கொரானா உலகை மிரட்ட துவங்கி இருந்த பொழுது, இந்தியாவில் எந்தவித முன் தயாரிப்பும் செய்யாமல், 2020ல் மார்ச் மாதம் மூன்றாவது வாரம் ஒன்றிய அரசு திடீரென ஊரடங்கை அமுல்படுத்தியது. வீட்டை விட்டு யாரும் எங்கும் போகமுடியாது. பேருந்து இயங்கவில்லை. ரயில் இயங்கவில்லை. எந்த வாகனமும் இயங்கவில்லை.
வேலை இல்லை. சம்பளமும் இல்லை எனும் பொழுது உழைத்தால் தான் அன்றைக்கு சாப்பாடு என வாழும் மக்கள் உயிர் வாழ்வதற்கான அடிப்படை பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டனர். ஒன்றிய அரசு பெயருக்கு ரேசன் அரிசியில் அரிசி, கொண்டைக்கடலை என்ற அறிவிப்போடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக அமைதியானது. புயல், மழை, வெள்ளம் என்கிற சமயங்களில் சிவில் சமூகம் தன்னால் சாத்தியமான அனைத்தையும் செய்யும். கொரனா என்பது உயிர்கொல்லும் நோயாக இருந்ததால், இந்தமுறை அந்த உதவியும் பெரும்பாலும் கிடைக்கவில்லை.
வேலையும் இல்லை. வருமானமும் இல்லை என்ற நெருக்கடியான நிலையில் தான், ரயில்வே அதுநாள் வரை வழங்கி வந்த மூத்த குடிமக்களுக்கு பயணச் சீட்டில் கொடுத்த கழிவை ரத்து செய்தது. கொரானா என்பது ஆரோக்கியமாக இருப்பவர்களை அப்பொழுது பெரிதாக பாதிக்கவில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களோடு போராடிக்கொண்டு வாழும் மூத்த குடிமக்களை பெரிதும் பாதித்தது. முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் நிறைய மூத்தவர்களை இழந்தோம்.
இப்படி நெருக்கடியான காலக்கட்டத்தில் தான் மூத்த குடிமக்களுக்கு பயணச் சீட்டில் தரும் கழிவை ரத்து செய்தது. ஒருவேளை மூத்த குடிமக்கள் குறுக்கும் நெடுக்கும் பயணித்து கொண்டிருந்தால், உயிரிழப்பு இன்னும் அதிகமாகும். ஆகையால் பயணக் கட்டணத்தை அதிகமாக்கினால், மூத்த குடிமக்கள் பயணிப்பதை குறைப்பார்கள். உயிரிழப்பு குறையும் என்ற ”புத்திசாலித்தனமாக” சிந்தித்து இருக்கலாம். இவர்கள் ஏற்கனவே ”கோ கொரானா” என தட்டை எடுத்து தட்ட சொன்னவர்கள் தானே!
மார்ச் 2020 லிருந்து மார்ச் 2022 வரை 7 கோடிக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் 3500 கோடி வருமானம் வந்திருக்கிறது. மூத்தவர்களுக்கான பயணக் கழிவை ரத்து செய்ததால் 1500 கோடி கூடுதல் வருமானம் ஈட்டியிருக்கிறது.
ஒரு மனிதன் சமூகத்திற்காக 58 வயது வரை உழைக்கிறான். அதற்குள் பல நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. அவர்களுக்கு வரும் குறைந்தப்பட்ச பென்சன் தொகை அடிப்படை செலவுகளை எதிர்கொள்ள உதவி செய்கின்றன. மருத்துவ செலவை கூட அதை வைத்துக்கொண்டு செய்ய முடிவதில்லை. அதே போல பென்சன் என்பதெல்லாம் சமூகத்தில் மிக குறைந்த சதவிகிதத்தினரே வாங்குகிறார்கள். பென்சன் திட்டத்தை மெல்ல மெல்ல அரசுகள் காலி செய்துவிட்டார்கள். பெரும்பாலான மக்கள் வாழவேண்டும் என்றால் சாகும் வரை உழைப்பது என்பது சமூக எதார்த்தமாக இருக்கிறது. இந்த நிலை என்பது அவலமானது. இது சமூகத்தின் இயலாமை. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம். நல்ல ஆட்சி தருவோம். அதற்கான தகுதி இருக்கிறது என ஆட்சிக்கு வந்தவர்கள் தான் இதற்காக வெட்கப்படவேண்டும்.
இப்படி கடும் நெருக்கடியில் வாழும் மூத்த குடிமக்களிடம் 1500 கோடி ரயில்வே கொள்ளையடித்து இருக்கிறது. இது சம்பந்தமாக கடந்த மாதம் சு. வெங்கடேசன் எம்,பி. ”இப்பத்தான் நிலைமை சரியாயிருச்சே! பழைய படி சலுகை கழிவு தரலாம் அல்லவா!” என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதினால், ”கொரானா காலத்தில் ரயில்வே நிறைய நட்டமாயிருச்சு! அப்படி எல்லாம் கொடுக்கமுடியாது” என தெனாவட்டாக பதிலளித்திருக்கிறார்.
ஒன்றிய அரசு பெரும்பாலான மக்களின் சிரமங்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பதேயில்லை. ஒரு மனிதனை நெருக்கடியில் தான் அவன் தரத்தை உரசிப் பார்க்கமுடியும் என்பார்கள். ஒன்றிய அரசு இயல்பு நிலையிலும் மோசமாக தான் இருக்கிறது. நெருக்கடியிலோ இன்னும் கேவலமான நிலைக்கு போய்விடுகிறது. மக்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment