> குருத்து: சின்ட்ரல்லா - கவிதை!

November 11, 2010

சின்ட்ரல்லா - கவிதை!


உதட்டை மடித்து தூக்கும்
சாந்து சட்டியின் கீழ்
முகத்தில் சரியும் முடிகளை
புறங்கை ஒதுக்கும்பொழுதும்
அவளே! அவளே!
எங்கெங்கும் நிழலாடுகிறாள்.

தூரிகைகளின் தவறுகளால்
வான்காவின் முகம்போல
தனிமை அப்பிக்கிடக்கிறது அவளிடம்!

நிறமில்லா சட்டை
வெளுப்பில் தோய்ந்த
பூப்போட்ட பாவடை - இவையே
சின்ட்ரலாக்களின் அடையாளங்கள்!

எதிர்படும் முகங்கள் எல்லாம்
தாயாய், தங்கையாய்,
கூலியாய்,
சிறுமியாய், வித்தைகாரியாய்
எங்கெங்கும் அணுவாய்
உயிர்த்திருக்கிறாள்!

அவள் எப்பொழுதும் அழுவதில்லை - ஆனால்
அழுவதுண்டு.
அவள் எப்பொழுதும் சிரிப்பதில்லை - ஆனால்
சிரிப்பதுண்டு.

அவளின் வெற்றுப்புன்னகை
துளிக்கண்ணீரை விட கனமானது.
அவளின் கண்ணீரை யாரும்
நுகராதீர்!
மலம் மூடிய சமூகத்தின்
முடைநாற்றம் நெடி அடிக்கும்.
கடைசியில்
அது கண்ணீருக்கல்ல!
உங்கள் பாவங்களின் பின்குறிப்பு.
அவள் புன்னகைக்கு
பொருள் தேடாதீர்!
அதுவும் பூஜ்யங்களை போலத்தான்!

மோனாலிசாக்களுக்கு விடையுண்டு
சின்ட்ரலாக்களுக்கு விடையில்லை.

தூசி பறக்கும் சாலையில்
நடந்து செல்லும் சின்ட்ரலாக்களுக்கு
கவலையும் இல்லை;
கண்ணீரும் இல்லை - எனில்
அவளின் இரவின் பெருமூச்சை யாதென்பீர்?

முன்பொரு நடுநிசியில்
சின்ட்ரல்லா காத்திருந்தாள்
மாய ஷீ-வுக்கும், சாரட் வண்டிக்கும்.

மழைக்கு ஒழுகும் குடிசைக்குள்
சின்ட்ரல்லா காத்திருக்கிறாள்
சில தோட்டாக்களுக்கும்...
துப்பாக்கிக்கும்...

- சுக்ரன்

பின்குறிப்பு : ருசிய புரட்சி தினமான நவம்பர் 7 நினைவுகளில் .. நண்பர் எழுதிய கவிதையை மெயிலில் அனுப்பி வைத்தார். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்...


8 பின்னூட்டங்கள்:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை!

Anonymous said...

Very Painful aruna

குட்டகொழப்பி said...

மவுனமாய்.....உங்கள் வரிகளில் நானும் சேர்ந்து கொள்கிறேன்......

வலையுகம் said...

நண்பர் குருத்து

///எதிர்படும் முகங்கள் எல்லாம்
தாயாய், தங்கையாய்,
கூலியாய்,
சிறுமியாய், வித்தைகாரியாய்
எங்கெங்கும் அணுவாய்
உயிர்த்திருக்கிறாள்!///

கவிதை நன்றாக வந்திருக்கிறது
மேலே உள்ள வரிகள் என்னுள் மிகவும்
வலிகளை ஏற்படுத்திய வரிகள்

ஆமா சின்ட்ரல்லா அப்புடியின்ன என்னதுண்ணே?
உண்மையில் தெரியவில்லை கொஞ்சம் விளக்கவும்

வலையுகம் said...

நண்பர் குருத்து

///எதிர்படும் முகங்கள் எல்லாம்
தாயாய், தங்கையாய்,
கூலியாய்,
சிறுமியாய், வித்தைகாரியாய்
எங்கெங்கும் அணுவாய்
உயிர்த்திருக்கிறாள்!///

கவிதை நன்றாக வந்திருக்கிறது
மேலே உள்ள வரிகள் என்னுள் மிகவும்
வலிகளை ஏற்படுத்திய வரிகள்

ஆமா சின்ட்ரல்லா அப்புடியின்ன என்னதுண்ணே?
உண்மையில் தெரியவில்லை கொஞ்சம் விளக்கவும்

குருத்து said...

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட குணசீலன், அனானி, குட்டகொழப்பி, ஹைதர் அலி அவர்களுக்கும் நன்றிகள். சின்ட்ரல்லா கதை நமது துணைப் பாடபுத்தகத்தில் படித்திருக்கிறேன். ஹைதர் அலி அவர்களுக்கு, அந்த கதையின் சாரம் தான் என் நினைவில் இருக்கிறது. விரிவாக இரண்டொரு நாளில் கூறுகிறேன். நன்றி.

குருத்து said...

சின்ட்ரல்லா கதையை சொல்ல முடியுமா என ஹைதர் அலி கேட்டிருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. நினைவில் இருப்பது கொஞ்சம். இணையத்தில் தேடியதில் தமிழில் கிடைக்கவில்லை. தாமதமாவதால்.. நினைவில் இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு வசதியான குடும்பம். முதல் குழந்தை சின்ட்ரல்லா. பாராட்டி சீராட்டி வளர்க்கப்படுகிறார். சின்ட்ரல்லா தாய் இறந்துவிட, சித்தி வருகிறாள். சித்திக்கு ஒரு குழந்தை பிறக்க, சின்ட்ரல்லாவை கொடுமைப்படுத்துகிறாள். வீட்டில் எல்லா வேலைகளையும் அவளையே செய்ய வைக்கிறாள். அழுக்குத்துணி, நல்ல சாப்பாடு இல்லை. இப்படி துயரமாய் தொடர்கிறது அவளது வாழ்க்கை.

ஒருமுறை ஒரு விழாவிற்கு, சித்தி தன் பெண்ணுடன் செல்ல...சின்ட்ரல்லா தன் நிலை வருந்தி அழ, ஒரு தேவதை.. சின்ட்ரல்லாவுக்கு ஒரு அழகான நல்ல உடைகளூம், மாய ஷீவும், சாராட்டும் பரிசாக தருகிறது. சித்திக்கு தெரியாமலே, அந்த விழாவிற்கு சின்ட்ரல்லா செல்ல.. அங்கு ஒரு இளவரசனுக்கு சின்ட்ரல்லாவை பிடித்துபோகிறது. சித்தி வீடு வந்து சேருவதற்குள், வீடு வந்து சேர வேண்டிய அவசரத்தில், ஒரு ஷூவை விழாவில் விட்டுவிட்டு வந்துவிடுகிறாள். பிறகு, இளவரசன் சின் ட்ரல்லாவை தேட...அந்த ஷூவை வைத்து தேட...சின்ட்ரல்லாவை கண்டடைகிறான். சின்ட்ரல்லாவின் வாழ்க்கை பயணம் இனிதே துவங்குகிறது.

வலையுகம் said...

நானும் எட்டாப்பு வரை படித்தேன் ஆனா பருங்க இந்த கதையை படிக்கவில்லை
இப்போது தெரிந்து கொண்டேன்
நண்பர் குறுத்து அவர்களுக்கு நன்றி