> குருத்து: நெஞ்சுக்கு நீதி – ஒரு பார்வை

May 30, 2022

நெஞ்சுக்கு நீதி – ஒரு பார்வை

 


போலீசில் உயரதிகாரியான நாயகன் பொள்ளாச்சிக்கு மாற்றலாகி வந்து சேர்கிறார். இரண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே மரத்தில் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள். ஒரு பெண்ணைக் காணவில்லை. முறையான விசாரணை துவங்காமலேயே அந்த பிள்ளைகளின் பெற்றோர்களே ஆணவ கொலை செய்ததாக போலீசு வழக்கை வெகுவேகமாக முடிக்க பார்க்கிறார்கள்.
 
நாயகன் அந்த கொலைகள் ஏன் செய்தார்கள் யார் செய்தது என ஆராய துவங்குகிறார். உயரதிகாரியாக இருந்தாலும் அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரியாலும், மேலிருக்கும் உயர் அதிகாரியாலும், ஆளும் கட்சியில் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளாலும் வழக்கை அவர்கள் விரும்பியபடி முடித்துவிட அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதையும் மீறி உண்மையை வெளியே கொண்டுவந்தாரா என்பதை மீதிப் படத்தில் சொல்லி முடிக்கிறார்கள்.
 
தாழ்த்தப்பட்ட மக்களின் அவலநிலை படத்தில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண் பள்ளியில் மாணவர்களுக்கு எப்படி சமைக்கலாம் என பிரச்சனை செய்து, ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெற்றோர்கள் ஆக்கி வைத்திருந்த சோறை கீழே கொட்டுவதில் இருந்து தான் படமே துவங்குகிறது. மீண்டும் அந்த பெண் குப்பை அள்ளுவதற்கான வேலையில் ஈடுபடுகிறார். மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது, அது தண்டனைக்குரிய குற்றம் என பல ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் போட்டுவிட்டாலும், இன்றும் மலக்குழியில் மனிதர்கள் உள்ளே இறக்கப்படுகிறார்கள். பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். பலர் செத்தும்போகிறார்கள். சட்டம் தாள்களிலேயே தூங்கிக்கொண்டு இருக்கிறது.
 
மூன்று பெண் பிள்ளைகள் காணாமல் போகிறார்கள். பெண்களின் குடும்பத்தினர் பதைபதைத்து புகார் கொடுக்க அலைமோதுகிறார்கள். போலீஸ் புகார் பெற மறுக்கிறது. ஏனென்றால், அந்த “கொலைகளை” செய்ததே பெற்றோர்கள் என ஜோடிக்கும் பொழுது, எப்படி புகாரை வாங்குவார்கள். இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து சில இளைஞர்கள் கலகம் செய்ய துவங்குகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு போலீசு ஏகப்பட்ட வழக்குகளை பதிந்து வைத்திருக்கிறார்கள்.
 
அந்த பெண் பிள்ளைகள் குறித்து விசாரிக்கும் பொழுது தான் தெரிகிறது. அவர்கள் கூடுதலாக கூலி ரூ.30 கேட்டிருக்கிறார்கள். வெறும் முப்பது ரூபாய்க்காகவா? என அதிர்ச்சியாய் நாயகன் கேட்கும் பொழுது, அந்த ஆதிக்கச்சாதி முதலாளி வன்மத்துடன் திருத்துவான் “கேட்டதற்காக”. இதே ஆதிக்கச் சாதி வன்மம் தானே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெண்மணியிலும் 44 பேரை எரித்துக்கொன்றார்கள்.
 
அதெல்லாம் ஐம்பது வருடத்திற்கு முன்பான நிலை. இப்பொழுது அப்படி இல்லை. படம் மிகையாக பேசுகிறது என யாரேனும் நினைத்தால், இந்தியாவின் உண்மை முகம் இதை விடக் கொடியது என்பது தான் யதார்த்தம். ஆதிக்கச் சாதிக்கார்களின் அராஜகத்தை, அட்டூழீயங்களை ஒவ்வொரு நாளும் செய்திகளில் பார்க்கமுடியும். அப்படி பார்க்கவில்லை என்றால், ”வழக்கமான” செய்தி என்பதால், போடாமல் தவிர்த்திருப்பார்கள் என புரிந்துகொள்ளலாம். ஏனென்றால் நாய் மனிதனை கடித்தால் அது செய்தியல்ல. மனிதன் நாயை கடித்தால் அது தான் செய்தி.
 
தாழ்த்தப்பட்ட மக்களின் அவல வாழ்க்கை, தங்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு நீதி கிடைக்காமல் அலையும் மக்கள். ஆதிக்கச்சாதி வெறி, அவர்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு, அரசு அதிகாரிகளிடம் கிடைக்கும் செல்வாக்கு என எல்லாவற்றையும் சொல்லும் பொழுது, ஒன்று புரிகிறது. உலகம் உடைமை இல்லாதவர்கள், உடைமை இருப்பவர்கள் என இரண்டாய் இயங்குவது புரிகிறது. சொத்து இருப்பவர்களுக்கு, அவர்கள் என்ன செய்தாலும் உடன் நிற்கும் அரசு, அதிகாரிகள் என்பது பளிச்சென படம் சொல்கிறது. இப்படி எல்லாவற்றையும் பளிச்சென சொல்லிவிட்டு, என்ன இருந்தாலும் ”சட்ட” ரீதியாக செல்வது தான் தீர்வு என சொல்லி முடிக்கும் பொழுது, வலிந்து சொல்கிறார்கள் அல்லது பச்சையாக மறைக்கிறார்கள் என்பது பார்வையாளர்களுக்கு பளிச்சென தெரிகிறது.
 
அரசும் அதன் அதிகார வர்க்கம் தானே இப்படி. “நாம்” தேர்ந்தெடுத்த அரசாங்க பிரதிநிதிகள் இதையெல்லாம் வேடிக்கையா பார்க்கிறார்கள் என்ற கேள்வியை கேட்டால், ஆமாம். அவர்களுக்கு வேலை சட்டம் இயற்றுவது தானே! அதை நடைமுறைப்படுத்துவர்கள் அரசு அதிகாரிகள் தானே! படத்தில் வருவது போல அவர்களோடு ஆட்டம் போடுகிறார்கள். அப்படி யாரேனும் விதிவிலக்காக எதிர்த்து நின்றால், அது இந்தப் படத்தில் நாயகனின் நிலை தான்.
அனைத்து மக்களுக்குமான அரசு, அரசாங்கம் என்று பேசினால் கூட, உண்மையில் நடப்பது சொத்துடைமை இருக்கும் சிறுபான்மையினருக்கான அரசு தான். அரசாங்கம் தான். அதனால் தான் அவர்களின் கரங்களை பக்கபலமாக நின்று வலுப்படுத்துகிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதற்காக பாடுபடுகிறார்கள். அதன் மறுபக்கமாக பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறார்கள்.. பெரும்பான்மை மக்களுக்காக சிந்திக்கும் செயல்படும் அரசும் வரலாற்றில் இருந்திருக்கிறது. அதை ரசியாவிலும், சீனாவிலும் இன்னும் பல நாடுகளிலும் உலகம் பார்த்திருக்கிறது.
ஆக, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருக்கிற இத்துப்போன, அழுகி நாறும் நிலையில் இருக்கிற இந்த பழைய ”அரசை” ஏன் தூக்கி சுமக்கவேண்டும். கடாசிவிட்டு, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ”அரசை” நிறுவுவதைப் பற்றி சிந்திப்பதும் மக்களை அதை நோக்கி அணித்திரட்டுவதும் தான் இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கமுடியும்.
 
இந்தியில் வந்த “Article 15” படத்தை முறையாக வாங்கி தமிழ் நிலத்திற்கு பொருந்துவது போல சில அவசிய மாற்றங்களை செய்து படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். “கனா” படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். ”நியூட்ரல் என்பது நடுநிலை அல்ல! பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம், நியாயத்தின் பக்கம் நிற்பது தான்”. தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை நேர்மையாக சொன்ன இயக்குநருக்கு
வாழ்த்துகள்.
 
இப்பொழுது திரையரங்குகளில் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அவசியம் பார்க்கவேண்டிய படம்.

0 பின்னூட்டங்கள்: