கதையின் நாயகன் ஒரு மென்பொருள் பொறியாளர். பெங்களூரில் இருந்து மாற்றலாகி அன்றைக்கு தான் சென்னை கிளையில் குழு லீடராக இணைகிறார். அன்று இரவு வேலையை விட்டு கிளம்பும் பொழுது, உயரதிகாரி ஒரு அறிக்கையை தயாரித்து மேலே உடனே அனுப்பவேண்டும். செய்ய முடியுமா? என கேட்கிறார். இவரும் வேறு வழியில்லாமல் அதை ஏற்கிறார். வேலையை முடிக்க இரவு 10 மணிக்கு மேல் ஆகிறது. கிளம்பும் பொழுது, லிப்ட் தகராறு செய்கிறது. அவரால் லிப்ட் வழியாகவும், வேறு வழிகள் வழியாகவும் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேற முடியவில்லை. இதில் மனித வள அதிகாரியாக (HR) வேலை செய்யும் நாயகியும் மாட்டிக்கொள்கிறார். அதற்கு பிறகு அங்கு பல அமானுஷ்யங்கள் நடைபெறுகின்றன. அவர்கள் அங்கிருந்து உயிரோடு தப்பித்தார்களா என்பதை பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
படம் எடுத்த விதத்தில் பார்வையாளர்களை ஈர்க்கிறார்கள். இந்தப்படத்தை திரையரங்கில் பார்த்திருந்தால், இன்னும்
கொஞ்சம் பயமுறுத்தியிருப்பார்கள். பேய் படம்
என்றாலும், கதையில் மூன்று பேரை கொல்வதில் நியாயம் இருக்கிறது. நாயகன், நாயகி இருவரையும்
கொலை செய்ய முயற்சி லாஜிக் இல்லாதது. பேய்
படத்தில் என்னய்யா லாஜிக்? என யோசித்திருப்பார்கள் போலும்!
படத்தின் இறுதியில் சொல்கிற செய்தி முக்கியமானது. ஐடி ஊழியர்களின் (தற்)கொலைகள். தற்கொலை என சொல்வதில்
எனக்கு உடன்பாடில்லை. படத்தில் ’பேய்’ என்கிறார்கள். எனக்கென்னவோ கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனங்கள்
தான் ஊழியர்களை ‘பேய்’ போல இரவும், பகலும் வேலை வாங்குகிறார்கள். இரண்டு மாதத்தில்
முடியவேண்டிய வேலையை ஒரு மாதத்தில் முடித்துக்கொடு என நெருக்கடி தருகிறார்கள். படத்திலேயே சொன்னது போல கழிவறை சென்றாலும் கண்காணிக்கிறார்கள்.
இப்பொழுது கொரானா காலமாக இருக்கிறது. வீட்டிலேயே வேலை செய்ய சொல்கிறார்கள். தூங்குகிற
நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் வேலை வாங்குவதாக புலம்புகிறார்கள். எவ்வளவு பாடுபட்டு வேலை செய்தாலும், திடீரென வேலையில்
இருந்து தூக்கிவிடுகிறார்கள்.
விளைவு. 2010லிருந்து 2015 வரை இந்தியாவில்
58,679 ஐடி ஊழியர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். சிலர் குடும்பத்தோடு கூட தற்கொலை செய்திருக்கிறார்கள். இதில் தமிழகத்தில் 8233 ஐடி ஊழியர்கள் அடக்கம். இந்திய அளவில் தமிழகத்தின் பங்கு 14%.
ஆக ‘நல்ல’ சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். வார இறுதியில் ”ஜாலியாக” இருக்கிறார்கள்
என்ற புரிதல் தான் பொதுவாக பலருக்கும் இருக்கிறது. இதற்கு தீர்வாக “நமக்குள்ளாகவே தனித்தனி
தீவுகளாக நாம் இருக்கிறோம். நாம் நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும். தைரியமாக
இருக்கவேண்டும்” என மனநிலை ஆலோசகர் சொல்கிறார்.
இதில் ஒரு பகுதி உண்மை. ஒருவருடைய சம்பளத்தை இன்னொருவருக்கு தெரியாமல் மறைத்து
கொள்ள நிர்வாகமே கட்டாயப்படுத்துகிறது. ஆகையால், ஒவ்வொருவரையும் தனித்தனியான நபர்களாக
மாற்றுகிறது. ஆகையால், சிங்கத்துக்கு பயந்து சிதறி ஓடும் மான்களாகவே ஒவ்வொருவரும் தனித்தனி
தீர்வுகளை தேடுகிறார்கள். இதற்கு மாற்று என்றால்,
ஐடி ஊழியர்கள் தாங்களும் மற்ற தொழிலாளர்களை போலவே, நாமும் தொழிலாளர்கள் என்ற உணர்வுக்கு
வரவேண்டும். அதே போல மற்ற தொழிலாளர்களைப் போலவே
ஒரு சங்கமாக திரண்டு தங்களது பிரச்சனைகளை தீர்க்க போராடவேண்டும். வேறு ஏதும் குறுக்கு
வழிகள் இல்லை.
பின்குறிப்பு: 2018ல் ஆனந்த விகடனில் வந்த கட்டுரையிலிருந்து இருந்த தரவுகளை
தான் பயன்படுத்தியுள்ளேன். பின்னூட்டத்தில் அந்த கட்டுரையை பகிர்கிறேன். நன்றி.
https://www.vikatan.com/oddities/miscellaneous/129707-8-thousand-it-employees-suicide-in-tamil-nadu?fbclid=IwAR1kvY0pIJ6Hamb_m9FLYxMaaSDwZBHUlcpI4xL4ASiMTpiqAhdSPqU2JzE
0 பின்னூட்டங்கள்:
Post a Comment