> குருத்து: பிரியாணி போச்சே! :)

March 17, 2020

பிரியாணி போச்சே! :)

ஒரு திருமண வரவேற்புக்கு சமீபத்தில் போயிருந்தோம். நல்ல விசாலமான திறந்த வெளி மைதானம். பகலில் அடிக்கிற வெயிலுக்கு நல்ல இதமாய் இருந்தது. நல்ல மக்கள் கூட்டம்.

காதை பதம் பார்க்கும் திரையிசை பாடல்களோ, டிஜே பாடல்களோ இல்லை. சன்னமாக மெல்லிசை பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.

மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிடலாமா? வாழ்த்துவதற்கான மக்கள் வரிசை நீளமாய் இருந்தது. சாப்பிட்டுவிட்டு மனதார வாழ்த்தலாம் என முடிவெடுத்தோம்.

சைவம், அசைவம் இரண்டும் தயாராய் இருந்தது. அசைவம் இருக்கும் பொழுது, சைவம் பக்கம் போவது நியாயமேயில்லை. 

கொஞ்சம் காத்திருந்தோம். சுவையான கோழி பிரியாணி. சாப்பிட்டோம்.

மணமக்களை வாழ்த்திவிட்டு, புத்தகங்கள் பரிசாகத் தந்தோம். தொழில் ரீதியான நண்பர்கள் வந்திருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தோம். பக்கத்தில் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். பிரியாணி தீர்ந்து போச்சாம். ஆகையால் நூறு பேருக்கு மேல் சாப்பிடாமாலே கிளம்பினார்கள்.

நான்கு நாட்கள் கழித்து, பொண்ணோட தங்கையைப் பார்த்தேன். என்னாச்சு பலருக்கு சாப்பாடு இல்லாம போச்சே! என கவலையோடு (பிரியாணியாச்சே!) கேட்டேன்.

பரிமாறுகிற இடத்தில் சித்தப்பா, பெரியப்பா எல்லோரும் இருந்தார்கள். பிரியாணி தீர்ந்ததும் அப்பாகிட்டா சொன்னா பதட்டமாயிடுவார்னு சொல்லாம மறச்சிட்டாங்க! எல்லாம் முடிஞ்சு அப்பாவுக்கு தெரிஞ்சதும் அப்பா சொன்னார்.

"பிரியாணி ஒருவேளை பத்தாம போச்சுன்னா, கொண்டு வரச்சொல்லி தெரிஞ்ச கடையில் சொல்லி வைச்சிருந்தேன். எனக்கு தெரியாமலே போயிருச்சி!"

பிரியாணி போச்சே! 


- முகநூலில், 09/07/2019

0 பின்னூட்டங்கள்: