> குருத்து: மறக்கப்படும் நினைவுகள்

April 25, 2025

மறக்கப்படும் நினைவுகள்


இருபது வயதில் பழகிய சில மனிதர்களை இப்பொழுது நினைத்தால், சுத்தமாக நினைவில் இருந்து காணாமலே போய்விட்டார்கள். அவர்களோடு ஒரு அலுவலகத்தில் இரண்டு மாதங்கள் வேலை செய்திருக்கலாம். அவர்களோடு மூன்று மாதம் ஒரு கோர்ஸ் ஏதாவது இணைந்து படித்திருக்கலாம். இப்பொழுது யோசித்தால் அந்த முகங்கள் மெல்ல மறந்து போயிருக்கின்றன. அதே போல அவர்கள் தொடர்பான நினைவுகளும்! எவ்வளவு நினைவுப்படுத்தினாலும் நினைவுக்கு வருவதில்லை.


குமரவேல் என ஒரு நண்பர். வானவியல் குறித்த விசயங்களில் நிறைய ஆர்வமுள்ளவர். இது குறித்து நிறைய சில நாட்கள் சில மணிநேரங்கள் விவாதித்து இருக்கிறோம். அதற்கு பிறகு கேரளாவிற்கு பணி நிமித்தமாய் மாற்றாலாகி போன நினைவு. இப்பொழுது அவரை நினைத்தால்… முகம் சுத்தமாக நினைவில் இல்லை. இது எனக்கு மட்டும்தானா! பலருக்குமா என தெரியவில்லை.

என் சின்ன அக்கா சிறு வயது நினைவுகளைப் பற்றி, பழகிய மனிதர்களைப் பற்றி பல விசயங்களை கடந்த ஆண்டு நடந்தது போல நினைவுகளை பகிர்வார். அவரிடம் ஒன்றை கவனித்திருக்கிறேன். எப்பொழுதும் கடந்த கால நினைவுகளை சம்பந்தப்பட்டவர்களிடம், தனது உறவுகளிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருவேளை மீண்டும் மீண்டும் நினைவுகளை மங்க விடாமல் தூசித் தட்டி புதுப்பித்துக்கொள்கிறார் என இப்பொழுது புரிந்துகொள்ள முடிகிறது.

இப்பொழுது ஏன் இதை எழுதுகிறேன். மனிதனின் வாழ்வு என்பது நினைவுகளால் நிரம்பியது தானே! ஏதோ ஒரு விபத்தில் சிக்கி, நினைவுகள் எல்லாம் அழிந்து போனால், ஒரு மனிதன் என்ன ஆவான்? அப்படித்தான் நினைவுகள் மங்கலாகி, மறக்கும் பொழுது… ஏதோ ஒன்று கைநழுவி போவதாக படுகிறது. அன்றைக்கு ஒரு நடுத்தர வயது பெண்ணை எதைச்சையாக ஒரு பழக்கடையில் பார்க்கிறேன். இவரிடம் பழகியிருக்கிறேன் என தெரிகிறது. எந்த அலுவலகம், எந்த இடம் என மறந்துபோய்விட்டது. அந்த நினைவை மீட்டுக்கொண்டு வரும் வரை ஒரு பதட்டம் வருகிறதே! அது தாங்க முடியாததாக இருக்கிறது.

இனி வாழ்வில் எதிர்கொள்ளும் சில நபர்களைப் பற்றி, சில நிகழ்வுகளைப் பற்றி, சில விசயங்களைப் பார்க்கும் பொழுது, பழைய நினைவுகள் மேலெழும்பி வருவதைப் பற்றி எழுதுவது, பகிர்வது என்பதை எனக்காகவாவது கவனமாக செய்யவேண்டியிருக்கிறது.

நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?

0 பின்னூட்டங்கள்: