> குருத்து: May 2024

May 28, 2024

கொலை (2023)



ஒரு இளவயது பாடகி. முதல் காட்சியிலேயே தன் வீட்டில் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.


நாயகன் துப்பறிவதில் நிபுணர். பல வழக்குகளை வெற்றிகரமாக கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார். ஆனால் இப்பொழுது சொந்த பிரச்சனைகளினால் ஒதுங்கி நிற்கிறார். அவரின் மாணவியான ஐ.பி.எஸ் அதிகாரி கேட்டுக்கொண்டதின் பேரில் வழக்கை விசாரிக்க வருகிறார்.

பாடகி என்றாலும், தோற்றத்தில் மாடல் போல இருப்பதால், மாடலிங் துறையில் இருந்து அழைப்பு வருகிறது. மெல்ல மெல்ல புகழ் பெறுகிறார். அந்த துறையில் உள்ள சில அம்சங்கள் பிடிக்காமல் போக, அங்கிருந்தும் துண்டித்து கொள்கிறார். வேறு சில விசயங்களிலும் தலையிடுகிறார். எங்கெல்லாம் முரண்பட்டாரோ அங்கெல்லாம் பகைவர்கள் உருவாகிறார்கள்.

விசாரணையில் அவளுடைய நண்பன், புகழ்பெற்ற புகைப்படக்காரர், மாடலிங் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் என சிலர் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். இறுதியில் கொன்றது யார் என விடை சொல்கிறார்கள்.
****


கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் வந்த ஒரு இங்கிலீஷ் படத்தை தழுவி எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையும் நிறைய மெனக்கெட்டு செதுக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை, ஓப்பனை, எல்லாம் வடிவத்தில் கைகூடினாலும், திரைக்கதை பலவீனத்தால் படம் நம்மை ஒட்டவிடாமல் வெளியே தள்ளிவிடுகிறது.

அந்த பெண்ணே தன் சம்பந்தப்பட்ட சம்பவங்களை சொல்வது போல ஆங்காங்கே காட்சிகள் விரிந்தாலும், அழுத்தம் இல்லை. அதனால், எவன் கொன்னா நமக்கென்ன என்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. கொலைக்காக சொல்லப்படும் காரணமும் வலுவாக இல்லை.

பல மொழிகளுக்கு யோசித்து எடுத்திருப்பார்கள் போல! நடிகர்களின் தேர்வு அப்படி இருக்கிறது. ஐ.பி.எஸ் பெண் அதிகாரியாக வரும் ரித்திகா நாயகனான விஜய் ஆண்டனிக்கு துணைக்கு வந்து போகிறார். விஜய் ஆண்டனியாவது நன்றாக செய்தாரா என்றால், ம்ஹூம். அவரும் வந்து போகிறார். ஈர்க்கவில்லை. ஒரு நகைச்சுவை நினைவுக்கு வந்தது. “நீ என்னடா பண்ணுற! எங்க அப்பாவிற்கு உதவியாக இருக்கிறேன். உங்க அப்பா என்னடா பண்றார்? அவர் சும்மா இருக்கிறார்”. நாயகி மட்டும் நல்ல தேர்வு.

பாலாஜி கே. குமார் இயக்கி ”விடியும் முன்” என்ற படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படமும் வடிவத்தில் நல்ல மெனக்கெடல் இருக்கும். அந்தப் படத்தின் திரைக்கதை கொஞ்சம் நன்றாக இருந்ததால், தப்பித்துவிட்டது.

பிரைமில் இருக்கிறது.

The outlaws (Crime City) (2017) தென்கொரியா


உண்மைக் கதை. 2004 காலக்கட்டம். தென்கொரியாவின் தலைநகரம் சியோல். அங்குள்ள சைனா டவுன் பகுதியில் சூதாட்ட விடுதிகள், மற்றும் கிளப்புகளை, இன்னபிற வேலைகளை முக்கியமாக இரண்டு குழுக்கள் இயக்கிவருகின்றன. அவ்வப்பொழுது தொழில் போட்டியில் இரண்டு குழுக்களும் மோதிக்கொள்கிறார்கள்.


நாயகன் அந்த மாவட்டத்தின் போலீசு அதிகாரியாக இருக்கிறார். இரண்டு குழுக்களும் மோதிக்கொள்ளும் பொழுது, சட்ட ஒழுங்கு கெடுகிறது என இரண்டு குழுக்களின் தலைவர்களையும் சந்திக்க வைத்து சமாதானம் எல்லாம் செய்துவைக்கிறார்.

இப்பொழுது சீனவைச் சேர்ந்த மூவர் அங்கு வருகிறார்கள். அவர்களின் நோக்கம் அங்குள்ள குழுக்களின் தலைமையை கைப்பற்றுவது. ஈவு இரக்கமில்லாமல் ஆட்களை வதைக்கிறார்கள். கொல்கிறார்கள்.

போலீசுக்கு ஏகப்பட்ட அழுத்தமாகிறது. அந்த மூவரையும், அவர்களுடைய ஆட்களையும் பிடித்தார்களா? உண்மைக் கதை என்பதால், அதற்கான தன்மைகளுடன் ஆக்சன் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.
****


அந்த மூவரின் மோசமான நடவடிக்கைகளை ஒருபக்கம் சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது, இந்தப் பக்கம் நாயகன் அவர்களைப் பிடிப்பதற்கான வேலைகளையும் நகர்த்திக்கொண்டே போகிறார். இருவரும் எப்பொழுது சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்க்கும் நமக்கு இருந்துகொண்டே இருக்கும்.

நாயகனின் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும். மாபியா கும்பல்களோடு தான் நம்ம வாழ்க்கை. அதனால் அதற்கு தகுந்த மாதிரி, நடந்துகொள்ளவேண்டும் என்பதாக நடந்துகொள்வார்.

உயரதிகாரி தனக்கு உள்ள அழுத்தத்தால், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கடுமையாக திட்டும் பொழுது, வெளியே அழைத்து வந்து, ”அவங்க கடந்த இரண்டு வாரமாக வீட்டுக்கே போகவில்லை. ஆகையால் நமக்கு அழுத்தம் இருக்கலாம். அதை எல்லாம் நாம் அப்படியே காண்பித்துவிடக்கூடாது” என்பார்.

Lee Dong-seok தான் நாயகன். மொத்தப் படத்தையும் தன் தோளில் கொண்டு போகிறார். வில்லனாக வரும் அவரும் அவருக்கு இணையான பாத்திரம். இதன் வெற்றிக்கு பிறகு இன்னும் இரண்டு படங்கள் வந்துவிட்டது.  அவைகளும் நன்றாக இருக்கிறதாம். 

சண்டை பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். பிரைமில் இருப்பதாக இணையம் சொல்கிறது. தமிழிலும் கிடைக்கிறது. நான் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் பார்த்தேன்.

May 27, 2024

12th fail (இந்தி)


மத்தியப் பிரதேச சம்பல் பள்ளத்தாக்கு பகுதி. நாயகன் +2 படிக்கிறார். மாணவர்கள் காப்பியடிக்க அந்த பள்ளி தலைமையே அனுமதிக்கிறது. அதிகாரிகள் சோதிப்பதில் கூண்டோடு பிடிபடுகிறார்கள்.


நாயகனுக்கு ஒரு போலீசு அதிகாரியின் அதிகாரம், நேர்மை பிடித்துப்போகிறது. பள்ளியே காப்பியடிக்க அவர் மட்டும் தெரிந்ததை எழுதி தோல்வியடைகிறார். அப்பா உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஒருவரால் பழிவாங்கப்பட்டு வேலையை இழக்கிறார். மீண்டும் வேலையை பெற முயற்சி செய்கிறார். தொடர்ந்து படிக்கிறார்.

குடும்பத்தை வறுமை வாட்டுகிறது. இருப்பினும் வைராக்கியமாக போலீசு தேர்வுக்கு படிக்க கிளம்புகிறார். மாநில அரசு போலீசு தேர்வுகளை அப்பொழுது நிறுத்தி வைக்கிறது.

ஆகையால், தில்லிக்கு குடிமைப் பணி தேர்வுக்கு நகர்கிறார். கிடைத்த கடுமையான வேலையில் ஒட்டிக்கொண்டு படிக்கிறார். மொத்தம் நான்கு முயற்சிகள் தான். அதற்குள் தேர்ச்சியடைய வேண்டும். இல்லையெனில் பெட்டியை கட்டிக்கொண்டு ஊர்பக்கம் கிளம்பவேண்டியது தான்.

இடையில் காதல் வருகிறது. சோதனைகள் வருகின்றன. எல்லாவற்றையும் எதிர்கொண்டு, படிப்பை முடித்தாரா என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***


உண்மை கதை. இப்பொழுது மும்பையில் போலீசில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். படம் வெளிவந்து, வெற்றி பெற்று, பலரும் அருமை என எழுதிவிட்டார்கள்.

ஒரு படத்தில் விளையாட்டாக சொல்வார்கள். காதலர்கள் ஊரைவிட்டு அல்லது அந்த சூரியன் அந்தியில் மறையும் பொழுது அவர்களும் ஒரு புள்ளியாக மறைந்துபோகிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என யாரும் கவலைப்படுவதில்லை!

படத்தின் இறுதியில், நாயகனை தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவர் சொல்வார். ”இந்த சிஸ்டத்துக்கு இப்படியும் நபர்கள் வேண்டும்” என்பார். அது ஒரு முக்கியமான வசனம்.

அரசு, அரசாங்கம் இருக்கிறது. கார்ப்பரேட், பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். இவர்கள் தான் பின்னிலிருந்து இயக்குகிறார்கள் என யாராவது சொன்னால், எப்படி என நீண்ட நாட்கள் மண்டையை குழப்பிக்கொண்டிருந்தேன். லஞ்சம் வழியாக தான் இவர்கள் அந்த சிஸ்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள் என ஜெர்மனிய தாடிக்காரன் தான் தெளிவித்தான்.

சகாயம் ஐ.ஏ.எஸ். சந்தித்த சவால்கள் என தன் அனுபவங்களை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். அதிகாரமும், லஞ்சமும் இந்த சிஸ்டத்தை எப்படி ஆக்டோபஸ் போல பிடித்திருக்கிறது என புரிந்துகொள்ளமுடியும். அவர் பலமுறை அதில் சிக்குண்டு, மயிரிழையில் தப்பி வெளியே வந்ததை எழுதியிருப்பார்.

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். 20 ஆண்டுகளுக்கு முன்பு குரூப் 4 தேர்வில் தேர்வாகி, பத்திர பதிவில் வேலைக்குச் சேர்ந்தான். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அவனுடைய பங்காக ரூ. 300 கொடுத்துள்ளார்கள். மறுத்துவிட்டான். அடுத்த பத்து ஆண்டுகளில் சென்னையில் லஞ்சம் இல்லாத ஒரு இடத்துக்கு நகர்த்திவிட்டார்கள் அல்லது நகர்ந்துவிட்டான். ஏதாவது ஒரு விசேசத்தில் சந்தித்தால், நேர்மையாக இருப்பதால் வரும் பிரச்சனைகளை கதை கதையாக நொந்து சொல்வான். இப்பொழுது அந்த வேலையை உதறிவிட்டு, வழக்கறிஞராக பணிபுரிகிறான்.

ஒரு சிஸ்டம் லஞ்சத்தில் திகழும் பொழுது, நேர்மையாக ஒரு அதிகாரி அதன் பகுதியாக இருக்கிறார் என்பது எவ்வளவு சிரமம் என்பதை மனோஜ் சர்மாவிடம் இப்பொழுது கேட்டால், கதை, கதையாய் சொல்வார். அது தான் சுவாரசியமான, விறுவிறுப்பான சொல்லப்படாத உண்மைக் கதையாக இருக்கும். இந்த மோசமான சிஸ்டம் எத்தனை நேர்மையான மனிதர்களை வதைத்திருக்கிறது. அதிகப்பட்சம் கொன்றிருக்கிறது என்பதை பல உண்மை சம்பவங்களைப் பட்டியலிட்டு சொல்லமுடியும்.

இதை எதிர்மறையாக சொல்லவில்லை. இந்த சிஸ்டம் எத்தனை கோளாறாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்காக சொல்கிறேன். இதை ஒரு புலம்பலாக கூட சொல்லவில்லை. இதை மாற்றுவதற்கு எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

மற்றபடி படம் எனக்கு பிடித்திருந்தது. முன்னாபாய், 3 இடியட்ஸ் திரைக்கதைகளில் பங்குபெற்று, தயாரித்த வினோத் சோப்ரா தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நல்ல படம். ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள். அதற்கு பிறகு கொஞ்சம் அசைபோடுங்கள்.

May 25, 2024

The Next three days (2010)


நாயகன் தன் மனைவி, சிறு வயது மகனுடன் வாழ்ந்துவருகிறார். ஆசிரியராக பணிபுரிகிறார். அவருடைய மனைவி தன் பெண் முதலாளியை கொலை செய்துவிட்டார் என கைது செய்கிறார்கள். அவருக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இருக்கின்றன.

தன் மனைவி கொலை செய்திருக்கமாட்டார் என மனப்பூர்வமாக நம்புகிறார். அவரை வெளியே கொண்டு வருவதற்கான அனைத்து சட்டப்பூர்வ வழிகளிலும் முயல்கிறார். ஆண்டுகள் ஓடுகின்றன. சட்டப்பூர்வ எல்லா வழிகளும் அடைப்பட்டுவிட … வேறு வழியில்லை. சிறையில் இருந்து தப்பிக்க வைத்துவிடலாம் என அதற்கான வழிகளையும் தேட ஆரம்பிக்கிறார்.


தப்பிப்பதற்கான வழிகள், போலி பாஸ்போர்ட், நிறைய பணம் என எல்லாம் பெரிய சவாலாக இருக்கிறது. 2000 துவக்கத்தில் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுவிட்டன.

இந்த நெருக்கடியான நிலையில்… தப்பிக்கலாம் 1%, சுட்டுக் கொல்லப்படலாம் 99% என்ற நிலையில், தன் பிரியத்துக்குரிய மனைவியின் பெயரில் பெரிய ரிஸ்க் எடுக்கிறார்.

அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்பதை பரபர காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

தன் மனைவி மீதான அவருடைய அன்பு அபரிமிதமானது. ஒருநாள் ”ஏன் நானே கொன்றிருக்க கூடாதா?” என மனைவியே கேட்கும் பொழுது, ”உன்னை எனக்கு தெரியும். நீ நிச்சயம் செய்திருக்கமாட்டாய்!” என சொல்வார்.

சட்டப்பூர்வ எல்லா வாய்ப்புகளும் அடைப்பட்ட பிறகு, தன் மனைவியை கண்ணீர் மல்க சந்திக்கும் காட்சி. இவருடைய நிலையைப் பார்த்து, அவர் புரிந்துகொண்டு, அழுது கொண்டே எதுவுமே பேசாமல் செல்லும் காட்சி. அற்புதம். ஆக்சன் திரில்லர் வகை படம் என்றாலும், உணர்வுப்பூர்வமாகவும் இருக்கிறது.

2001 தாக்குதலுக்கு பிறகு, இப்படி ஒரு படம் வந்திருப்பது அங்கு சர்ச்சையை உருவாக்கியிருக்கும். 2008ல் “Anything for her” என்ற பெயரில் பிரெஞ்சில் எடுத்ததை, வாங்கி, இவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

கிளாடியேட்டர் புகழ் Russell Crowe க்கு முக்கியமான படம், அதே போல Elizabeth Banksம் அருமையாக நடித்திருந்தார். ஜெயிலில் இருக்கும் அம்மா என பள்ளியில் கிண்டல் செய்கிறார்கள் என்ற என்ற எண்ணத்திலேயே அந்தப் பையனை அமைதியாகவே இருக்கும்படி சொல்லிவிட்டார்கள் போல! அந்த பையனும் சிறப்பு தான்.

யூடியூப்பில் கிடைப்பதாக இணையம் சொல்கிறது. அருமையான படம். பாருங்கள்.

Vacancy (2007) American slasher movie


ஒரு கணவனும் மனைவியும் தங்கள் குடும்ப நிகழ்வுக்கு போய்விட்டு, அந்த இரவில் ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் தூரம் குறையும் என வழமையான பாதையை விட்டு வேறு ஒரு வழியில் வருகிறார்கள். இருவரும், ஊருக்குப் போய் சேர்ந்தவுடன், பிரிந்துவிடலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.


கார் மக்கர் செய்கிறது. வேறு மனிதர்களற்ற அந்த நெடுஞ்சாலையில் ஒரு மெக்கானிக் செட்டும், ஒரு மோட்டலும் மட்டும் தனித்து இருக்கிறது. அங்கு இருக்கும் ஒரு மெக்கானிக் உதவினாலும், ஒரு கி.மீ தூரம் ஓடி, நின்றுவிடுகிறது.

காலையில் தான் சரி செய்து கிளம்ப முடியும் என முடிவு செய்து, மீண்டும் மோட்டலுக்கு நடந்தே திரும்புகிறார்கள். ஒரு அறை எடுத்து தங்குகிறார்கள். சிறிது நேரத்தில் கதவை டொம் டொம் என யாரோ தட்டி பயமுறுத்துகிறார்கள். போய் பார்த்தால் யாருமில்லை. அறையில் உள்ள தொலைக்காட்சியில், டிவிடி பிளேயரில் ஆட்களை அடித்தே கொலை செய்வது மாதிரியான படங்கள் ஓடுகின்றன.

அந்தப் படத்தை உற்றுப்பார்த்தால், அவர்கள் இருக்கும் அறைக்கு ஒத்துப்போகிறது. ஆக எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டோம் என புரிந்து கலவரமாகிறார்கள்.

அதற்கு பிறகு நடப்பது எல்லாம் களேபரம் தான். அங்கிருந்து உயிரோடு தப்பித்தார்களா என்பது முழு நீளக்கதை.
***


ஒரு சராசரியான ஒன்றை மணி நேரம் தான் படம். சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல், நேரடியாக சொல்லியிருக்கிறார்கள். ஏகமாய் வன்முறை இல்லாமல், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள்.

ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும் என்ன வித்தியாசம்? ஹோட்டல் எனும் தங்கும் விடுதிகள் ஊருக்குள் இருக்கின்றன. மோட்டல் என்னும் தங்கும் விடுதிகள் சாலைகள் ஓரமாய் இருக்கின்றன. அவ்வளவு தான் வித்தியாசம்.

இப்படி எல்லாம் படமெடுத்தால், யாராவது நெடுஞ்சாலைகளில் உள்ள மோட்டலில் தங்குவார்களா? வாய்ப்பே இல்லை. ஊருக்கே போகவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

நாயகனை விட, நாயகியின் உணர்ச்சி ரசிக்கும்படியாக இருந்தது. இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என யோசித்தால், வேன்ஹெல்சிங் என்ற பிரபல ஆக்சன் படத்தில் வரும் நாயகி Kate Beckinsale. நாயகனும் பார்த்த முகமாய் தான் இருக்கிறார். என்ன படம் என யோசித்தால் தெரியவில்லை.

இந்தப் படம் நன்றாக கல்லாக் கட்டியதும், இரண்டாவது பாகமாகவும், ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள். ஓடியதா என தெரியவில்லை.

அமேசானிலும், யூடியூப்பிலும் படம் இருப்பதாக இணையம் சொல்கிறது. இந்த மாதிரி படங்களை விரும்புவர்கள் மட்டும் பாருங்கள்.

May 13, 2024

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) என்றால் என்ன?





வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 6

“UAN என்ற அடையாள எண் ஒவ்வொரு தொழிலாளிக்கு கொடுத்த பிறகும், இன்னும் பழைய முறையான உரிய விண்ணப்பத்தை பி.எப் தளத்தில் கொடுத்து பழைய கணக்குகளை புதிய/கடைசி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும் (Transfer) என்கிற நடைமுறை தொடர்கிறது. விரைவில் பி.எப். இந்த முறையை மாற்றி எளிமைப்படுத்தும் என நம்புவோம்.”


என கடந்த மாதம், ஐந்தாவது அத்தியாயம் முடிவுரையோடு, ஏப்ரல் இதழில் 1ந் தேதி நமது கட்டுரை வெளியானது. நாம் கட்டுரையில் இறுதியில் தெரிவித்திருந்தபடி பி.எப். கணக்குகளை மாற்றும் முறையை எளிமைப்படுத்தி அமுல்படுத்துகிற செய்தி ஏப்ரல் 3ந் தேதி பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. பி.எப். சந்தாதாரர்களின் குரலை நாம் பிரதிபலிக்கிறோம் என்பது மகிழ்ச்சி.
***

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) என்றால் என்ன?


”வருங்கால வைப்பு நிதி திட்டம்” (EPF) என்பது ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் ஒரு பணியாளர் தான் இணைய முடியும். பல நிறுவனங்கள் குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களாக இயங்கி வரும் பொழுது, பலருக்கும் அந்த திட்டத்தில் இணைய வாய்ப்பில்லை. ஆகையால், பொதுமக்களும் வருங்காலத்திற்காக சேமிக்கவேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் 1968ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டது. நாம் சேமிப்பது பாதுகாப்பாக இருக்கவேண்டும். வங்கி வட்டியை விட கொஞ்சம் கூடுதலாக வட்டி கிடைக்கவேண்டும் என யோசித்தால், அவர்களுக்காகவே ”பொது வருங்கால வைப்பு நிதி” என்ற திட்டத்தை மத்திய அரசு இயக்கிவருகிறது.

எவ்வளவு சேமிக்கமுடியும்?

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தப்பட்சமாக ரூ. 500யும், அதிகப்பட்சமாக ஒன்றரை லட்சம் வரை செலுத்தமுடியும். இதற்கு இடைப்பட்ட தொகை எவ்வளவு வேண்டுமென்றாலும் நம்மால் செலுத்த முடியும். இந்த கணக்கு என்பது மிகவும் நெகிழ்வானது (Flexible). முன்பு மாதம் ஒருமுறை தான் இந்த கணக்கில் செலுத்தமுடியும் என்ற விதி இருந்தது. இப்பொழுது அந்த விதியை மாற்றிவிட்டார்கள். ஆகையால், மாதம் மாதம் இவ்வளவு தான், இத்தனை முறை தான் செலுத்தவேண்டும் என்ற கட்டாயமில்லை. நம்மால் எவ்வளவு செலுத்தமுடியுமோ, எப்பொழுது நம்மால் முடிகிறதோ அதை செலுத்தலாம்.
ஒரு வருடத்தில் குறைந்தப்பட்சம் ரூ. 500 செலுத்துவது அவசியமானது. அப்பொழுது தான் அந்த கணக்கை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது கணக்கு செயலிழந்து போகும். மீண்டும் கணக்கை உயிர்ப்பிக்க, விடுபட்ட ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தப்பட்ச தொகையான ரூ. 500 செலுத்தி, கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 50யும் அபராதமாக செலுத்தினால் போதுமானது. கணக்கு எப்பொழுதும் போல இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

கணக்கைத் துவங்குவது எப்படி?


இந்த திட்டத்தை ”தேசிய சிறு சேமிப்பு நிதி” (NSSF) என்ற திட்டத்தின் கீழ் தான் அமுல்படுத்தி வருகிறது. இந்தக் கணக்கை அஞ்சலகங்களிலும், வங்கிகளிலும் எளிதாக துவங்க முடியும். நமது அடிப்படை ஆவணங்களான புகைப்படம், ஆதார் எண், பான் எண், மொபைல் எண், வாரிசுதாரர் விவரங்களை கொடுத்து கணக்கை துவங்கிவிடமுடியும். குறிப்பாக ஒருவருவருக்கு ஒரு கணக்கைத் தான் துவங்கி சேமிக்க முடியும். பதினெட்டு வயதுக்கு கீழே குழந்தைகள் இருந்தால், அவர்கள் பெயரில் துவங்கி, பெற்றோர்கள் அதன் பாதுகாவலராக (Guardian) போட்டு கணக்கைத் துவங்க முடியும். உதாரணமாக, குடும்ப தலைவர் தன் பெயரில் ஒரு கணக்கும், இரு குழந்தைகள் இருந்தால் அவர்கள் பெயரிலும் தனிக் கணக்காக துவங்கமுடியும். மூவர் கணக்கிலும் அதிகப்பட்சம் 1.5 லட்சம் தான் சேமிக்கமுடியும் என்பது ஒரு விதியாக இருக்கிறது.

இந்தக் கணக்கை துவங்க இந்திய குடிமகனாக இருக்கவேண்டும் என்பது அவசியமானது. ஒருவேளை இந்திய குடிமகனாக இருந்து, இந்த திட்டத்தில் இணைந்த பிறகு, வெளிநாட்டு வாழ் இந்தியராக மாறினால், திட்டம் முடியும்வரை நீடிக்கலாம். தனிநபருக்கு தான் இந்த திட்டம் என்பதால், இந்து கூட்டுக் குடும்பம் (HUF)யும் இந்த திட்டத்தில் இணையமுடியாது.

இந்தக் கணக்கில் சேமிப்பதன் மூலம் வருமான வரித் தாக்கல் செய்யும் பொழுது, பிரிவு 80 சி கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வட்டிக்கும் வரிவிலக்கு உண்டு. (பழைய வருமான வரித் திட்டத்தை (Old Regime) தேர்ந்தெடுக்கும் பொழுது தான் இந்த சலுகை உண்டு. புதிய வருமான வரித் திட்டத்தில் (New Regime) இந்த வரி விலக்கு பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.) இந்தத் திட்டத்தின் கீழ் இறுதியாக பெறும் பொழுதும் இதற்கு வரிவிலக்கு உண்டு. ஆகையால் வரிச்சுமையில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்தத் திட்டம் என்பது 15 ஆண்டுகளுக்கானது. கூடுதலாக ஐந்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என நம் தேவைக்கேற்ப நீட்டித்துக்கொள்ள முடியும்.

வட்டி விகிதம் என்ன?


இந்தத் திட்டத்திற்கான வட்டி என்பது நிலையானது இல்லை. ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை மத்திய அரசு தீர்மானிக்கிறது. இந்த ஆண்டில் ஏப்ரல் – ஜூன் 2024 நடப்பு காலாண்டிற்கான வட்டி விகிதம் 7.1% என அறிவிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு மாதமும் நம்முடைய சேமிப்பிற்கான பணத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு, ஆண்டின் இறுதியில் வட்டியை நம்முடைய கணக்கில் வரவு வைப்பார்கள்.

வட்டி எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?

ஒவ்வொரு மாதமும் ஐந்து தேதிக்குள் கணக்கில் இருக்கும் பணம், மாத இறுதிக்குள் இருக்கும் இருக்கும் பணம் இதில் எது குறைவான தொகையோ அந்த தொகைக்கு வட்டிக் கணக்கிடப்படுகிறது. ஆகையால் பணம் செலுத்தும் பொழுது, கவனமாக ஐந்து தேதிக்குள் செலுத்தினால் நமக்கு கொஞ்சம் கூடுதலாக வட்டி கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

15 ஆண்டுகளுக்கு பிறகு

முன்பே சொன்னது போல இந்தக் கணக்கில் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தலாம். கணக்கை முடித்துக்கொண்டு முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம். நீட்டிக்க விரும்பினால் அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என நீட்டித்து, தொடர்ந்து செலுத்தவும் செய்யலாம். பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு பணம் கட்ட வேண்டாம். அப்படியே இருக்கட்டும் என நாம் அனுமதிக்கவும் செய்யலாம். எத்தனை ஆண்டுகளுக்கு அப்படி நாம் விட்டு வைக்கிறோமோ அத்தனை ஆண்டுகளுக்கும் அவர்கள் இந்தத் திட்டத்திற்கு தீர்மானிக்கிற வட்டியும் கிடைக்கும்.

பகுதியளவு பெறுதல் (Partial Withdrawal)

15 ஆண்டுகள் வரை கணக்கை நாம் பராமரிக்கவேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். நமது கணக்கில் இருந்து நமக்கு ஒரு நெருக்கடி என்றால், பகுதியளவு பெறமுடியுமா? என்றால் பெற முடியும். நாம் செலுத்திய பணத்தில் 50% பெறமுடியும். ஆனால், ஆறு வருடங்கள் கழித்து தான் பெறமுடியும். இப்படி ஒரு விதி எதற்காக இருக்கிறது என்றால், நமது வருமான வரியில் இருந்து இப்படி சேமிக்கப்படும் தொகைக்கு வரி விலக்கு தருகிறார்கள் அல்லவா! அதற்காக தான்.

பாதியிலேயே திட்டத்தில் இருந்து வெளியேறுதல் சாத்தியமா? (Premature closure)


நெருக்கடியான சமயங்களில் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறி, கட்டிய பணத்தை பெறமுடியுமா? என்றால் பெறமுடியும் ஆனால் அந்த நெருக்கடிக்கான ஆதாரத்தை, உதாரணமாக மருத்துவ செலவு, குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் என்பதற்கான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும். அதற்கும் கணக்கு துவங்கிய ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் விண்ணப்பிக்கமுடியும்.

கடன் பெறுவது சாத்தியமா? (Loan)

முடியும். நாம் கணக்கைத் துவங்கி மூன்று வருட முடிவில் இருந்து ஆறு வருடங்கள் வரைக்குமான காலத்திற்குள் நாம் கடன் பெறமுடியும். அதுவும், நாம் செலுத்திய பணத்தில் இருந்து 25% பெறமுடியும். அதற்கான வட்டி விகிதம் என்பது 12%ஆக இருக்கும். இப்படி பெறப்பட்ட கடனையும் 36 மாதங்களுக்குள் முழுமையாக அடைத்துவிடவேண்டும். அடைக்கவில்லை என்றால், அதற்கு பிறகான வட்டி விகிதம் இன்னும் கூடுதலாக 6% செலுத்தவேண்டியிருக்கும். இதே போல இரண்டாவதாக கடன் பெற முடியுமா? என்றால் முடியும். ஆனால், முதலில் பெற்ற கடனை முழுமையாக செலுத்தியிருக்கும் பட்சத்தில் இரண்டாவது கடனை பெறமுடியும்.

பணவீக்கமும், வட்டி விகிதமும்

பணவீக்கம் என்பது பணத்தின் மதிப்பு சரிவது என்பதாக பொருள் கொள்ளலாம். இந்த ஆண்டு நீங்கள் ஒரு பொருளை ரூ.100க்கு வாங்கினால், அடுத்த ஆண்டு விலைவாசி உயர்வால், அதே பொருளை ரூ. 105க்கு வாங்க நேர்ந்தால், பணத்தின் மதிப்பு 5% என சரிந்ததாக புரிந்துகொள்ளலாம். இதைத்தான் பொருளாதாரத்தில் பணவீக்கம் என்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விலைவாசி உயர்வால் பணத்தின் மதிப்பு சரிந்துகொண்டே இருக்கிறது. 2024ல் பணவீக்கத்தின் மதிப்பை கடந்த பிப்ரவரியில் 5.09% என கணித்திருக்கிறார்கள். ஆக நம்முடைய சேமிப்புக்கு கிடைக்கும் வட்டி என்பது 5.09%க்கு மேல் இருந்தால் தான் பாதிப்பு இல்லை என புரிந்துகொள்ளலாம். ஏப்ரல் 24 நிலவரப்படி வங்கிகளில் நம்முடைய சேமிப்பான நிலையான வைப்புக்கே (Fixed Deposit)க்கு 7.5% வரைக்கும் வட்டி தருகிறார்கள்.

இந்த ”பொதுவருங்கால வைப்புநிதி திட்டம்” என்பது சேமிப்பதற்கு எளிமையானது. மற்ற முதலீடு திட்டங்கள் கூடுதல் சதவிகித லாபம் தந்தாலும், அதில் அபாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தத் திட்டத்தை மத்திய அரசு கையாள்வதால், பாதுகாப்பானது. இந்தத் திட்டத்தைப் போலவே மத்திய அரசு அமுல்படுத்துகிற திட்டங்களும் உண்டு. அதையும் தெரிந்துகொண்டு இந்த திட்டத்தில் உள்ள மேற்கண்ட அம்சங்களை புரிந்துகொண்டு, எது உங்களுக்கு வசதியாக இருக்கிறதோ, அந்த வழிகளில் சேமிக்கத் துவங்குங்கள்.

ஓய்வும், சேமிப்பின் அவசிய தேவையும்

சமகாலத்தில் பெரும்பாலோர் வருவாயை விட, செலவுகளை அதிகமாக எதிர்கொள்கிறோம். ஒருபக்கம் அடிப்படையான செலவுகளே விலை அதிகரித்துகொண்டே செல்வதால், பற்றாக்குறையுடனே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் சிலர் ஆடம்பரமாகவும், வீண் செலவுகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆரோக்கியமாக வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதே சேமிப்பது என்பது அவசியமானது. முன்பெல்லாம் சமூகத்தில் ஒரு பகுதி மக்களையாவது ஓய்வூதியம் என்ற திட்டம் காப்பாற்றிக்கொண்டு இருந்தது. இப்பொழுது பெரும்பாலோருக்கு ஓய்வூதியம் திட்டம் இல்லாமல் ஒருவித பாதுகாப்பின்மை (Insecurity) உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். பணி ஓய்வு பெறும் பொழுது, எல்லாவற்றிக்கும் பிறர் கையை எதிர்பார்த்து நிற்பது என்பது பெரிய துயரமாகிவிடும். ஆகையால் இதுவரை சேமிக்காவிட்டாலும் பரவாயில்லை. இனி சேமிக்கப் பழகுங்கள். அது நம்முடைய எதிர்காலத்திற்கு, நம் குடும்ப நலனுக்கு, நம் நாட்டிற்கு எல்லாருக்குமே நல்லது.

இன்னும் வளரும்.

இரா. முனியசாமி,
பி.எப்., இ.எஸ்.ஐ, ஜி.எஸ்.டி ஆலோசகர்.

குறிப்பு : இந்த கட்டுரை "தொழில் உலகம்" என்ற வணிக மே 2024 இதழில் வெளியானது.

May 2, 2024

EPF : தொழிலாளிகளுக்கான பிரத்யேகமான தளத்தை ஒரு தொழிலாளி எவ்வாறு பயன்படுத்துவது? – அத்தியாயம் 7

 


தொழிலாளிக்கான
பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/


இதற்கு முந்தைய ஆறு அத்தியாயங்களை GSTPS தளத்தில் கீழ்க்கண்ட முகவரியில் சென்று படிக்கலாம்.

https://gstprofessionalssociety.blogspot.com/2023/10/gstps-how-to-use-employee-pf-site.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/11/epf-2.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/12/epf-3.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/01/epf-4.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/02/epf-5.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/03/epf-6.html

 

கடந்த ஆறாவது அத்தியாத்தில் ஓய்வூதியம் பெறுகிற தொழிலாளி உயிரோடு இருக்கிறாரா, அவர் தான் ஓய்வூதியம் தொடர்ந்து  பெற்றுக்கொண்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பாக நவம்பர் 30க்குள் வாழ்வு சான்றிதழை (Life Certificate) தர கோருகிறது. அதைப் பற்றி பார்க்கலாம் என முடித்திருந்தோம்.

 

முன்பு இந்த வாழ்வு சான்றிதழை பதிவு செய்வதற்கு நேரடியாக பி.எப். அலுவலகம் வரவேண்டியிருக்கும்.  வழக்கமாகவே பி.எப். அலுவலகத்தில் மக்களின் வரவு அதிகமாக இருக்கும்.   ஆண்டின் இறுதி மாதத்தில் கூட்டம் அலைமோதும்.

 

இந்தப் பிரச்சனையை சமாளிக்க சில வருடங்களுக்கு முன்பு…  டிஜிட்டலாக வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க ஒரு வழி கண்டுப்பிடித்தது.  அந்த அரசு இணையத் தளத்தின் பெயர்.  https://jeevanpramaan.gov.in/

 


இந்தத் தளத்தின் வழியாக 127 லட்சம் தங்களது வாழ்வு சான்றிதழ்களை பெற்றிருக்கிறார்கள் என தளமே முதல் பக்கத்தில் தகவலாக தருகிறது.


தளத்தின் உள்ளே நுழைவதற்கு சம்பந்தப்பட்ட பணியாளின் மின்னஞ்சலை கொடுத்தால்…  நம்முடைய மின்னஞ்சலை உறுதிப்படுத்த ஒரு ஓடிபி (One Time Password) வந்து சேரும். நமது மின்னஞ்சலைத்  திறந்து, அந்த ஓடிபியை எடுத்து தளத்தில் பதியவேண்டும்.  அதற்கு பிறகு,  நமக்கு மென்பொருளை (Software) அனுப்பிவைப்பார்கள்.

 

இந்த வாழ்வு சான்றிதழை தருபவர்கள் ஓய்வுப் பெற்றவர்களாக, பெரும்பாலும், வயதானவர்களாக இருப்பதால், அவர்களாகவே தளத்தின் வழியே சான்றிதழை பெறுவதற்காக சிரமப்படுவார்கள் என்பதற்காக..  இசேவா மையம், வங்கிகள் என சில ஏற்பாடுகளை செய்து தந்திருக்கிறது. அங்கு  இந்த சேவையை பெறலாம்.  இந்த தளத்திலேயே பணியாளருடைய மாநிலம், மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் அருகில் உள்ள மையத்தை அதுவே உங்களுக்கு காட்டுகிறது. பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

சம்பந்தப்பட்ட இசேவை (E seva) மையத்துகாரர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்தால், முதலில் தளம் தருகிற ஒரு மென்பொருளை கணிப்பொறியில் பொருத்திக்கொள்ளவேண்டும் (Install).  அதற்கு பிறகு, அந்த ஆபரேட்டர் தன்னுடைய ஆதார், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடியை கொடுக்கிறார். ஆதார் ஓடிபியைப் பெற்று அதைக் கொடுத்ததும், முதல் நிலையில் சரிப்பார்த்தால் முடிந்துவிடுகிறது.  அடுத்து, எந்த பணியாளருக்கு பதிவு செய்யப்போகிறாரோ, அவருடைய ஆதார், மொபைல் எண், மின்னஞ்சல் வைத்திருந்தால் மின்னஞ்சல் கொடுக்கலாம்.  

 

அடுத்து, பணியாளருடைய அடிப்படை விவரங்கள் கொடுக்கவேண்டியிருக்கும்.  பெயர், என்ன வகையான பென்சன் பெறுகிறார்? பணியாளர் பெறுகிற ஓயூதியமா? அல்லது அவர்களுடைய குடும்பத்தினர் பெறுகிற ஓய்வூதியமா?  என்கிற விவரங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டும்.  

 


அவருக்கு ஓய்வூதியம் வழங்கும் அமைப்பு எது?  (இந்த வாழ்வு சான்றிதழ் என்பது பி.எப். தளத்திற்கு மட்டுமில்லை.  பி.எப். ஓய்வூதியம் வழங்குவது போலவே, மத்திய அரசு, மாநில அரசு,  தனியார் நிறுவனங்கள் என பல அமைப்புகள் வழியாக  பென்சன் வழங்குவதற்கும் வாழ்வு சான்றிதழை இந்த தளத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.) பணியாளருக்கு எந்த வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுகிறார் என்பதை பதிவு செய்யவேண்டும்.  அவருடைய அடையாள எண் ஓய்வூதிய அடையாள எண் (PPO – Payment Pension order Number) எது? என்கிற அடிப்படை விவரங்களை பதியவேண்டும்.


அடுத்த நிலையில், இரண்டு கேள்விகளை எழுப்பும்.  ஒரு பணியாளர் ஓய்வுக்கு பிறகும், வேலையை தொடர வாய்ப்பிருக்கிறது.  அப்படி தொடர்கிறீர்களா? என கேட்கும். அதற்கு பொருத்தமான பதிலை தரவேண்டும்.  இரண்டாவது கேள்வி, ஒரு பணியாளர் இறந்தநிலையில் அவருடைய துணைவியார்/வாரிசுகள் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பார்கள். அவருடைய துணைவியாராக இருந்தால்… மறுமணம் புரிந்துகொண்டீர்களா? என கேட்கும். அதற்கும் பொருத்தமான பதிலை தரவேண்டியிருக்கும்.

 

அடுத்த நிலையில் பணியாளருடைய விரல் ரேகையை அவர்கள் வைத்திருக்கும் ஸ்கேனரில் வைத்து பதிவு செய்யவேண்டும்.   அது வெற்றிகரமாக நடந்தேறியதும், ஒரு சான்றிதழ் உருவாகிவிடும். அதை பிரிண்டரில் எடுத்து தந்துவிடுவார்கள். அதைப் பாதுகாப்பாக பணியாளர் வைத்துக்கொள்ளவேண்டும்.


இன்னும் வளரும்.