நேற்று அசோக் நகர் வரை ஒரு வேலை. பக்கத்தில் தானே என டிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு போனேன்.
சில புத்தகங்களுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். அதில் ஆத்மார்த்தியின் புத்தகமும் ஒன்று. ஆத்மார்த்தியை இதுவரை படித்ததில்லை. ஒரே ஒரு சிறுகதை மட்டும் படித்துள்ளேன். "புத்தகம் பற்றி தெரியாமல் எப்படி வாங்குவது?" என கேட்டேன். கடையில் வேலை செய்பவர் கடை முதலாளியிடம் போய் கேட்டு வந்தார். பிரித்து தந்தார்.
முன் அட்டையிலும், பின் அட்டையிலும் ஆத்மார்த்தி. உள்ளே முழுவதும் சாரு இருந்தார். எழுத்துப் பிரசுரம் என்பதால், இப்படி அட்டை மாறாட்டம். நல்லவேளைப் பார்த்தேன். கடை முதலாளியிடம் தெரிவித்தேன். அவரும் சரிபார்த்துவிட்டு "தப்பாக பைண்ட் செய்திருக்கிறார்கள்" என்றார். "மனக்குகை சித்திரங்கள்" வாங்கிக்கொண்டேன்.
பேராசிரியர் அ. மார்க்ஸ் "ஆளுமைகள்" என பாலகோபால், கோ. கேசவன் என சிலரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதையும் வாங்கிக்கொண்டேன். இரண்டுமே எழுத்துப் பிரசுரம். இரண்டுமே எடை குறைவாய் இருந்தன. இது பாசிட்டிவ். இரண்டுமே டல்லான தாளில் இருந்தன. படிப்பதற்கு எளிதாய் இல்லை.
பாரதி தம்பியின் "கற்க கசடற" வாங்கிக்கொண்டேன். "உலகின் ஆகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களின் உரையாடல்கள்” என்ற தலைப்புடன் ஜா. தீபா அவர்கள் மொழிபெயர்த்த "ஒளி வித்தகர்கள்" என்ற புத்தகமும் வாங்கிக்கொண்டேன்.
சுற்றிச் சுற்றி நிறைய புத்தகங்கள் பார்த்ததில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
இன்னும் இரண்டு மாதத்தில் நான்கு புத்தகங்களையும் படித்து முடித்துவிடவேண்டும் என மனதில் சபதமும் செய்துகொண்டேன். பார்க்கலாம்.
இனி முன்பு போல மாதம் ஒருமுறை வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment