> குருத்து: காத்துவாக்குல இரண்டு காதல் – ஒரு பார்வை

May 28, 2022

காத்துவாக்குல இரண்டு காதல் – ஒரு பார்வை


ஒரு கிராமம். அந்த குடும்பத்தில் யாருக்கும் திருமணம் நடந்தால், சம்பந்தம் செய்த குடும்பத்தினர் செத்துப்போகிறார்கள். ஆகையால் பயந்து போய் யாரும் பெண் தர மறுக்கிறார்கள். நாயகனின் அப்பா ஒரு பெண்ணை காதலித்து திருமணம் முடிக்கிறார். பிறகு அவரும் செத்துப்போகிறார். பையனை பெற்றெடுத்த அம்மா, படுத்த படுக்கையாகிறார். பையன் துருதிருஷ்டகாரன் என திரும்ப திரும்ப சொல்கிறார்கள். அவனும் மெல்ல மெல்ல நம்ப துவங்குகிறான். “கவலைப்படாதே மகனே! ஒருநாள் எல்லாம் மாறும்” என அம்மா ஆசிர்வதிக்கிறாள்.


நகரத்துக்கு வந்துவிடுகிறான். பகலில் டாக்ஸி ஓட்டுகிறான். இரவில் ஒரு கிளப்பில் பவுன்சராக வேலை செய்கிறான். ஊரில் உள்ள தன் பெரிய குடும்பத்துக்கு பொறுப்பாய் பணம் அனுப்புகிறான். இந்த நிலையில் இரண்டு நாயகிகள் அவனுக்கு அறிமுகமாகிறார்கள். இருவரும் வேறு வேறு பிரச்சனையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள். இருவரும் ஒரு விநாயகர் சதுர்த்தி நாளில் நாயகனிடம் காதலைச் சொல்கிறார்கள். அம்மா சொன்ன அந்த நல்ல நாள் வந்துவிட்டதென, இருவரிடமும் உண்மையை சொல்லாமல் இருவரின் காதலையும் ஏற்கிறான்.

ஒரு நாள் இருவருக்கும் உண்மை தெரிந்துவிடுகிறது. ”யாராவது ஒருவரை தேர்ந்தெடு. வாழலாம்” என இருவரும் சொல்கிறார்கள். தன் துரதிருஷ்ட முன்கதையை சொல்லி, அதனால் தான் இருவரிடமும் மறுக்கவில்லை என்கிறான். இரண்டு பேரும் எனக்கு வேண்டும் என அடம்பிடிக்கிறான். எங்கெங்கோ போய் படத்தை முடிக்கிறார்கள்.

கதை சுருக்கம் எழுதும் பொழுதே, எனக்கு உமட்டிக்கொண்டு வருகிறது. உங்களிடம் சொல்லி உங்களையும் சிரமப்படுத்துவதை நினைக்கும் பொழுது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் தமிழில் இப்படிப்பட்ட படங்கள் வருவதை நீங்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

நாயகனின் முன்கதை என்பது ஒரு போலி (Fake). உலகத்தில் அப்படி ஒரு கேனத்தனமான, துரதிருஷ்டவசமான குடும்பம் இருக்க வாய்ப்பேயில்லை. கல்யாணம் தான் ஆகவில்லை. கை, கால்கள் இருக்கிறதே! உழைக்கவேண்டியது தானே! அந்த வெட்டியாய் சுத்தும் குடும்பத்துக்கு தான் நாயகன் இரவும் பகலும் தூங்காமல் உழைக்கிறார். கடைசியில் ஒரே நாளில் காதலித்தவர்களை எல்லாம் கண்டுபிடித்து எல்லாருக்கும் திருமணமும் நடக்கிறது. கஷ்டம். கஷ்டம்.

ஊரில் எவ்வளவோ பேர் இருக்கும் பொழுது இரு நாயகிகளுக்கும் நாயகன் மீது ஏன் அப்படி ஒரு காதல்? இயக்குநர் இரு நாயகிகளையும் எட்டுத்திக்கில் ஏதாவது ஒரு வழியில் கூட தப்பித்துவிடாதபடி, துன்பம், துயரம் என்னும் கட்டையை போட்டு கொண்டே இருக்கிறார். அவர்களுக்கு இவரை விட்டுவிட்டு, வேறு யாரையும் காதலிக்க முடியாதபடிக்கு நெருக்கடியில் தள்ளிக்கொண்டே இருக்கிறார். இப்படி ஒரு இயக்குநர் கிடைத்தால், இப்படி ஒரு நாயகன் இரண்டு என்ன? மூன்று நாயகிகள் கூட வெட்கமின்றி கேட்பான். என்னைக் கேட்டால், இரவும் பகலும் தூங்காமல் வேலை (!) செய்வதால்,, அவனுக்கு முதலில் செய்யவேண்டியது வைத்தியம் தான்.

சித்ரா லட்சுமணனுக்கு தந்த பேட்டியில் இந்தப் படத்தின் இயக்குநர் சொல்கிறார். ”என் கதையை என் உதவி இயக்குநர்களிடம் கூட விவாதிக்கமாட்டேன். அதில் உள்ள லாஜிக் ஓட்டைகளை யாராவது ஒரு ஆளாவது கலாய்த்துவிடுவார். பிறகு என்னால் நான் நினைக்கிற கதையை எடுக்க முடியாது” என்கிறார். இவ்வளவு கேவலமாக கதை ஏன் வெளிவருகிறது என நமக்கு புரிகிறது அல்லவா! இந்தக் கதையை கேட்டு நாயகிகளில் சூப்பர் ஸ்டார் நயன் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு டாப் ஸ்டார் சமந்தா ஒத்துக்கொள்கிறார். ”நல்ல” கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி ஒத்துக்கொள்கிறார். ஸ்ப்பா! முடியல!

அதே பேட்டியில் “இதற்கு முன்பும் பல இரண்டு பொண்டாட்டிகள் கதைகள் வந்திருக்கின்றன. அந்த கதைகளில் எல்லாம், மூவரும் ஒரு காட்சியில் தோன்றும் பொழுது, படம் முடிவுக்கு வந்துவிடும். நான் அதற்கு பிறகு என்ன நடக்கும் என சொல்ல முயன்றிருக்கிறேன்” என்கிறார். படத்தின் ஓரிடத்தில் நாயகிகளில் ஒருத்தி சொல்வார். ”இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒண்ணு! நாம் இறந்த காலத்திற்கு போகவேண்டும். இல்லையெனில், எதிர்காலத்திற்கு போகவேண்டும். இப்போதைக்கு இது சாத்தியமில்லை!” என்பார். எப்பா! எவ்வளவு வசதிகள், வாய்ப்புகள் இருந்தாலும் ஒரு குடும்பம் குடும்பமாய் வாழ்வதே சமூக நிலைமைகளில் இன்று பெரும் சவாலாய் இங்கு இருக்கும் பொழுது, இவர்கள் பேசுவதும் விவாதிப்பதும் சகிக்க முடியாததாக இருக்கிறது.

இன்னும் பேசலாம். என்னால முடியலை! இத்தோட நிறுத்திக்கலாம்.

0 பின்னூட்டங்கள்: