நாயகனும், நாயகியும் ஒரு விசேசத்துக்கு போய்விட்டு, அந்த வீட்டுக்கு விடிகாலை நான்கு மணிக்கு வந்து சேர்கிறார்கள். அந்த வீடு கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டிருக்கும் வீடு.
அவர்களுக்குள் ஏதோ பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அவன் சோர்வாக இருக்கிறான். அவள் கண் கலங்கி இருக்கிறாள். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. இந்த நேரத்தில் யார் என கேள்வியோடு போய் பார்த்தால், ஒரு பெண் இருட்டிற்குள் நின்று கொண்டு “இன்னார் இருக்கிறாரா?” என கேட்கிறாள். இவன் இல்லை என்றதும், அங்கிருந்து நகர்ந்துவிடுகிறாள்.
அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு இதோ வந்துவிடுகிறேன் என நாயகன் வெளியே போகிறான். ஆனால் அடுத்தடுத்து அந்த வீட்டிற்கு வெளியிலும், உள்ளுக்குள்ளம் விநோதமான சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. சன்னல் திரையை விலக்கிப் பார்த்தால், அங்கு முகமூடி போட்டுக்கொண்டு ஒருவன் நிற்கிறான். திடீரென பார்த்ததும் பயத்தில் அலறிவிடுகிறாள். இவள் பாதுகாப்புக்கு கத்தியை எடுத்து வைத்துக்கொள்கிறாள். அந்த சமயத்தில் நாயகன் வந்துவிடுகிறான். போனை கவனமாக திருடிவிடுகிறார்கள்.
பிறகு இந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து தொடர, நாயகன் அப்பாவின் துப்பாக்கியை எடுத்து அந்த முகமூடிகாரனைப் பார்த்து சுடவும் செய்கிறான். முகமூடிக்காரன் அங்கிருந்து விலகிவிடுகிறான். நாயகன் சுட தயாராக காத்திருக்கும் பொழுது, இந்த சமயத்தில் நாயகனின் நண்பன் அவர்களை அழைத்துச் செல்வதற்காக உள்ளே வருகிறான். அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை உணர்கிறான்.
அங்கிருந்து அவர்கள் உயிரோடு தப்பித்தார்களா என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***
உலக நாடுகளில் எல்லாம் புகுந்து ரவுடித்தனம் செய்யும் அமெரிக்காவின் உள்ளுக்குள் இப்படித்தான் அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஊருக்கு ஒதுக்குப்புறமான வீடு. அங்கு ஓய்வுக்கு வரும் ஒரு குடும்பம். ஒரு கும்பல் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்யும். அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை சில படங்களில் பார்த்திருக்கிறேன். இந்தக் கதையும் அப்படி துவங்கினாலும், முடிக்கும் பொழுது வேறு வகையில் முடித்திருப்பது தான் வித்தியாசம்.
சுப்பிரமணியப்புரத்தில் சிறைக்குள் இருக்கும் சசி, ஜெய்யிடம் “ஏன் இந்த கொலை?” என கேட்கும் பொழுது “பழக்கத்துக்காக” என சகஜமாய் சொல்வார்கள். அதை கேட்கும் நாம் அதிர்ந்து போவோம். அது போல இந்தப் படத்திலும் ஒரு வசனம் வரும். அது தான் நம்மை தொல்லைப்படுத்தும்.
குறைவான பாத்திரங்கள். குறைவான வெளிச்சம். ஒன்றரை மணி நேரமும் காப்பாற்றுவது நடித்தவர்களும், இசையும், எடுத்தவிதமும் தான்.
Justwatch தளத்தில் தேடிப்பார்த்தால், இந்தப் படமும் அமேசானில் மட்டும் வாடகைக்கு இருப்பதாக சொல்கிறது. வேறு வகைகளில் தேடிப்பாருங்கள்.
1 பின்னூட்டங்கள்:
உங்கள் விமர்சனங்கள் பார்த்து ஆங்கில படங்கள் பார்த்து வருகிறேன்.இதையும் பார்ப்போம். உங்களது விமரசனங்கள் ஆக்கபூர்வமானவை , நன்றி ,தொடர்ந்து தாருங்கள்
Post a Comment