முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் கூடங்குளம் சென்ற அன்றையதினம் இந்து ஆங்கில நாளிதழ் அவருடைய மிகப்பெரும் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. Nuclear power is our gateway to a prosperous future என்ற அந்தக் கட்டுரை இந்தியாவுக்கு அணுசக்தி அவசியம் தேவை என தனது வாதங்களை மிக ஆணித்தனமாக எடுத்துரைத்தது. அக்னிச் சிறகுகளைப் படித்த அதே வேகத்தோடுதான் படித்தேன். இரண்டு முறை படித்தேன். கட்டுரையின் உள்ளடக்கத்தையும் அதன் நோக்கத்தையும் உடனே புரிந்துகொண்டேன். தக்க சமயத்தில் மத்திய அரசுக்கு கலாம் உதவியிருக்கிறார் என்பதை மறுநாள் கட்டுரைக்கு கிடைத்த வாசகர்கள் வரவேற்பைக் கொண்டு அறிந்துகொண்டேன். அணு உலை ஆதரவாளர்களுக்கு மிகப்பெரும் உதவியைக் கலாம் செய்திருக்கிறார். ஆனால் கலாமின் கட்டுரையை மறுத்து பேச ஏராளம் உள்ளது.
ஒவ்வொரு அணுவினுள்ளும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சக்தி உள்ளது. கரிம எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களின் சக்தியைவிட அணுவின்சக்தி பலலட்சம் மடங்கு அதிகம். ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு 50 சரக்குப்பெட்டிகளில் ஏற்றப்பட்டுள்ள 10000 டன் நிலக்கரி தரும் சக்தியை 500 கிலோ யுரேனியம் தாது தரும். இன்னமும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால், 62. 5 கிலோ தோரியத்திலிருந்து இந்த சக்தியை எடுத்துவிடலாம் என்ற பாலபாடத்திலிருந்து ஆரம்பிக்கும் டாக்டர் கலாம், இன்றைய நவீன யுகத்தின் பல தேவைகளுக்கு சக்தி எப்படி அவசியமானது என்பதை விவரிக்கிறார். வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக சக்தி அவசியம் எனக் குறிப்பிடும் கலாம், சராசரி அமெரிக்கன் சராசரி இந்தியனைவிட 15 மடங்கு அதிகமாக சக்தியை செலவிடுவதாக ஒரு புள்ளி விபரத்தையும் சுட்டிக்காட்டுகிறார். (அப்படி அதிக சக்தியைச் செலவழித்து, தினவெடுத்துப்போய் தன்னை சோதனை என்ற பெயரில் அவமதிக்கும் அமெரிக்க தேசத்தை போனால் போகட்டும் என விட்டுவிடக்கூடிய மாபெரும் சக்தி கலாமுக்கு மட்டுமே உண்டு.)
இன்றைய நவீன உலகமய யுகத்தில் இந்தியாவின் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. நம் கட்டுமானத் துறையையும், 75 கோடி மக்கள் வசிக்கிற 6 லட்சம் கிராமங்களையும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் மிகு சக்திகளாக மாற்றுவதே இந்தப் பத்தாண்டுகளின் குறிக்கோள் என கலாம் கூறுகிறார். அதற்கு அணுமின்சாரம் எப்படி உதவும் என அவர் கூறவில்லை. நாடு சுதந்திரமடைந்ததிலிருந்தே கிராமப்புறங்களும் அதன் வாழ்வும் நமது ஆட்சியாளர்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. நாட்டின் எல்லாப் பகுதிகளும், எல்லா மாநிலங்களும் சீரான வளர்ச்சியைப் பெறவைக்க மத்திய அரசிடம் திட்டங்கள் இல்லை. மஹாராஷ்டிரா மாநிலத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். உலகத் தரத்திலான கட்டுமானங்களும், வாழ்க்கையும் மும்பையில் குவிந்து கிடக்க, மாநிலத்தின் மற்றொரு பகுதியான விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலைகள் சில லட்சங்களைத் தொட்டுவிட்டன.
நாடு முழுவதும் நகர்ப்புறங்கள் வீக்கமடைந்து கிராமப்புறங்கள் சூம்பிப்போக விடப்படுகின்றன. கிராமப்புற மக்கள் விவசாயத்தைக் கைவிட்டு சாரை சாரையாக நகர்ப்புறங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் குடிபெயர ஆரம்பித்துவிட்டனர். நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கைகளை கலாம் படிக்காமல் இருந்திருக்கமாட்டார். ஆட்சியாளர்கள் கூறும் 9, 10 சத வளர்ச்சி என்பது மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில கோடி பேருக்கு மட்டுமே என்பதும், டாட்டா-அம்பானிகளின் வளர்ச்சி 100 சதவீதத்தைத் தாண்டும் என்பதும், கிராமப்புற ஏழை மக்களின் வளர்ச்சி மைனஸில்தான் என்பதையும் கலாம் நிச்சயம் அறிந்திருப்பார். இந்தியா உலகமயத்தின் பிடியில் சிக்கியபிறகு இத்தகைய வளர்ச்சிதான் சாத்தியமாகியிருக்கிறது என்பதை கலாம் நிச்சயம் உணர்ந்திருப்பார். உலகம் முழுவதும் நிதிமூலதனங்கள் பற்றியும், அதன் ஆன்லைன் சூதாட்டங்களையும் கலாம் அறிந்திருப்பார். கிராமப்பொருளாதாரத்தைச் சீரழித்துப் போட்டிருக்கிற உலகமயக் கொள்கைகளை நீக்கினால் மட்டும்தான் கிராமப்பொருளாதாரம் மேம்பாடடையும். கிராமப்புற மக்களை கிராமங்களிலிருந்து வெளியேற்றாத, அவர்களின் பொருளாதாரத்திற்கு நீடித்த வளர்ச்சியை அளிக்கக்கூடிய திட்டங்கள்தான் தேவை. அதற்கு மின்சாரம் தேவை என்பது நூறில் ஒரு கூறுதான். ஏனெனில் இதைச் செயல்படுத்த ஆட்சியாளர்களின் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவேண்டும். அதனால்தான் அணுமின்சாரத்தோடு கிராமப்புற வளர்ச்சியை கலாம் ஒப்பிடும்போது அவ்வளர்ச்சி(!) கிராமப்புறங்களை மேலும் மேலும் சின்னாபின்னமாக்கிவிடுமோ என அஞ்சவே தோன்றுகிறது.
கலாமின் புரா(PURA)திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு வழங்குதல் என்பது இதன் உள்ளடக்கம். நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து கிராமப்புறங்களில் சிறந்த தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை தொலைத்தொடர்பு நிறுவனமும்(தற்போது BSNL), கிராமப்புறங்களின் பட்டி தொட்டியெங்கும் மின்வசதிகளை மாநில மின்சாரவாரியங்களும் செய்துகொடுத்துள்ளன. ஆனால் இன்றைய நவீன உலகமய யுகத்தில் இந்நிறுவனங்கள் திவாலாகட்டுமாறு மத்திய, மாநில அரசுகளால் கைவிடப்படுகின்றன. கலாம் முதலில் இதைத் தடுத்து நிறுத்தவேன்டும்.
நம்முடைய பொருளாதாரத்தின் பலத்தைப்பற்றி கலாம் பேசுகிறார். 2008-ல் 1 ட்ரில்லியன் டாலர்(1 ட்ரில்லியன்=1000 பில்லியன், 1 பில்லியன்=100 கோடி)என்ற இலக்கத்தை நம் பொருளாதாரம் அடைந்துவிட்டது. சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கழிந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2016-க்குள்ளாக இது 2 ட்ரில்லியன் டாலர் என்ற அளவையும், 2025 வாக்கில் 4 ட்ரில்லியன் டாலர் என்ற அளவையும் இந்தியப்பொருளாதாரம் தொடும் எனவும் கலாம் கூறுகிறார். இத்தகைய மிகப்பெரும் வளர்ச்சியை எட்ட மிகப்பெரும் மின்சக்தி தேவை. தற்போதைய மின்தேவையான 1, 50, 000 மெகாவாட்டிலிருந்து, 2030 வாக்கில் 9, 50, 000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என கலாம் கூறுகிறார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்தப் பேச்சுவார்த்தைகளின்போதும், ஒப்பந்தத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கருத்துத் திரட்டல்களை எதிர்கொள்ளவும் எதிர்கால மின் உற்பத்தியில் அணுமின்சாரத்தின் பங்கு குறித்த மிகையான புள்ளி விபரங்களை அரசும், அதிகாரிகளும், அணுமின் விஞ்ஞானிகளும் இட்டுக்கட்டியதைப் பற்றி நாம் அறிவோம். ஹோமி ஜஹாங்கீர் பாபா அடியெடுத்து வைத்து பரப்பிய அணுமின்சக்தி பற்றிய புனைவுகள் இன்றைக்கு அப்துல்கலாம் வரைக்கும் முழுவீச்சுடன் நாடுமுழுவதும் செறிவாய் பரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முழுங்கியுள்ள நமது அணுசக்தித்துறை இன்றுவரை 4385 மெகாவாட்டுகளை
மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது என்பதை அறியும்போது, நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் இது வெறும் 2. 85 சதவிகிதம் மட்டுமே என உணரும்போது, கலாம் எடுத்துரைத்த இந்த ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் இன்றைக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள(ஒரு நாளைக்கு 32 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத)பல கோடி மக்களின் வாழ்வை மேம்படுத்தாமல் எதை நோக்கி திசை திருப்பப்படுகிறது என்பதை என்ணி வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.
40 வருடப் பழமையான புகுஷிமா அணு உலை விபத்து, பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக மாற நாம் காணும் கனவைத் தடம்புரள அனுமதிக்க வேண்டுமா? என கலாம் கேட்கிறார். பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக மாறுவது மட்டும்தான் கலாமின் லட்சியமாக இருக்கிறது. அப்போதுதான் அணுசக்தித்துறைக்கு பல்லாயிரம் கோடிகளையும், இந்தியன் சந்திரனில் இறங்குவதற்கு பல்லாயிரம் கோடிகளையும், அக்னி-9, 10, 11 என தொடர்ச்சியாக உற்பத்தி செய்ய பல்லாயிரம் கோடிகளையும் நாம் செலவிடமுடியும்!அன்பில் வளர்ந்த நாடாக, அமைதியில் வளர்ந்த நாடாக இந்தியா அமைந்திட அவர் விரும்பவில்லை. அப்படி விரும்பியிருந்தால் 1998 அணுவெடிப்புச் சோதனையில் முன்னணி தளபதியாக அவர் நின்றிருக்கமாட்டார். நமக்கும் பாகிஸ்தானுக்கும், நமக்கும் சீனாவுக்கும் ஆயுதப்போட்டியை பலநூறு மடங்கு பெருக்கிய பலவித ஏவுகணைகளை அவர் உருவாக்கியிருக்கமாட்டார். கலாம் உருவாக்கவில்லையென்றால் இந்தியா ஏவுகணைகளை உருவாக்கியிருக்காது அல்லது வாங்கியிருக்காது என்று அர்த்தமல்ல. ஏவுகணைகளை, பேரழிவு ஆயுதங்களை, அணுவெடிப்புகளை ஒரு நல்ல செய்தியாக குழந்தைகள்வரை கொண்டுசென்றதுதான் அவர் புரிந்த மிகப்பெரும் தவறு.
'ஜெர்மனி அணு உலைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளதை முன்வைத்து நாமும் அணுமின் உணு உலைகள் வேண்டாம் என்று கூறுவது தவறு. சில அணுமின் உலைகளை இழப்பதனால் அதன் மின் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும் யுரேனியத்தின் வளம் ஜெர்மனியில் அருகிப்போய்விட்டதால் தனது எதிர்கால அணுமின் உற்பத்திக்கு வேற்று நாடுகளைச் சார்ந்திருக்க அது விரும்பவில்லை'என கலாம் கூறுகிறார். 2007ல் ஜப்பானில் காஷிவசகி அணுமின் உலை பூகம்பத்தால் சேதமடைந்து 317 கேலன் கதிரியக்கம் கலந்த தண்ணீர் கடலுக்கு திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்தும், அதே ஆண்டு ஜெர்மனியில் இரண்டு அணு உலைகளில் ஏற்பட்ட விபத்தையடுத்தும்தான் ஜெர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சர் நாட்டின் பழமையான அணு உலைகளை மூடிவிடவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். எனவே யுரேனிய வளம் தங்களிடம் இல்லை என்பதைக்காட்டிலும் அணு உலைகள் தவறானவை என்ற அவர்களது புரிதலே ஜெர்மனியின் முடிவுக்குக் காரணம். கலாம் கூறுவதுபோல யுரேனியம் தாதுப் பற்றாக்குறைதான் காரணம் என வைத்துக்கொள்ளுவோம். அப்படியானால் யுரேனியத்தின் தேவைக்கு இந்தியா மட்டும் ஒவ்வொரு நாட்டிடமும் கையேந்தி நிற்கவேண்டுமா?இந்தக் கையேந்தல் இறுதியில் அமெரிக்காவிடம் மண்டியிடுவதில் போய் முடியும் என்பதை கலாம் அறியவில்லையா?
வளர்ந்த நாடுகள் அணுமின்சாரத்தை மிகையாக உற்பத்தி செய்யவல்லவையாக இருப்பதை கலாம் புள்ளி விபரங்களோடு பட்டியலிடுகிறார். அணுமின்சாரத்தை அதிகம் உற்பத்தி செய்வதால்தான் அவை வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் கலாம், வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகள் வளர்ந்த நிலையை அடைய விரும்பவில்லை என்றும், அதனால்தான் அணுமின்சாரம் உற்பத்தி செய்வதற்கு எதிரான நிலையை அந்நாடுகள் எடுக்கின்றன என்றும் கலாம் கூறுகிறார். இந்தியா அணுமின்சாரம் உற்பத்தி செய்வதை எந்த மேலைநாடும் எதிர்த்தது கிடையாது. சொல்லப்போனால் கலாம் பட்டியலிட்டிருக்கிற அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கென்யா, உக்ரைன், கனடா, இங்கிலாந்து என கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே இந்தியா அணுமின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும், அதற்கு தங்கள் நாடுகளின் அணு உலைகள் அல்லது யுரேனியம் விற்பனை செய்யப்படவேண்டும் என்பதையே விரும்புகின்றன. இந்நாடுகளுடன் இந்தியா தனித்தனியே அணுசக்தி ஒப்பந்தத்தையும் செய்துகொண்டுள்ளது. எல்லா நாடுகளிலும் அணுமின்சக்திக்கு எதிரான இயக்கங்கள் மட்டும்தான் தீவிரமாகப் போராடிவருகின்றன. 'இந்தியாவின் தேவைக்கு என்ன வேண்டுமோ அதை இந்தியர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்' என்ற கலாமின் கூற்றைத்தான் பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டும். நம் நாட்டிற்கு எது தேவை என்பதை இந்திய அதிகாரவர்க்கம் தீர்மானிக்கக்கூடாது. இந்தியமக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். அதன்படி மான்சான்டோவும், வால்மார்ட்டும், டவ் கெமிக்கலும் இந்தியாவில் நுழைய அனுமதிக்கமுடியாது. அணுமின் உலைகள் பற்றிய உண்மையான விபரங்களை பொதுமக்கள் முன்பு வைக்கும்போது அணுமின் உலைகளையும் இந்தியமக்கள் நிராகரிப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
மிகத்தூய்மையான மின்சக்தி காற்றிலிருந்தும், சூரியனிலிருந்தும்தான் பெறப்படுகின்றன என ஒப்புக்கொள்ளும் கலாம், அதன் பேரளவு உற்பத்தி குறித்து சந்தேகம் தெரிவிக்கிறார். உலகெங்கிலும் 29 நாடுகளில் 441 அணுமின் உலைகள் தயாரிக்கும் 375000 மெகாவாட் மின்சாரம்தான் நம்பத்தகுந்த மூலம் என கலாம் தெரிவிக்கிறார். சூரிய மின்சக்தி, காற்றுமின் சக்தி குறித்த தொழில்நுட்ப ஆய்வுகளை பரந்த அளவுக்கு செயல்படுத்தி, அணுசக்தித் துறைக்கு செலவழிக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இத்துறைகளுக்கு செலவழித்தால், சூரிய, காற்று மின் உற்பத்தி பன்மடங்கு உயரும் என்பது கலாமுக்குத் தெரியாததல்ல.
அணுமின் உற்பத்தி குறித்த, அணு உலைகள் பற்றிய மக்களின் பயங்கள் குறித்து கலாம் கேலி பேசுகிறார் என்று கூட சொல்லலாம். பெரும்பாலான அணு உலை எதிர்ப்பு அமெரிக்கா ஜப்பானில் வீசிய அணுகுண்டுகளிலிருந்து கிளர்ந்தெழும்பிய காளான் மேகங்கள் பற்றிய புகைப்படங்களைப் பார்த்து எழுந்த பயம்தான் என்பது கலாமின் கூற்று. அனகொண்டாவைப் பார்த்து மட்டும் பயப்படுங்கள், நம்முர் நல்லபாம்புகளைக் கண்டு ஏன் பயம்? என்று கலாம் நேரடியாக சொல்லிவிட்டுப் போகலாம். கடந்த நூற்றாண்டின், ஏன் இதுவரை மனிதகுல வரலாற்றிலேயே மிகக்கொடுமையான கண்டுபிடிப்பாக அணுப்பிளப்பை சொல்லலாம். 375000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறதே என்று பார்க்காமல், பல லட்சக்கணக்கான சமாதிகளை அணு உருவாக்கியுள்ளது. இன்னமும் உருவாக்கும் என்று ஒப்பிடும்போதுதான் மனிதகுலத்தின் வலி என்னவென்பதைப் புரிந்துகொள்ளமுடியும். "அணுகுண்டு என்றால் என்ன?அணு உலை என்றால் என்ன?இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள்!அணுகுண்டு என்பது மிகப்பெரும் வெப்பத்தை, கதிர்வீச்சை வெளியிடும் சக்தி கொண்ட பொருள். அணு உலை என்பது மிதமான வெப்பத்தை வெளிப்படுத்தி, அதன் பயனை மின்சாரம் தயாரிக்க உதவும் அமைப்பு. அணுமின் உலைகளில் ஏற்படும் விபத்து என்பது சுற்றுவட்டாரத்தில் சேதத்தை ஏற்படுத்தவல்லது. அணுகுண்டை போன்று நேரடியான உயிர்ப்பலிகள் எதுவும் ஏற்படுவதில்லை. செர்னோபிள் விபத்தையொட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 4000 பேர். நேரடியாக விபத்தில் இறந்தவர்கள் 57 பேர்". கலாமின் இந்த போதனைகளும், தவறானப் புள்ளிவிபரங்களும் அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கைகளை அசைத்துப்பார்க்கிறது.
செர்னோபிள் விபத்தையடுத்து ஏற்பட்ட உயிர்ப்பலிகள் பற்றி அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன தெரியுமா?"அங்கு பணிபுரிந்த 28 பணியாளர்கள் மற்றும் 15 பொதுமக்கள் மொத்தம் 43 பேர் மட்டுமே". ஆனால் உண்மை நிலவரம் என்ன?நியூயார்க் அறிவியல் கழகம் 2009-ல் Chernobyl : consequences of the catastrophe for people and environment என்ற 327 பக்க அறிக்கையை வெளியிட்டது. அது என்ன சொல்கிறது தெரியுமா? 'செர்னோபிள் விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்யப் பகுதிகளில் 1990 முதல் 2004 வரை நடந்துள்ள இறப்புகளில் 4 சதவிகிதம் செர்னோபிள் விபத்தால் நேரிட்டவை'. இப்புள்ளி விபரத்தின் படி லட்சக்கணக்கான மக்கள் செர்னோபிள் விபத்து ஏற்படுத்திய கொடும் நோய்கள் கண்டு இறந்திருக்கிறார்கள்.
செர்னோபிளோடு ஒப்பிடும்போது புகுஷிமா ஒன்றுமே இல்லை என்ற கலாமின் கூற்றும் பிரச்சினையை திசை திருப்பும் ஒன்றாகும். ஹில்லாரி கிளின்டனின் ஆலோசகராக விளங்கும் அணு விஞ்ஞானி ராபர்ட் ஆல்வாரேஸ் எழுதுகிறார்:"புகுஷிமா 4ம் அணு உலையில் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பக்கிடங்கு ஒன்றில் இருக்கும் சீசியம் 137-ன் அளவானது, இதுவரை பூமியின் வடபகுதியில் நிகழ்த்தப்பட்ட எல்லா வளிமண்டல அணு வெடிப்பு சோதனைகளின்போது வெளிப்பட்ட சீசியம்-137 அளவைவிட அதிகம். இந்தக் கிடங்கில் மட்டும் வெடிப்பு ஏற்பட்டால், செர்னோபிளைப் போல 3 முதல் 9 மடங்கு வரை கதிரியக்கப்பொருட்கள் வெளிப்பட்டு சேதத்தை ஏற்படுத்தும்".
In Fukushima's Wake என்றக் கட்டுரையில் அலெக்ஸாண்டர் காக்பர்ன் பின்வருமாறு எழுதுகிறார்: "அமெரிக்கா மொத்தம் 104 அணு உலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் பலவும் ரொம்பவும் பழமையானவை. இவற்றுள் 24 அணு உலைகள் புகுஷிமாவைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டவை. வடக்கு கரோலினாவிலுள்ள ஸரோன் ஹாரிஸ் அணுமின் நிலையத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு வேறு இரண்டு அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கமோ, சுனாமியோ வேண்டாம். ஒரு அறிவார்ந்த பயங்கரவாதி இம்மின்நிலையத்தின் தடுப்புகளை ஊடுருவி உலையின் குளிர்விக்கும் கருவிகளை சேதப்படுத்தி விடுவதாக வைத்துக்கொள்வோம். அதன்பிறகு அங்கு ஏற்படும் ஒரு தீவிபத்தானது 140000 புற்று நோயாளிகளை உருவாக்கும். சுற்றளவில் பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலங்களை நாசமாக்கும்".
காலம் செல்ல செல்ல தொழில்நுட்பம் முன்னேற முன்னேற அணு உலை விபத்துகள் வராமல் தடுக்கும் மக்களின் சக்தியும் அதிகரிக்கும் என்று கலாம் கூறுகிறாரே தவிர, விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்கமுடியும் என்பதை கலாம் உறுதியாகச் சொல்லவில்லை. மனிதத் தவறுகளும், பயங்கரவாதச் செயல்களும் அணுமின் உலைகளை அணு குண்டுகளாக மாற்றும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.
அணு உலை விபத்துகளை ரயில் விபத்தோடும், விமான விபத்தோடும் ஒப்பிட்டுப்பேசுவது கலாமுக்கு வாடிக்கையாகிப் போய்விட்டது. முன்பு ஒருமுறை இவ்வாறு ஒப்பிட்டுப் பேசியது என் நினைவிலிருக்கிறது. தற்போது டைட்டானிக் கப்பலுக்கும், அப்பல்லோ ராக்கெட் முயற்சிகளுக்கும் கலாம் தாவுகிறார். ஒவ்வொருவருடமும் விமானவிபத்தில் 15000 பேர் வரை உயிரிழக்கும் போதும், 1912-ல் டைட்டானிக் கப்பல் விபத்தில் 1500 பேர் வரை உயிரிழந்தபோதும், அப்பல்லோ விண்வெளிப்பயணம் 10 முறை தோல்வியடைந்தபோதும் மனிதன் சோர்ந்திருந்தால், பின்வாங்கியிருந்தால் இன்று கண்டம் விட்டு கண்டம் விமானத்திலும், கப்பலிலும் பயணம் செய்யமுடியுமா?அல்லது நிலாவில்தான் வைத்திடமுடியுமா?நியாயமான கேள்விதான். இன்னொரு கேள்வியையும் கலாம் கேட்டிருக்கலாம்:"ராமேசுவரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையிடம் தொடர்ச்சியாக அடிவாங்கிக்கொண்டு மீன்பிடிக்கச் செல்லவில்லையா?"
ஒரு அணு உலையில் ஏற்படுகின்ற விபத்துகளையும், நாட்டில் அன்றாடம் நடக்கும் விமான, ரயில் விபத்துகளையும் ஒப்பிடுவது அறமற்றது என்று சொல்வதைத்தவிர வேறு என்ன சொல்லமுடியும்?
2010-ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி அணு ஆயத வல்லமை பெற்றுள்ள உலகின் 9 நாடுகளில் மொத்தம் 22000 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதில் 8000 அணு ஆயுதங்கள் உடனடியான செயல்பாட்டிற்குத் தயாராக இருப்பதாகவும், அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்தினர் முதலில் இந்த அணுஆயுதங்களில் 90 சதவிகிதத்தை வைத்திருக்கும் அமெரிக்கா மற்றும் ரஷிய நாடுகளை எதிர்த்து இயக்கம் நடத்தவேண்டும் எனவும் கலாம் கூறுகிறார். அணுமின் நிலையங்களையே எதிர்ப்போர் அணு ஆயுதங்களையும் நிச்சயமாக எதிர்க்கத்தான் செய்வார்கள். அதில் கலாமுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம். அணுமின் நிலையங்கள் வேண்டாம் என்பதற்கான முக்கியமான காரணமே 22000 அணுஆயுதங்களின் எண்ணிக்கை மேற்கொண்டும் உயர்ந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தினால்தான். ஏனென்றால், உலகின் பல நாடுகளில் புதிது புதிதாக அணுமின்நிலையங்கள் நிறுவ முயற்சி செய்யப்படும் வேளையில், மேலும் பற்பல நாடுகள் அணுஆயுத வல்லமைக் கொண்ட நாடுகளாக மாறும் அபாயம் இருப்பதையும், அவை மிக எளிதாக தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடும் வாய்ப்புகள் இருப்பதையும் கலாம் வேண்டுமானால் மறுக்கலாம். யதார்த்தத்தை யாராலும் மறைக்கமுடியாது. அடுத்த சில ஆண்டுகளில் ஈரானும், சவூதி அரேபியாவும், சிரியாவும் அணுஆயுதம் பெற்ற நாடுகளாகிவிடும். சர்வதேச அணுசக்தி கமிஷனின் ஆய்வுப்படி அடுத்த 30, 40 வருடங்களில் ஏறத்தாழ 30 நாடுகள் அணுஆயுதங்களை உற்பத்தி செய்யும். அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு எளிதில் செல்லும். எல்லாவற்றிற்கும் மூல காரனம் அணுமின் உலைகள் என்பதை மீண்டும், மீன்டும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்து நிலைக்கக்கூடிய அணுக்கழிவுகளை நமது எதிர்கால சந்ததிகள் எப்படியாவது எதிர்கொள்ளட்டும், அதைப்பற்றி இன்று வாழும் நான் ஏன் கவலைப்படவேண்டும் என்ற அணுமின் ஆதரவாளர்களின் மனநிலையை அவர்களின் சுயநலத்தின் வெளிப்பாடாக, அவர்களின் வல்லாதிக்கத்தின் புறவடிவமாக நாம் பார்க்கலாம்.
இதுவரை அமெரிக்கா சம்பாதித்து வைத்துள்ள அணுக்கழிவுகளில் பாதியளவு வாஷிங்டன் அருகே, ஹான்ஃபோர்டில் மட்டும் உள்ளது. இரண்டாம் உலகப்போர் காலம் தொடங்கி இன்றுவரை(பனிப்போர் நடைபெற்ற காலத்தில் மட்டும் உச்சம்) அது தயாரித்த, சோதனை செய்த அணுஆயுதங்களின் கழிவுகள்(யுரேனியம், புளுட்டோனியம் உட்பட) 200 கிடங்குகளில், 2 லட்சம் டன்கள் அளவு இங்கு குவிந்துள்ளது. இவை அனைத்தும் உயர் அபாயம் கொண்ட கதிரியக்கக் கழிவுகள். கடந்த 60 வருடங்களில் உருவான இக்கழிவுகள் கழிவுச் சகதியாக வைக்கப்பட்டுள்ளது. மிக உயர் கதிரியக்கமுள்ள இந்தக் கழிவுகளை திடப்பொருளாக்கி, பின்னர் கண்ணாடி போன்றப் படிகங்களாக மாற்றி, பெரும் பெரும் கண்ணாடிப்பெட்டகங்களினுள் வைத்து புதைக்கப்படவேண்டும். இவ்வாறு செய்வதனால் உடனடியாக அது காற்றில் கலப்பதில்லை. கண்ணாடியின் வேதிப்பொருட்கள் நியூட்ரானை உறிஞ்சும் தன்மை கொண்டிருப்பதால் அணுப்பிளப்பு நிகழவும் அதனுள் நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் என்ன நடக்கும் என கற்பனை செய்து பாருங்கள்! அந்தக் கண்ணாடிப்பெட்டகங்கள் உடைந்து போகலாம். உள்ளே இருக்கும் திடக்கழிவுகள் துண்டு துண்டாகச் சிதறி மண்ணோடும், தண்ணீரோடும் கலக்கலாம். அல்லது மேலும் தூள்தூளாகி வளிமண்டலத்தில் கலக்கலாம். நமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் உலகம் இத்தகையதுதானா?ஏற்கனவே ஹான்போர்டின் அணுக்கழிவு சேமிப்புக்கிடங்குகளிலிருந்து கசிவு ஏற்பட்டு கொலம்பியா ஆறு மாசுபட்டுக்கொண்டிருப்பதையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இக்கழிவுகளைக் கையாண்டு, இறுதியில் புதைக்கப்படுவதற்கும், அதன்பின்னரும் அப்புதைவிடங்களைப் பாதுகாக்கவும் ஆகும் செலவு என்ன?அதை யார் தருவது?பலான அமெரிக்காவுக்கே இத்தகையப் பிரச்சினைகள் என்றால் நமக்கு?!
கூடங்குளம் அணுமின் உலைகளிலிருந்து வரப்போகும் அணுக்கழிவுகளிலிருந்து கலாம் கூறுவது போல 75 சதவிகிதத்தை மறுசுழற்சி மூலம் பயன்படுத்திக்கொண்டாலும் எஞ்சியக் கழிவுகளை 40, 50 ஆண்டுகள் கழித்து என்ன செய்யப்போகின்றோம் என்பதற்கு எந்த பதிலும் இல்லை. 1000 மெகாவாட் அணுமின் உலையானது ஆண்டொன்றுக்கு 27 டன்கள் மிக உயர் அபாய அணுக்கழிவையும், 310 டன்கள் உயர் அபாய அணுக்கழிவையும், 460 டன்கள் குறை அபாய அணுக்கழிவையும் உருவாக்கவல்லது. கூடங்குளத்தில் தற்போது 1000 மெகாவாட் திறனுடைய இரண்டு மின் உலைகள் உள்ளது. மேலும் 1000 மெகாவாட் திறனுடைய 4 அணு உலைகள் நிறுவப்படும் என அரசின் அதிகாரிகளும், அமைச்சர்களும் அறிவிக்கின்றனர். உருவாகும் கழிவின் அளவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
"நாமல்ல, நாடுதான் முக்கியம்" என்ற ஒரு அரியக் கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கமும் கூடங்குளம் போராட்டத்திற்கான மிக முக்கிய காரணமாக கலாம் கூறுகிறார். சுதந்திரப் போராட்டக்காலத்தில் காந்தியும், திலகரும்கூட தேசத்துரோகிகளாக அன்றைய அதிகாரவர்க்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டதை நோக்கும்போது, கலாம் கூறியது பற்றி போராட்டக்காரர்கள் பொருட்படுத்தவேண்டியதில்லை. "வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது"என்றும் கலாம் கூறுகிறார். அரபு நாடுகளில் சமீபத்திய அமைதிப் புரட்சி வெறும் மக்கள் கூட்டங்களால்தான் சாத்தியமானது. முகமது கடாபி, ஹோஸ்னி முபாரக், ஸ்டாலின் போன்ற தனிமனிதர்களும்கூட வரலாறு(!)களைப் படைத்திருக்கிறார்கள்.
கூடங்குளம் அணுமின் உலைகள் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கிறது என்றக் கூற்றை குறிப்பிடும் கலாம், வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிறார். இதுவரை இந்தியாவில் கட்டப்பட்டுள்ள அணு உலைகளில் எவ்வளவு விதி மீறல்கள் உள்ளனவோ?!பூம்புகாரை கடல் கொண்டது பற்றிக் குறிப்பிடும் கலாம், கூடங்குளத்தில் பலமான நிலநடுக்கமோ, சுனாமியோ ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார். ரிக்டர் அளவுகோலில் 6 வரை ஏற்படும் நிலநடுக்கத்தைத் தாங்கவல்ல சக்தி கூடங்குளம் அணு உலைகளுக்கு உண்டு என்கிறார். அப்படியானால் 6 க்கு மேல் பூகம்பம் வந்தால்? வராது என உறுதிபடத்தெரிவிக்கும் கலாமின் கூற்று ஒன்றும் வேத வாக்கல்ல! கதிரியக்கம் மரபணுக்களைப் பாதிக்காது என்கிறார். கதிரியக்கம் டி. என். ஏ. வைப் பாதிக்கும். ஆனால் அப்பாதிப்பை சரிசெய்யும் சக்தி செல்லுக்குள்ளேயே உண்டு என்கிறது அறிவியல். அதாவது டி. என். ஏ. வின் பாதிப்புகளை சரி செய்யும் சக்தியை செல் இழந்துவிடுமானால் கதிரியக்கப் பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அணுமின் உலைகளுக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் தேசப்பாதுகாப்புக்கு எதிரான கருத்துகள் என்று கலாம் முத்தாய்ப்பாக தனது கூரியப் பிரச்சாரத்தை முடிக்கிறார். இந்திய தேசத்தின் பாதுகாப்பை மேருமலை போன்று தனது பேனா முனையில் தூக்கிப்பிடித்திருக்கும் கலாமை எண்ணும்போது வியப்புதான் மேலிடுகிறது. கோபம் கொஞ்சம் கூட வரவேயில்லை.
--------------------------------
- செ.சண்முகசுந்தரம் ( c.shanmughasundaram@gmail.com)
நன்றி:அம்ருதா, ஜனவரி-2012
0 பின்னூட்டங்கள்:
Post a Comment