> குருத்து: சத்யம் கம்யூட்டர்ஸ் – இன்னொரு “என்ரான் ஊழல்”

January 9, 2009

சத்யம் கம்யூட்டர்ஸ் – இன்னொரு “என்ரான் ஊழல்”


இந்தியாவின் கணிப்பொறி நிறுவனங்களில் 4 வது இடத்தில் இருந்தது “சத்யம் கம்யூட்டர்ஸ்”. கடந்த பல ஆண்டுகளாக சத்யத்தில் நடந்த 8000 கோடி ஊழலால் கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தை கதிகலங்கி போயிருக்கிறது. சத்யம் எல்லா சானல்களிலும் பிரேக்கிங் நியூஸில் தவறாமல் இடம்பெறுகிறது.

இன்றைக்கு ஆந்திர அரசு சத்யத்தின் இயக்குநர் ராஜூவை கைது செய்வதற்கான எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறது.

ரூ. 200 ஐ தொட்டுக்கொண்டிருந்த சத்யத்தின் பங்குகள் வீழ்ச்சியாகி, நேற்று ரூ. 40க்கும் கீழே சரிந்துவிட்டன. சத்யம் பங்குகளை வாங்கி வைத்திருந்த பங்குதாரர்கள் போண்டியாகி போனார்கள்.

66 நாடுகளில் வேலை செய்யும் 53000 ஊழியர்களில் அடுத்த மாதம் 10000 ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என செய்திகள் வருகின்றன.

இனி விரிவாக பார்க்கலாம்.

****

உலக வங்கி வேலை ரத்து


உலக வங்கிக்கான வேலைகளை சத்யம் செய்துகொண்டிருந்தது. இரண்டு வாரத்திற்கு முன்பு உலக வங்கி, தனது வேலைகளை 8 ஆண்டுகளுக்கு நிறுத்த சொல்லி உத்தரவிட்டது.

காரணம் - தனது டேட்டா பேஸை திருடிவிட்டதாகவும், தனது டாக்குமெண்டுகளை சரியாக ஒப்படைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது. அப்பொழுதே அதன் இயக்குநர் ராஜூ ராஜினாமா செய்வார் என பேசப்பட்டது. ஆனால் விலகவில்லை.

சத்யம் இயக்குநர் ராஜூ ராஜினாமா


கடந்த டிசம். 7ந்தேதி ராஜூ ஒரு ஒப்புதல் வாக்குமூலமாய் 5 பக்க அளவில் தயாரித்து சத்யத்தின் போர்டு இயக்குநர்கள் குழாமிற்கும் (Board of Directors), பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி (SEBI), ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பினார்.

தான் செய்த தவறுகளை பட்டியலிட்டு, தான் அதற்காக பொறுப்பேற்பதாகவும், சட்டரீதியாக தான் எதிர்கொள்வதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

கணக்கு வழக்குகளில் நடந்த தில்லுமுல்லுகளில் சில

• நல்ல மதிப்பு வருவதற்காக லாபத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 2212 கோடிக்கு பதிலாக 2700 கோடி (செப். 2008 – 6 மாத வரவு செலவு அறிக்கைபடி)

• பணம் கையிருப்பை அதிகமாக்கி காட்டியிருக்கிறார்கள். ரூ. 5361 கோடி கணக்கில். உண்மையில் 300 கோடி தானாம்.


• செலுத்த வேண்டிய கடனை குறைத்து காட்டியிருக்கிறார்கள்.

• வர வேண்டிய கடனை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

ராஜூ இது தவிர தனது இரண்டு மகன்கள் நடத்திவந்த இரண்டு கட்டுமான (Maytas infra. Ltd, Maytas properties ) நிறுவனங்களை சத்யம் கம்யூட்டர்ஸ் வாங்குவதற்கு எல்லா வேலைகளையும் முடித்து, முதலீட்டாளர்களின், பங்குதாரர்களின் எதிர்ப்பால் கடைசி நேரத்தில் ரத்து செய்திருக்கிறார்.

நடவடிக்கைகள், கண்டனங்கள், வழக்குகள்


பங்குகள் மதிப்பு சரிந்ததால், மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையிலிருந்தும் நிறுவனங்களின் பட்டியலிருந்து சத்யத்தை தூக்கி கடாசிவிட்டார்கள்.

சத்யத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்த பிரைஸ்வாட்டர் கூப்பர் ஆடிட்டிங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்திய தணிக்கையாளர்களுக்கான அமைப்பு அறிவித்திருக்கிறது.

“இது எப்படி சாத்தியம்?” என செபி அதிர்ச்சி ஆகியிருக்கிறதாம்.

“நிர்வாக குளறுபடி தான் காரணம்” என இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்கிறார்.

“இந்திய கணிப்பொறி நிறுவனங்களின் மீது ஒரு நல்ல மதிப்பு இருக்கிறது. அதை மூலதனமாக வைத்து ராஜூ விளையாடிவிட்டார்” என டெக் மஹிந்திரா நிர்வாகம் கோபப்பட்டிருக்கிறது.

'சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்கள் அனைத்தின் மீதும் மிகப்பெரிய சந்தேகத்தை விதைக்க அவரது மோசடி காரணமாகிவிட்டது” என்கிறார் நாஸ்கம் தலைவர் கணேஷ்.

போர்டும், அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்-ம் தனது ஆர்டர்களை கைமாத்திவிட்டதாம்.

சத்யத்தில் தங்கள் பணத்தைப் போட்டிருந்த முதலீட்டாளர்கள் அபர்தீன், விஸாட், ஜேபிமோர்கன், எல்.ஐ.சி கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

பங்கு பத்திரங்களை வாங்கி ஏமாந்த அமெரிக்கர்கள் சத்யத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

கூட்டுக் களவாணிகள்


ராஜூ தான் எழுதிய கடிதத்தில் தான் செய்த இமாலய தவறுகள் வேறு யாருக்கும் தெரியாது என குறிப்பிட்டிருக்கிறார். இது கடைந்தெடுத்த பொய்.


நிர்வாக இயக்குநர்கள் குழாம், தணிக்கை நிறுவனம், அதனுடைய சி.எப்.ஒ. எல்லோரும் கூட்டாய் தான் கொள்ளையடித்திருக்கிறார்கள். நிறுவன நடைமுறைகளில் இப்படி தனியாக கொள்ளையடிப்பது சாத்தியமில்லை. கூட்டாகத்தான் கொள்ளையடிக்க முடியும்.

இந்தியாவில் 4வது இடத்தை பிடித்திருக்கிற சத்யத்தில் இப்படி ஊழல் நடப்பது சாத்தியப்படுகிறது என்றால், அவ்வளவு கோளாறுகள் இங்கு இருக்கின்றன என்று தானே அர்த்தம்.

செபி இன்றைக்கு ஹைதாரபாத்துக்கு தனது அதிகாரிகளை சோதனைக்கு அனுப்பியிருக்கிறதாம். செத்தப்பிறகு போஸ்ட்மார்ட்டம் செய்ய செபி எதற்கு?

முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு ஏமாற்று

அமெரிக்க திவாலைப் பற்றி தொடர் கட்டுரைகள் எழுத தொடங்கும் பொழுது, முதல் கட்டுரையாக முதலாளித்துவ பொருளாதாரம் பற்றிப் பார்த்தோம்.

//1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
2. அந்நிய செலாவணி அதிகரிப்பு
3. பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரிப்பு
4. ஏற்றுமதி அதிகரிப்பு
5. நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு//

.இது எவ்வளவு போலியானது என அந்த கட்டுரையில் விளக்கியிருந்தேன். இன்றைக்கு அதற்கு ஒரு நல்ல உதாரணம் “சத்யம்”.

அரசு உதவி பெறுகிற சதி

இந்த ஊழல் கடந்த பல ஆண்டு காலமாக நடந்து வந்திருக்கிறது. இப்பொழுது ஏன் ராஜூ அறிவித்தார் என ஒரு கேள்வி எழுகிறது.

“சந்தை பொருளாதாரம் தான் எல்லாவற்றையும் தூக்கி நிறுத்தும்” என தேனெழுக பேசிய முதலாளித்துவவாதிகள் பல தில்லுமுல்லுகள் மூலம் வால்ஸ்டீரிட்டையே தலைகுப்புற கவிழ்த்தார்கள். பிறகு, கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் தங்களை காப்பாற்றுமாறு அரசிடம் கையேந்தி நின்றார்கள்.

அமெரிக்க அரசு மக்கள் நலம் நாடு அரசா என்ன? முதலாளிகளின் அரசு தானே! தாராளமாய் உடனே 70000 கோடி டாலரை தூக்கிக்கொடுத்தது.

நம்மை விட பெரிய திருடன்கள் எல்லாம் சுதந்திரமாய் வரும் பொழுது, நாம் வலம் வருவதற்கு என்ன? என்ற எண்ணம் தான் ராஜூவுக்கு தெம்பை கொடுத்திருக்கும். அது அவர் எழுதிய கடித்ததிலேயே நன்றாக தெரிகிறது.

இந்திய அரசு சத்யத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி என ஏதேனும் அரசு பணத்தை தூக்கி கொடுத்தால், மக்கள் தான் இதற்கு எதிராய் போராடவேண்டும்.

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

By CXOtoday Staff Srinivas Vadlamani, CFO of Satyam, who is thought to be involved in one of the major IT company's scam, has attempted a suicide in a house ...

Anonymous said...

சத்யம் இயக்குநருக்கு நிறுவன சட்டப்படி 7 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என பேசிக்கொள்கிறார்கள். தான் வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக சேமித்த பணத்தை பங்குகளாய் வாங்கி ஏமாந்த பங்குதாரர்களின் கதி?

Anonymous said...

ராஜசேகர ரெட்டி அதைத்தான் சொல்லியிருக்கிறார். விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் முதலாளிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து அக்குழு சத்யத்தை நிர்வகிக்க வேண்டுமாம். போராடும் தருணங்களில் தோழர் மருதையன் ஹவாலா ஊழல் குறித்து எழுதிய கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

அவர்கள்
சட்டத்தின் பொந்துகளை பயன்படுத்திக் கொண்டார்கள்.
பெளதீக விதிகளை மீறும் பொந்துகள்...
சுண்டெலிகள் புக முடியாது.
பெருச்சாளிகள் மட்டும் புக முடியும்
மாயப் பொந்துகள்!

--(நினைவில் உள்ளவரை...)

Anonymous said...

For now, PwC would continue to be the official auditors, he said.

- இந்து நாளிதழ் 09.01.2009

Anonymous said...

Actually , they might not have overstated earnings as in Raju's letter. I think they understated earnings. IT companies have lot more profit. They might have siphoned more money but admitting smaller fraud. rajasekara reddy may be a crook involved here too.( paalukku poonai kaaval!!) they will try to coverit up with indian tax payer's money. watch!! it is better for employees to jump out with the contracts and close down this company.