அன்றைக்கு முழு சந்திரகிரகணம். நண்பர்கள் எல்லோரும் ஒரு வீட்டில் சந்தித்து, சந்திரகிரகணத்தையும் டெலஸ்கோப்பில் ரசிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். எல்லோருமே நடுத்தர வயதில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் நல்ல வேலையிலும் இருக்கிறார்கள்.
மூன்று குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி என ஆறு பேரும், ஒருவர் தன் துணைவியாருக்கு உடல் நிலை சரியில்லை என அவர் மட்டும் என மொத்தம் ஏழுபேர் கூடுகிறார்கள்.
கணவன் மனைவி உறவு குறித்து பேச்சு எழுகிறது. ஒரு மனைவி கணவனுக்கு வந்த வாட்சப் செய்தியைப் பார்த்ததும் சண்டை ஆரம்பித்து பிரிந்துவிட்டார்கள் என்கிறார். நாங்க அப்படியில்லை. எங்களுக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இல்லை என சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ”அப்ப ஒரு விளையாட்டு துவங்கலாம். எல்லோருடைய செல்போன்களையும் மேஜையில் வைப்போம். வருகிற அழைப்புகளை, குறுஞ் செய்திகளை, மின்னஞ்சல்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்வோம்” என முடிவு செய்கிறார்கள்.
ஒவ்வொரு செய்தியாக வர வர, அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன ரகசியங்கள் முதல், பெரிய ரகசியங்கள் வரை ஒவ்வொன்றாக உடைபடுகிறது. அந்த இடம் பதட்டமான நிலைக்கு வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமான இறுதி காட்சியுடன் முடிவடைகிறது. அப்பாடா ஸ்பாய்லர் இல்லாமல் கதை சுருக்கம் சொல்லிவிட்டேன்.
****
2016ல் இந்த இத்தாலிய படம் வந்து, பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. அதற்கு பிறகு ஸ்பெயின், தென்கொரியா, துருக்கி என 20 மொழிகளில் அனுமதி வாங்கி மீண்டும் எடுத்திருக்கிறார்கள். அனுமதி வாங்காமலும் நிறைய எடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஒரு உதாரணம். மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள 12th Man யும் இந்த படத்தின் ஒன்லைன் தான். என்ன கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக, ஒரு கொலையையும் சேர்த்து, ஒரு திரில்லராக்கிவிட்டார்கள்.
ஒரு போனை எடுத்து மேஜை மேலே வைச்சு, இரண்டு மணி நேரத்தில் நாலு குடும்பத்தையும் சல்லி சல்லியா உடைச்சிட்டிங்களேடா! என்று தான் தோன்றியது. நாலு குடும்பத்து ஆட்களை வைத்து கதை சொல்லி, அந்த படத்திற்கு Perfect Strangers என பெயர் வைத்தது இயக்குநரின் கிண்டல் என எடுத்துக்கொள்கிறேன்.
கணவனுக்கு ஒரு விசயம் பிடிக்கும். மனைவிக்கு சுத்தமாக பிடிக்காது. அங்கு மறைப்பது என்பது இயல்பாய் வந்துவிடும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சின்ன சின்ன ரகசியங்கள் இருக்கத்தான் செய்யும். திருமணம் என்பது இருவரும் சின்சியராக இருக்கவேண்டிய ஒரு கமிட்மெண்ட். ஊருக்காக ஒரு குடும்ப அமைப்பில் வாழ்ந்து கொண்டு, இருவரும் வேறு வேறு துணைகளோடு பயணப்பட்டால் என்ன ஆகும்? இதற்கு தனிநபர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியுமா? சமூக நிர்பந்தங்களும் இதில் வினையாற்றுகின்றன.
பல நாடுகளுக்கும் இந்த கதை பயணப்படுகிறது என்பது எதைக் காட்டுகிறது? எல்லா ஊரிலும் குடும்பங்களில் சிக்கல்கள் இருக்கிறது என்பதைத் தானே? ஒவ்வொரு மொழியிலும் என்னென்ன மாற்றங்கள் செய்தார்கள் என அறிய ஆவலாய் இருக்கிறது.
படத்தில் நடித்த அத்தனைப் பேரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். பார்க்கவேண்டிய படம். பாருங்கள். Notify me ல் இருப்பதாக இணையம் சொல்கிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment