> குருத்து: 2013

December 15, 2013

தில்லை கோயிலை தீட்சிதர்களுக்கு தாரை வார்க்காதே!


December 13, 2013

வாடகைக்கு குடியிருப்போர் கிரிமினல்களா?





தொடர்பான சுட்டி :

2013 டிசம்பரில் இந்த உத்தரவு குறித்த நீதிமன்ற நடவடிக்கை!

வாடகைதாரர் விவரம் கேட்கும் விவகாரம் : கமிஷனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


2012ல் மனித உரிமை பாதுகாப்பு மையம் போராடி பெற்ற வெற்றி :


வாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு – HRPC வழக்கில் தீர்ப்பு !!

December 8, 2013

பெயர் தெரியாத பாட்டி!

எங்கள் வீட்டிற்கு நேர் எதிர்வீடு.  எங்கள் வீட்டு சாவியை அவர்களிடம் தான் கொடுப்பதும் வாங்குவதுமாய் அவர்கள் உதவுவார்கள்.

அவர்களுடைய வீட்டின் கதவுக்கு அருகே கால்மிதி போடும் இடத்தில் ஒரு பாட்டி பரிதாபமாக அமர்திருப்பார். வயது எப்படியும் 75ஐ தாண்டும். கழுத்தில் பெரிய கட்டி.  அவர் பேசி நான் பார்த்ததில்லை. முகத்தில் ஒருவித இறுக்கத்தோடு இருப்பார்.  எவ்வளவு வெயில் அடித்தாலும் அந்த வெட்கையில் அதே இடத்தில் அமர்ந்திருப்பார்.  வீட்டிற்குள் போக அனுமதியில்லை.

பழகுகிற பக்கத்து வீட்டுக்காரர்கள் உரிமையோடு பெத்த அம்மாவை இப்படி பாடாய்படுத்தாதீர்கள்! என திட்டுவதை கவனித்திருக்கிறேன்.  அந்த வீட்டுக்காரரோஅதையெல்லாம் சட்டையே செய்வதில்லை.  திடீரென அந்த பாட்டி சில மாதங்கள் காணாமல் போய்விடுவார்.  கேட்டால், அண்ணன் வீட்டில் இருக்கிறார் என்பார்கள்.  அண்ணன் ஆறுமாதம்.  தம்பி ஆறுமாதம் கணக்கு போல!

எங்கள் வீட்டில் அப்பாவின் தாயார் 95 வயதுவரை இருந்தார்.  அவருடைய நடுத்தர வயதில் காசு இருந்த பவுசில் ஒரு மோசமான மாமியாராக அம்மாவை நிறைய தொல்லை செய்திருக்கிறார். தன் பெண் பிள்ளைகளுக்கு நிறைய செய்முறைகள், பண உதவி செய்திருக்கிறார்.  ஆனால், அப்பாவிற்கு பெரிதாய் செய்யவில்லை.  அதற்கு பிறகு பெண் பிள்ளைகள் யாரும் வசதியாய் இல்லை. அதனால், வயதான பிறகு மகன் வீட்டில் இருக்க வேண்டிய நெருக்கடி நிலை. கடந்த முப்பது ஆண்டுகளாக எங்கள் வீட்டில் தான் இருந்தார். அம்மா மாமியாரை பாதுகாத்தாலும், இளவயதில் அனுபவித்த தொல்லைகளால் தன் மாமியாரை திட்டிக்கொண்டே இருப்பார். அப்பொழுதெல்லாம் அம்மாவிடம் பழசையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இப்படி நடக்காதீர்கள் என கடுமையாக சண்டையிடுவேன். அம்மா அமைதியாகிவிடுவார். அதற்கு பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார்.

நம் வீடுகளில் வயதாகிவிட்டால் அவர்களுடைய இருப்பு நமக்கு பயன்படுவதில்லை. தொல்லையாகிவிடுகிறார்கள். பெரும்பாலும் வசதி இருந்தால் தான் மதிக்கிறார்கள். வயதானவர்களுக்கு என்று சமூக பாதுகாப்பு என்று எதுவும் இல்லை. பென்சன் இல்லை. எல்லாம் காசு என்ற இந்த சமுதாயத்தில் உறவுகள் சிக்கலாகிவிடுகின்றன. வயதான பிறகு சுயமரியாதை இல்லாமல் வாழ்வது என்பது பெரிய உளரீதியான சிக்கல் தான்.

இரண்டு நாள்கள் ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்து சாவி கேட்கும் பொழுது, அந்த பாட்டி இறந்துபோன செய்தியை அவர் மகன் சொன்னார்.  ஒரு வாரம் முடியாமல் இருந்தாராம்.  கடைசி இரண்டு நாள் சாப்பாடு எதுவும் சாப்பிடவில்லையாம். பிள்ளைகள், பேரன்,பேத்திகள் எல்லோரும்  வந்து பார்த்தார்கள்.  இறந்த இறுதிநாளில் பால் தருகிறோம் என எவ்வளவு வறுபுறுத்தினாலும், அந்த பாட்டி குடிக்கவேயில்லையாம். மறுத்துவிட்டார்களாம்.  இறந்துவிடலாம் என முடிவு செய்துவிட்டார் போல!

நீங்கள் எத்தனை பிள்ளைகள் என்றேன்? மொத்தம் 6 பிள்ளைகள். பசங்க மூவர். பெண்கள் மூவர் என்றார்.   இத்தனைப் பிள்ளைகளை பெற்றுமா, கால்மிதி போடும் இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள் என நினைத்த பொழுது, ஓங்கி மூக்கில் குத்தலாம் போல இருந்தது. 

பாட்டிக்கு எனது அஞ்சலிகள்! 

மழை!

கடையில் பலசரக்கு வாங்கும் பொழுது... ஒரு நடுத்தர வயது அம்மா கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

"மழை பெய்தால், எங்கள் வீட்டில் எல்லா பக்கமும் ஒழுகும். வீட்டிற்கு வந்த தண்ணியை அள்ளி அள்ளி வெளியில் ஊத்துவதற்கே வேலை சரியாக இருக்கும். மழை பெய்யும் நாளில் சமைக்கமுடியாது. அன்னைக்கு பட்டினி தான். தூங்கமுடியாது. ஏதாவது குறைஞ்ச வாடகைக்கு ஒரு சின்ன அறையா, ஒழுகாம இருந்தா போதும்! நானும் என் இரண்டு பிள்ளைகளும் இருந்துக்கிருவோம். ஒரு வீடு பார்த்து சொல்லுங்க" என்றார்.

December 4, 2013

மருத்துவர் கோவன்!

நேற்று பாடியில் இருக்கும் ஹோமியோபதி மருத்துவர் சத்தியநாராயணனை பார்க்க போயிருந்தேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வரும் அப்ரோச்‍-சின் ஆண்டு விழாவிற்கு அழைப்புவிடுத்தார்.

அதில் ஒரு நிகழ்ச்சியாக, மக்களுக்கு இல்வசமாக ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவரும் மக்கள் மருத்துவர்களை கண்டறிந்து கெளரவிக்கிறோம். இந்த ஆண்டு ஒரு விவசாயியாக இருக்கும் ஒருவர் களத்துமேட்டிலேயே தன்னைத் தேடிவரும் விவசாய மக்களுக்கு இலவசமாக ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவருகிறார். அவரை அழைத்து வந்து கெளரவிக்கிறோம் என்றார்.

அடுத்த ஆண்டு திருச்சியில் 9 ஆண்டுகளாக உழைக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வரும் மருத்துவர் கோவனை கெளரவிக்க இருக்கிறோம் என்றார். அவரிடம் மருத்துவம் பார்த்த மக்களில் சிலர் எங்களிடம் தெரிவித்தனர் என்றார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியை பார்த்திருக்கிறீர்களா என்றேன். நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை என்றார். அந்த குழுவின் மையப்பாடகர் தான் தோழர் கோவன் என்றேன். ஆச்சர்யப்பட்டார்.

சில மைய வேலைகளின் பொழுது கோவன் தோழரிடம் மருந்து வாங்கி குணமானவர்களில் நானும் ஒருவன்!

நாம் அறிந்த தோழரை வேறொரு ஆளுமையாக நமக்கே அறிமுகப்படுத்துவதில் சந்தோசம் தான்!

December 3, 2013

மழைக்கு கூட ஒதுங்காதவர்கள்!

தினகரன் பத்திரிக்கை செய்தியில், "ஒரே ஒரு பக்தரை வைத்துக்கொண்டு, மழைக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்காதவர்கள் போராட்டம் செய்கிறார்கள்" என ஆலய பாதுகாப்பு குழு என்ற பெயரில் தீட்சிதர் கும்பல் சொல்கிறது.

தமிழ் தீட்டுமொழி என்று அறிவிக்கும் தீட்சிதர்களின் திமிரை ஒடுக்கவும், கொள்ளை போகும் மக்களுக்கான தில்லை கோயிலை மக்களுக்கே மீட்டுக்கொடுப்பதற்காகவும், மழையில் கூட கோயிலுக்கு ஒதுங்காத தோழர்கள் இப்பொழுது அடாத மழையிலும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் போராடியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

பக்தர்களாகிய மக்கள் தங்கள் கோயிலுக்காக  போராட்ட களத்திற்கு வரும் வரை தான், மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களுக்கும், நக்சல்பாரி தோழர்களுக்கும் அங்கு வேலை! மக்களுக்காக காத்திருக்கிறார்கள் தோழர்கள்!

November 22, 2013

இரயில் சிநேகம்!

தென்னிந்தியா முழுவதும் சுற்றி வந்து, இருபத்தைந்து வருடங்கள் லிப்ட் விற்பனை & சேவை பிரிவில் வேலை பார்ப்பவர் ஒருவர். 

சென்னையில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் வேலை செய்யும் ஒருவர்,

தேசிய வங்கியில் அலுவலக உதவியாளராக  வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவர். இவர்களோடு நானும் ரயிலில் பேச துவங்கும் பொழுது இரவு 10 மணி.

அதில் சில..

"இனி விவசாயத்தை நம்பாதீர்கள்.  அதிலிருந்து வெளியே வாருங்கள்" என எப்பொழுது மன்மோகன் சொன்னாரே, அப்பொழுதே வெறுத்துவிட்டேன். இந்த ஆள் மகா திருடன்! என!"

"எங்க பகுதியில் விதை கிடைக்காத பயிர்கள் பயிரிட கிடைத்த பொழுது, பதறி போய்விட்டேன்.  நிலங்களை மலடாக்குகிறார்களே!" என!

"இரவெல்லாம் முழிச்சிருந்து, அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் நமது பெண்கள் வேலை செய்கிறார்களே! அவர்களுடைய உடல் என்ன ஆகும்?"

"எங்க அம்மாவை தவிர யாரையும் நம்பமாட்டேன் சார்!"

கர்மா, பாசிட்டிவ் சிந்தனை, ஓஷோ, கம்யூனிசம் தோற்றுப்போனதா, பா.ஜனதா மாற்று இல்லை என பல தளங்களிலும், உலகம் சுற்றி வந்த பொழுது, இரவு 12.30 மணி.

நாங்கள் இருந்தது 1 முதல் 8க்குள்.  32 எண்ணுள்ள படுக்கையிலிருந்து ஒரு பெரியவர் எழுந்து வந்து, நீங்க பேசறதுல எனக்கு தூக்கம் வரல்ல! ப்ளீஸ் என்றார்.  அதற்கு பிறகும் மெதுவாக விவாதித்து தூங்கும் பொழுது இரவு 1.30 மணி.

வள!வள! என பேசிக்கொண்டிருந்த ஒருவர் தான் விவாதத்தை துவக்கி வைத்தவர்.  நான் பேசினால் பேசுகிற ஆள்!

இந்த விவாதம் பயனுள்ளதாக இருந்தது. இப்படி விவாதித்து பல மாதங்கள் ஆயிற்று! என்றார்கள் இருவர். எனக்கும் தான்!


November 20, 2013

வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்! ‍ பொதுக்கூட்டம்!


November 11, 2013

’மைலார்ட்’ என அழைப்பதை தடை செய்யவேண்டும்!

நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகளை "மை லார்ட்' மற்றும் "யுவர் லார்ட்ஷிப்' என்று வழக்குரைஞர்கள் குறிப்பிடுவது அடிமைத்தனத்தைக் எடுத்துக் காட்டுகிறது போல் உள்ளதால் அந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 75 வயதான வழக்குரைஞர் சிவ் சாகர் திவாரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழûற்ம விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், "எந்த அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த கூடாது என்று இந்தியாவில் எந்த நீதிமன்றமாவது நிர்பந்தித்துள்ளதா?' என்று கேள்வி எழுப்பினர்.

இந்த மனு மீதான விசாரணையில் பங்கேற்பதில் இருந்து நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகிக் கொள்வதாக கூறினார். (எனினும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை).

அதையடுத்து, வேறு அமர்வுக்கு இந்த மனுவை மாற்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் உத்தரவிட்டார்.

மனுவின் விவரம்: ஆங்கிலேயர் காலந்தொட்டு பயன்படுத்தப்படும் "மை லார்ட் மற்றும் "யுவர் லார்ட்ஷிப்' என்ற வார்த்தைகளைப் பிரயோகம் செய்ய கூடாது என்று இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் 2006ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாத காரணத்தால் உச்ச நீதிமன்றம் எனது மனுக்களை தள்ளுபடி செய்கிறது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தினமணி, 12/11/2013


**** 
வழக்கினை விசாரித்த நீதிபதிகள், நீதிபதி 'மைலார்ட்' என அழைக்க வேண்டும் என நாட்டில் உள்ள எந்த கோர்ட்டும் வக்கீல்களை வற்புறுத்தவில்லை. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடி செய்தனர்.

- தினமலர்




November 8, 2013

முதலாளி ‍ - ஒரு குட்டி (உண்மை) கதை!

"ஷீ" கடை நடத்தி, லாபம் சம்பாதித்த ஒரு சிறுமுதலாளி, தோல் ஷீக்களை நாமே தயாரித்தால் என்ன என யோசித்து ஒரு தொழிற்சாலையை லீசுக்கு எடுத்து ஒரு சுயபோக சுபதினத்தில் துவங்கினார். 100 தொழிலாளிகள் வரை வேலைக்கு அமர்த்தினார்.

கணக்கு () வேலைகள் பார்க்க எங்கள் நிறுவனத்தை அமர்த்தினார். மாதம் இரண்டு முறை அல்லது மூன்று முறை அந்த நிறுவனத்திற்கு போய்வந்தேன். அப்பொழுது அந்த‌ சிறு முதலாளி அதுவும் புது முதலாளி காட்டிய பந்தா இருக்கிறதே! தாங்கமுடியவில்லை! பொதுவாக நான் பார்த்த வரையில் தொழில் துவங்குகிற‌ பொழுது, சிறுமுதலாளிகள் கொஞ்சம் சிநேகமாய் பழகுவார்கள்.  தொழில் வளர வளர நெருக்கத்தை குறைந்து கொண்டே வருவார்கள். ஆனால், இவரோ துவக்கத்திலேயே செய்த பந்தா கொஞ்சம் ஓவராய் இருந்தது.

துவக்கத்தில் சில மாதிரிகள் தயாரித்து ஐரோப்பாவில் இரண்டு நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். மீண்டும், இன்னும் சில மாதிரிகள் அனுப்ப சொன்னார்கள். அனுப்பினார்.  பொருளாதார மந்தத்தினால், பல நாடுகள் தள்ளாட, அவர் எதிர்ப்பார்த்த ஆர்டர்கள் வரவில்லை. 

கையில் உள்ள முதலீடு குறைய, குறைய முகம் வாட ஆரம்பித்தது. தொழிலாளர்களை குறைத்துப் பார்த்தார். உள்ளூரில் ஏதேனும் 'லேபர் வேலை' எடுத்து செய்ய ஆரம்பித்தார். கட்டுபடியாகவில்லை.

வங்கி கடன் அவரை நெருக்கியது.  குடியிருந்த சொந்த வீட்டை அடைமானம் வைத்தார். பந்தா கொஞ்சம் கொஞ்சமாய் ஆவியாக ஆரம்பித்தது.

நானும் எங்கள் எம்.டியும் போகிற பொழுதெல்லாம், தன் துயரங்களை கொட்ட ஆரம்பித்தார். இன்னும் இரண்டு மாதங்களில் இரு ஆர்டர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக சொல்லி, அந்த நிறுவனத்தில் பங்கு தாரராக இணைய சொல்லி கேட்டார். இல்லையில்லை. கெஞ்சினார். அடுத்த மாதத்திலிருந்து எங்கள் எம்.டி. வருவதை நிறுத்தினார்.

அடுத்த இரண்டு மாதத்தில் கவலை, துக்கம், சோகம் எல்லாம் சேர்ந்து, தாடி கூட வளர்க்க ஆரம்பித்தார்.  வீட்டை விற்றார்.  தங்கள் பிள்ளைகள் கூட தன்னை மதிப்பதில்லை என யாரிடமோ போனில் புலம்பிக்கொண்டிருந்தார்.

சரியாக ஒரு வருடம். எப்பொழுதும் போல், அங்கு போனால், நிறுவனம் மூடியிருந்தது. விசாரித்த பொழுது கடன்காரர்களின் நெருக்கடியால், முதலாளி தலைமறைவாகிவிட்டார் என்றார்கள்.

October 24, 2013

மோடியை அம்பலப்படுத்தும் அரங்க கூட்டம்! அனைவரும் வருக!

சென்னையில் மழைக் காலம் தொடங்கி விட்ட நிலையில், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்த முடியாத சூழலில், எம்.ஜி.ஆர் நகரில் நடைபெறவிருந்த பொதுக் கூட்டம் அரங்க கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இடம் மாற்றம் குறித்த விவரம் கீழே,
இந்து மதவெறி பாசிஸ்டு 
இந்தியாவின் ராஜபக்சே

மோடியின் முகமூடியைக் கிழித்தெறியும்

அரங்க கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை  மாலை 6 மணிக்கு

புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபத்தில்

(ஓட்டல் தாச பிரகாஷ், பூந்தமல்லி சாலை, புரசைவாக்கம் எதிரில், சங்கம் தியேட்டர் அருகில்)
நடைபெறும்.

        “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி”

என்ற திருச்சி பொதுக் கூட்டத்தில் தோழர் மருதையன் பேசிய உரை அடங்கிய
நூல் வெளியிடப்டும்.
இடம் மாற்றத்தை நண்பர்கள் மத்தியில் பரவலாக பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
உரையாற்றுவோர் :

தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க

வழக்குரைஞர் பாலன், பெங்களூரு உயர்நீதி மன்றம்

புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு
மோடி போஸ்டர்
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

October 17, 2013

நீரோ மன்னன் தமிழில் இல்லையா?

சமீபத்தில் ஒரு வாசகர், எழுத்தாளர் ஒருவரைப் பிடி பிடியென்று பிடித்துவிட்டார்.

அவர்களுக்குள் நடந்த கடிதச் சமரில் வாசகர் தான் வெற்றி பெற்றார். அந்த எழுத்தாளர் கொடுங்கோன்மைக்கு உதாரணமாக நீரோ மன்னனைக் காட்டியிருந்தார். அவன் தாயைக் கொன்று, மனைவியைக் கொன்று சகோதரனையும் கொன்றான். கடைசியில் அரிய தத்துவ மேதையான அவனுடைய குரு சேனகாவையும் கொன்றுவிட்டான். இவன் தான் ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்தவன்.

வாசகருக்கு பற்றிவிட்டது. கொடுங்கோல் மன்னன் என்றால் நீரோ மட்டும் தானா?

தமிழில் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள். அவர்களை சொல்லலாமே. ஏன் சங்ககாலத்தில் கூட நன்னன் என்ற மன்னன் கொடுங்கோலாட்சி செய்திருக்கிறான். நீராடப் போன பெண் நீர் இழுத்து வந்த பசுங்காயை தெரியாமல் உண்டுவிட்டாள். மன்னன் அதற்கு தண்டனை விதித்தான். அவள் இழப்பீடாக 81 யானைகளும், அவள் எடைக்கு எடை பொன்னும் தருவதாகச் சொல்லியும் மன்னன் திருப்தியடையாமல் அவளைக் கொன்றான். இவ்வளவு சிறப்பான அரசர்கள் இருந்தும் கொடுங்கோல் தன்மையில் தமிழ்நாடு குறைவானது என்று சொல்லியது இவருடைய ரத்தத்தை சூடாக்கிவிட்டது. இவருடைய தேசப்பற்றும், அதை முந்திக்கொண்டு வந்த தமிழ் பற்றும், அதை முந்திக்கொண்டு வந்த சங்கப் பாடல் பற்றும் என் பக்கத்தில் நிற்பவர் மயிரைக்கூட சிலிர்க்கவைக்கும்.

‍வாசகர் கடிதம், அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரையிலிருந்து!

October 16, 2013

"மேற்கு வங்கத்தில் விவசாயிகள் மீது ஆயுதம் தாக்குதல் நடத்தினீர்களே! அது தவறல்லவா!"

நேற்று பெண்கள் விடுதலை முன்னணியினரை சேர்ந்த தோழர்கள் தி.நகரில் மோடி வருகையை எதிர்த்த பொதுக்கூட்டத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வசூலில் ஈடுபட்டிருந்ததை கவனித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அருகில் வந்து "மேற்கு வங்கத்தில் விவசாயிகள் மீது ஆயுதம் தாக்குதல் நடத்தினீர்களே! அது தவறல்லவா!" என்றார்கள்.

'நீங்கள் சிபி.எம் என எங்களை நினைத்துவிட்டீர்கள். நாங்கள் தேர்தலில் பங்கெடுக்காத எம்.எல். அமைப்பு என்றதும்' "ஸாரி" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.

இப்படி மக்களே தவறு செய்த கட்சிகளை நேரிடையாக கேட்பது எவ்வளவு அருமையான விசயம்!

September 26, 2013

இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” - ஆர்ப்பாட்ட செய்திகள்!


”இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞ்ர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதன் ஒரு பகுதியாக, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் தோழர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.பு.மா.இமு-வின் சென்னை மாவட்ட இணைச்செயலாளர் தோழர்.சேட்டு கண்டன உரையாற்றினார். 10 பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

திருச்சி வேர்ஹவுஸ் பாலத்தின் அருகில் காலை 11.30 மணியளவில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் தலைமையில் 19 பெண்கள் உட்பட 120-க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர். அனைத்து தோழமை அரங்கின் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் கூடி நின்று நோட்டீஸ்களை வாங்கிப் படித்தனர்.

September 11, 2013

வட சென்னை : நாசமாகிறது நிலத்தடி நீர்! களமிறங்கி போராட வாருங்கள்!

எண்ணெய் கிடங்கானது போர்வெல்!
நாசமாகிறது நிலத்தடி நீர்!


BPCL நிர்வாகமே!! மத்திய அரசே!

எண்ணெய் கசிவை உடனே நிறுத்து!
“கணக்கு காட்டாமல்”
மக்களின் தேவைக்கு நீர் வழங்கு!

தமிழக அரசே!

மண்ணையும் நீரையும் மாசுப்படுத்திய
எண்ணெய் நிறுவனங்களிடம் அபராதம் வசூலித்து
பாதிப்படைந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கு!
மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்!

பகுதிவாழ் மக்களே!

களமிறங்கி போராடுங்கள்!
இணைந்து போராட காத்திருக்கிறோம்!

தொடர்புக்கு :

வழக்கறிஞர் மில்டன் - 9842812062
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை

September 5, 2013

உயர்நீதிமன்றத்தில் தமிழ்! தமிழக வழக்கறிஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!!


உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் அவரவர் தாய்மொழியிலேயே நீதிமன்றங்கள் நடக்கிறது!

மக்களுக்குத் தெரிந்த மொழியில் – அவரவர் தாய்மொழியில் நீதிமன்றம் நடைபெறுவதே
ஜனநாயகம்!

நீதிமன்றங்கள் மக்களுக்கானது!
மக்களுக்கு நீதி வழங்குவதற்கானது!
நீதிபதிகள்-வழக்கறிஞர்களுக்கு வேலை
அளிப்பதற்கு உருவாக்கப்பட்டதல்ல!

வழக்காடியும் தமிழன்!
வக்கீலும் தமிழன்!
நீதிபதியும் தமிழன்!
இடையில் எதற்கு ஆங்கிலம்?
யார் நலனுக்கு ஆங்கிலம்?

ம.பி. – உ.பி, ராஜஸ்தான் – பீகாரில்
1961-லிருந்து இந்தி உயர்நீதிமன்ற மொழி!
தமிழகம்,மேற்கு வங்கம்,குஜராத் மக்களின்
கோரிக்கைகள் மட்டும் கிடப்பில்!
ஏன் இந்தப் பாரபட்சம்?

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும்
தங்கள் தாய்மொழியில் உயர்நீதிமன்றங்களில் வழக்காட அனுமதிக்கப்பட வேண்டும்!

ஆங்கிலேயன் போய் 65 ஆண்டுகள் ஆன பின்பும்
தமிழில் வாதிட போராட்டம் நடத்த வேண்டியிருப்பது அவமானம்! அவமானம்!!

ஐந்து முறை முதல்வராயிருந்து-நடுவண் அரசில்
தொடர்ந்து அங்கம் வகித்த அய்யாவும்!
2010 வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது எதிர்கட்சித் தலைவராயிருந்து- நான் ஆட்சிக்கு வந்தால் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவேன்- என உறுதிமொழியளித்த அம்மாவும்!

என்ன செய்யப் போகிறார்கள் தமிழுக்காக?
தங்கள் கட்சியின் கோடான,கோடித் தொண்டர்களை
வீதியில் இறங்கி போராடச் செய்வார்களா?

குறைந்தபட்சம் அரசு வழக்கறிஞர்கள் தமிழில்
வாதிட ‘அம்மா’ உத்தரவிடுவாரா?

சாகும் வரை உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம்,மறியல் முற்றுகை,கருத்தரங்கம்
பொதுக்கூட்டம்,நீதிமன்றப் புறக்கணிப்பு
சிறை சென்று போராட்டம்
டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் என்ற தொடர்
போராட்டத்தில்...............இன்று மதுரை முதல்
சென்னை வரை வாகனப் பேரணி.......... வெற்றியடைந்து......தமிழ் உயர்நீதிமன்ற
மொழியாக அறிவிக்கப்படும் வரை..............
  
தொடர்ந்த பயணத்தில்.......... 
-----------------------------------------------------
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

தொடர்புக்கு:
வழக்கறிஞர் மில்டன், சென்னை உயர்நீதிமன்றம்.(9842812062) 
வழக்கறிஞர் வாஞ்சி நாதன் மதுரை உயர்நீதிமன்றம்.(9865348163)

September 3, 2013

துக்கமும் சந்தோஷமும்!

நேற்று பெய்த கனமழையும், காற்றும் எங்க வீட்டு உயரமான முருங்கை மரத்தை சாய்த்துவிட்டது.  :(

சாய்ந்த மரத்தை வெட்டியதில், நண்பர்கள் இருவருக்கு கன்றுகளாய் கொடுத்தாயிற்று! :)

September 1, 2013

வாஸ்து கொல்லும்!

வாஸ்து கொல்லும்!

சென்னை செங்குன்றத்தில் அழகுநிலையம் துவங்க, அப்பாவும், பொண்ணும் பூஜை போட்டிருக்கிறார்கள். பூஜையில் கலந்துகொண்ட பகுதியில் அறிமுகமான  நண்பர், வாஸ்து பெயர் பலகை இப்படி இருக்க கூடாது என சொல்லியிருக்கிறார். அப்பா, பொண்ணு, வாஸ்து சொன்னவர், இன்னொருவர் என நால்வரும் அதை திருப்பியிருக்கிறார்கள்.

திருப்பும் பொழுது, 1100 வோல்டேஜ் போன மின்கம்பியில் தட்ட, நால்வரும் ஸ்பாட்டிலேயெ உயிரை விட்டிருக்கிறார்கள். வாஸ்துவின் நுணுக்கம் தெரிந்தவருக்கு மின்சாரத்தை தொட்டால் உயிர் போகும் என கவனமாய் வேலை செய்யாமல் போய்விட்டார். அதன் இயல்பில் அப்படியே கூட விட்டிருக்கலாம். இப்பொழுது வாஸ்து படி வைக்கிறேன் என நாலு பேர் மனித உயிர்கள் அநியாயமாக போய்விட்டது.

விசேசத்திற்கு வருகிறவர்கள் தங்களுடைய அறிவை காட்டுகிறேன் என எப்பொழுதும் இப்படி ஒருவர் இருவர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடை திறப்பில் விபரீதம் : மின்சாரம் பாய்ந்து நால்வர் பலி! - தினமணி


August 31, 2013

காலையிலேயே பல்பு! :)

பக்கத்து வீட்டிலிருந்து மின்சார போஸ்ட்டுக்கு செல்லும் மின்சார வயர் கொஞ்சம் கொஞ்சம் இறங்கி கொண்டே இருந்தது. பிறகு, கை எட்டும் தூரத்துக்கு வந்துகொண்டே இருந்தது. இந்த பக்கத்து வீட்டுக்காரர் என்ன இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார். மின்சாரம் விசயத்தில் இப்படி அலட்சியமாக இருக்கிறாரே என தோன்றியது. இன்று காலையில் வயர் ரெம்பவும் இறங்கி தலை தட்டும் அளவுக்கு இறங்கிவிட்டது.

அவரைக் கூப்பிட்டு, ”என்ன சார்! இவ்வளவு வயர் இறங்கிருச்சு! இ.பி. காரங்கள கூப்பிட்டு சரி செய்யலாம்ல!” என்றேன்.

”அது உங்க வீட்டு வயர் சார்! தொடக்கத்திலே நானும் அப்படித்தான் நினைச்சேன். அப்புறம் பக்கத்துல் போய் பார்த்தா, உங்க வயரா இருந்தது!” என்றார்.

காலையிலேயே பல்பு!

“எங்க வயர் தெரிஞ்சுவுடனே என்னிடம் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே!” என வழிந்து வந்தேன்.

August 29, 2013

ரசிய சிறையும், இந்திய சிறையும்!

நம் சிறையில் உள்ளே போய் வெளியே வந்தால், ஒரு தேர்ந்த கிரிமினலாக வெளிவரக்கூடிய எல்லா தகுதிகளும் நம் சிறைக்கு இருக்கின்றன!

ஸ்டாலின் கால ரசிய சிறையிலோ உள்ளே போய் வெளியே வந்தால் ஒரு தேர்ந்த தொழிலாளியாக வரமுடியும் என்பதை பெரியார் பதிவு செய்கிறார்.


****


பெரியாரின் அயல் நாட்டுப் பயணக் குறிப்புகள் என்ற நூலில், தந்தை பெரியார் அவர்கள் கைப்பட எழுதியது:

periyar_1.jpg

Leaforthovஜெயில் பார்க்க அழைக்கப்பட்டுப் போனோம். டைரக்டர் அறிமுகம் செய்யப்பட்டு அவர் எல்லாம் காட்டினார். மே First க்கு ஆக ஜெயில் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். கைதிகளுக்கு எவ்வித அடையாளமும் இல்லை. ஜெயில் என்பது பல பேக்டடரிகள் இருக்கிறது தான்.
பனீன், மொப்ளர் பின்னல் நெசவு பார்த்தோம். டைமன் பட்டில் நல்ல வேலைகள் செய்யப்படுகிறது. மற்றும் கோட்டுகள், ஓவர் கோட்டுகள் முதலியவை செய்யப்படுகின்றன.

சிறைக்கூட அறைகள் பார்த்தோம்; கட்டில் மேஜை நாற்காலி, கம்மோட், தண்ணீர்க் குழாய், பேசின், உஷ்ணம், புஸ்த்தகங்கள் அலமாரி ரேடியோ முதலியவைகள் இருக்கின்றன.

ஒரு ரூமுக்கு 2 அல்லது மூன்று பேர் உண்டு. ஒரு ரூம் 816 அளவு. அவர்களுக்கு க்ஷவரம் செய்யும் சலூன் உண்டு. சையன்சு அறை உண்டு. பத்திரிகைகள் படிக்கும் ரீடிங் ரூம், புஸ்த்தகங்கள் படிக்கும் லைபெரிரி, படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வகுப்புகள், சித்திர வேலை கற்பித்தல் முதலியவை உண்டு.

இங்கு டிராமா, சினிமா ஆல்கள் பார்த்தோம். 17 வயது பையன் ஒருவன் பல திருட்டில் அகப்பட்டு 3 1/2  ஆண்டு தண்டனை அடைந்தவனைப் பார்த்து விசாரித்தோம். அவன் 2 ஆண்டு இங்கு இருந்து வேலை பழகி பிறகு தனி பேக்ட்டரிக்கு அனுப்பப்படுவான். இப்போது நெசவு வேலை செய்கிறான். இந்த ஜெயிலில் 600 கைதிகள் உண்டு.

இதை மாதிரி 4 அடுக்கு கட்டடம். இது புரக்ஷிக்கு முன் கட்டப்பட்ட ஜெயில் கட்டடம். சில திருத்தப்பாடு செய்திருக்கிறது. ஆனால், புது ஜெயில்கள் இன்னமும் நன்றாய்க் கட்டப்படுகின்றன. முன் ஒரு அறைக்கு ஒரே கைதி, இவன் எப்போதும் உள்ளேயே இருப்பான்.

முன்னால் இங்கு சர்ச்சு இருந்தது. இப்போது அது ஆஸ்பத்திரியாய் இருக்கிறது. ராத்திரி காலத்தில் கைதி சிறைக்குள் இருப்பான். அதுவும் இரவு 12 முதல் 5 மணிவரைதான் இருப்பான்.

ஒரு கைதி 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும்; அவர்களுக்கு சாப்பாடு துணி முதலியவை இல்லாமல் ஒரு கைதிக்கு மீ 30 ரூபிள் சம்பளம் உண்டு. அதில் பகுதியை அவன் இஷ்டப்படி செலவு செய்யலாம். அதாவது, இங்கு கடையில் அவனுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். மீதி மீ 15 ரூபிள் வீதம் சேர்த்து வைத்து விடுதலை ஆகிப் போகும் போது கையில் கொண்டு போவான். அவர்களுக்கு அடிக்கடி மீட்டிங்குகள் உண்டு.

தொழில் விஷயமான பிரசங்கம், சோஷியலிஸ்ட் பிரசங்கம் செய்வார்கள். 3 மணி நேரம் படிக்கலாம். 6 நாளில் 1 நாள் லீவு. 7 நாள், சிலர் 14 நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாம். குடியானவன் கைதி, கூட்டுப் பண்ணையத்துக்காரன் வருடத்தில் மூன்று மீ வீட்டுக்கு வேலைக்குப் போய்வரலாம். தினமும் தாராளமாய் வீட்டுக்குக் கடிதம் எழுதலாம்; பதில் பெறலாம். பத்திரிகை, புஸ்தகம் தாராளமாய்ப் பெறலாம்.

சாப்பாடு 2 வேளை; காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சாப்பாடு டீ வேண்டியது Free யாய் வேண்டிய வரை கிடைக்கும். தொழில்சாலை உடை தவிர மற்ற உடை அவர்கள் சொந்தத்தில் இஷ்டப்படி உடுத்திக் கொள்ளலாம்.

மே First க்கு 100 பேர்களை ஒரு நாள் எல்லாம் வெளியில் போய் வர அனுமதிப்பார்கள். கைதிகளுக்கு என்று தனிப்பத்திரிகை உண்டு. அது மீ 3 முறை 5   கோபக் விலை. லைபெரிரியில் 8000 எட்டு ஆயிரம் புஸ்த்தகங்கள் இருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளும் வருகின்றன. 100க்கு 82 பேர்கள் ஜெயிலில் பத்திரிகைக்கு சந்தாதாரர்கள். செஸ் முதலிய கேம் விளையாட்டுச் சாமான்கள் இருக்கின்றன.

இங்குள்ள கைதிகள் குற்றம் செய்தால் இங்கேயே கைதிகளுக்குள் எலக்ட் செய்த காம்ரேட் கோர்ட் டில் விசாரித்து நீதி செலுத்துவார்கள். அந்தத் தீர்ப்பு ஒப்புக் கொள்ளாவிட்டால், ஜெயில் அதிகாரிகள் 3 நாள் வரை மூடி வைத்திருக்கும் தண்டனை செய்வார்கள்.

12 முதல் 5 வரைதான் ஜெயில் அறை பூட்டி இருக்கும். மற்ற காலங்களில் திறந்தே இருக்கும். பிரரேட் கோர்ட் தண்டனை என்பது குறிப்பிட்ட காலத்துக்கு சில சவுகரியங்கள் இல்லாமல் செய்வது. அவரவர்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு புஸ்த்தகம் உண்டு. இது போல் மாஸ்கோவில் 6 ஜெயில் இருக்கின்றன. மொத்தம் 4000 நாலாயிரம் கைதிகள் உண்டு.

பெண்களுக்குத் தனி ஜெயில் உண்டு. (சில கைதிகள் தங்கள் அறைக்குள் ஸ்ட்டவ் வைத்திருந்தார்கள். மே First க்கு தங்கள் தங்கள் அறையை அலங்கரித்துக் கொண்டும் இருந்தார்கள்) மாஸ்கோ ஜில்லா பூராவுக்கும் சுற்றுப்பக்க கிராமங்களும் சேர்ந்து 4000  கைதிகள். இந்த ஜெயிலில் இருந்து போகும் கைதிகள் நல்ல வேலைக்காரர்களாகி விடுகிறார்கள். ஜெயில் காரணத்தினால் ஓட்டுக்கு அருகதை போய்விடாது.

இந்த டைரக்ட்டர், ரிவிலாஷனுக்கு முன் கொல்லு வேலை செய்து கொண்டிருந்தவர், ஜெயில் திருத்தமெல்லாம் அனேகமாய் இவருடைய முயற்சியிலேயே செய்யப்படுகிறது. இவர் பெயர் மவுலின். ரிவிலூஷனில் இவர் தண்டனை அடைந்து சைபேரியாவில் நாடு கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்; அரசியல் கைதியாயும் இருந்தவர். தான் போர்ட்சைட் வரை வந்திருப்பதாகச் சொன்னார். இவர் 29 வருடமாக கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்து வேலை செய்தவர். இவர் ஓல்ட் போல்ஸ்விக் மெம்பர். 15000 தொழிலாளிகளின் ஸ்ட்ரைக்கை லீட் செய்தவர்.

EVRகேழ்வி: இங்கு இவ்வளவு தாரளமாய்க் கைதிகள் விடப்படுகிறார்களே , ஓடிப் போவதில்லையா?”
பதில்: இதிலிருந்து ஒரு தடவை 3 பேர் ஓடிப்போனார்கள். பிறகு தானாகவே வந்து விட்டார்கள். சில சமயங்களில் 100 பேர் 200 பேர் சர்க்கஸ் பார்க்க என்று விடப்படுவார்கள். அவர்கள் காவல் இல்லாமலேயே போய் விட்டுத் தாங்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள். காரணம், அவர்களது நல்ல, நடவடிக்கையும் மற்றும் வெளியில் அவர்களுக்கு டிக்கட் இல்லாமல் சுலபத்தில் சாப்பாட்டுச் சாமான், அறைகள் முதலியவை கிடைக்காததுமாகும்.

ரெவிலூஷன்போது இந்த டைரக்ட்டரின் பெண்ஜாதி குழந்தைகள் எதிரிகளால் (ஒயிட்ஸ்களால்) கொல்லப்பட்டுவிட்டார்கள். இவர் ஆக்ஷியில் இது உள்பட 4 ஜெயில்கள் மேற்பார்வையில் இருக்கிறது.

இந்த 4 ஜெயிலில் இருந்து வருஷம் 1 க்கு 8 மிலியன் ரூபிள் மீதியாகிறது. 2300கைதிகளின் வேலையால் வருடம் 8000000 ரூபிள் சர்க்காருக்கு லாபம். அதாவது ஒரு கைதியால் மீ275 ரூபிள் மீதியாகிறது. கைதிகளுக்கு அதிகமான சுதந்திரமும் சவுகரியமும் உண்டு. நன்றாய் நடந்து கொள்ளுகின்றவர்களுக்கு அதிக சவுகரிமும் லாபமும் உண்டு
periyar_1.jpg
 -வே. மதிமாறன்
தலித் முரசில் 2001 சூனில் எழுதியது.
 ****

லஞ்சம் விளையாடும் புழல் சிறை!

இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். காவல்துறையின் சகல நடவடிக்கைகளிலும் மக்கள் இதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள சிறையும் இதில் விதிவிலக்கல்ல! புழல் சிறையில் லஞ்சமும், முறைகேடுகளும் மலிந்திருக்கின்றன என்ற தொடர்ச்சியான புகார்களின் அடிப்படையில்... வரலாற்றில் முதன் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது.

கடந்த வாரம் எஸ்.பி, டி.எஸ்.பிக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட ஒரு குழு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என்று பெயர் பெற்ற சென்னை புழல் சிறையில் சோதித்தனர்.

சிறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பீடி, சிகரெட், பான்பராக், குட்கா தாராளமாய் கட்டு கட்டாய் சிக்கியிருக்கின்றன. கைதிகளுக்கான உணவு பொருட்கள் அதன் உண்மை இருப்பைக் காட்டிலும் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருந்திருக்கின்றன. வெளி மார்க்கெட்டில் நிறைய கடத்தி விற்பனை செய்கிறார்கள் என்று எழும் புகார் தனி.

இது தவிர... ஆபாச டிவிடிக்கள் நிறைய சிக்கியிருக்கின்றன. அதுவும் துணை ஜெயிலர் அறையில் 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தனவாம். நான்கு கைதிகளின் அறையில் விதிமுறைகளை மீறி கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்திருக்கின்றன.



சிறை அதிகாரிகள், வார்டன்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை, கிளுகிளுப்பான படங்களை ஏன் கைதிகளுக்கு சப்ளை செய்கிறார்கள்? கைதிகள் மீது பாசமா? எல்லாம் பணத்திற்காக தான்.

சோதனையின் பொழுது.. சிறை அதிகாரிகள், வார்டன்கள், சிறை மருத்துவர் ஆகியோர்களிடம் சில ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது.

வெளியே ஒரு சிகரெட் ரூ. 3 என்றால்.. சிறையில் ரூ. 10. வெளியே கஞ்சா பொட்டணம் ரூ. 5 என்றால்... உள்ளே பல மடங்கு. இது தவிர மருத்துவமனைக்கு போக வேண்டுமா? மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார். கறிக்கஞ்சி வேணுமா? மருத்துவருக்கு பணம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார்.

ஏற்கனவே புழல் சிறையில் கடந்த துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருக்கின்றன. மேலும் ஆபாச டிவிடிக்கள் சிக்கியிருக்கும் பொழுது...டிவிடி பிளேயரும் மாட்டியிருக்க வேண்டும். சிறையில் சகல நடவடிக்கைகளிலும், சகல மட்டத்திலும் லஞ்சம் விளையாடும் பொழுது, பிடிபட்ட பொருள்களும், பணமும் குறைவாக இருக்கிறதே என யோசிக்கும் பொழுது, அதற்கும் பதில் இருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் 1 மணிக்கு போய் அனுமதி கேட்டு, வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் எவ்வளவோ மறைக்கலாமே!

சகல மட்டத்திலும் இப்படி லஞ்சம் விளையாடுவது அரசுக்கு தெரியாதா என்ன? எல்லாம் தெரியும். தெரிந்து... கண்டும் காணாமல் இருக்கிறது. சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை! அங்கு சொல்லவா வேண்டும்.

காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் இந்த சிறையில் தான்.... அரசியல் ரீதியாக கைதாகும் முற்போக்கு மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் இருக்கும் பொழுது தான், அவர்கள் ஒவ்வொரு அடிப்படை உரிமைக்கும் போராடும் பொழுது, அங்கு நடக்கும் முறைகேடுகள் பற்றிய செய்திகள் வெளியே வருகின்றன.

குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது.... இது எப்படி சாத்தியப்படும்?

August 28, 2013

அமெரிக்கா கூட காடு வெட்டிதான்! :)


நண்பரின் நண்பர் வேலை நிமித்தமாக அமெரிக்கா ஒரு மாதம் சென்று வந்தார். போய் வந்ததற்காக, பாப்பாவிற்கு ஒரு பரிசு தரும் பொழுது சொன்னார்.

அமெரிக்காவில் சில பொருட்கள் வாங்க போயிருந்தேன். ஒரு நல்ல காட்டன் சாக்ஸ் எடுத்து பார்த்தேன். அதில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக" இருந்தது. எல்லா பருத்தி சம்பந்தமானவைகளும் இந்தியா, பாகிஸ்தான் என இருந்தன. அதன்பிறகு, எடுத்த பல பொருட்களும் "சீனாவில் தயாரிக்கப்பட்டதாக' வே இருந்தது என்றார்.

நாமெல்லாம் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், டாலரை கொடுக்க வேண்டியிருக்கிறது. சர்வதேச செலாவணி டாலராக இருப்பதால், அமெரிக்கா எவ்வளவு வேண்டுமென்றாலும் இறக்குமதி செய்ஞ்சுட்டு, காட்டில் மரங்களை வெட்டி வெட்டி டாலராக அச்சடிச்சுட்டு தர்றான்! சீனா மட்டுமே தான் கையில் வைத்திருக்கிற டாலர் கையிருப்பை அமெரிக்காகிட்ட கொடுத்து, இதுக்கு பதிலா தங்கமா கொடுன்னு சொன்னா, அமெரிக்கா திவால்னு மஞ்ச நோட்டீஸ் கொடுத்திருவான்!

August 26, 2013

கண்டன ஆர்ப்பாட்டம் - ஈழத்தமிழ் அகதிகள் மூவரை நாடு கடத்தாதே!


நாள் : 27/08/2013 (செவ்வாய்கிழமை)       காலை 10.30 மணி

இடம் : வள்ளுவர் கோட்டம் அருகில்

செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய ஈழ அகதிகள் மூவரை ஈழத்தமிழ் அகதிகள் மூவரையும் நாடுகடத்தக்கூடாது.

சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களை கலைத்து அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

ஈழத் தமிழ் அகதிகள் மீது தமிழக போலீசு இழைத்துவரும் துன்புறுத்தல்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிராக போலீசு நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத்தமிழ் அகதிகள் அனைவருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்.




இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

'பொன்னாடையாக' போர்த்துகிறோம்!

அந்த முக்கிய சாலையில் சி.பி.எம் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நின்று கவனித்தேன். சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, கைத்தறித் துண்டை பொன்னாடையாக போர்த்தினார்கள்.

அந்த பகுதி தமிழ்நாட்டில் கைத்தறித் துண்டை அதிகமாய் நெசவு செய்யும் ஒரு முக்கிய பகுதி.  நானும் ஒரு கைநெசவு தொழிலாளியின்(அம்மா) மகன் தான். 

ஒரு துண்டு சீட்டில்...

"கைத்தறித் துண்டால் துவட்டலாம்.  விரித்து படுக்கலாம்; போர்த்தலாம். பொன்னாடை எதற்கும் பயன்படாது.  பெட்டியில் வைத்து மட்டும் பூட்டலாம். ஏன் இந்த வார்த்தை பகட்டு?" என அவர்களிடம் எழுதி தந்தேன்.

பலன் உடனே இருந்தது.  பிறகு, கைத்தறித்துண்டை, கைத்தறித்துண்டாகவே போர்த்தினார்கள்.

நேற்றும் ஒரு கூட்டத்தில் 'பொன்னாடை' போர்த்தி, இந்த நிகழ்வை நினைவுப்படுத்தினார்கள்.

August 23, 2013

தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறை தலையீடு கூடாது! - உயர்நீதிமன்றம்!

திருபெரும்புதூர் சிப்காட் எஸ்டேட்டில் Gates Unitta India Company P. Ltd என்ற‌ பன்னாட்டு நிறுவனம் இயங்கிவருகிறது. அங்கு தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தார்கள்.

வேலை நிறுத்தத்தை உடைக்க, வேறு தொழிலாளர்களை நிறுவனம் நியமித்து வேலை செய்ய காவல்துறை உதவியது. நிறுவனத்திலிருந்து உற்பத்தி இயந்திரங்களை இடம் மாற்றவும் காவல்துறை உதவியது!

அங்கு இயங்கிய தொழிற்சங்கம் நீதிமன்றத்தை நாடியது! அந்த வழக்கில் தான் தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறை தலையீடு கூடாது என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது!



'No Role for Cops in Industrial Dispute'


Holding that the police had nothing to do with an industrial dispute, the Madras High Court has cautioned the police authorities against interfering in a strike so long as it is peaceful.

Disposing of a petition filed by a labour union against an industrial unit, Justice S. Nagamuthu directed the Principal Secretary, Home Department, the Superintendent of Police, Kancheepuram district, and Inspector of Police, Sriperumbudur, not to interfere in an industrial dispute.

“For any reason, if it [a strike] becomes violent or takes the shape of disturbing law and order situation or, at the instance of the management, there is likelihood of disturbance to law and order, then, it is for the police authorities to restore peace and prevent any unlawful activity,” said the judge.

Gates Unitta India Company Private Limited, an Indian subsidiary of a multinational, has its factory at the SIPCOT Industrial Estate in Sriperumbudur. The company manufactures parts for automobiles and trucks. According to the union, 108 workers joined the United Labour Federation and the then management started victimising them. Under these circumstances, the trade union called for a strike from December 5, 2012 making certain demands.

In its writ petition seeking to restrain the police from interfering in its peaceful strike, the union alleged that the police had helped the company break the strike by intervening in the dispute and helped the company to employ substitute workers. to do their work . The union also wanted the company to be restrained from removing or shifting machinery from the factory. Denying the union’s allegations, the company said the strike was illegal as the factory was an automobile industry, which has been declared a public utility service.

Mr. Justice Nagamuthu held that the State government notification declaring the automobile manufacturing industry a public utility service would not be applicable to this industry .

He said the strike was not illegal and so the management should not recruit any person to substitute the workers on strike.

Hindu - 10, July 2010

August 21, 2013

விநோதினி - உன் ஆன்மா சாந்தியடைய கூடாது!

விநோதியின் வழக்கு - தண்டனை விவரங்களை படித்து, அசை போட்டுக்கொண்டே முடிவெட்டும் கடைக்கு போனேன்.

முடிவெட்டி விட்டு, மீசையில் புதிதாய் முளைத்திருந்த இரண்டு நரை முடியை வெட்ட முயற்சித்தார்.

"இருக்கட்டும் விட்டுவிடுங்கள். அது பல கடமைகளை நினைவுப்படுத்துகிறது" என்றேன். புன்னகைத்துவிட்டு விட்டுவிட்டார்.

*****

தண்டனை குறித்து விநோதியின் அப்பாவிடம் கருத்து கேட்ட பொழுது, "குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும் என்பது விநோதினியின் விருப்பம். இப்பொழுது நிறைவேறியிருக்கிறது. இனி, அவளின் ஆன்மா சாந்தி அடையும்" என கூறியிருக்கிறார்.

விநோதினியின் வயது குறைவு. அவளின் உலகமும் சின்னது. அதனால், குற்றவாளியை தண்டிப்பது மட்டும் தான் அவளது நோக்கம். சமூக அக்கறை கொண்டவர்கள் இதை சமூக குற்றமாக பார்க்கவேண்டும்.  விநோதினி இறந்த பொழுது எழுதிய பதிவு கீழே!

//எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை.  அதனால் 'உன் ஆன்மா சாந்தியடைட்டும்' என சொல்ல முடியவில்லை. நீ சாந்தியடைய கூடாது. நீ ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து குடைந்து, குடைந்து மனச்சாட்சியை உலுக்க வேண்டும்! போராட்டங்களை தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.//

தோழி விநோதினிக்கு,

திராவக வீச்சால் பாதித்து, நிறைய போராட்டங்களுடன் முன்னேறி கொண்டிருந்த நீ, இன்று காலையில் மூச்சு திணறால் இறந்து போனதை அறிந்து, நிறைய வருந்தினேன்.  உன்னுடைய இயல்பான முகமும், திராவகம் ஊற்றிய முகமும் மாறிமாறி நினைவில் வந்து கொண்டே இருந்தன.

உன் சொந்த பந்தங்களில் முதல்தலைமுறை பட்டதாரி நீ.  ஒரு அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து, பட்டம் வாங்குவது என்பதை எத்தனை கடினமான பாதை என்பதை நானும் அறிவேன். உன்னைப்போல் தான் நானும். வாழ்க்கைப் பற்றிய கனவுகளும், தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்ற பெற்றோரை கொஞ்சம் இளைப்பாற வைக்கலாம் என்ற கனவுகளும் இன்று கருகிப்போய்விட்டன.

உன்மீது திராவகம் வீசியவனை தூக்கில் போட இனி கோரிக்கைகள் வலுக்கும். மக்களிடமிருந்து திராவகத்தை ஒளித்து வைக்க உச்சநீதிமன்றம் ஆலோசனை சொல்லியிருக்கிறது.  இதை தனிப்பட்ட ஒரு குற்றச் செயலாக பலரும் பார்க்கிறார்கள். பார்ப்பார்கள்.   நான் அப்படி பார்க்கவில்லை.  இங்கு எல்லா ஆண்களுக்குள்ளும், பெண்ணை இழிவுப்படுத்தும் எண்ணம் சாதுவாகவோ அல்லது சுரேசை விட கொடூர மனமோ ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. சுரேசை தண்டித்துவிடலாம்.  'நம்முடைய' சட்டத்திற்கு அது எளியது தான். ஆனால், இதை செய்ய தூண்டிய பலருக்கு என்ன தண்டனை!

"உன்னை காதலிக்க வைக்கிறேனா இல்லையா! பார்" என காலரை தூக்கிவிட்டு 'வீர வசனம்' பேசிய நாயகன்களுக்கும், படம் எடுத்தவர்களுக்கும் இங்கு என்ன தண்டனை?

ஒரு வீட்டிற்குள்ளேயே அண்ணன், தங்கையை பேதம் பிரித்து வளர்த்த பெற்றோர்கள் இதற்கு காரணமில்லையா!

அரைகுறை ஆடை பெண்களை தங்களின் ஊடகங்களில் காட்டி, பெண்ணை சக மனுசியாக பார்க்க தடுக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை?

தனது பொருட்களை விற்றுத்தீர்ப்பதற்காக, பெண்ணை துகிலுரியும் முதலாளிகளுக்கு என்ன தண்டனை?

தனது அடியாட்படைகளான இராணுவமும், காவல்துறையும் செய்யும் பாலியல் வல்லுறவுகளை அரசே வலிந்து காப்பாற்றுகிறது. அரசுக்கு என்ன தண்டனை?

ஆதிக்கசாதிகாரன் தலித் பெண்ணை தொடவே மாட்டான். எப்படி வல்லுறவு செய்வான் என சொல்லி நீதிமன்றம் வல்லுறவு செய்தவனை விடுவித்ததே! அந்த நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?

மீண்டும் சொல்கிறேன். சுரேசுக்கு கடுமையான தண்டனை தேவைதான். ஆனால், அவனை செய்ய தூண்டியது எது என்பதை சிந்திக்காமல் விட்டால், உன்னைப்போல பல விநோதினிகள் பலியாவதை தடுக்கவே முடியாது!

எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை.  அதனால் 'உன் ஆன்மா சாந்தியடைட்டும்' என சொல்ல முடியவில்லை. நீ சாந்தியடைய கூடாது. நீ ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து குடைந்து, குடைந்து மனச்சாட்சியை உலுக்க வேண்டும்! போராட்டங்களை தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

August 20, 2013

பெண்களும் போராட்டமும்!

ஏழு கடல் ஏழு மலை தாண்டி!

உள்ளே நுழைந்ததும் குடும்பமே முகமலர்ச்சியோடு வரவேற்றது. தம்பி தண்ணீர் தந்தார்."சாப்பிடும்மா" என்றார் அம்மா. "என் பெரிய பொண்ணு போல இருக்கம்மா! எப்ப வேணுமில்லாமலும் வா! போ! இது உன்வீடு போல! ஆனால் என் சின்னப் பொண்ணை மட்டும் அமைப்பு வேலைகளுக்கு அனுப்ப சொல்லாதே!' என்றார் கனிவோடு அப்பா!

கணவர் குடிகாரர். பொறுப்பாக எந்த வேலையையும் செயவதில்லை. சமைத்து இரண்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி பத்து கி.மீ. பாரிசுக்கு போய் கடுமையான வேலை பார்த்து இரவு திரும்பி, சமைத்து தூங்கும் பொழுது இரவு 11 மணியை தாண்டிவிடும்! துவைப்பதிலும், வீட்டை சுத்தப்படுத்துவதிலும் ஞாயிறுகள் கட்ந்துபோகும். கடுமையான உழைப்பாளி, தைரியமானவர், அமைப்பின் வேலை செய்ய ஆர்வம் இருந்தாலும், சூழல் இடம் தருவதில்லை.

திருமணம் முடிந்தவுடன் அணுகினால், ஓரிரு மாதங்களில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, கொஞ்சம் வளர்த்து, வேலை செய்ய துவங்க 4 வருடங்கள் ஓடிவிடும். 4 வருடம் தான் இரண்டாவது குழந்தைக்கும் சரியான இடைவெளி.  மீண்டும் சுழற்சி துவங்கிவிடும்!

பெரும்பாலான வீடுகளில் அமைப்பில் இயங்குவதற்கு ஆர்வம் உள்ள பெண்ணுக்கு, அம்மா/அப்பா/அண்ணன்/தம்பி/கணவன் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அனுப்ப தடைபோடுகிறார்கள். சில சமயங்களில் காதலன் கூட‌ உரிமையுடன் தடைபோடுகிறார்.

அமைப்புத் தோழர்கள் அமைப்பில் வேலை செய்ய வீட்டில் உள்ள பெண்களுக்கு உற்சாகம் ஊட்டுவார்கள். அவர்களில் சிலருக்கோ சுத்தமாக அரசியல், அமைப்பு ஆர்வம் இருக்காது.

வாக்குரசியல் நடத்தும் பல கட்சிகள் போராட்டங்களுக்கு வர பணம் தருகிறாரகள். பலர் சுய உதவி குழுக்களில் பணம் கொடுப்பதும், வட்டி வாங்குவதுமாய் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அமைப்பு, அரசியல் பேசினால், "வருகிறேன். எவ்வளவு தருகிறீர்கள்? என கேள்வி எழுப்புகிறார்கள். "எந்த பலனும் இல்லாமலா இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்?" என நம் நேர்மையின் மீது சந்தேக்கிறார்கள்.

சமூக அவலம் அறிந்த நடுத்தர வர்க்க பெண்களோ, புரட்சிகர அரசியல், அமைப்பு பற்றி தெரிந்துகொண்டு, 'இழப்பதற்கு' தங்களுக்கு ஒரு வாழ்க்கை இருப்பதால், வேலை செய்ய தயக்கம் கொள்கிறார்கள்.

ஆணை அரசியல்படுத்த வீட்டைவிட்டு அழைத்துவந்தால் போதுமானதாக இருக்கிறது. பெண்ணை அரசியல்படுத்த குடும்பதோடு ஐக்கியமாகி குடும்பத்தையே  அரசியல்படுத்த வேண்டியிருக்கிறது.

குடும்பம், குழந்தை பராமரிப்பு, ஆணாதிக்கம், பாதுகாப்பான வாழ்க்கை என எத்தனையோ விசயங்கள் பெண்களை பின்னுக்கு இழுக்கிறது.

இருப்பினும், எல்லாவற்றையும் தாண்டி பிற்போக்கு அரசும், மறுகாலனியாதிக்க கொள்கைகளும் சமூக கொடுமைகளை பெருக்கி வைத்துள்ளன. நாம் அவற்றையெல்லாம் விளக்குவதற்கு முன்னால், அவர்கள் அந்த கொடுமைகளை நித்தமும் அனுவிப்பதால் அவர்களே பட்டியலிடுகிறார்கள். களத்தில் போராட நம்மோடு கைக்கோர்க்கிறார்கள்.

அதனால் தான், குடும்பங்களை சீரழிக்கிற, "டாஸ்மார்க் கடையை  இழுத்துமூடுவோம்"   என்ற பெண்கள் விடுதலை முன்னணியின் சமீபத்திய  போராட்டத்தில் கைக்குழந்தையோடும், சிறுவர், சிறுமிகளோடும் 80 பெண்களோடு அரசை எதிர்த்து எழுச்சியுடன் முழக்கமிட்டு கொண்டிருந்தோம்.

- அமிர்தா,

நந்தவனம் தளத்திலிருந்து...