> குருத்து: இரண்டு இட்லி ஒரு வடை!

March 29, 2020

இரண்டு இட்லி ஒரு வடை!

காலையில் ஒரு சிறு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். 15 வயது மதிக்க தக்க இரு பையன்கள் வந்தார்கள். தோசை எவ்வளவு என ஒருமுறைக்கு இருமுறை முதலாளியிடம் விசாரித்தனர். ரூ. 35 என்றார். காசு பத்தலை! இருவருடைய முகங்களும் நடிகர் அருண்பாண்டியன் முகங்களாக இருந்தன. எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்குள் குசு குசுவென பேசிக்கொள்ளவும் இல்லை.

இட்லி விலை கேட்டு, ஆளுக்கு இரண்டு இட்லி மட்டும் தாருங்கள் என்றார்கள். ஆச்சர்யமாய் 10.30 மணிக்கும் இட்லிகள் இருந்தன. கொடுத்தார்கள். பசங்க இருவரும் ஒல்லியாக இருந்தார்கள். இந்த வயதில் 8 இட்லியாவது நான் முழுங்கி கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. மெதுவாக சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது, ஒருவர் வந்தார். இருவரையும் நலம் விசாரித்தார். என்ன படிக்கிறீங்க? ஒருவன் 8, இன்னொருவன் 9 என்றார்கள். அதை கூட சன்னமான குரலில் சொன்னார்கள்.

தட்டில் இருந்த இட்லிகளை பார்த்துவிட்டு, ஆளுக்கு ஒரு மசால் வடை வைக்க சொல்லி, இட்லிகளுக்கும் சேர்த்து பணம் கொடுத்துவிட்டு கிளம்பினார். கூடுதலாக இரண்டு இட்லிகள் வாங்கித்தர அவரிடமும் காசு இல்லை போல! அப்பொழுதும் அந்த பசங்க முகத்தில் எந்தவித உணர்வும் வெளிப்படவில்லை.

****

அந்த பசங்களை பார்த்ததும், பழைய ஞாபகம் ஒன்று வந்தது!

நானும் எங்க அண்ணனும் 8, 10 வயதில் காசு தேர்த்தி கணக்கெல்லாம் பார்த்து, மார்க்கெட்டில் பரபரப்பாக இருக்கும் புட்டுக்கடைக்கு போனோம். இப்படி தனியாக போய் சாப்பிடுவது இருவருக்குமே முதல்முறை ஆளுக்கு ஒரு புட்டு ஆர்டர் செய்து, சுட சுட சாப்பிட்டோம். சாப்பிட்டுவிட்டு, மார்க்கெட் தெரு முனைக்கு வந்த பொழுது, எங்க அண்ணன் கையில் காசு இருந்தது. "சாப்பிட்டதுக்கு பிறகும், எப்படி காசு வைச்சிருக்கே!" என்றேன். "சாப்பிட்டதுக்கு காசே கொடுக்கல! மறந்துட்டேன்" என்றான். யாரும் பின் தொடர்ந்து வருகிறார்களா என திரும்பி பார்த்தோம். இரண்டு பேரும் தலை தெறிக்க வீட்டை நோக்கி ஓடினோம். 

படம் : இணையத்தில் சுட்டது!

0 பின்னூட்டங்கள்: