> குருத்து: உடலுறவு கொண்டாலே கணவன் – மனைவியா ?

July 15, 2013

உடலுறவு கொண்டாலே கணவன் – மனைவியா ?

இரா.ஜவஹர்

பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் உருவாக்கி இருக்கிறது ஒரு தீர்ப்பு. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் சமீபத்தில் அளித்த தீர்ப்புதான் அது.

ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டாலே சட்டப்படி அவர்கள் கணவன் – மனைவிதான் என்று அவர் தீர்ப்பளித்து இருக்கிறார்.
இதன் விவரம் என்ன ?

ஆயிஷா என்று ஒரு பெண். கோயம்புத்தூர் குடும்ப நீதிமன்றத்தில் கடந்த 2000 வது ஆண்டில் அவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் அவர் கூறியதாவது :

” எனக்கும் ஒசிர் ஹசன் என்பவருக்கும் 16.9.1994 அன்று முஸ்லிம் வழக்கப்படி ( custom – சம்பிரதாயம் ) திருமணம் நடந்தது. அதிலிருந்து நாங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. பிறகு என் கணவர் 1999 ம் ஆண்டில் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். மீண்டும் சேர்ந்து வாழ எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை.
எனவே எனக்கும் என் குழந்தைகளுக்கும் மாதந்தோறும் ஜீவனாம்சமாக 5000 ரூபாய், என் கணவர் தர வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். “ - என்று ஆயிஷா கோரினார்.

இது தொடர்பாக மருத்துவமனைப் படிவங்கள், ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம் உள்ளிட்டவற்றில் கணவன் என்ற இடத்தில் ஒசிர் ஹசன் கையெழுத்திட்டிருந்த பல்வேறு ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஆயிஷா அளித்தார். சாட்சிகளையும் முன்னிறுத்தினார்.
இவற்றை ஒசிர் ஹசன் மறுத்தார். ஆயிஷா தனது மனைவி அல்ல; குழந்தைகள் தனக்குப் பிறந்தவை அல்ல என்று அவர் கூறினார். திருமணம் நடந்திருந்தால் மசூதியில் உள்ள ‘ நிக்காஹ் ‘ ( திருமணம் ) பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கும்; அப்படி ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஒசிர் ஹசனின் அப்பா சாட்சியம் அளித்தபோது “ திருமணம் நடக்கவில்லை. நாங்கள் முஸ்லிம்களில் உருது பேசக்கூடிய தக்கிலி பிரிவைச் சேர்ந்தவர்கள்; ஆயிஷாவோ ராவுத்தர் பிரிவைச் சேர்ந்தவர் “ என்று கூறினார்.

வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்ற நீதிபதி 2006 ம் ஆண்டில் தீர்ப்பளித்தார். தீர்ப்பு வருமாறு :

”ஆயிஷாவுக்கும் ஒசிர் ஹசனுக்கும் திருமணம் நடந்ததற்கான ஆவணம் ஏதும் இல்லை. எனவே சட்டப்படி ஆயிஷா மனைவி அல்ல. எனவே அவருக்கு ஜீவனாம்சம் பெறும் உரிமை இல்லை. ஆனால் குழந்தைகள் ஒசிர் ஹசனுக்குப் பிறந்தவைதான் என்பதற்கு ஆவணங்களும் சாட்சியங்களும் உள்ளன. இவ்வாறு சட்டமற்ற வகையில் பிறந்த குழந்தைகளுக்கும் (illegitimate children) ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. ஆகவே குழந்தைகள் இருவருக்கும் தலா 500 ரூபாய் வீதம் மாதந்தோறும் ஒசிர் தர வேண்டும். வழக்குச் செலவுக்காக ஆயிஷாவுக்கு 1000 ரூபாய் தர வேண்டும் “ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிஷா மேல் முறையீடு செய்தார். நீதிபதி கர்ணன் இதை விசாரித்தார். ஒசிர் ஹசனோ, அவரது தரப்பிலோ யாரும் வரவில்லை. கடந்த ஜூன் 17 ல் நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு :

இந்தத் திருமணம் முஸ்லிம் வழக்கப்படி ( custom ) நடக்கவில்லை. எனினும் மருத்துவமனைப் படிவங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களில் கணவன் என்ற இடங்களில் ஒசிர் ஹஸன் கையெழுத்திட்டு இருக்கிறார்.

ஆயிஷாவும் ஒசிர் ஹஸனும் திருமணம் செய்து கொள்ள சட்டத் தடை (சகோதர உறவு, ஏற்கனவே ஒரு கணவர் இருப்பது போன்றவை) ஏதும் இல்லை. இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்து இரண்டு குழந்தைகளும் பெற்றிருக்கிறார்கள்.

திருமணச் சடங்கு என்பது வழக்க முறைதானே ( custom ) தவிர, சட்டப்படி கட்டாயம் ( mandatory ) அல்ல.

எனவே இந்த இருவரும் கணவன் – மனைவிதான். குழந்தைகளும் சட்டமற்ற வகையில் பிறந்தவர்கள் ( illegitimate children ) அல்ல; சட்டப்படியான வகையில் பிறந்தவர்கள்தான் ( legitimate children ).

எனவே சட்டப்படியான மனைவி என்ற வகையில் ஆயிஷாவுக்கும், சட்டப்படியான குழந்தைகள் என்ற வகையில் அவரது குழந்தைகளுக்கும் தலா 500 ரூபாய் மாதந்தோரும் ஒசிர் ஹசன் அளித்து வர வேண்டும். குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட செப்டம்பர் 2000 முதல் மே 2013 வரை உள்ள பாக்கித் தொகையை இன்னும் மூன்று மாதங்களுக்குள் தர வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கர்ணன் தீர்ப்பளித்தார்.

இவ்வாறு ஆயிஷாவை மனைவி என்றும், குழந்தைகளை சட்டப்படியான குழந்தைகள் என்றும் அங்கீகரித்து, ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது மிகமிக வரவேற்கத்தக்கது.

இந்த இடத்தில் சில சட்ட விளக்கங்களைப் பார்ப்போம்.

கணவன் – மனைவி என்ற சட்டப்படியான உறவு, வாரிசு, சொத்து உள்ளிட்ட உரிமைகளைப் பெற வேண்டுமானல் ஏதேனும் ஒரு சட்டத்தின் விதிமுறைகளின்படி திருமணம் நடக்கவேண்டும். சட்டங்களுக்கு அப்பாற்பட்டு வேறுவகையில் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது திருமணமே செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தாலோ கணவன் என்றோ, மனைவி என்றோ உரிமை பெறமுடியாது.
ஜீவனாம்ச உரிமையைப் பொருத்தவரை, கணவனால் புறக்கணிக்கப்பட்ட மனைவிக்கு, அல்லது மணமுறிவு (Divorce) அளிக்கப்பட்ட மனைவிக்கு, அல்லது மணமுறிவு கேட்டுப்பெற்ற மனைவிக்கு மற்றும் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் தரவேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவில் உள்ளது.

எனினும் கடந்த 2005-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ’ குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் ‘ ஒரு விதிவிலக்கை அளித்துள்ளது.

“திருமண உறவு அல்லது திருமண உறவைப் போன்ற ஒரு உறவில் (a relationship in the nature of marriage) ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தாலோ, அல்லது வாழ்ந்திருந்தாலோ, அந்தப் பெண்ணுக்கும், அந்தக் குழந்தைகளுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-வது பிரிவு பொருந்தும். ஜீவனாம்சம் தரவேண்டும்” என்று குடும்ப வன்முறைச் சட்டம் கூறுகிறது.
எனினும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பெண், மனைவி என்ற அங்கீகாரத்தையும், அதன் பேரில் சொத்து உள்ளிட்ட மற்ற உரிமைகளையும் பெறுவதற்கு எந்தச் சட்டமும் வகை செய்யவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் சட்டவிதிமுறைப்படி திருமணம் செய்யாமல், சேர்ந்து வாழ்ந்து, குழந்தை பெற்ற ஆயிஷாவுக்கு சட்டப்படியான மனைவி என்ற அங்கீகாரத்தையும், உரிமைகளையும் வழங்கி நீதிபதி கர்ணன் தீர்ப்பளித்துள்ளார். இது மிகமிக வரவேற்கத்தக்கதுதான்.
எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இதே உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்யப்பட்டால் இந்தத் தீர்ப்பு செல்லுமா ? செல்லாதா ?  உறுதியாகச் சொல்லமுடியாது !

ஏனென்றால் இது தொடர்பான பல வழக்குகளில் முரண்பட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது !

1999-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் “ சட்ட விதிமுறைப்படி திருமணம் செய்யாமல் கணவன் – மனைவி போல கணிசமான காலத்துக்கு (reasonably long time) சேர்ந்து வாழ்ந்தாலே, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125-ன் படி ஜீவனாம்சம் பெறும் உரிமை அந்தப்பெண்ணுக்கு உண்டு” என்று உத்தரவிடப்பட்டது.

2005-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் “உரிமை இல்லை” என்று உத்தரவிடப்பட்டது.

2010-ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில் “உரிமை உண்டு என்றுதான் நாங்கள் கருதுகிறோம். எனினும் இது பற்றி இந்த உச்சநீதிமன்றத்தில் மாறுபட்ட நீதியியல் கருத்துகள் உள்ளன. எனவே இந்த வழக்கை இரண்டு நீதிபதிகளுக்கு மேற்பட்ட நீதிபதிளைக் கொண்ட விரிவான பெஞ்சின் விசாரணைக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதியைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
விஷயம் இதோடு நின்றுவிட்டது ! புதிய தீர்ப்பு ஏதும் இன்றுவரை வரவில்லை !

மேலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும் “உரிமை உண்டு” என்ற தீர்ப்பிலும் கூட “ஜீவனாம்சத்துக்கு மட்டும்தான் உரிமை உண்டு. சட்டப்படியான மனைவி என்ற அங்கீகாரத்தையோ, அதன்பேரில் மற்ற உரிமைகளையோ பெறமுடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனின் தீர்ப்பில் சட்டப்படியான மனைவி என்ற அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆயிஷா போன்ற நிலையில் உள்ள பெண்களுக்கு இது பாதுகாப்புத் தரும். இது மிகவும் வரவேற்கத்தக்கது.

எனினும் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால் தீர்ப்பின் இந்த அங்கீகாரப்பகுதி செல்லாது என்று அறிவிக்கப்படும் என்பதே எனது கருத்து. ஏனென்றால் இதற்கு சட்ட ஆதாரமோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் ஆதாரமோ இல்லை.
எனவே “ உரிமை உண்டு “ என்ற வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்றே கருதுகிறேன்.

அடுத்து –

நீதிபதி கர்ணன் தனது தீர்ப்பில் “திருமணம் ஆகாத 21 வயது நிரம்பிய ஆணும், திருமணம் ஆகாத 18 வயது நிரம்பிய பெண்ணும் விரும்பி உடலுறவு கொண்டாலே அவர்கள் கணவன் – மனைவிதான். அவர்கள் வேறு யாரையாவது திருமணம் செய்வதாக இருந்தால் நீதிமன்றம் மூலம் மணமுறிவு பெற்ற பிறகே திருமணம் செய்யமுடியும்.” என்று கூறியிருக்கிறார்.

இது சரியாக இருக்குமா ?

திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் உடலுறவு கொள்வதும், பிறகு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதும் நடக்கக் கூடியதுதான். இதில் தவறு ஏதுமில்லை.

பெரியார் சொன்னதைப்போல “ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்றும் மூன்றாம் நபர்கள் யாராயினும் பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது.”

நீதிபதி கர்ணன் சொல்வதை ஏற்றுக்கொண்டால், அதாவது உடலுறவு கொண்டாலே கணவன் – மனைவிதான் என்று முத்திரை குத்தப்படும் என்றால், ஒருவரை ஒருவரோ அல்லது மற்றவர்களோ ப்ளாக்மெயில் செய்து மிரட்டுவதற்கே வழிவகுக்கும்.
மேலும், ஒருவர் பலருடன் உறவு கொண்டால் யாரை கணவனாக அல்லது மனைவியாக ஏற்பது ?
இதற்கு விதி விலக்குகள் இருக்கலாம் என்று நீதிபதி கர்ணன் சொல்கிறார். ஆனால் எது விதி விலக்கு என்று அவர் சொல்லவில்லையே!
அடுத்து –

நீதிபதி மேலும் கூறுகிறார் : “சட்டப்படி திருமணம் செய்தாலும், ஒரு முறை கூட உடலுறவு கொள்ளவில்லை என்றால் அந்தத் திருமணம் செல்லாது.”

இது சரியா ?

வயது முதிர்ந்த இருவர் வாழ்க்கைத்துணை தேவை என்பதற்காக சட்டப்படி திருமணம் செய்துகொண்டு உடலுறவு இல்லாமல் வாழ்ந்தால் அதில் என்ன தவறு ? இளமையான இருவர் கூட உடலுறவு தேவையில்லை என்று விரும்பி வாழ்ந்தால் அதில் என்ன தவறு ? அந்தத் திருமணம் செல்லாது என்று கூறி அவர்களுடைய உரிமைகளை ஏன் பறிக்கவேண்டும் ?

நீதிபதியின் இந்தக் கருத்துகள் மேல்முறையீட்டில் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்றே நான் கருதுகிறேன். அது மட்டுமல்ல. இந்தக் கருத்துகள் சரியும் அல்ல.

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, உடலுறவு கொண்டு, ஆண்களால் ஏமாற்றப்படும் அபலைப்பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே நீதிபதி கர்ணன் இவ்வாறு கூறியிருக்கிறார் என்றே கருதுகிறேன்.
எனினும் இந்தக் கருத்துகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், ஏற்க இயலாது.
இது சரியல்ல என்றால், பிறகு எது சரி ?

“ஏமாற்றுபவர்களுக்கான தீர்ப்பு தண்டனையே தவிர, திருமணம் அல்ல. பெண்ணுக்கான நீதியும் அதுவாகத்தான் இருக்கமுடியும். ஏமாற்றிவிட்டு, பிறகு கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களில் எத்தனைபேர் அவர்களது இணையரை சரியாக நடத்துவார்கள் ? திருமணம் தரும் சமூக அந்தஸ்து காரணமாகத்தான் பெண்களும் அந்த முடிவை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். அப்படியான நிர்பந்தங்கள் இருக்கக்கூடாது” என்று என் மகள் கவிதா முகநூலில் எழுதியிருக்கிறார்.

இது மிகவும் சரி. பெண்ணின் சுயமரியாதையைப் பாதுகாப்பதாகவும், ஏமாற்ற நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இந்தத் தண்டனை இருக்கும். இதற்கான சட்டவிதிகளும், தீர்ப்புகளும் ஏற்கனவே உள்ளன.

எனவே “ ஏமாற்றியவனைத் திருமணம் செய்யாதே. அவனுக்குத் தண்டனை பெற்றுக்கொடு “ என்று, பாதிக்கப்பட்ட பெண்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்; உதவ வேண்டும்.

எனினும் ஏமாற்றியவனைத் தண்டித்து விட்டு, வேறு ஒருவனைத் திருமணம் செய்யவோ அல்லது திருமணமே செய்யாமல் வாழவோ வாய்ப்பில்லாத எளிய பெண்களுக்கு என்ன செய்வது ?

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கோவிலுக்குள் செல்லும் உரிமை வேண்டும் என்று போராடுகிறோம் அல்லவா ?
அதைப்போல, ஏமாற்றியவனைத் திருமணம் செய்யும் உரிமையைச் சட்டபூர்வமாக்க வேண்டும். இந்த உரிமையைப் பயன்படுத்துவதா இல்லை புறக்கணிப்பதா என்பதை பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்துக்கு விட்டுவிடவேண்டும்.

சரி, ஏமாற்றப்படும் ஆண்களுக்கு இந்த உரிமையை சட்டபூர்வமாக ஆக்கலாமா ? ஆக்கலாம் என்றே எனக்கு முதலில் தோன்றியது. எனினும் இன்றைய ஆணாதிக்க சமூகத்தில், இந்த உரிமையை ஆணுக்கும் அளித்தால், அது சரியாக பயன்படுவது விதிவிலக்காகவும், தவறாகப் பயன்படுவதே விதியாகவும் இருக்கும். எனவே இந்த உரிமையை ஆணுக்குத் தரத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.
ஆகவே –
உடலுறவு கொண்டாலே கணவன் – மனைவிதான் என்பது சரியா ?

சரி அல்லது தவறு என்று பொத்தாம் பொதுவாகப் பதில் சொல்ல முடியாது. சில சூழ்நிலைகளில் சரி. சில சூழ்நிலைகளில் தவறு.
எனவே ஒவ்வொரு வழக்கையும் தனித் தனியாகப் பரிசீலித்துத்தான் தீர்ப்பளிக்க வேண்டும்.

- பத்திரிக்கையாளர் ஜவஹர்

(தனிச்சுற்று இதழான 'தோழமை' ஜூலை இதழில் வெளிவந்தது)

0 பின்னூட்டங்கள்: