> குருத்து: அன்பார்ந்த பதிவர்களே!

January 19, 2009

அன்பார்ந்த பதிவர்களே!



சென்னை, அம்பத்தூரில் நடக்க இருக்கும் “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு"க்காக “புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி” தோழர்கள் தமிழகம் முழுவதும் சுவரெழுத்து, பேனர்கள் மூலமாகவும், பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியில், சென்னையிலும் கடந்த ஞாயிறன்று சென்னை மெட்ரோ ரயில்களில் தோழர்கள் செய்த பிரச்சாரம் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.

அன்பார்ந்த பெரியோர்களே!

“புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி” என்னும் அமைப்பிலிருந்து வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கி வருகிறோம். எங்கள் அமைப்பின் சார்பாக வருகிற 25ந் தேதியன்று “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நடத்த இருக்கிறோம். இன்றைக்கு இந்த மாநாட்டின் அவசியம் என்ன?

கடந்த இரண்டு மாதங்களாக பல தொழிற்சாலைகளிலிருந்தும், தொழிலாளர்கள் 50யும், நூறுமாக லட்சகணக்கில் லே ஆப், வேலை இல்லை என்று சொல்லி, எந்தவித இழப்பீடும் இன்றி வேலையிலிருந்து துரத்தப்படுகிறார்கள். ஏன் இந்த நிலை?

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பொருளாதார சீரழிவால், உற்பத்திக்காக அவர்களை நம்பி இருந்த இந்தியாவிலும் உற்பத்தி முடக்கம், பொருளாதார மந்தத்தால் இந்த நிலை.

நேற்றைக்கு வரைக்கும் குழந்தைக்கு, அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என, அரை நாள் லீவு கேட்டால் கூட சலித்து, கோபப்பட்ட முதலாளிகள், இன்றைக்கு உற்பத்தியில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டதும், ஈவிரக்கம் இல்லாமல் வெளியே தள்ளுகிறார்கள்.

முதலாளிகளால் இடத்து வாடகையை குறைக்க முடியவில்லை: அவர்கள் அனுபவிக்கும் கார், ஏசி போன்ற வசதிகளை குறைக்க முடியவில்லை. ஆனால், தொழிலாளர்களை கறிவேப்பிலை போல தூக்கி போடுகிறார்கள்.

முதலாளிகள் கொடுக்கும் சம்பளத்தைக் கொண்டு... அரிசி, பருப்பு, எண்ணெய் தொடங்கி, வீட்டு வாடகை வரை எல்லாம் எகிறி விழி பிதுங்கி சென்னை மாதிரி பெருநகரங்களில் வாழ்வதே பெரிய கொடுமையாய் இருக்கிறது. இப்பொழுது வேலையும் இல்லையென்றால்....? தற்கொலைகள் தான் பெருகும்.

நமக்கு ஏன் இந்த இழிநிலை?

தொழிலாளர்கள் நாம் “சங்கமாய்” இணைந்து இல்லாதிருப்பது தான் பிரச்சனை. தொழிற்சங்கத்தில் இருந்திருந்தால், இப்படி நம்மை துரத்தமுடியமா முதலாளிகளால்?

தொழிற்சங்கம் அமைத்தால், முதலாளிகளுக்கு கசக்கிறது. ஆனால், அவர்கள் அசோசியேசன் வைத்து இருக்கிறார்கள். அமைச்சர்களை சந்திக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் சிறு இழப்புக்கு கூட இழப்பீடு பெற்றுகொள்கிறார்கள்.

ஹெல்பராக வேலை செய்யும் தொழிலாளியிருந்து, ஐ.டி. துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை லட்சகணக்கில் வேலையிலிருந்து துரத்தப்பட்டு நிர்க்கதியாய் இருக்கிறார்கள்.

நாட்டில் இது குறித்து ஏதும் பேசப்படாமல், மும்பையில் மூன்று ஏழு நட்சத்திர விடுதிகளுக்குள் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து சில பணக்காரர்களைச் சுட்டதும் ஊடகங்கள் கதறுகிறது. பத்திரிக்கைகள் “தீவிரவாதம், பயங்கரவாதம்” என அலறுகின்றன. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என எல்லா கட்சிகளும் துடி, துடித்துப் போகிறார்கள். பாராளுமன்றத்தில் ஏகமனதாக சட்டங்கள் போடப்படுகின்றன. எல்லா பகுதிகளிலும் செக்யூரிட்டி பலமாக்கப்படுகிறது.

இசுலாமிய பயங்கரவாதத்தை விட, இப்படி பல லட்சகணக்கான தொழிலாளர்களை பட்டினிச் சாவில் தள்ளும் முதலாளித்துவமே ஆகப்பெரிய பயங்கரவாதம். இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்காமல் பெரும்பான்மையோர் வாழ்வில் விடிவு இல்லை.

மாநாட்டுக்கு வாருங்கள்! கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெறச் செய்யுங்கள்! உங்களால் இயன்ற அளவு நிதி தாருங்கள்!

***

பேசும் பொழுதே மக்களில் சிலர் பிரசுரத்தை அவர்களே கேட்டு வாங்கினார்கள்.

பெண்கள் கவனத்துடன் கேட்டார்கள்.

சில தொழிலாளர்கள் ஆர்வத்துடன் முகவரி கேட்டு குறித்து கொண்டார்கள். மாநாட்டுக்கு வருவதாக சொன்னார்கள். பலர் நிதி உதவியும் அளித்தார்கள்.

உண்ணாவிரதம் இருந்த திருமாவளவன் அவர்களை பார்க்க சென்று கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் அவர்களாக தங்களுக்குள் வசூலித்து நிதி தந்தனர்.

****

பின்குறிப்பு : இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.

தொடர்புக்கு :

தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.
: 94448 34519, 94444 42374

தோழர் பாண்டியன்: 99411 75876

0 பின்னூட்டங்கள்: