாநில தொழிலாளி. அவரைப் பற்றிய அடிப்படை தகவல்களை பெற்றுக்கொண்டு, தொழிற்சாலையில் வேலை செய்யும் பொழுது தான் அடிபட்டதாக உடன் பணிபுரிந்த இரு தொழிலாளர்கள் சாட்சி கையெழுத்திடவேண்டும். அதற்காக இரண்டு தொழிலாளர்களை வரச் சொன்னேன். வந்தவர்களை கையெழுத்திட சொன்னால்... ஒரு தொழிலாளிக்கு இரண்டு விரல்கள் இல்லை. இன்னொரு தொழிலாளிக்கு ஐந்து விரல்களுமே இல்லை. அதிர்ச்சியாய் இருந்தது. இருவருக்கும் வயது 25ஐ தாண்டாது. ஒரு தொழிலாளிக்கு உழைப்புக்கு அடிப்படையானது கைகள் தானே! கைகளே போய்விட்டால்...இனி வாழும் காலத்தில் இவர்கள் என்ன வேலை செய்து வாழ்க்கையை தொடர்வார்கள். விசாரித்ததில் இரு விபத்துகளுமே 8 மாத இடைவெளியில் நடைபெற்றவை தான் என்றார்கள்.

இப்படி கடுமையாக அடிபடுவதால் தான், இந்த நிறுவன முதலாளி ரிஸ்கிலிருந்து தப்பிக்க அங்கு வேலை செய்கிற அனைவருக்கும் இ.எஸ்.ஐ. கட்டி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் பெரும்பான்மை தொழிலாளர்கள் வட மாநில தொழிலாளர்கள் தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் கணிசமானவர்களாகிவிட்டார்கள். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் பீகார், ஒரிசா, உத்திர பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.

இப்படி விரல்கள், கை, கண் போய் வேலை இந்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளமான குறைந்தபட்ச ஊதியம் ரூ. 4000/- கூட முதலாளிகள் தருவதில்லை. முதலில் அவர்களுக்கு என்ன வயது என்றாலும்... ரூ. 2500 தான். பிறகு ஒரு வருடம் கழித்து ரூ. 3000/- அல்லது ரூ. 3500/- என இரக்கப்பட்டு உயர்த்துகிறார்கள். இதில் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எந்த முதலாளியும் இ.எஸ்.ஐ.(மருத்துவ வசதி), வருங்கால வைப்பு நிதி (பி.எப்) கட்டுவதில்லை.

முதலாளிகள் தரப்பில் சொல்லும் சொத்தையான காரணம். "யாரும் சில மாதங்கள், சில நாட்கள் கூட வேலையில் தொடர்வதில்லை. அவர்களே இ.எஸ்.ஐ., பி.எப். வேண்டாம் என்கிறார்கள்" என சொல்கிறார்கள்.

இதில் பாதி பொய்; பாதி மெய். அவர்களின் கடுமையான உழைப்புக்கு கொடுக்கும் சம்பளம் சொற்ப சம்பளம். அதில் இ.எஸ்.ஐ,(1.75%) பி.எப்.(12%) என பிடித்தம் செய்தால் அவர்களின் வாழ்க்கை தேவைக்கு என்ன மிஞ்சும்? அதனால் வேண்டாம் என்கிறார்கள். மேலும், குறைந்த சம்பளம் என்பதாலேயே ரூ. 500/- சம்பளம் அதிகமாக வேறு யாராவது கொடுத்தால், எளிதாய் நகர்ந்தும் விடுகிறார்கள்.

அப்படியே பல தொழிலாளிகள் வருடக்கணக்கில் வேலை பார்த்தாலும், அவர்களே விரும்பி கேட்டாலும் முதலாளிகள் இ.எஸ்.ஐ, பி.எப். கட்ட முன்வருவதில்லை. லாப விகிதம் குறைந்துவிடும் என மிக கவலைப்படுகிறார்கள்.

மேலும், இ.எஸ்.ஐ. பி.எப். விதி என்ன சொல்கிறது என்றால்...ஒரு தொழிலாளி ஒரு நாள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலே அவர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். கட்ட வேண்டும் என்று தான்.

இவர்களின் சிப்டு நேரம் என்பது 8 மணி நேரம் கிடையாது. குறைந்தபட்ச வேலை நேரம் 10 மணி நேரம் அல்லது 12 மணி நேரம். அதற்கும் மேலாக உழைத்தால் தான் ஊரில் உள்ள தன் குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியும் என ஓவர் டைம் செய்கிறார்கள். ஆக 14 மணிநேரம், 16 மணி நேர உழைப்பு என்பது சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருக்கிறது. காலசக்கரம் மீண்டும் திரும்பி சுற்றுகிறது.

இப்படி கடுமையாக உழைக்கும் இந்த தொழிலாளர்களை நடத்தும் விதம் இருக்கிறதே! கொடுமை. ஐம்பது வயது தொழிலாளி என்றாலும் வா! போ! என ஒருமையில் அழைப்பது , சகட்டுமேனிக்கு திட்டுவது என மிக மோசமாக நடத்துகிறார்கள்.

பல மாநிலங்கள் கடந்து வருவதால்.. பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களை உடன் அழைத்து வருவதில்லை 20 வயதிலேயே பெரும்பான்மையான வட மாநில தொழிலாளிகளுக்கு திருமணம் முடிந்திருக்கிறது. இவர்களுக்கு முதலாளிகள் தான் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தருகிறார்கள். ஒரு குடவுன் போல உள்ள அறையை 8க்கு 8 அடி என மறைப்பு கொடுத்து... ஒரு அறையில் 6 பேர் என தங்க வைக்கிறார்கள். அந்த அறையில் சுத்தமுமில்லை: சுகாதாரமுமில்லை.

அடிப்படை சம்பளம் இல்லை, 8 மணி நேரம் உழைப்பு என்கிற அடிப்படை உரிமைகள் இல்லை; சுகாதாரமான தங்குமிடம் இல்லை: மோசமாக நடத்துவது - கொத்தடிமை முறைக்கும், இந்த தொழிலாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இப்படி லட்சகணக்கான வட மாநில தொழிலாளர்களின் மோசமான நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியாமலா இருக்கப் போகிறது. நிச்சயம் தெரியும். இவர்களை முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக... கண்டும் காணாமல் இருக்கின்றன.

தொழிற்சாலைகளை கண்காணிக்கிற இ.எஸ். ஐ., (ESIC), பி.எப்.,(P.F) தொழிற்சாலை (Inspector of Factories) ஆய்வாளர்கள் எல்லாம்.. முதலாளிகள் எவ்வளவுக்கெவ்வளவு தப்பு செய்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு லஞ்சத்தை அன்பாகவோ அல்லது மிரட்டியோ வாங்கி கொண்டு சென்று விடுகிறார்கள். அபூர்வமாய் (அபூர்வம் தான்) லஞ்சம் வாங்காமல் யாரேனும் அதிகாரி வந்தால்... அவர்களிடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை காண்பிக்காமல் இழுத்தடித்து விடுகிறார்கள்.

கல்வியறிவு, விழிப்புணர்வு, மொழி, அடிக்கடி இடம் மாறுவது என பல சிக்கல்களினால்.. வட மாநில தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அரசியல் படுத்தி தொழிற்சங்கம் கட்டுவது தொழிற்சங்கங்களுக்கு சிரமமானதாக இருக்கிறது. இருப்பினும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களிலும், சம காலத்திலும் இவர்களை ஒன்று திரட்டி, சங்கம் கட்டி, போராட வைத்து வெற்றிகரமாக உரிமைகளை வெல்ல வைத்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் இவர்களின் துயரை துடைக்கும் என்பது கானல் நீர் தான். கடந்த 10 ஆண்டுகளில் நம் விவசாயிகள் லட்சகணக்கானக்கில் (தற்) கொலையால் சாகும் பொழுது கூட கண்டு கொள்ளாத அரசு, இவர்களின் துயரத்தையா துடைக்கப்போகிறது.

தன் துயரங்களை தீர்ப்பதற்கு போராட்டத்தை தவிர வேறு குறுக்கு வழிகள் ஏதுமில்லை!

தொடர்புடைய சுட்டிகள் :



7 பின்னூட்டங்கள்:

குருத்து said...

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=64921&Print=1

கடந்த ஆகஸ்டு மாதம் ஈரோட்டில் ஒரு ஆக்வி என்றொரு பின்னிங் மில்லிருந்து 48 வட மாநில தொழிலாளர்களை மீட்டது. அதில் 30 பேர் பீகாரை சேர்ந்தவர்கள், 17 பேர் அஸ்ஸாமை சேர்ந்தவர்கள் , மீதி மற்ற மாநிலத்தவர்கள். 8 மணி நேர வேலைக்கு ரு. 100 சம்பளம், ஊருக்கு போகிறோம் என்றவர்களை நிர்வாகம் ஆள் வைத்து மிரட்டி அடித்து இருக்கிறது. பீகாரில் உள்ள கலெக்டரை தொடர்பு கொண்டு தெரிவித்து... அங்கிருந்து இங்கு தெரிவித்து... பிறகு மீட்டிருக்கிறார்கள். மேலே உள்ள இணைப்பு விரிவாக செய்தியை சொல்கிறது.

குருத்து said...

//கட்டிட தொழிலை எடுத்துக்கொண்டால் நமது தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் சுமார் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைவாக பெற்றுக்கொண்டு வேலைபார்க்க ஏராளமான பேர் சென்னை வந்துள்ளனர்.

இவ்வாறு வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆகாத இளைஞர்கள் மற்றும் திருமணம் ஆகி குடும்பத்தை ஊரில் வைத்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு வந்துள்ளவர்கள். சென்னை நகரம் முழுவதும் இப்போது கட்டிட வேலை செய்பவர்கள் யார் என்று பார்த்தால் வட மாநிலம், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம். சென்னையில் புதிய தலைமைச்செயலகம் மற்றும் மேம்பாலங்கள் கட்டும் பணிகளில் அதிக வடமாநில இளைஞர்களை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு பணிகொடுக்கும் காண்டிராக்டர்களிடம் கேட்டால் இவர்கள் எல்லாம் கடின உழைப்பாளிகள் என்றும் குறைவான சம்பளத்தில் நிறைவாக வேலை செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

நமது கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை தினசரி கூலி கொடுக்கவேண்டும் என்றால், வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக ரூ.150 முதல் ரூ.200 கொடுத்தால் போதும் என்று கட்டிட காண்டிராக்டர் ஒருவர் கூறினார்.

எந்த கடையில் எந்த பொருள் வாங்க போனாலும் மொழி தெரியாத எங்களிடம் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று நினைக்காமல் மிகவும் அன்போடு பேசுகிறார்கள். இங்கு திருட்டு பயமோ வன்முறைக்கோ இடம் இல்லை. மற்ற மாநிலங்களை விட நல்ல ஊதியமும் குறைவான செலவும் ஆகிறது. கொஞ்சநாள் வேலைபார்த்துவிட்டு நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது கணிசமான சேமித்துவிட்டு போகமுடிகிறது. ஊருக்கு போகும்போது நல்ல வருமானத்தை கொண்டுசெல்வதால் ஒவ்வொரு முறையும் நாங்கள் திரும்பி சென்னை வரும்போது எங்கள் ஒவ்வொருவரிடமும் குறைந்தது 2 பேராவது வேலைதேடி சென்னை வருகிறார்கள் என்று கூறினார்.

அதேபோல ஓட்டல்களில் சர்வர் வேலை, வரவேற்பாளர் வேலை, சுத்தம் செய்யும் வேலை போன்ற பணிகளில் வேலை பார்க்க ஏராளமாக பெண்கள் சென்னை வந்துள்ளனர். சென்னை நகரில் பல பெரிய ஓட்டல்களில் வரவேற்பாளராக வட மாநில பெண்கள் உபசரிப்பதை பார்க்க முடிகிறது. இவர்களிடம் வடமாநில இளைஞர்கள் போல குறைந்த சம்பளத்தில் அதிகவேலையை பெறமுடியும் என்பதால் இவர்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது.//

இண்டஸ்டிரிஸ் தவிர பிற துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் குறைந்த கூலியில் வேலை செய்வதை மேற்படி செய்தி விவரிக்கிறது.

குருத்து said...

//கட்டுமான நிறுவனங்கள் பல, வடமாநிலத்தில் இருந்து ஆட்களை வரவழைத்து பணியை செய்து வருகின்றன. பீகார் போன்ற மாநிலங்களை சார்ந்தவர்களை கட்டுமான பணி நடக்கும் இடங்களில் தங்க வைத்து வேலை பெறுகின்றனர்.

இந்த தொழிலாளர்கள், வேலை நடக்கும் இடத்திலேயே தங்குவதால் பணி செய்யும் நேரமும் அதிகமாக உள்ளது.//

சில வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்த பொழுது... ஆந்திர தொழிலாளர்கள் தான் கட்டுமான வேலையில் அதிகம் பேர் காணப்படுவார்கள். மேஸ்திரிகளும் ஆந்திராகாரர்களாக தான் சென்னையில் பார்த்திருக்கிறேன். இப்பொழுது, வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சட்டமன்ற பணி வேலைகளில் கூட வட மாநில தொழிலாளர்களை வைத்து, இரவும் பகலும் வேலை வாங்கிய செய்தி தான் ஊரறிந்த விசயம் தானே!

குருத்து said...

//கோவை இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்களில் பிட் டர், டர்னர், வெல்டர் என பல் வேறு பிரிவுகள் உள்ளன. பவுண்டரிகளில் திறமையாகவும், வேகமாகவும் வேலை செய்வோர் தேவை. உருகிய இரும்பு குழம்பை, வார்ப்படத் தில் வார்த்தெடுக்க வேண்டும். இந்த “ரிஸ்க்’கான வேலையை செய்வோர், சம்பளமும் கூடுதலாக கேட்கின்றனர். பெரும்பாலும் “ரிஸ்க்’கான, வேலைகளை செய்வதில், வட மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் திறமையாக செயல் படுகின்றனர். எனவே, இன்ஜினியரிங் தொழிலில், குறிப்பாக பவுண்டரிகளில் வேலை செய்ய பீகார், ஒரிஸா போன்ற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இன்ஜினியரிங் நிறுவனங்கள் அதிக வாய்ப்பு அளிக்கின்றன.//

கடுமையான வேலை, குறைவான கூலி என்றால்... எல்லா முதலாளிகளுக்கும் மகிழ்ச்சியில் திளைக்கத்தான் செய்கிறார்கள்.

குருத்து said...

//திருப்பூர் அருகே பீகாரை சேர்ந்த பனியன் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு, கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கி÷ஷார் (35). கணக்கம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந் நிலையில், அண்ணா நகர் எதிரே உள்ள சாக்கடை கால்வாயில், கி÷ஷாரின் உடல் கிடந்தது// இந்த செய்தி தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

Anonymous said...

ஒசூர் தொழில்சாலைகளில் வேலை செய்யும் பல தொழிலாளர்கள் ஓய்வின்றி வேலை செய்கிறார்கள். விபத்துக்களில் பலர் விரல்களையும், உடல் அவயங்களையும் இழந்துள்ளனர். இதனை விரல்கள் என்று டாகுமெண்டரி படமாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர் சிபிஎம் கட்சியினர்.

Anonymous said...

அது என்னனு தெரியல வடநாட்டு மக்களுக்கு ஒன்னுனா அதுக்கு குரல் கொடுக்க இங்கு தமிழ்நாட்ல பலபேர் இருக்காங்க, தமிழ்காரணுங்க யாரவது பெங்களுர்ரல, மும்பைல,மலேசியாவுல, இலங்கைல, துபாய்ல இப்படி எங்க துன்பபட்டாலும் அதை பற்றி யாரும் கவலைபடுவதில்லை, இன்னும் சில பேர், யார் இவர்களை அங்கு வேலைக்கு போக சொன்னது, வேலை செய்யர இடத்தில அப்படி இப்படி இருக்கதான் செய்யும். இதுபோன்ற தமிழ்களுக்கு எதிரான குரல்கள்தான் கேட்கபடுகின்றன. இது போன்ற வடநாட்டுவரவால் ஒரு சில முதலாளிகளுக்கு வேண்டுமானால் இலாபம் இருக்கலாம், ஆனால் அவர்களால் தொல்லைகள்தான் அதிகம், எ-டு வாயில் பானை போட்டு மென்று கண்ட கண்ட இடத்தில் தூப்பி கொள்வது, குளிப்பது கிடையாது அப்படியே பேருந்து இருக்கையில் அமர்ந்து அசுத்தம் செய்வது, சத்தமாக பேசுவது, பலவருடம் தமிழ்நாட்டில் இருந்தும் தமிழை சிறிதும் கற்றுகொள்ளாமல் இருப்பது, கேட்டால் தமிழ் கடினமாக இருக்கிறது போன்று பாசாங்கு செய்வது, அவர்களுக்கு தமிழ் தெரியாது அப்படினு ஒத்து ஊத இங்கு சில தமிழர்கள், பாணி புரி விக்கிற இவன்களுக்கு ஓருபடி திமிற் அதிகம்