> குருத்து: சேமியா உப்புமா!

August 17, 2018

சேமியா உப்புமா!


பல மாதங்களுக்கு பிறகு இன்று சேமியா உப்புமா செய்தேன். எந்தவித சொதப்பலும் இல்லாமல், குறைவான நேரத்திலேயே சுவையாக செய்துமுடித்தேன்.

#செய்முறை : இணையம் முழுவதும் நிறைய கொட்டி கிடக்கிறது! அதில் நம் பங்குக்கு உலகத்துக்கு சொல்லணும்! கருத்தும் சொல்லணும்! :)
...

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அவசரம் அவசரமாக எண்ணெய்யை ஊற்றக்கூடாது. சட்டியில் இருக்கிற கொஞ்சூண்டு நீர் எண்ணெய் காய்ந்ததும் நம் மீது தெறித்து நாம் சமையல் செய்யும் நம்பிக்கையை குலைத்துவிடும்! :)
சமையலில் நிதானம் முக்கியம்.

சட்டி காய்ந்ததும் எண்ணெய் சிறிதளவு ஊற்றுங்கள். (ஊற்றுகிற அளவு உங்க வசதியை பொறுத்தது! உங்க ஆரோக்கியத்தை பொறுத்தது!). எண்ணெய் அளவாக காய்ந்ததும்..கொஞ்சூண்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலையை மெதுவாக போடுங்கள். தள்ளி நின்று தூக்கி போட்டாலும் எண்ணெய் தெறிக்கும்.

பிறகு வெட்டி வைத்துள்ள வெங்காயம், (நேரமும், காசும் நிறைய இருந்தால் சின்ன வெங்காயம் போட்டால் சுவையாக இருக்கும்.) பச்சை மிளகாய் இரண்டு போடுங்கள். இல்லையா! காய்ந்த மிளகாய் பயன்படுத்தலாம். பச்சை வாடை போகும் வரை வறுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள். பிறகு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள்.

தண்ணீர் கொதித்ததும், வறுத்த சேமியா வாங்கி வைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக போடுங்கள். வேலை முடிந்தது என போன் பேச போய்விடாதீர்கள். கூடுதலாக உள்ள நீர் வற்றும் வரை காத்திருங்கள். சமையலில் பலருக்கும் சொதப்பது முடிவில் தான்!

கொஞ்சம் வசதி. ம்ஹீம். நிறைய வசதி இருந்தால்... வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு போடலாம். சுவை கூடும்.

சேமியா உப்புமாவிற்கு இத்தனைப் பத்திகளா, நிறைய நேரம், உழைப்பு வேண்டும் என தவறாக நினைத்துவிடாதீர்கள். சேமியா என் மீது கோபித்துக் கொண்டுவிடும்! இருப்பதிலேயே குறைவான நேரம், உழைப்பு கேட்பது சேமியா உப்புமா தான்!   :)

சாப்பிட்டதும், சேமியா உப்புமா போரடித்துவிட்டது! இனி மீண்டும் செய்ய பல மாதங்களாகும்!

 

#ஆண்கள்_சமையல்

0 பின்னூட்டங்கள்: