“ஒன்றை நம்மால் எழுத முடியுமென்றால், அல்லது யோசிக்க முடியுமென்றால், அதைப் படமாக்கவும் முடியும்!” – Stanly Kubrick
****
அமெரிக்காவில் குதிரை ரேஸ் நடக்கிறது. பெருங்கூட்டம். அங்கு பெரும்பணம் புழங்குவது இயல்பு தானே! புழங்குகிறது. அந்தப் பணத்தை கொள்ளையடித்து பங்கு போட்டுக்கொள்ளலாம் என ஒரு குழு முடிவு செய்கிறது. அங்கு வேலை செய்பவர்களை ஆசைக் காட்டி ஒத்துழைக்க வைக்கிறார்கள். ஒரு போலீசு அதிகாரியும் அடக்கம். ஒரு துப்பாக்கி சுடும் திறன் உள்ள ஆள். அங்கு இருக்கும் பாரில் வம்பு இழுத்து திசை திருப்புவதற்கு ஒரு வலுவான ஆள். எல்லாவற்றையும் பக்காவாக ஏற்பாடு செய்கிறார்கள். அதில் ஒருவன் மட்டும் தன் மனைவியிடம் நல்ல பேர் வாங்குவதற்காக பெரும்பணம் வரப்போவதாக உளறிவிடுகிறான். அவள் தன் காதலனிடம் ஊதிவிடுகிறாள்.
திட்டமிட்ட நாள் வருகிறது. எல்லாம் சொல்லி வைத்தாற் போல எல்லாமும் நடக்கிறது. எதிர்பாராத விதமாக வேறு சில சம்பவங்களும் நடக்கின்றன. பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
***
ஸ்டான்லி குப்ரிக் படங்கள் விசேசமானவை. எழுபது வயது வரை வாழ்ந்த குப்ரிக் எடுத்த மொத்தப் படங்கள் 13 தான். அதில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையானது என்பது தான் ஆச்சர்யம். அமெரிக்க இராணுவத்தை வைத்து இவர் எடுத்தப் படம் “Full Metal Jacket” (1987) பல நாட்கள் நினைவில் நின்று தொல்லை செய்தது. அவர் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் “எப்போதுமே திரைப்படங்களில் வன்முறை ஒரு அளவுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்போது எல்லாரையும் எது எரிச்சலூட்டுகிறது என்றால், நான் வன்முறையின் பின்விளைவுகளையும் காட்டுகிறேன் என்பதே.”
அதன் பிறகு ”Shining” (1980 )பார்த்தேன். ஒரு புகழ்பெற்ற ஓட்டல். 6 மாதம் இயங்கும். 6 மாதம் பனிபடர்ந்துவிடுவதால் மூடி வைக்கிறார்கள். நாயகன் அவனின் குடும்பம் மட்டும் அங்கு வாழும். இசையும் காட்சிகளும் நடிப்பும் உண்மையிலேயே மிரட்டியது. இப்படி ஒவ்வொரு படமும் குறிப்பிடத்தக்கவை தான்.
இந்தப் படம் அவருடைய முக்கிய படங்களில் ஒன்று இல்லை என்றாலும், பார்க்கலாமே என்று தான் பார்த்தேன். நன்றாக இருந்தது. வாய்ப்பு இருந்தால் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment