> குருத்து: Introduction of AI Tool to Tax Consultants - R. Muniasamy, Speaker, GSTPS Member

November 27, 2025

Introduction of AI Tool to Tax Consultants - R. Muniasamy, Speaker, GSTPS Member

 


அன்புள்ள GSTPS உறுப்பினர்களுக்கு,


வணக்கம்.  செயற்கை நுண்ணறிவு (AI) கடந்த சில வருடங்களாக அனைத்து துறைகளிலும் ஊடாடி வருகிறது.   கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பரவலாக பேசப்பட்டாலும்,  அது துவங்கப்பட்ட காலம் என்பது மிகப்பழையது. 


The Imitation Game என ஒரு ஆங்கிலப்படம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜெர்மன் பல நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலத்தில்… அவர்களின் தொலை தொடர்பு யாராலும் கண்டுபிடிக்க சிக்கலான ஒன்றாக இருந்தது. அதனால் இழப்புகளும் பெரிதாக இருந்தது.  அதில் பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆலன் ட்டூரிங் என்பவர் தன் குழுவினரோடு அதன் கணித நுட்பத்தை கண்டுபிடித்தார். அதன் மூலம் பல சேதாரங்களை தவிர்த்தார்கள் என்பது வரலாறு.


உலகம்  அப்பொழுது கணினியை ஒரு மாபெரும் மின் பெட்டியாகத்தான் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், ஆலன் ட்யூரிங் தான் யோசித்தார்: “இதற்கு சிந்திக்கக் கற்றுத்தர முடியுமா?” என அவர் தான் AIக்கு விதை போட்டார் என்கிறார்கள்.


அதற்கு பிறகு மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து… இடைக்காலத்தில் தொய்வையடைந்து… கணிப்பொறியின் வளர்ச்சி பெரிதாக மாறிய பிறகு மீண்டும் வேகமெடுத்து தான், இப்பொழுது மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது.


பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியில் இருப்பது போல, நமது வரித்துறைகளிலும் AI உள்ளே வந்து வருடங்கள் கடந்துவிட்டது என்பதை நாம் புரிந்திருக்கிறோம்.   ஆக பல்வேறு தலைப்புகளில் விவாதித்த நாம், இப்பொழுது AI  நமக்கு எப்படியெல்லாம் பயன்படும் என்பதையும் நாம் அறிவது மிகவும் அவசியம். 


நமது வரி ஆலோசகர்கள் சிலரிடம் பேசும் பொழுது, வேலை நெருக்கடியில் இருப்பதால் தான்,  வளர்ச்சிக்கு தேவை என்றாலும் குழு செய்திகளை படிக்க முடியாததை வருத்தமாக பகிர்கிறார்கள். உண்மையில் AI யை கற்றுக்கொண்டு அதை பயன்படுத்தும் பொழுது, நமக்கு சில சிரமமான வேலைகள் எளிதாக முடிகிறது.


ஒரு ஆண்டுக்கு முன்பு சாட் ஜிபிடி குறித்த ஒரு அறிமுக வகுப்பை நமது சொசைட்டியில் திரு. செல்வராஜ் CMA எடுத்தார்.   இப்பொழுது அதன் தொடர்ச்சியாக ஒரு அறிமுக வகுப்பைத்தான் இப்பொழுது நடத்த இருக்கிறோம்.


நான் AI குறித்த நிபுணன் அல்ல!  தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். அதைத்தான் கட்டுரைகளாகப் பகிர்ந்தும் கொண்டிருக்கிறேன். 


இந்த வாரத்தில் சீனியர் வில்லியப்பன் அவர்களை சந்தித்த பொழுது, அவர் AI குறித்து ஒரு ஆன் லைன் வகுப்பில் கலந்துகொண்டு கற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். இன்னொரு உறுப்பினரை சந்திக்கும் பொழுது அவரும் ஒரு வகுப்பில் கற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.


இந்த நேரடிக் கூட்டத்தில் AI குறித்த அறிமுகத்தை ஒரு பறவைப் பார்வையில் பகிர்ந்து, சில நடைமுறை விசயங்களைப் பார்த்த பிறகு கலந்துகொள்ளும் மற்ற உறுப்பினர்களும் தங்களுக்கு உள்ள AI குறித்த அறிவை, அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தை பலரும் கலந்து பேசும் கூட்டமாக மாறினால் மிக்க மகிழ்ச்சி.


மற்றபடி, வழக்கம் போல இந்த ஆண்டும் காலண்டர்கள், டைரியை சொசைட்டி நிர்வாகிகள் விநியோகிக்க இருக்கிறார்கள்.  மகிழ்ச்சி.


வாருங்கள். AI குறித்து அறிவை, அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வோம்.


நன்றி.


- இரா. முனியசாமி,
வரி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721



0 பின்னூட்டங்கள்: