> குருத்து: Sympathy for lady vengeance (2005) தென்கொரியா

June 8, 2022

Sympathy for lady vengeance (2005) தென்கொரியா

 


19 வயது அப்பாவியான உங்களை ஐந்து வயது பையனை கொன்றதாக  சிறையில் பதிமூன்று வருடம் உள்ளே தள்ளினால் எப்படியிருக்கும். கொதித்துபோய்விடமாட்டீர்கள். இருடா வர்றேன்ன்னு கொலைவெறியோடு தானே வெளிவருவீர்கள். அது தான் ஒன் லைன்.
 
நடுத்தர வயது ஆசிரியன் அவன். பிள்ளைகளை கடத்தி கொல்கிறவன். ஒருமுறை ஒரு 19 வயது பெண்ணான நாயகியை மாட்டிவிடுகிறான். அப்படி ஒத்துக்கொள்ளவில்லை என்றால், கைக்குழந்தையாய் உள்ள உன் பெண் குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறான். தனக்கு இருக்கிற ஒரு சொந்தத்தை இழக்க விருப்பம் இல்லாமல் அவள் பழியை ஏற்றுக்கொள்கிறாள்.
 
சிறை ஒரு வதை முகாம். போலீசும் வதைக்கும். சக கைதிகளும் வதைப்பார்கள். அப்படி வதைபடும் சக கைதிகளை நாயகி உதவி செய்து காப்பாற்றுகிறாள். 13 வருடம் கழித்து வெளியே வருகிறாள். ஆஸ்திரேலியா தம்பதிகளால் தத்து எடுக்கப்பட்டு வளர்ந்து நிற்கும் பிள்ளையை போய்ப் பார்க்கிறாள். அழுது பிடித்து அம்மாவுடன் வந்துவிடுகிறாள். இனி தன் சக ஜெயில் தோழிகளைப் போய் பார்க்கிறாள். அவர்களால் முடியும் உதவிகளைப் பெறுகிறாள்.
 
தன் வாழ்வை சீரழித்தவனை என்ன செய்தாள் என்பதை கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அனுப்புகிறார்கள்.
 
ஒரு செயல். சில நாட்களுக்கு நினைவில் இருக்கும் பொழுதே, எத்தனை கொடூரமாய் சமூகத்தில் வெளிப்படுகிறது. சில நாட்களுக்கு பதிலாக 13 வருடங்கள் என்றால், எவ்வளவு கொடூரமாய் வெளிப்படும். அதை சொன்னவிதத்தில், எடுத்தவிதத்தில் ஈர்க்கிறார் இயக்குனர். நான் பார்த்த படங்களில் தென்கொரிய இயக்குநர்கள் உணர்வுகளை காட்சிகளோடு அத்தனை அருமையாக இணைக்கிறார்கள். ஆனால் ஏன் வாளி, வாளியாக ரத்தத்தை ஊற்றி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் ரத்தம் கொட்டுவது அதிகமாகிகொண்டே தான் போகிறது. குறைவேனா என்கிறது.
 
 
இந்தப் படமும், இதன் இயக்குநரும் உலகப்புகழ் பெற்றவர்கள். பழிவாங்கலை அடிப்படையாக கொண்டு மூன்று படங்களை வரிசையாக எடுத்தார். Sympathy for Mr. Vengenance (2003), Old boy (2003), Sympathy for lady vengeance (2005) இதில் Old boy மிகவும் புகழ்பெற்ற படம். மூன்று படங்களையும் வெவ்வேறு காலக்கட்டங்களில் பார்த்திருக்கிறேன். மூன்றுமே நல்ல படங்கள்.
 
இந்தப் படத்தைத் தழுவி தான், 22 Female Kottayam என மலையாளத்தில் எடுத்து இருக்கிறார்கள் என பளிச்சென தெரிகிறது. அவர்கள் படம் போடுவதற்கு முன்பு அத்தனை பேருக்கு நன்றி சொல்வார்கள். இந்த படத்திற்கு நன்றி சொல்லவேண்டும் என்றால், பல லட்சங்கள் கொடுக்கவேண்டும் என்பதால், வசதியாக மறந்துவிட்டார்கள் போல! மலையாளப் படத்தின் வெற்றியில், தமிழில் இயக்குநர் ஸ்ரீபிரியா மீண்டும் எடுத்தார். அதற்காக சில லட்சங்கள் வாங்கியிருப்பார்கள். இப்படி கலாய்த்திருப்பார்களோ! “ஏம்பா நீயே கொரிய படத்தைத் தான் சுட்டிருக்க! கேட்கிற காசுக்கு கொடுத்துட்டு போப்பா!” 🙂
 
இப்பொழுது Notify me தளத்தில் மட்டுமே இருப்பதாக Justwatch தளம் சொல்கிறது. வேறு வகைகளில் முயலுங்கள்.

0 பின்னூட்டங்கள்: