> குருத்து: ஆதுரசாலை - நாவல் - ஒரு பார்வை

October 22, 2021

ஆதுரசாலை - நாவல் - ஒரு பார்வை


போரூரில் நண்பர் ஒருவர் அக்குபஞ்சர் மருத்துவராக இருக்கிறார். இந்த நாவலைப் படியுங்கள் என பரிந்துரைத்தார். ஆதுரசாலை என்றால்... மருத்துவமனை என அர்த்தமாம்.


நாவல் வெப்பம், குளிர்ச்சி என இரண்டு பாகங்களாக பிரித்து எழுதியுள்ளார். முதல் பாகத்தில் மருத்துவ பரிசோதனை செய்யும் லேப்பில் (Lab) நடக்கும் சில அறம் சார்ந்த, அறிவியல் சார்ந்த கோளாறுகளை விளக்குகிறார். அதில் முதன்மையானது மருத்துவர்கள் தனது நோயாளிகளை சோதனைக்கு அனுப்புவதால் அதற்கு தரும் கமிசன். இந்த செய்தி உண்மை.

1990களில் மருந்து கடையில் சில காலம் வேலை செய்ததின் அனுபவத்தில் எனக்கே இந்த அனுபவம் உண்டு. மருத்துவர்களுக்கு லேப் நடத்துகிறவர்களும், ஸ்கேன் செண்டர் வைத்திருப்பவர்களும் தொடர்ந்து கமிசன் கொடுப்பது உண்டு. மதுரையில் அந்த பிரபல ஸ்கேன் மையத்தில் நண்பர் வேலை செய்த பொழுது, அந்த கமிசனின் அளவு தெரிந்த பொழுது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன். ரூ. 7000 என்றால், ரூ. 3500 வரைக்கும் கூட ’கமிசனாய்’ தருவார்கள். லேப்பும், ஸ்கேன் சென்டர்களும், மருத்துவர்களும் மக்களிடமிருந்து அடிக்கிற கொள்ளை இது. விரல்விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்கள் மட்டும் தனக்கு கமிசன் தேவையில்லை. அதை நோயாளிடம் குறைத்து வாங்கிக்கொள்ளுங்கள் என்பார்களாம். ஒரு ஆறுதல்.

அந்த ஸ்கேன் மையத்தில் இந்த கமிசனை மருத்துவர்களுக்கு கொடுப்பதற்கென்றே பல பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். மருத்துவம் சேவைத்துறை என்பார்கள். மருத்துவம் வணிகமாகி பல ஆண்டுகளாகிவிட்டது. அங்கு வேலை செய்த மருத்துவர்களில் ஒருவர் இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்துப்போய், இங்கிலாந்தில் அரசே இலவசமாக மருத்துவம் பார்ப்பதால், அங்கு மருத்துவ துறையில் ஊழல் இல்லை என தெரிந்துகொண்டு, அங்கு வேலைக்கு போய்விட்டார். (இப்பொழுது நிலைமை அங்கும் மாறிவிட்டதாக தகவல் வருகிறது!)

இரண்டாம் பாகமான குளிர்ச்சி பகுதியில், லேப் விசயங்களில் நாவலின் நாயகன் அதிருப்தியாகி, ஒரு மருத்துவரிடம் வந்து சேர்கிறார். அந்த மருத்துவர் அலோபதி மருத்துவம் படித்து, பிறகு அதில் அதிருப்தியாகி இப்பொழுது சித்த மருத்துவம் பார்த்துவருகிறார். அவரிடம் உதவியாளராக சேர்கிறார்.

இந்த பகுதியில் சித்த மருத்துவத்தின் சிறப்பு, மற்ற மருத்துவ முறைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு எப்படி அலோபதி மருத்துவம் முன்னுக்கு வந்தது என்பதை வரலாற்று வழியிலும், வேறு சில அம்சங்களையும் சொல்லி செல்கிறார்.

நாவலாசிரியர் நாவலைப் பற்றி சொல்லும் பொழுது, சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவ துறை சார்ந்த நாவலாக ’சாந்தி நிகேதனம்’ என்ற பெயரில் வெளிவந்த வங்காள நாவலும் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘சுளுந்தீ” நாவலும் இந்த நாவலை எழுத தூண்டியதாக சொல்கிறார்.

நிலவுகிற அலோபதி மருத்துவ துறை வணிகம் சார்ந்ததாக, லாப வெறிகொண்ட துறையாக மாறிவிட்டது. ஆகையால், முடிந்த மட்டிலும் கொள்ளையடி என்கிற அளவுக்கு வந்துவிட்டார்கள். உலகை உலுக்கிய கொரானா காலங்களில் தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் இருந்த சேமிப்பை எல்லாம் அடித்த கொள்ளையை ஊரேப் பார்த்தது.

அலோபதி தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு மக்கள் மற்ற மருத்துவ முறைகளான சித்தா, ஹோமியோ, யுனானி வகைகளை அணுகிவருகிறார்கள். குறைவான கட்டணம் போன்ற காரணங்களால் மக்களிடம் மெல்ல மெல்ல செல்வாக்கு பெற்று வருகிறது. ஆனால், அந்த மருத்துவ முறைகள் வளர்ச்சியடையாமல் ஒரு நிலையிலேயே இருப்பது ஒரு பெரிய குறை. மற்ற மருத்துவ முறைகள் அலோபதி மருத்துவ முறையை, கொள்ளையை தொடர்ந்து தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி பல மருத்துவ முறைகள் குறித்து வளர்ந்த நாடுகளில் கல்வி, அறிவு, அனுபவம் காரணமாக அதன் தன்மைகளை, சிறப்புகளை புரிந்துகொண்டு கையாண்டுவிடுகிறார்கள். நம்மை போன்ற பின்தங்கிய நாட்டில் மக்கள் பல்வேறு மருத்துவ முறைகள் சொல்லும் வழிமுறைகள் குறித்து குழம்பிபோய்விடுகிறார்கள்.

நெருங்கிய சொந்தத்தில் ஒருவர் இருதய நோய் சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்தார். மீண்டும் அந்த பிரச்சனை வராமல் இருக்க மருந்துகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். யாரோ ஒருவர் ”அந்த மருந்துகள் எடுத்துக்கொண்டால், இன்னும் சிக்கலாகிவிடும். ஆகையால் மருந்து சாப்பிடாதீர்கள்” என போகிற போக்கில் சொல்ல, அவர் சில காலம் மருந்துகள் எடுத்துகொள்ளவேயில்லை. வீட்டில் உள்ளவர்களும், நானும் சந்திக்கும் பொழுதெல்லாம் சொல்லியும் மருந்துகள் எடுத்துகொள்ள மறுத்துவிட்டார். பிறகு மீண்டும் இதயம் சிக்கலான பொழுது தான் தொடர்ந்து மருந்து எடுத்துகொண்டார்.

ஆக, நிலைமை போகிற போக்கைப் பார்த்தால்…வருங்காலங்களில் இந்த சிக்கல் இன்னும் கடினமாகும் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது. இதற்கு தனிப்பட்ட முறையில் தீர்வுகளை கண்டறிய முடியுமா என்றால் சாத்தியமில்லை.

சித்தா, ஹோமியோ, அக்குபஞ்சர், யுனானி என எல்லாமும் மனித சமூகத்தின் செல்வங்கள் தான். ஆகையால் எல்லா மருத்துவங்களின் மீதான சரியான அம்சங்களை கணக்கில் கொண்டு மக்களுக்கு பயன்படல்வேண்டும். மக்கள் நலன்கள் மீது அக்கறை கொண்ட அரசு இருந்தால் தான் இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது என துறைசார் வல்லுநர்களை கொண்டு ஒரு சுமூகமான, சரியான தீர்வை நோக்கி கொண்டு செல்லமுடியும் என தோன்றுகிறது.

மோடி மாதிரியான ஆட்கள் தொடர்ந்து ஆண்டால் என்ன செய்வது? ’விநோதய சித்தம்’ சமூத்திரக்கனி வழியில் சொல்வதென்றால், நரகத்திலிருந்து சொர்க்கம் நோக்கி காலன் கைப்படித்து நடக்கவேண்டியது தான்.

பக்கங்கள் : 375
விலை : ரூ. 400
நாவல் ஆசிரியர் : அ. உமர் பாரூக்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

0 பின்னூட்டங்கள்: