> குருத்து: உடலும் பயிற்சியும்

October 31, 2021

உடலும் பயிற்சியும்


கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்தது உடற்பயிற்சி கூடத்தில் என தினத்தந்தியில் செய்தி படித்தேன். உடற்பயிற்சி குறித்து பேஸ்புக்கில் ஆங்காங்கே சிலர் எழுதுவதை பார்க்க முடிகிறது. சமூகத்திற்கு நம்ம கருத்தையும் சொல்லவில்லை என்றால் உண்மை தெரிந்தும் அதை சொல்ல மறுத்தால், விக்கிரமாதித்தன் தலை சுக்குநூறாகிவிடும் என வேதாளம் சொன்னது போல் நடந்துவிடும்.


எட்டு வயதில் தினத்தந்தியில் கன்னித்தீவு படிக்க ஆரம்பித்தது போல, இளவயதிலேயே உடற்பயிற்சியும் துவங்கிவிட்டேன். அதற்கு என் சொந்தத்திலோயோ, நண்பர்கள் மத்தியிலோ முன்மாதிரிகள் யாருமில்லை. மருந்துகடையில் விற்பனை பிரதிநிதியாக இருந்து பல நோயாளிகளுக்கு மருந்து எடுத்து கொடுத்த காரணம் இருக்கலாம் என இப்பொழுது தோன்றுகிறது. அப்பொழுது நிறைய மருத்துவ கட்டுரைகளும் படித்துக்கொண்டிருப்பேன்.

அப்பொழுதும் எதையும் வலுவாக செய்வது என்பதாக துவங்கவில்லை. மெது ஓட்டம் ஓடலாம். ஜிம் போகலாம். சைக்கிள் ஓட்டலாம். அரைமணி செய்யவேண்டும். அந்த எண்ணம் மட்டுமே இருந்தது. ஜிம் போனேன். ஆளாளுக்கு வெயிட்டாக செய்வதை வேடிக்கை பார்த்துவிட்டு, நான் அரை மணி நேரம் அலட்டிக்கொள்ளாமல் செய்துவந்தேன். கிண்டல் செய்வார்கள். கண்டுகொள்ளமாட்டேன். கொஞ்ச காலத்தில் ஜிம்மை விட நல்லது யோகா என்றார்கள். சில நாட்கள் போனேன். அந்த வயதில் யோகா ரெம்பவும் ஈர்க்கவில்லை.

திருப்பூரில் ஓராண்டு இருந்த பொழுது, ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். பயிற்சி விடிகாலையில் 5 மணிக்கே துவங்கிவிடும், அங்கிருந்து கிளம்பும் பொழுது நீங்கள் கற்றுக்கொண்டதை வைத்து, ஒரு ஆளை சாய்த்துவிடலாம் கவனம் என எச்சரித்தும், வாழ்த்தியும் அனுப்பினார். இன்னும் ஒருவாரம் மஞ்சள் பெல்ட் வாங்கியிருந்திருக்கலாம். வாங்க முடியவில்லை. இதை நம்ம இனியன் தம்பியிடம் ஒருமுறை சொல்லியிருந்தேன். சிறுவயதில் ”கராத்தாவில் மாமா பெரிய ஆள்” என அவனே நினைத்துக்கொண்டிருக்கிறான். பிறகு, விவரம் தெரிந்த பிறகு, மஞ்சள் பெல்ட் தான் துவக்கம் என தெரிந்த பிறகு, அவன் மனதில் உயரத்தில் வைத்திருந்த இடத்தை அவனே கீழேயே இறக்கியும் வைத்துவிட்டான். அவனே ஒரு நாள் சொன்ன பொழுது வாய்விட்டு சிரித்துவிட்டேன். பின்னாளில் ஒரு பிளாக் பெல்ட் வாங்கியவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, வாழ்க்கையில் ”மான் கராத்தே” தான் ஆகச்சிறந்தது என்பதையும் மனதில் இருத்திக்கொண்டேன்.

இடையில் எப்பொழுது வேண்டுமென்றாலும், தொடர்ச்சியாக பயிற்சி செய்வதில் ஒரு தொய்வு வரும். மதுரை ரேஸ்கோர்சில் உள்ள மைதானத்திற்கு காலை ஆறு மணிக்கு போய்விடுவேன். ஒரு பெரிய மனித கூட்டமே பரபரப்பாக இயங்கும். சிலர் மெது ஓட்டம் ஓடுவார்கள். சிலர் ஜிம்னாஸ்டிக் செய்வார்கள். சிலர் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் யோகா செய்வார்கள். சிலர் கராத்தே கற்றுக்கொண்டு இருப்பார்கள். நாம மட்டும் தான் ஏதும் செய்யாமல் இருக்கிறோம் என்ற உணர்வு வரும். சரியாகிவிடுவேன்.

பின்னாளில் வீட்டிலேயே சில உடற்பயிற்சி கருவிகள் வாங்கி வைத்துவிட்டேன். தினமும் காலையில் அந்த கருவிகளைக்கொண்டு எளிமையான முறையில் இருபது நிமிடம் உடற்பயிற்சி செய்துவிடுவேன். ஒருமுறை அப்பா ஏதோ உற்சாகத்தில் அந்த கருவிகளை வைத்து ஒருநாள் பயிற்சி செய்து ஒருவாரம் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது தனிக்கதை.

சென்னை வந்த பிறகு ஒவ்வாமை (Allergy) பிரச்சனை அதிகமாகி தொந்தரவு செய்தது. அது அம்மாவிடமிருந்தும், அப்பாவிடமிருந்தும் ’கொடையாக’ வந்தவை. அம்மாவும், அப்பாவும் என்னுள்ளே இருக்கிறார்கள் என்பதை 'ஒவ்வாமை' மூலம் உணர்ந்திருக்கிறேன். அப்பா குறிப்பாக பனிக்காலத்தில் மூச்சிரைப்பு வந்து சிரமப்படுவார். பார்த்திருக்கிறோம். அம்மாவிற்கு ஒவ்வாமை இருந்ததை எங்களிடம் காட்டிக்கொண்டதேயில்லை. ஆனால், உணவுமுறையில் தனக்கு ஒத்துக்கொள்ளாததை கவனமாக தவிர்த்தே வந்திருக்கிறார் என இப்பொழுது யோசித்தால் புரிகிறது.

பிறகு பகுதியில் விசாரித்து யோகா மையம் ஒன்றில் சேர்ந்தேன். கட்டணம் மாதம் ரூ. 300. வணிகம் முதன்மையாக இல்லாமல், யோகாவை பரப்பவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அதே போல யோகாவுடன் கடவுள் நம்பிக்கையை உள்ளே நுழைக்கமாட்டார்கள். காலை 5 மணிக்கு எழுந்து, 5.30க்கு துவங்கி 6.30 வரை வகுப்பு. யோகா செய்தால், நாள் முழுவதும் அத்தனை உற்சாகமாக இருக்கும். ஒவ்வாமை (Allergy) தந்த தொந்தரவிலிருந்து யோகா நிறைய காத்தது.

விளையாட்டாகவே சொல்வேன். பகுதியில் பலரும் என்னுடன் பழகியது யோகா மையத்தில் தான். பத்து நாட்கள் வந்தவர்கள். ஒரு மாதம் வந்தவர்கள் என பெரும்பாலோரை அங்கு தான் பழகினேன். யார் தொடர்ந்து வந்தார்கள் என்றால், உடற்பயிற்சியின் பலனை அறிந்தவர்கள், சர்க்கரை, தைராய்டு என ஏதாவது நோயில் சிரமப்படுபவர்கள் தொடர்ந்து வந்தார்கள். பத்து வருடம் ஓடியது. கொரானா வந்ததினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வகுப்பு இயங்கவில்லை. இயங்கும் பொழுது எனக்கு தெரிவியுங்கள் என யோகா வாத்தியாரிடம் தெரிவித்திருக்கிறேன். கொரானா காலம் துவங்கியதிலிருந்து வீட்டில் அரை மணி நேரம் யோகா செய்துகொண்டு தான் இருக்கிறேன்.

ஆக உடற்பயிற்சி வாழ்வில் என்ன தந்தது? என் தோழி ஒருவர் ”என் மூளை இயங்கும் வேகத்திற்கு, உடல் எனக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. இது பெரிய ரண வேதனை” என்பார். நான் யோசித்ததை நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு பயிற்சி பயன்பட்டது. வேறேன்ன வேண்டும்?

நவீன வாழ்க்கை என்பது பெரும்பாலோரை உடல் உழைப்பு இல்லாமல் செய்துவிட்டது. உணவுமுறையும், வாழ்க்கை முறையும் இணைந்து நடுத்தர வயதில் சர்க்கரை தாக்கிவிடுகிறது. செரிமான பிரச்சனை வந்துவிடுகிறது. வேறு வேறு கோளாறுகளும் இணைந்துகொள்கின்றன. அதுவரை எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பவர்கள், ஏதாவது நோய் தாக்கிய பிறகு உணவு, உடற்பயிற்சி என எல்லாவற்றையும் கவனமாக செய்ய துவங்குகிறார்கள். பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

கடந்த வாரம் சிலரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, உடற்பயிற்சி பற்றிய பேச்சு இடையில் வந்தது. ஒருவர் ”பயிற்சி செய்து அதனால் பலன்களையும் அனுபவித்து இருக்கிறேன். ஆனால், நேரமே இல்லை” என அலுத்துக்கொண்டார். ”சாப்பிடுவது, தூங்குவது போல பயிற்சியும் தவிர்க்க முடியாதவை என எண்ணம் இருந்தால் தான் சாத்தியம். இல்லையென்றால் செய்வது சாத்தியமேயில்லை.” என்றேன். ஏற்றுக்கொண்டார்.

0 பின்னூட்டங்கள்: