> குருத்து: விநோதினி - உன் ஆன்மா சாந்தியடைய கூடாது!

August 21, 2013

விநோதினி - உன் ஆன்மா சாந்தியடைய கூடாது!

விநோதியின் வழக்கு - தண்டனை விவரங்களை படித்து, அசை போட்டுக்கொண்டே முடிவெட்டும் கடைக்கு போனேன்.

முடிவெட்டி விட்டு, மீசையில் புதிதாய் முளைத்திருந்த இரண்டு நரை முடியை வெட்ட முயற்சித்தார்.

"இருக்கட்டும் விட்டுவிடுங்கள். அது பல கடமைகளை நினைவுப்படுத்துகிறது" என்றேன். புன்னகைத்துவிட்டு விட்டுவிட்டார்.

*****

தண்டனை குறித்து விநோதியின் அப்பாவிடம் கருத்து கேட்ட பொழுது, "குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும் என்பது விநோதினியின் விருப்பம். இப்பொழுது நிறைவேறியிருக்கிறது. இனி, அவளின் ஆன்மா சாந்தி அடையும்" என கூறியிருக்கிறார்.

விநோதினியின் வயது குறைவு. அவளின் உலகமும் சின்னது. அதனால், குற்றவாளியை தண்டிப்பது மட்டும் தான் அவளது நோக்கம். சமூக அக்கறை கொண்டவர்கள் இதை சமூக குற்றமாக பார்க்கவேண்டும்.  விநோதினி இறந்த பொழுது எழுதிய பதிவு கீழே!

//எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை.  அதனால் 'உன் ஆன்மா சாந்தியடைட்டும்' என சொல்ல முடியவில்லை. நீ சாந்தியடைய கூடாது. நீ ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து குடைந்து, குடைந்து மனச்சாட்சியை உலுக்க வேண்டும்! போராட்டங்களை தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.//

தோழி விநோதினிக்கு,

திராவக வீச்சால் பாதித்து, நிறைய போராட்டங்களுடன் முன்னேறி கொண்டிருந்த நீ, இன்று காலையில் மூச்சு திணறால் இறந்து போனதை அறிந்து, நிறைய வருந்தினேன்.  உன்னுடைய இயல்பான முகமும், திராவகம் ஊற்றிய முகமும் மாறிமாறி நினைவில் வந்து கொண்டே இருந்தன.

உன் சொந்த பந்தங்களில் முதல்தலைமுறை பட்டதாரி நீ.  ஒரு அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து, பட்டம் வாங்குவது என்பதை எத்தனை கடினமான பாதை என்பதை நானும் அறிவேன். உன்னைப்போல் தான் நானும். வாழ்க்கைப் பற்றிய கனவுகளும், தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்ற பெற்றோரை கொஞ்சம் இளைப்பாற வைக்கலாம் என்ற கனவுகளும் இன்று கருகிப்போய்விட்டன.

உன்மீது திராவகம் வீசியவனை தூக்கில் போட இனி கோரிக்கைகள் வலுக்கும். மக்களிடமிருந்து திராவகத்தை ஒளித்து வைக்க உச்சநீதிமன்றம் ஆலோசனை சொல்லியிருக்கிறது.  இதை தனிப்பட்ட ஒரு குற்றச் செயலாக பலரும் பார்க்கிறார்கள். பார்ப்பார்கள்.   நான் அப்படி பார்க்கவில்லை.  இங்கு எல்லா ஆண்களுக்குள்ளும், பெண்ணை இழிவுப்படுத்தும் எண்ணம் சாதுவாகவோ அல்லது சுரேசை விட கொடூர மனமோ ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. சுரேசை தண்டித்துவிடலாம்.  'நம்முடைய' சட்டத்திற்கு அது எளியது தான். ஆனால், இதை செய்ய தூண்டிய பலருக்கு என்ன தண்டனை!

"உன்னை காதலிக்க வைக்கிறேனா இல்லையா! பார்" என காலரை தூக்கிவிட்டு 'வீர வசனம்' பேசிய நாயகன்களுக்கும், படம் எடுத்தவர்களுக்கும் இங்கு என்ன தண்டனை?

ஒரு வீட்டிற்குள்ளேயே அண்ணன், தங்கையை பேதம் பிரித்து வளர்த்த பெற்றோர்கள் இதற்கு காரணமில்லையா!

அரைகுறை ஆடை பெண்களை தங்களின் ஊடகங்களில் காட்டி, பெண்ணை சக மனுசியாக பார்க்க தடுக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை?

தனது பொருட்களை விற்றுத்தீர்ப்பதற்காக, பெண்ணை துகிலுரியும் முதலாளிகளுக்கு என்ன தண்டனை?

தனது அடியாட்படைகளான இராணுவமும், காவல்துறையும் செய்யும் பாலியல் வல்லுறவுகளை அரசே வலிந்து காப்பாற்றுகிறது. அரசுக்கு என்ன தண்டனை?

ஆதிக்கசாதிகாரன் தலித் பெண்ணை தொடவே மாட்டான். எப்படி வல்லுறவு செய்வான் என சொல்லி நீதிமன்றம் வல்லுறவு செய்தவனை விடுவித்ததே! அந்த நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?

மீண்டும் சொல்கிறேன். சுரேசுக்கு கடுமையான தண்டனை தேவைதான். ஆனால், அவனை செய்ய தூண்டியது எது என்பதை சிந்திக்காமல் விட்டால், உன்னைப்போல பல விநோதினிகள் பலியாவதை தடுக்கவே முடியாது!

எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை.  அதனால் 'உன் ஆன்மா சாந்தியடைட்டும்' என சொல்ல முடியவில்லை. நீ சாந்தியடைய கூடாது. நீ ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து குடைந்து, குடைந்து மனச்சாட்சியை உலுக்க வேண்டும்! போராட்டங்களை தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

i am from karaikal:most of the people does not what really took place there:
1) Why vinothini's parents allowed him?
2) why colleceted money from him?
if u get answers for these,u will travel in a different route:
pathiplans@sify.com

அ. வேல்முருகன் said...

காரைக்கால் மனிதனுக்கு முழு விவரம் தெரியும் என்றால் ஏன் மறைக்க வேண்டும்.

பணமே பெற்றிருந்தாலும், ஒரு பெண்ணை அவள் காதலுக்கு சம்மதிக்கவில்லை என்பதற்காக திராவகம் வீசி முகத்தை சிதைப்பது என்பது, அதனால் அவள் மரணத்ததை தழுவியது.........

வேண்டுமானால் ஒன்று செய்யலாம், காரைக்கால் மனிதருக்கு நாம் கொஞ்சம் பணம் கொடுப்போம். அவரே திராவகத்தில் முழு கையை வைத்துக் காண்பிக்கட்டும்