> குருத்து: அமெரிக்கா - மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்!

August 3, 2009

அமெரிக்கா - மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்!


நன்றி : உறையூர்காரன்

முன்குறிப்பு : அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு இல்லாமல் வாழ்வது... உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதற்கு சமம். அமெரிக்காவில் மருத்துவத்திற்கான காப்பீடுத்தொகை மிக மிக அதிகம். வேலை செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் தனது ஊழியர்களுக்கு காப்பீடு எடுத்து விடுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளால், நிறுவனங்கள் கோடிகளில் தொழிலாளர்களை வெளியே பிடித்து தள்ளிவிட்டது. இதனால் தொழிலாளர்களும், பொதுமக்களில் பலரும் மருத்துவ காப்பீட்டை புதுப்பிக்க முடியவில்லை.

அமெரிக்காவில் சுகாதார கொள்கைப் பற்றிய பேச்சு, கடந்த தேர்தலிலேயே எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக, ஒபாமா அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பொழுது... அமெரிக்காவில் மருத்துவம் மிக செலவு பிடிக்கிறது என்றார். கடந்த ஜூனிலும் அமெரிக்காவில் மருத்துவ செலவு வெடிகுண்டைப் போல ஆபத்தானதாக தோற்றமளிப்பதாகவும், மருத்துவ துறையை சீரமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது தான் உண்மையான அமெரிக்கா!

****

அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் எவ்வளவு அதிகம்? மருத்துவ காப்பீட்டுத்துறை நிறுவனங்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றன? வல்லரசு அமெரிக்காவில் மக்கள் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள்? கனடா, பிரான்ஸ், பிரிட்டன், கியூபா நாடுகளில் மருத்துவ நிலைமைகளை மைக்கேல் மூர் எடுத்த சிக்கோ என்ற ஆவணப்படம் விரிவாக விவரிக்கிறது. பதிவர் உறையூர்காரன் அந்த படத்தைப் பற்றி ஒரு நல்ல அறிமுகம் தந்திருக்கிறார். படியுங்கள்.

****


சமீபத்தில் மைக்கேல் மூர் ((Michael Moore) என்பவர் இயக்கிய‌ சிக்கோ (Sicko) என்கிற ஆவணப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. Health Insurance என்கிற பெயரில் அமெரிக்க
மருத்துவத்துறை எப்படி வணிகமயமாக்கப்பட்டது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது அந்த ஆவணப் படம். பீட்டர் என்கிற அமெரிக்கர் தன் காயங்களுக்கு தையல் போடும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த படம்.

அமெரிக்க பிரஜையான பீட்டர் தன் காயத்திற்கு மருத்துவம் பார்க்க மருத்துவரிடம் செல்ல முடியாது. ஏனென்றால் அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லை. ஆனால் இந்த திரைப்படம் பீட்டர் போன்றவர்களைப் பற்றியது அல்ல‌ என்கிறார் இயக்குனர்.அடுத்து ரிக் என்பவர் தன்னுடைய இயந்திர வாள் பட்டறையில் வேலை செய்யும்போது அவருடைய நடுவிரலும் மோதிர விரலும் துண்டாகி போய்விடுகிறது. அவர் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மோதிர விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 18000 டாலரும் நடு விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 60000 டாலரும் செலவாகும் என்கிறார்கள். அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லாததால் தன்னிடம் இருந்த சேமிப்பின் மூலம் 18000 டாலர் கொடுத்து மோதிர விரலை மட்டும் ஒட்டிக் கொள்கிறார். அவருடைய நடு விரல் இங்குதான் உறங்குகிறது என்று ஒரு குப்பைமேட்டை காட்டுகிறார். அமேரிக்காவில் சுமார் ஐந்து கோடி பேருக்கு காப்பீடு இல்லை. ஆனால் இந்த ஆவணப் படம் அவர்களைப் பற்றி இல்லை என்கிறார்.

அடுத்து லாரி மற்றும் டானா ஸ்மித் என்கிற முதிய தம்பதியினர் டென்வர் (கொலராடோ) நகரத்தில் உள்ள தங்கள் மகளின் வீட்டிற்கு சென்று அங்குள்ள பொருள் வைக்கும் அறையில் தங்குகின்றனர். டானா ஒரு பத்திரிக்கை நிருபராகவும் லாரி ஒரு இயந்திர வல்லுனராகவும் பணிபுரிந்து நல்ல பொருளாதார நிலையில் இருந்து அவர்களது ஆறு பிள்ளைகளையும் நல்லபடியாக படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வந்தவர்கள். இதற்கிடையில் லாரிக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது, அடுத்து டானாவை புற்றுநோய தாக்கியது. இவர்கள் மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் Co-pay, deductables என்று அபரிமிதமான பொருளாதார சுமையால் தங்கள சொந்த வீட்டை விற்று தங்கள் மகளின் வீட்டில் அடைக்கலம் தேடி செல்கின்றனர்.தங்கள் மருத்துவ செலவை சமாளிக்க தள்ளாத வயதிலும் உழைக்கும் ஒரு பெரியவர், ஒல்லியாக இருந்ததால் மருத்துவ காப்புரிமை மறுக்கப்படும் ஒருவர், அதேபோல குண்டாக இருந்ததால் காப்புரிமை மறுக்கப்படும் இன்னொரு பெண்மணி, விபத்தில் சிக்கியபின் ஆம்புலன்ஸ் செலவை தர மறுக்கும் காப்புரிமை நிறுவனம், மனசாட்சிக்கு விரோதமாக காப்பீட்டு கோரிக்கைகளை நிராகரிக்க நிர்பந்தபடுத்தப்பட்டதால் பணியை விட்டு விலகும் ஒரு காப்பீட்டு நிறுவன ஊழியர் என பலரின் அனுபவங்களை படம் பிடித்துக் காட்டுகிறார் இயக்குனர். சிறுநீரகத்தில் புற்றுநோய் வந்த ஒருவருக்கு அவரது தம்பி சிறுநீரக தானம் செய்ய முன்வந்தும், காப்பீட்டு நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படும் என்று அவரது அறுவை சிகிச்சைக்கு Experimental என்ற காரணம் கூறி காப்பீடு தரமுடியாது என மறுக்கிறது காப்பீட்டு நிறுவனம். உரிய‌நேர‌த்தில் சிகிச்சைய‌ளிக்க‌ப் ப‌டாம‌ல் அவ‌ர் இறந்துவிடுகிறார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த சிறுநீரக நோயாளியின் மனைவி மருத்துவத்துறையில் பணி புரிபவர் என்பதுதான். ம‌ருத்துவ‌த்துறையில் பணிபுரிப‌வ‌ரின் க‌ண‌வ‌ருக்கே இந்த‌ அவ‌ல நிலையென்றால் சாமானிய‌ர்க‌ளின் நிலையை சற்று நினைத்துப் பாருங்க‌ள்.

அமெரிக்காவின் அண்டைநாடான க‌ன‌டாவிலோ நிலைமை முற்றிலும் த‌லைகீழாக‌ இருக்கிற‌து. அங்கு ம‌ருத்துவ‌ரிட‌ம் செல்வ‌த‌ற்கு நோயாளியாக‌ இருந்தால் ம‌ட்டும் போதும், ப‌ண‌க்கார‌ராக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. மிசிகன் (Michigan) மாநில‌த்தில் வ‌சிக்கும் ஒரு பெண் த‌ன் குழ‌ந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் எல்லைத் தாண்டி க‌ன‌டாவிற்கு சென்று ம‌ருத்துவ‌ம் பார்த்துக் கொள்கிறார். சில‌ அமேரிக்க‌ர்க‌ள் ம‌ருத்துவ‌ செல‌வை ச‌மாளிக்க‌ க‌ன‌டிய‌ர்க‌ளை திரும‌ண‌ம் செய்துக்கொள்வ‌தாக‌ அவ‌ர் கூறுகிறார். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளான அமேரிக்க அரசியல்வாதிகள், கனடாவில் பை பாஸ் அறுவை சிகிச்சைக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என புரளிகளை கிளப்பி பொது நல்வாழ்வு திட்டத்திற்கான கோரிக்கைகளுக்கு ஆப்பு வைக்கிறார்கள்.

அடுத்து இய‌க்குன‌ர் பிரிட்ட‌னுக்கு செல்கிறார். அங்கு ம‌க்க‌ளுக்கு ம‌ருத்துவ‌ சேவை முற்றிலும் இல‌வ‌சமாக‌ அளிக்க‌ப் ப‌டுவ‌தை உண‌ருகிறார். பிரிட்ட‌னில் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணிபுரியும் ஒருவ‌ரைப் பேட்டி காண்கிறார். அவ‌ர் அமெரிக்க‌ ம‌ருத்துவ‌ர்க‌ளைப் போல‌வே வ‌ச‌தியாக‌ வாழுவ‌தையும் சுட்டிக் காட்டுகிறார். அடுத்து ஒரு ம‌ருந்த‌க‌த்திற்கு செல்கிறார். அங்கு ஒரு ம‌ருந்து சீட்டைக்
காட்டி இத‌ற்கு எவ்வ‌ள‌வு செல‌வாகும் என்று கேட்கிறார். அத‌ற்கு ம‌ருந்த‌க‌ உழிய‌ர் 6.60 ப‌வுண்டுக‌ள் ஆகும் என்கிறார். 60 மாத்திரைக‌ள் வாங்கினால் எவ்வ‌ள‌வு ஆகும் என்கிறார்?. அத‌ற்கும் அதே ப‌தில்தான் வ‌ருகிற‌து. 90, 120, 180 என்று எவ்வ‌ள‌வு வாங்கினாலும் 6.60 ப‌வுண்டுக‌ள்தான் ஆகும் என்கிறார். அந்த‌ நோயாளி ப‌தினெட்டு வ‌ய‌துக்குட்ப‌ட்ட‌வ‌ராக‌வோ அல்ல‌து வேலையில்லாத‌வ‌ராக‌வோ இருந்தால் அந்த‌ 6.60 ப‌வுண்டுக‌ள் கூட‌ க‌ட்ட‌வேண்டாம்.

அடுத்து ஒரு ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்கிறார். அங்கு குழ‌ந்தைப் பெற்று விடுபெற்று வ‌ரும் ஒரு த‌ம்ப‌தியிட‌ம் இந்த‌ பிர‌ச‌வ‌த்திற‌கு எவ்வ‌ள‌வு செல‌வான‌து என‌க் கேட்கிறார். அவ‌ர்க‌ள் ஒரு ப‌வுண்டு கூட‌ த‌ங்க‌ள் கையிலிருந்து செல‌வாக‌வில்லை என்கிறார்க‌ள். அந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணிபுரியும் ஒரு ம‌ருத்துவ‌ரிட‌ம் நீங்க‌ள் ஒரு நோயாளிக்கு சிகிச்சைய‌ளிக்கும் முன்ன‌ர் அந்த‌ நோயாளியின் காப்பீட்டு நிறுவ‌ன‌த்திட‌ம் அனும‌தி பெற‌வேண்டுமா என‌ கேட்ட‌தும் அப்ப‌டியெல்லாம் ஏதுமில்லையென்றே ப‌தில் வ‌ருகிற‌து. அந்த‌ ம்ருத்துவ‌ம‌னை முழுதும் அலைந்து திரிந்து Cashier என்று எழுதியிருக்கும் ஒரு இட‌த்தை க‌ண்டுப்பிடிக்கிறார். அங்கு இருப்ப‌வரிட‌ம் சென்று இந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனைத்து வித‌மான‌ சிகிச்சைக‌ளும் இல‌வ‌ச‌ம் என்னும்ப‌ட்சத்தில் எத‌ற்காக‌ ஒரு காசாள‌ர் என வின‌வுகிறார். "உட‌ல் நிலை மிக‌வும் மோச‌மாக‌ இருக்கும் சில‌ர் ம‌ருத்துவம‌னைக்கு வாட‌கையுந்தில் வ‌ந்தால் அந்த‌ வாட‌கையுந்திற்கு அவ‌ர்க‌ள் செல‌வ‌ழித்த‌ ப‌ண‌த்தை அவ‌ர்க‌ளுக்கு திருப்பித் த‌ர‌வே இங்கு நான் உள்ளேன்" என்கிறார் அந்த‌ காசாள‌ர்.

அமெரிக்காவில் ப‌ணிப்புரிந்த‌ ஒரு பிர‌ஞ்சு பிர‌ஜையின் க‌தையை அடுத்த‌தாக‌ விவ‌ரிக்கிறார் இய‌க்குனார். ப‌திமூன்று ஆண்டுக‌ளாக‌ அமெரிக்காவில் பணிபுரிந்த‌ அவ‌ரிட‌ம் அமெரிக்க‌ ம‌ருத்துவ காப்பீடு எதுவும் இருக்க‌வில்லை. ஒருநாள் அவ‌ர் புற்றுநோயால் தாக்க‌ப்ப‌டுகிறார். அமெரிக்காவில் சிகிச்சைப் பெற‌முடியாம‌ல் பிரான்சுக்கு திரும்புகிறார். அவ‌ர் பிரெஞ்சு அர‌சுக்கு வ‌ரியென்கிற‌ பெய‌ரில் ஒரு சென்ட் கூட‌ செலுத்திய‌தில்லை. அவ‌ரிட‌ம் பிரெஞ்சு ச‌மூக‌ பாதுகாப்பு எண் கூட‌ இருக்க‌வில்லை. ஆனாலும் அவருக்கு பிரெஞ்சு ம‌ருத்துவ‌ம‌னையில் இலவசமாக சிகிச்சைய‌ளிக்கப்ப‌டுகிற‌து. மூன்று மாத தீவிர சிகிச்சைக்கு பிற‌கு அவ‌ருடைய‌ ம‌ருத்துவ‌ரை சந்திக்கிறார். இப்போது நீங்க‌ள் ப‌ணிக்கு திரும்ப‌ இய‌லுமா என்று ம‌ருத்துவ‌ர் வின‌வ‌, அத‌ற்கு சிறிது கால‌ம் என‌க்கு ஒய்வு தேவைப்ப‌டும் என‌ அவ‌ர் கூற‌. உட‌னே அந்த‌ ம‌ருத்துவ‌ர் அந்த‌ நோயாளிக்கு மூன்று மாத‌ ஒய்வு தேவைப்ப‌டும் என்று குறிப்பெழுதி அர‌சுக்கு அனுப்புகிறார். அவ‌ர‌து மூன்று மாத‌ ஒய்வுகால‌த்தில் அவ‌ர‌து ச‌ம்ப‌ள‌த்தின் 65 ச‌த‌விகித‌த்தை அர‌சு அவருக்கு வ‌ழ‌ங்குகிற‌து.

இன்னொரு பிரெஞ்சு பெண்ம‌ணிக்கு அவ‌ர‌து பிர‌ச‌வ‌த்திற்கு பிற‌கு செவிலியாக‌ ஒரு பெண்ணை பிரேஞ்சு அர‌சே நிய‌மிக்கிற‌து. வார‌த்திற்கு நான்கு ம‌ணிநேர‌ம் அந்த‌ செவிலிப்பெண் அந்த‌ தாய்க்கு உத‌வி புரிகிறார்.

அடுத்து வருவதுதான் அமெரிக்க முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல் காயிதா தீவிரவாதிகளாக் நியூயார்கின் வர்த்தக மையம் தகர்க்கப்பட்டபோது மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்கிற காரணத்தினால் அவர்களது மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாண அரசுகள் மறுத்துவிடுகின்றன. அதேசமயத்தில் 9/11 சதிவேலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலையில் சர்வதேச தரமான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகின்றன.

இயக்குனர் மூர் இந்த தன்னார்வலர்களை ஒரு படகில் ஏற்றிக் கொண்டு குவான்டனாமோ பேயிற்கு புறப்படுகிறார். குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலை எல்லையில் நின்று இவர்கள் 9/11 தாக்குதலின்போது சேவை செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு கைதிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையை அளியுங்கள் என்று கூக்குரலிடுகிறார். ஆனால் பாவம் கேட்பார் யாருமில்லை.

அவர்கள் நால்வரும் எல்லைதாண்டி க்யூபாவிற்குள் நுழைகிறார்கள். அங்குள்ளவர்களிடம் விசாரித்து ஒரு மருத்துவமனைக்கு செல்கிறார்கள், அங்கு அவர்களின் பெயர், பிறந்த தேதி
மட்டும் பதிவேட்டில் எழுதிவிட்டு இலவசமாக சிகிச்சையளிக்கிறார்கள். மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்த கம்யூனிச தேசம்தான் அமேரிக்கர்கள் மத்தியில் ரவுடி தேசம் அமேரிக்க அரசியல்வாதிகளால் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்பதை உணர்கிறார்கள்.அடுத்து மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்குகிறார்கள். அமேரிக்காவில் 120 டால்ருக்கு விற்கப்படும் ஒரு மருந்து அங்கு வெறும் 5 சென்டுக்கு கிடைப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இலவசமாக அளிக்கப்படும் மருத்துவ சேவை அமெரிக்காவில் மட்டும் ஏன் வியாபார மயமாக்கப்பட்டது என்கிற கேள்வியுடன் முடிகிறது இந்த ஆவணப்படம்.இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஒடும் இப்ப‌ட‌த்தின் ஒரு சில‌ முக்கிய‌ ப‌குதிக‌ளையே நான் ப‌திந்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் முழுப் ப‌ட‌த்தையும் பாருங்க‌ள்.அமேரிக்கா போன்ற வ‌ல்ல‌ர‌சு நாட்டில் வாழ்வ‌தைவிட‌ பிரான்சு, க்யூபா போன்ற‌ ந‌ல்லர‌சு நாட்டில் வாழ்வதே ம‌னிதாபிமான‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளின் விருப்ப‌மாக‌ இருக்க‌க்கூடும்.

***

பின்குறிப்பு : இந்த படம் ஜுன் 2007ல் வெளிவந்தது. பொருளாதார நெருக்கடி துவங்குவதற்கு முன்பே அமெரிக்காவில் இந்த நிலைமை என்றால்... தொடங்கிய பிறகு நிலைமையை நம்மால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.



தொடர்புடைய பதிவுகள் :







4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

very very good information. relevant to our times ''

thanks

Sri said...

good information.

We got our daughter's one vaccination in india - total cost was Rs.1000 incl Dr fees - when we showed that record to the dr. in us she was shocked and said the same would've cost at least 500$ for just the vaccine in US (from same vaccine producer - sanofi aventis)

Srini

kalagam said...

மிகச்சிறப்பான விமர்சனம்,

சொர்க்கங்கள் கிழிந்து விட்டன
மனித நரம்புகளால்
தையல்கள்
தசைகளால் ஒட்டுகள்
எலும்புகளால்
தாங்கிகள்.......

ஆம் கிழிந்து போன சொர்க்கங்கள்
ஒவ்வொன்றாய் புதுப்பிக்கப்
படுகின்றன எங்களை
னரகத்துக்கு அனுப்பியவாறே.

kalagam.wordpress.com

மு. மயூரன் said...

ஊஊஊஊவ்! சோசலிசம்!! (SiCKO பற்றிய குறிப்பு)