”மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு ரயில் வருகிறது. ஆகையால், மெயின் டிராக்கில் உள்ள ரயிலை எடுத்து இன்னொரு டிராக்கில் மாற்றிவிடு” என சொல்கிறார்கள். வண்டியை எடுக்கும் பொழுது ஏர் பிரேக் இல்லாமல் இருப்பதை ஊழியர் பார்த்து சொல்கிறார். ”பக்கத்து டிராக்கில் தான் எடுத்துவிடப்போறேன்பா!” என பதில் சொல்கிறார். வண்டியை ஸ்டார்ட் பண்ணும் பொழுது தான், டிராக் லீவர் மாற்றாமல் இருப்பதை பார்க்கிறார். இன்னொரு ஆள் வந்து மாற்றுவதற்குள் நாமே மாற்றிவிடலாம் என வண்டியை ஊர்ந்து வரும்படி செட் செய்துவிட்டு, ரயிலை விட்டு இறங்கி நடக்கிறார். எதிர்பாராதவிதமாக பிரேக் லீவர் கீழே இறங்கி வேகமெடுக்கிறது. ஓட்டுநர் சுதாரித்து ஓடி வந்து ஏறப்பார்க்கிறார். கனத்த உடல் என்பதால் அந்த வேகத்தில் ஏறமுடியவில்லை. கீழே விழுந்துவிடுகிறார்.
ஓட்டுநர் இல்லாத அந்த ரயில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் ஓடுகிறது. அங்கிருந்து படமும் வேகமெடுக்கிறது. ஓட்டுநர் இல்லாத அந்த ரயிலை, ரயில் என்பதை விட ”வெடிகுண்டு” என்பது தான் பொருத்தமானது. ஊரில் பாதி பேரை கொன்றுவிடும் அளவிற்கு ஆபத்தான கெமிக்கல்ஸ்களை கொண்டிருக்கிறது. ரயில்வே அதிகாரிகள் பதட்டமாகிறார்கள். ஊடகங்கள் அதை வெளியில் சொல்ல, ஊரே பதட்டமாகிறது.
அந்த ரயிலுக்கு முன்னால் ஒரு இன்ஜினை அனுப்பி அதை நிறுத்தப் பார்க்கிறார்கள். ஹெலிகாப்டரிலிருந்து ஒரு ஆளை ஓடும் ரயிலில் குதிக்க வைக்க முயல்கிறார்கள். இப்படி அவர்கள் எடுக்கம் பல முயற்சிகளும் தோல்வியடைகின்றன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அதே டிராக்கில் எதிரிலிருந்து இன்னொரு ரயிலை ஓட்டிவரும் ரயில் ஓட்டுநரும், உடன் வேலை செய்யும் கண்டக்டரும் அந்த ரயிலை நிறுத்துவதற்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்குகிறார்கள். மாணவர்களுக்கு என்ன ஆனது? அந்த ஆபத்தான ரயில் வெடித்து சிதறியதா? என பல கேள்விகளுக்கு முழு நீளப்படத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.
****
”ஸ்பீடு” என ஒரு படம். பேருந்தில் வெடிகுண்டு வைத்துவிடுவார்கள். வேகத்தை குறைத்தால் வெடித்துவிடும். அதிலிருந்து பயணிகளை எப்படி காப்பாற்றினார்கள்? என துவக்கம் முதல் இறுதிவரை ஒரு ரோலர் கோஸ்டர் படம் போல ஓடும். அது போல தான் இந்தப்படமும். வழக்கமான ஹாலிவுட் மசாலா என புறக்கணிக்க முடியாமல், 2001ல் நடந்த உண்மைக் கதை என்பதால், அதன் வரம்புகளுக்குள் நின்று கொண்டு, கொஞ்சம் கற்பனை கலந்து, சுறுசுறுப்பான படமாக எடுத்திருக்கிறார்கள்.
28 ஆண்டுகள் ரயிலை இயக்கிய அனுபவத்துடன் நாயகனாக வரும் டென்சில் வாசிங்டன், அவருக்கு இளம் உதவியாக வரும் ”வொண்டர் வுமன்” படத்தில் வரும் Chris Pine என பலரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
2010ல் வெளிவந்திருந்தாலும், இந்த ஆண்டு எடுத்தப்படம் போல புத்துணர்ச்சியுடன் இருப்பது படத்தின் சிறப்பு. 'Enemy of the State', 'Man on Fire' என பல வெற்றிப்படங்களை கொடுத்த Tony Scott தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
கூகுள் பிளே, ஆப்பிள் டிவி, யூடியூப்பில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.
"Hey, don't get sentimental on me. Makes me think I'm gonna die.”
0 பின்னூட்டங்கள்:
Post a Comment