> குருத்து: The Flight (2012)

October 15, 2021

The Flight (2012)



நாயகன் ஒரு திறமையான விமானி. அதே வேளையில் மொடா குடிகாரன். கூடுதலாக போதைப் பொருளும் பயன்படுத்துகிறவன். அன்று வானிலை சாதகமாக இல்லை. மோசமாக இருக்கிறது. விமானத்தில் தொழில்நுட்ப ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு, ஒரு வழியாக திறமையாக சமாளித்து, யாருமில்லாத ஒரு நிலத்தில் விமானத்தை இறக்குகிறான். விமான பணியாளர்கள் இருவரும், பயணிகளில் நால்வரும் என மொத்தம் ஆறு பேர் இறந்துவிடுகிறார்கள்.


நாயகன் காயங்களுடன் தப்பித்துவிடுகிறான். தேறி, வீட்டிற்கு வந்து எல்லா மதுவையும் கீழே கொட்டுகிறான். குடிக்க கூடாது என முடிவெடுக்கிறான். தரையில் திறமையாக இறக்கியதால், பெரும்பாலோர் தப்பித்துவிட்டதால், விமானியை ஒரு பக்கம் பாராட்டுகிறார்கள். இன்னொரு பக்கம், விபத்துக்கான காரணத்தை ஆராய்கிறார்கள். ஊடகங்களும் விமானியை பேச வைக்க துரத்துகின்றனர். இந்த மன அழுத்தத்தால் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறான்.


மருத்துவமனையில் ஒருத்தி அறிமுகமாகி, பிறகு அவனுடனேயே வாழத்துவங்குகிறாள். அவளும் அவன் குடியை மறக்க மருத்துவம் எடுத்துக்கொள்ள வலியுறுத்துகிறாள். ஆனால், தன்னாலேயே சமாளிக்க முடியும் என்கிறான்.

பிறகு என்னானது என்பதை உணர்வுபூர்வமாக முடித்திருக்கிறார்கள்.
****

குடி எத்தனை திறமைசாலியையும் காலி செய்துவிடும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். குடி நோயாளிகளை காப்பாற்றுவதில் பெரும்பங்கு குடும்பத்தினருக்கு தான். குடிகாரர்கள் முதலில் தனிமைப்படுவது தன் வீட்டில் தான். படத்தில் நாயகன் திருமணமாகி பள்ளிச் செல்லும் வயதில் மகன் இருந்தாலும், குடியால் தன் குடும்பத்தை இழக்கிறான். தன் காதலியோடும் முரண்பட்டு தனியாக நிற்கிறான்.

இந்தக் கதை தமிழ்நாட்டுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆண்டு தோறும் அரசு நடத்தும் சாராயக்கடைகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. விற்பனையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. விளைவு குடிநோயாளிகளும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். குடி ஒருத்தரின் ஆளுமையை சிதைக்கிறது. வேலை செய்யும் திறனை காலி செய்துவிடுகிறது. குடும்பத்தை சிதைக்கிறது. நமது ’அரசு’ போதையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தான் மதுவிலக்கு துறையே வைத்திருக்கிறது. இப்பொழுது அந்த துறை சாராயக்கடைகளை முறைப்படுத்துவதற்கு தான் மும்முரமாக வேலை செய்கிறது.

தமிழக அரசு எத்தனை மக்கள் நல பணிகளை செய்தாலும், சாராயக்கடைகள் விளைவிக்கும் விளைவை ஈடுசெய்யவே முடியாது. எத்தனை கண்ணீர் கதைகள்”? எவ்வளவு இழப்புகள்? தினசரியை திறந்தால், ஒரு செய்தியாவது சாராயக்கடையால் வந்த பாதிப்பால் தான் இருக்கின்றன.

ஒரு அரசு சாராயக்கடை வருமானம் தான் தனக்கு முதன்மையான வருமானம். மூடிவிட்டால், அரசை எப்படி இயக்குவது? என கேட்டால்.. மக்களை தினந்தோறும் பலிகொடுத்து, அப்படி ஒரு ஆட்சி ஆளவே தேவையில்லை. வீட்டுக்கு போய்விடலாம் என்பேன்.

மற்றபடி படம் நல்லபடம். டென்சில் வாசிங்டன் நாயகன் பாத்திரத்தில்
அருமையாக
பொருந்தியிருக்கிறார். மற்றவர்களும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். Forrest Gump, Cast away – புகழ்பெற்ற படங்களை இயக்கிய Robert Zemeckis தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

நெட் பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.

“I choose to drink! And I blame myself! I am happy to! And you know why? Because I choose to drink! I got an ex-wife and a son I never talk to! And you know why? Because I choose to drink!”

0 பின்னூட்டங்கள்: