அந்த சின்ன அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த பொழுது, அதற்கு நடுவே ஒரு குட்டிப்பெண்ணும் அமர்ந்திருந்தாள். பெண் தொழில் முனைவோராக இருந்தால், பிள்ளைகளும் அவ்வப்பொழுது அலுவலகம் வருவார்கள். கொரானா காலம் என்பதால், அடிக்கடி வருகிறார்கள்.
ஒரு ஸ்டூலில் அந்த ஐ பேட் (Pad) ஜம்மென்று அமர்ந்திருந்தது. அதில் ஒரு பெண் ஆசிரியர் தானியங்கள் குறித்து சீரியசாக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். குரல் நன்றாக இருக்கிறதே ஆசிரியரின் முகத்தை பார்க்க முயன்றேன். ”அதெல்லாம் நீங்க பார்க்க கூடாது” என அந்த குட்டிப்பெண் மறைத்தாள். முயன்று பார்த்ததில், தானியங்களின் படங்கள் தான் தெரிந்தது. அதில் 30 மாணவர்கள் ஒரு சீராக வரிசையில் இருந்தார்கள். ஆனால் யாருடைய முகமும் தெரியவில்லை. ஒவ்வொரு மாணவனின்/மாணவியின் முதல் எழுத்து மட்டும் தெரிந்தது.
அந்த பெண் அந்த ஐ பேட்டிற்கு நேர் எதிரே திரும்பி உட்கார்ந்திருந்தாள். சரியாக சொன்னால், அந்த ஆசிரியருக்கு புறமுதுகு காட்டி அமர்ந்திருந்தாள். மற்ற மாணவர்களும் என்ன செய்வார்கள் என ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன்..
அந்த குட்டிப்பெண் அங்கு வேலை செய்பவர்களின் பெயர்களை எல்லாம் இன்சியலுடன் கேட்டு பொறுப்பாக ஒரு டைரியில் எழுதிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அந்த வேலை போரடித்துவிட்டது. அவள் கையில் நிறைய சின்ன சின்ன ஸ்டிக்கர்கள் வைத்திருந்தாள். ஸ்டிக்கரை ஒவ்வொரு ஊழியரின் கையிலும் ஒட்டி, கொஞ்சம் தண்ணீர் விட்டு தேய்த்தாள். அந்த ஈரம் காய்ந்ததும், ஸ்டிக்கரை எடுத்தால், கையில் அதன் அச்சு நன்றாக பதிந்திருந்தது.
மாதம் ஒருமுறை வேலை நிமித்தம் அங்கு போவதால், என்னிடம் கடைசியாக வந்தாள். ”இவ்வளவு ஸ்டிக்கர் வைச்சிருக்க! எவ்வளவு விலை?” என்றேன். ஐந்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் தருவார்கள். அதில் நிறைய இருக்கும். உங்க கையில் ஒட்டவா? என கேட்டாள். “எங்க வீட்ல இப்படியெல்லாம் ஒட்டிட்டு போனா திட்டுவாங்களே!” என்றேன். அவளே சிரித்துவிட்டாள். ”சரி ஒட்டு! நல்லா ஒட்டியிருந்தா, இதை போட்டோ எடுத்து பேஸ்புக்குல போடலாம்!” என்றேன். உற்சாகமாகிவிட்டாள். ஒட்டினாள். என் ’துரதிருஷ்டம்’. என் கையில் ஒட்டவில்லை. இன்னைக்கு காலையில் நான் குளிச்சேன். அதனால் தான் ஒட்டலையோ! உனக்கு நல்லா ஒட்டுதே! நீ காலையில் குளிக்கவில்லை தானே! என சீண்டினேன். சிரித்து நகர்ந்துவிட்டாள்.
அந்த அலுவலக அறையில் அந்த ஆசிரியரின் குரல் ஒரு அசரீரி போல கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த ஐ பேடில் ஆசிரியரிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் சந்தேகம் எல்லாம் கூட கேட்டார்கள். அந்த ஆசிரியர் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இப்படி கேள்வி கேட்க சொல்லிக்கொடுத்திருப்பார்களோ என சந்தேகமும் வந்தது. தமிழில் சொன்னால், நாமாவது கேட்டு அறிவு வளர்த்துக்கொள்ளலாம் என நினைத்தால், ஆங்கிலத்தில் வகுப்பை நடத்திக்கொண்டிருந்தார். சோகம்.
மதிய சாப்பாட்டு நேரத்தை நேரம் நெருங்கி கொண்டிருந்தது. இவ்வளவு நேரமும் ஐ பேடிலிருந்து சரியாக இரண்டு அடி தள்ளி இருந்த குட்டிப்பெண் அந்த ஐ பேடை வேகமாக கையில் எடுத்தாள். ”வகுப்பு எவ்வளவு நேரம்?” என அலுவலக உதவியாளரிடம் கேட்டேன். ”12.45” வரை என்றார். ”மதியம் வகுப்பு கிடையாதா?” என்றேன். ”இல்லை” என்றார். நேரம் பார்த்தேன். 12.45. அந்த குட்டிப்பெண்ணுக்கு பக்கா டைமிங் சென்ஸ்.
அவள் அவ்வளவு ஆர்வமாய் என்ன பார்க்க ஆரம்பித்தாள் என கவனித்துப் பார்த்தேன். முதல் நாள் ஏதோ வேலை பிசியில் இருந்ததால், தமிழ் நாடகங்களை வீட்டில் பார்க்க முடியவில்லை போல! கண் கொட்டாமல், பொறுப்பாக ஒவ்வொரு நாடகமாக பார்க்க ஆரம்பித்தாள். அதற்கு பிறகு வீட்டுக்கு கிளம்பும் வரை அந்த ஐ பேடை கீழே வைக்கவேயில்லை. நாடகங்களும் முடிந்தபாடில்லை.
கொரானாவிடம் வேண்டிக்கொண்டேன். "எங்கள் குழந்தைகளை தமிழ் நாடகங்களிலிருந்து காப்பாற்று!"
Picture உபயம் : இணையம்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment